நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்….

ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை  வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின்  இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சிந்திக்கிறார். அப்போது அவரது மனக்கண் முன்னே வந்து நிற்கிறார் முந்தைய ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. 240px-J_R_Jayewardene‘தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும்’ என எண்பதுகளில் சிங்களர்கள் போர்டு போட்டு விற்பனை நடத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்த “பொற்கால ஆட்சி”க்கு சொந்தக்காரர்தான் இந்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. ஆசாமியின் அந்தக் காலக் கணக்கு என்னவென்றால் மேற்குலக நாடுகளுக்கு இலங்கையின் சந்தையை திறந்து விடுவதன் மூலமாக ஏதேனும் அந்த நாடுகளில் இருந்து போராளிகளை ஒடுக்குவதற்கு ஆதரவு கிடைக்குமா என்பதுதான்.

 

அந்த அண்ணன் காட்டிய வழியில் தங்கை நடை போட தீர்மானித்ததன் விளைவுதான் 1998 இல் வாஜ்பாய் அரசுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் கையெழுத்தான இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் விளைவால் chandrikaஓகோவென பயன் அடைந்த இந்திய முதலாளிகளும் சிங்கள முதலாளிகளும் அடுத்த ஆர்டர் எப்படா வரும்? என காத்திருக்கத் துவங்கினர். சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் இலங்கையில் கடை விரித்தவர்கள் அசோக் லேலண்ட்….

டாடா டீ….

ஏசியண் பெயிண்ட்ஸ்….

ஐசிஐசிஐ….

ராஜபாளையத்தின் ராம்கோ….

என ஏகப்பட்ட பேர். அப்படி இந்தியாவில் நுழைந்த இலங்கையின் நிறுவனங்களுள் தம்ரோ கட்டில் நாற்காலி நிறுவனம்…. மாலிபான் பிஸ்கெட் நிறுவனம்…. மாஸ் ஹோல்டிங்ஸ் ஆயத்த ஆடைகள் போன்றவைகளும் அடங்கும்.

 

“இதுல என்னங்க இருக்குது? இவன் அங்க பிசினெஸ் பண்றான்…. அவன் இங்க பிசினெஸ் பண்றான்….இதுல என்ன தப்பு இருக்கு?” என்கிற கேள்வி சாதாரணமாகவே எல்லோருக்கும் எழும். ஆனால் சந்திரிகா இந்தக் கணக்கை இப்படிப் போடவில்லை. இப்படி வரி விலக்கும்…. வரிச் சலுகையும் அடைந்த இந்திய முதாலாளிகளை வைத்து ஈழப் போராளிகளை ஒடுக்குவதற்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முடியுமா? என்பதுதான் சந்திரிகாவின் கணக்கு. அவர் போட்ட கணக்கு தப்பவில்லை என்பதற்கு பல ஆதாரங்களை அள்ளி வீசுகிறது இந்தப் புத்தகம்.

 

ஏனென்றால் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்றாலும் தேர்தலின் போது பல்லை இளித்துக் கொண்டு நிற்க வேண்டியது இந்த முதலாளிகளிடம்தான். அப்படிக் காசு வாங்கி ஆட்சிக்கு வந்ததற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால்….அவர்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எங்காவது படை எடு என்றால் எடுக்க வேண்டும்…. எவனுக்காவது ஆயுதம் கொடு என்றால் கொடுக்க வேண்டும்…. இதுதான் தங்கு தடையற்ற வர்த்தகத்தின் தாரக மந்திரம். மற்றபடிக்கு ஓட்டுப் போட்ட கேணையர்கள் எல்லாம் கரும்புள்ளி குத்திய கையையே அடுத்த தேர்தல் வரைக்கும் வெறிச்சு வெறிச்சு பார்த்தபடி குந்தியிருக்க வேண்டியதுதான். அப்படி அரங்கேறிய திரை மறைவு நாடகங்களில் சிலதுதான் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா கொடுத்த ராணுவ “உதவி”…. சிங்கள ராணுவத்திற்கு இவர்கள் கொடுத்த தொழிநுட்ப “உதவி”…. போன்ற இத்யாதிகள்.

