புத்தரும் சேர்த்துக் கொல்லப்பட்டார்…


தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை

கட்டுரை அனுப்பியாக வேண்டுமே என்கிற அவசரம்…
.
அடுத்த இதழில் கண்டிப்பாக எழுதுவேன்
என்று தந்திருந்த உறுதிமொழி………
.
மாலை ஆறு மணிக்குள் அனுப்பி விட்டால்
அச்சேற்றி விடுவார்கள் என்கிற பரபரப்பு…
.
சாலையின் ஒருபுறத்திலிருந்து
மறுபுறத்திற்கு  செல்ல
எனது இரு சக்கர வாகனத்தினை திருப்புகிறேன்.
.
கை காட்டாமல்………
.
ஆனால் பின்னால் வரும் அந்த மனிதனுக்குத் தெரியுமா…
இப்படி ஒரு கேணையன் முன்னால்
சென்று கொண்டிருக்கிறான் என்று?

தினத்தந்தி பாணியில் சொல்வதானால்
அடுத்த நொடியே “டமார்” என்றொரு சத்தம்.

அவ்வளவுதான் தெரியும்.

சாலையின் மத்தியில் விழுவதும்……
மக்கள் கூடுவதும்……
யாரோ இருவர் கை பிடித்து எழுப்பி விடுவதும்……
என ஏதேதோ என்னெதிரே நடந்து கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களிலேயே நண்பர்கள் வந்து சேர……
அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனை.

எக்ஸ்ரே……… ஸ்கேனிங்……… என நகர்கிறது நேரம். 

நண்பரும் மருத்துவருமான மகேந்திரன்
காலுடைந்ததை உறுதி செய்கிறார்.
மறுநாள் அறுவை சிகிச்சை..

நன்றாக கவனித்துக் கொள்ளச் சொல்லி
ஆபரேஷன் அறையில் உள்ள மருத்துவருக்கே
அலைபேசி வருகிறது இயக்குநர் மணிவண்ணன்
அவர்களிடமிருந்து.

மாற்றி மாற்றி மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

”முதுகுத் தண்டில் மயக்க ஊசி போட்டிருப்பதால்
எழுந்து உட்காராதீர்கள்………
மயக்கம் வந்துவிடும்………”

”சாய்ந்து படுங்கள்”

“இன்சூரன்சுக்கு சொல்லியாச்சு வந்துரும்”

”வலி சுத்தமா இருக்காது அதற்கான மருந்து குடுத்திருக்கு”

சுற்றிலும் புடை சூழ
நண்பர்கள்………
செவிலியர்கள்………
மருத்துவர்கள்………

ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கிறேன்.

அய்யோ என் மக்களே………

உங்களுக்கு யார் இருக்கிறார்கள்?
மருத்துவமனை உண்டா?
உண்டென்றாலும் அங்கு குண்டு விழாது
என்கிற உத்திரவாதம் உண்டா?

தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு…
தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு……
மரண வேதனையில் தவிக்கும் உங்களுக்கு
ஒரு வலி நிவாரணி உண்டா?
அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உண்டா?
என்னைப் போல சோற்றால் அடித்த
பிண்டங்களுக்குக் கூட இருக்கிற இன்சூரன்சு உண்டா?

படுக்கையில் சரிந்தபடி அழுகிறேன்.

எங்கள் மக்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

ஏன் எங்கள் மக்களுக்கு மட்டும் இப்படி?

எனது அவலக்குரலும் சிங்கள அரசுக்குக்
கேட்டிருக்குமோ என்னவோ………
அடுத்த சில தினங்களிலேயே மக்கள்
இப்படி மருத்துவமனைகள்……
மயக்க மருந்துகள்……
வலி நிவாரணிகள் இல்லாது துயரப்படுகிறார்களே
என்கிற ”மனிதாபிமானம்” மேலிட……
கொத்துக் கொத்தாய் குண்டுகளை வீசி…
அம்மக்களுக்கு வலியிலிருந்தும்…
வாழ்விலிருந்தும் ”விடுதலை” அளிக்கிறது சிங்கள அரசு.

வன்னிக்காடுகளிலும்…
ஈழத்தின் முள்ளிவாய்க்காலிலும்
கொல்லப்பட்டது பல்லாயிரம் தமிழ் மக்கள் மட்டுமில்லை.

புத்தரும் சேர்த்துத்தான்.


( மே – 2009)