மயிர் நீப்பின் உயிர் வாழா……

WarofJenkinsEar

ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர்களோடு  மதுரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் பல்வேறு விவாதங்கள்…… கலந்துரையாடல்களோடு தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். விவாதம் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் குறித்து நகர…… இடையில் குறுக்கிட்டார் வழக்குரைஞர் பாலமுருகன்.

“நாடு பிடிக்க…… இளவரசியை சிறை பிடிக்க…… என எது எதற்கோ நடந்த யுத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காதுக்காக நடந்த யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் நண்பர்.

என்னது……? காதுக்காக நடந்த யுத்தமா? என்ன எங்கள் காதில் பூ சுற்றுகிறீர்களா? என்றோம் ஆச்சர்யம் அகலாமல்.

”ஆமாம். அதுவும் ஒரே ஒரு ஒற்றைக் காதுக்காக.”

பேச்சில் சுவாரசியம் தட்டவே எங்கள் காதுகளை தீட்டிக் கொண்டோம்.

ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த அச்சு அசலான வரலாற்றுச் சம்பவம் இது.

மிகச்சரியாக 1731 ஆம் ஆண்டு ஜமைய்க்கா நாட்டில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு ஒரு கப்பல் விரைந்து கொண்டிருக்கிறது. அக்கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த அதன் கேப்டனுக்குத் தெரியாது தன்னால் ஒரு மாபெரும் யுத்தமே பிற்காலத்தில் வரப் போகிறது என்று. பிரிட்டனுக்குச் சொந்தமான அக்கப்பலை ஓட்டிக் கொண்டிருந்தவர் பெயர் ராபர்ட் ஜென்கின்ஸ். (ச்சே…… வாயுல நொழையற மாதிரி பேரா இருந்திருக்கலாம்). திசைமானி காட்டிய வழியே கப்பலை செலுத்திக் கொண்டிருந்தவர் கண்களில் படுகிறது எதிரே வந்து கொண்டிருக்கிற மற்றொரு கப்பல். சரி…… அது அதனது வழியில் போகப் போகிறது நமக்கென்ன? என்று ஜென்கின்ஸ் தனது கப்பலைச் செலுத்த…… வந்த கப்பலோ பிரிட்டன் கப்பலைச் சுற்றி வளைத்து நிற்கிறது. மறித்து நின்ற கப்பலில் ஸ்பெயின் நாட்டுக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பிரிட்டனுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் ஒரு ஒப்பந்தம் அமுலில் இருந்த நேரம் அது.. பிரிட்டிஷ் அரசு ஸ்பெயின் நாட்டுக்குத் தேவையான அடிமைகளையும் ஆண்டுக்கு 500 டன் பண்டங்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே அது.

குறுக்கே வந்து நின்ற கப்பலில் இருந்த ஆட்கள் பிரிட்டன் கப்பலுக்குள் குதித்து என்னென்ன வைத்திருக்கிறார்கள் என சோதனையிடுகிறார்கள். கண்டவனெல்லாம் வந்து உள்ளே புகுந்து சோதனை போட இதென்ன ——————————– நாட்டுக் கப்பலா? என முணுமுணுக்கிறார் கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸ். இதைப் பார்த்து கடுப்பாகிப் போன ஸ்பெயின் நாட்டுக் கடற்படை காடையர்கள் கேப்டனை நோக்கி பாய்கிறார்கள். கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது. எந்தவித பதிலையும் செவிமடுக்காத ஸ்பெயின் கப்பற்படை இறுதியில் கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸின் ஒரு காதை அறுத்தெறிந்துவிட்டு தங்கள் கப்பலை நோக்கித் திரும்புகிறது.

கப்பலுக்குள் கிடந்த தனது அறுபட்ட காதினை தேடி எடுத்து பத்திரமாக ஒரு கண்ணாடி சீசாவுக்குள் போட்டுக் கொள்கிறார் பிரிட்டன் கப்பல் தளபதி. கப்பல் வழமைபோல் இங்கிலாந்து தேசம் நோக்கி நகர்கிறது. தனது நாட்டு மாலுமி காது அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தகவல் மக்களுக்குள் பரவ…… கொந்தளிக்கிறார்கள் மக்கள். கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸின் ஒரு காதை அறுத்ததோடு நில்லாமல் “இதுதான் உங்கள் மன்னர் ஜார்ஜுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்பதனையும் போய்ச் சொல்,” என்று ஸ்பெயின் நாட்டுக் கப்பற்படை சொல்லி விரட்டிய கதையையும் சொல்லி முடிக்கிறார் தளபதி. வெகுண்டு எழுகிறது பிரிட்டன்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காமன்ஸ் அவை கூடுகிறது. அழைத்து வருகிறார்கள் காதறுக்கப்பட்ட ராபர்ட் ஜென்கின்ஸை. அவர் வரும்போதே அவ்வளவு காலமாக சீசாவில் பாதுகாத்து வைத்திருந்த தனது அறுபட்ட ஒற்றைக் காதினையும் மறக்காமல் எடுத்து வருகிறார். கூடியிருக்கும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் முன்பாக தனது அறுபட்ட காதை எடுத்து வைத்து……

“இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதவில்லை நான். இது இந்த நாட்டின் மக்களை…… இந்த நாட்டின் மக்கள் அவையை…… இந்த காமன்ஸ் சபையை…… என ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனையும் இழிவுபடுத்திய செயலாக உணர்கிறேன்.” என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறார் ராபர்ட் ஜென்கின்ஸ்.