 

ஆனால் சிங்களம் சரசமாடியது இந்தியாவிடம் மட்டும்தானா? சீனாவிடமும் சத்தம் போடாமல் வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொண்டது. தெற்கு இலங்கையில் உள்ள ஹம்பன் தோட்டா துறை முகத்தை விரிவுபடுத்த…..மேற்கு இலங்கையில் உள்ள நோராச்சோலை கடலோரக் கிராமத்தில் மின் நிலையம் அமைக்க….. என சீனாவுக்கும் அழைப்பு விடுத்தது.

இதிலும் என்ன தப்பு? என்று கேட்கலாம் சிலர். இந்தியாவோடு மட்டும் வர்த்தகம் அதன் மூலம் ஈழமக்கள் மீது யுத்தம் என்பதில் முழு நம்பிக்கையில்லை இலங்கைக்கு. காரணம் தப்பித் தவறி தமிழகம் கொந்தளித்தால் இந்திய அரசு அதற்கு பணிய வேண்டி வரலாம். எனவே இந்தியாவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென்றால் சீனாவை அழைத்து வரவேண்டும். அதன் படியே அழைத்து வந்தது. அநேக திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. ஏற்கெனவே தென் மேற்கு இலங்கையில்  “நோரிங்கோ” நிறுவனத்தை நிறுவி அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பலகோடிகளுக்கு ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது சீனா.

 

என்ன தலை சுற்றுகிறதா…..? எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆரம்பத்தில். ஆனால் நாம் நேசிக்கும் மக்களது துயரத்திற்கான பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு நமக்கே கொஞ்சம் சலிப்பு வருகிறதென்றால் அப்புறம் நாம் அவர்களது விடுதலையைப் பற்றி யோசிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு மீண்டும் புத்தகத்தினுள் மூழ்கிப் போனேன்.

 

மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை வெளியிட்டிருப்பது “முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்” (ஈழத்தின் விடியலுக்காய் தன்னைத் தானே தீய்த்துக் கொண்ட நம்ம Bookமுத்துக்குமார்தான்)  எண்ணற்ற இளைஞர்களது  உழைப்பு இதில் ஒளிந்திருக்கிறது. இன்னும் இதில் ஒளிந்திருக்கும் உண்மைகளை நீங்கள் அறிந்தே தீர வேண்டுமென்றால்  எழுபத்தி ஐந்து ரூபாயை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் பூத்தில் ஏறி — ——— நம்பருக்கு ஒரு போனைப் போடுங்கள். அல்லது உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணோடு எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்

புத்தகம் உங்களைத் தேடி வரும்.

 

அட……போன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருதொலைபேசி நிறுவனத்தால் நாளை இந்தியாவின் ரகசியங்கள் எப்படி கப்பல்…… விமானம் எல்லாம் ஏறப் போகிறது என்கிற அபாயம்.

 

இப்படி பலபக்கம்……பலபேருக்கு கதவைத் திறந்திவிட்டிருக்கும் இலங்கையால் இந்தியாவுக்கு ஒரு மாபெரும் ஆப்பு ஒன்று கண் விழித்துக் காத்திருக்கிறது. அதுவும் 2007 செப்டெம்பர் 15 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலம். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபரின் பெயர் :ஒலோப் ஹாக். ஐரோப்பியரான இந்த ஹாக்தான் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றியவர். இவரை இலங்கையின் குக் கிராமங்களுக்கெல்லாம் செல்போன் mahindaசேவையை கொண்டு போக வேண்டும் என்பதற்காக அணுகுகிறது ராஜபக்சேவின்  சிங்கள அரசு. (ஒருவேளை எங்கெங்கே மக்கள் பட்டினியில் செத்தார்கள்…… அல்லது பாஸ்பரஸ் குண்டுகளால் செத்தார்கள் என்கிற தகவல்களுக்காக இருக்கலாம்) அந்த ஆசாமி அழைத்துப் போன இடம் சிங்கப்பூரில் உள்ள சிங்டெல் நிறுவனம்.  சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்தை அணுகி தாங்கள் ஆற்ற வேண்டிய தொலைபேசி சேவையை ராஜபக்சே  சொல்ல….. “இந்தியாவுக்கு ஏற்கெனவே நீங்கள் கொஞ்சம் அதிகமாக சீனாவோடு கொஞ்சுகிறீர்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது….இந்த நேரத்தில் எங்கள் சிங்டெல் நேரடியாக உங்கள் நாட்டுக்குள் வருவதைவிட எங்கள் இந்தியப் பங்காளி ஏர்டெல்லை அழைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு அதில் 30% பங்கு இருக்கிறது. அதை வைத்து மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிறது சிங்டெல் நிறுவனம்.

 

“ஆனால்….. இதற்கான அடிப்படைத் தகவல் தொடர்பு கட்டுமானப் பணிகளையும்…..

நாடு முழுவதும் நிர்வகிக்கும் பணிகளையும்…..

நாங்கள் எங்கள் சகோதர நிறுவனமான ஹுவாவேய் நிறுவனத்தை வைத்துச் செய்து கொள்கிறோம்”. என்கிறது சிங்கப்பூரின் சிங் டெல்.

 

பிரச்னையே இங்குதான் கிளம்புகிறது.

1000 கோடி முதலீட்டில் தொலைபேசி  சேவையை தொடங்குவது இந்தியாவின் ஏர்டெல்.

கட்டுமான….நிர்வாகப் பணிகளோ சீனாவின் ஹுவாவேய்.

இந்த ஹுவாவேயின் உண்மையான உரிமையாளர் யார்? அதற்கும் சீனாவின் உளவு நிறுவனமான MSS க்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் நம்மைக் காட்டிலும் இந்தியாவின் உளவு அமைப்புக்களான  IB  க்கும் RAW  க்கும் மிக நன்றாகவே தெரியும்.

 

இந்த ஹுவாவேய் நிறுவனம் தங்கள் நாட்டுக்குள் கால்வைக்கவே கூடாதென்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியது ஆஸ்திரேலியா…..ஆளை விடுப்பா சாமி என்றது அமெரிக்கா……கதவை இழுத்துச் சாத்தியது கனடா.

 

ஏற்கெனவே இந்தியாவில் அதனது  பல திருவிளையாடல்களுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்திய உளவு அமைப்புக்களின் எச்சரிக்கைகளையும் மீறி அதனோடு உறவு வைத்துக் கொண்ட இந்தியாவின் பெரு முதலாளிகள் எல்லாம் யார்….யார்…..?

சீனாவின் உளவு நிறுவனத்தோடு தொடர்புடைய ஹுவாவேய் Mkநிறுவனத்தின் பங்குகள் 49% இல் இருந்து 74% பங்குகள் ஆக உயர்த்தப்படும் போது தயாநிதி மாறன் மெளனம் காத்தது ஏன்?

பின்னர் வந்த ராசாவும் வாயைத் திறக்கவில்லையே என்ன காரணம்?

இலங்கையில் ஏர்டெல்லின் மூலம்  சீனாவின் உளவு நிறுவனம் மஞ்சக்குளிக்கும் இந்த செயல் இந்தியாவை நாளை பாதிக்குமா? பாதிக்காதா?

இது இந்தியாவின் வெளிஉறவுத் துறை ஆலோசகர்கள், பாதுகாப்புத்துறை ஆலோசகர்கள் என வலம் வரும் மும்மூர்த்திகள் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் போன்றோருக்கு உரைத்ததா இல்லையா? என்கிற இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஓராயிரம் கேள்விகளை எழுப்புகிறது இச்சிறு நூல்.

 

இவற்றையெல்லாம் வாசிக்கும் போது உண்மையிலேயே தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கவனிக்கப்பட வேண்டியவர்கள் கொளத்தூர் மணி போன்ற மக்கள் நலத்தில் மாளாத அக்கறை கொண்டவர்களா?

 

SGஅல்லது இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாது சீனாவின் உளவு நிறுவனத்தோடும்,  பாகிஸ்தானோடும் பகிரங்கமாகவே உறவு கொண்டிருக்கும் இலங்கையோடு கொஞ்சி குலவுகின்றவர்களா? என்கிற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழுந்தால் சந்தேகமே வேண்டாம் நிச்சயம் நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்.