மானமுள்ள பிரிட்டிஷ் பேரரசோ மிகச் சரியாக 1739 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி  ஸ்பெயின் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. தனது குடிமகனின் ஒற்றைக் காதுக்காக ஆரம்பித்த இந்த யுத்தம் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகாலம் நீடித்த பிறகே முடிவுக்கு வருகிறது. இதை ஆங்கிலத்தில் War of Jenkins Ear என்றே இன்னமும் அழைக்கிறார்கள்.

”இதுதான் ஒற்றைக் காதுக்காக நிகழ்ந்த யுத்தத்தின் கதை” என நிறைவு செய்கிறார் நண்பர்.

********

”மீண்டும்”

என்று இன்னும் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் எழுதுவது என்று தெரியவில்லை. இந்த வாரமும் சிங்களக் கடற்படை அத்துமீறி தமிழக மீனவர்கள் ஒன்பது பேரைக் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். இதற்கொரு விடிவு எப்போது வருமோ தெரியவில்லை. 1983 முதல் இன்று வரையிலும் 800 தமிழக மீனவர்களுக்கு மேல் கொல்லப்பட்டாயிற்று. ஆனால் இந்திய அரசிடம் இருந்து சிங்கள அரசை நோக்கி ஒரு வருத்தமோ…… ஒரு கண்டனமோ…… ஒரு எச்சரிக்கையோ…… எழுந்ததாக வரலாறு இல்லை. சாகின்றவர்கள் தமிழர்கள்தானே என்கிற அலட்சியம் தவிர வேறென்ன? மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லோருமே எல்லையைத் தாண்டி போய் விடுபவர்களாகவும்…… சிங்களக் கடற்படை என்னவோ ஒழுக்கசீலர்களாக எல்லை தாண்டாதவர்களாக…… தாண்டி வருபவர்களை மட்டும் தண்டிப்பவர்களாக இந்திய அரசே சித்தரிக்கும் கொடுமைக்கு என்ன செய்வது?

கடந்த ஆண்டு பேட்டியளித்த இந்திய கப்பற்படை கமாண்டரோ தமிழக மீனவர்கள்தான் எல்லை தாண்டிப் போய் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்று சிங்கள அரசின் குரலையே பிரதி பலிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில்  சிங்களக் கப்பற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எண்ணிக்கை மட்டும் 250 பேர்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் நண்பர்களே…… எண்ணூறோ…… ஐநூறோ…… இருநூறோ அல்ல…… ஒரே ஒரு வட இந்திய மீனவர் பாகிஸ்தானின் கடற்படையால் கொல்லப்பட்டதற்கு  தூதரகத்தின் மூலமாக கடும் எச்சரிக்கை விடுத்தது இதே இந்திய அரசுதான். செத்து விழும் மீனவர்களில் கூடவா வடக்கு தெற்கு? அப்போது எவரும் ”எல்லை தாண்டி போய் மீன் பிடித்தார் அந்த வட இந்திய மீனவர்” என எவரும் வாய் கிழியப் பேசவில்லை.

ஏறக்குறைய 800 பேரை காவு வாங்கிய பின்னும் கள்ள மெளனம் சாதிக்கும் மத்திய அரசு  எங்கே?

தன் குடிமகனின் ஒற்றைக்காது அறுபட்டதற்கே சுயமரியாதையின் நிமித்தம் பொங்கியெழுந்து போர் தொடுத்த பிரிட்டன் அரசு  எங்கே?

சொந்த மக்களையே கூறுபடுத்திப் பார்க்கும் கூறுகெட்ட அரசு எங்கே?

தனது குடிமகனின் உயிர் அல்ல…… உடலின் ஒரு சிறு பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட அது தனக்கு ஏற்பட்ட அவமானமாய் உணர்ந்து சினம் கொண்ட இங்கிலாந்து அரசு எங்கே?

ஒரு ராபர்ட் ஜென்கின்ஸுக்காக ஒரு மாபெரும் யுத்தத்தையே நடத்தியது பிரிட்டிஷ் அரசு……

காரணம் அதற்கு மானமும்…… தன் மக்கள் மீது அக்கறையும் இருந்தது.

ஆனால் “நமது” அரசுகளுக்கு……?

Rameswaram