மனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழுதிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் சுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல பணிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஈழத்தில் முதல் களப்பலி சிவகுமாரனோடு தோளோடு தோள் நின்ற இளைஞனாக…..…..
ஈழப் புரட்சி அமைப்பின் போராளியாக…..…..
வாழ்வின் வலிகளை உணர்த்தும் இலக்கியவாதியாக…..…..
மனச் சுமைகளை சுமந்து திரியும் அகதியாக…..…..
என அம்மனிதனுக்கு ஏகப்பட்ட முகங்கள்.
அப்படிப்பட்டவரின் நூலுக்கு அணிந்துரை ஒன்றினை நான் எழுத வேண்டும் என்பது நண்பர் வைத்த வேண்டுகோள். நூலை வாசிக்க வாசிக்க என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவேயில்லை. மனம் வெகுவாகக் கனத்துப் போனது. அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன் நான். பிற்பாடு என்னை நானே சரிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கிய அந்த “அணிந்துரையை” மீண்டும் உங்களோடு பகிர்ந்துகொள்வது ஒன்றும் படுபாதகச் செயல் ஆகிவிடாது என்பதால் அப்படியே அதனை உங்கள் பார்வைக்குப் பணையம் வைக்கிறேன்.
“இது அணிந்துரை அல்ல தோழர்களே…..
ஈழத்து உறவுகளோடு நகர்ந்த என் நாட்களைப் பற்றிய நினைவுகள்.
உண்மையைச் சொன்னால்…..அப்போது கி.பி.அரவிந்தனைத் தெரியாது எமக்கு. அதைப் போலவே அவருக்கு பாமரனையும்.
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எமக்குத் தெரிந்ததெல்லாம் தோழர் சுந்தரைத்தான். “பூவுலகின் நண்பர்கள்” நெடுஞ்செழியன்தான் ஈரோஸ் (ஈழப் புரட்சி அமைப்பு) அமைப்பை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
அந்த அறிமுகம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் நான் ஒரு தறுதலையாக…… உதவாக்கரையாக…… இருந்திருப்பேன். அல்லது குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.ஆகவோ ஆகியிருப்பேன். தமிழ் மக்களை அந்தத் துயரில் இருந்து காப்பாற்றிய பெருமை ஈரோசையும், நெடுஞ்செழியனையுமே சாரும்.
அப்போது சென்னையில் எனக்குத் தெரிந்ததெல்லாம் கோடம்பாக்கத்தில் பெஸ்ட் மருத்துவமனை அருகில் இருந்த ஈ.என்.எல்.எப் (ஈழத் தேசிய விடுதலை முன்னணி) அலுவலகம்…… யுனைடெட் காலனியில் இருந்த ஈரோஸ் நண்பர்களது அறை…… அண்ணாநகரில் இருந்த B செல்…… இதுதான் எனது உலகம். சுந்தரைக் கண்டாலேயே ‘பாலஸ்தீன இயக்க பயிற்சி பெற்றவர்’ என்கிற பெரிய பிரமிப்பு எமக்கு. ஆனால் மனுசன் ஒரு நாள் கூட அதை சொல்லிக் கொண்டதில்லை.
”தோழர்….. இப்ப பிரச்னை எப்படி இருக்கு?” என்றால்…..
“பிரச்ச்ச்ச்ச்ச்சனை இருக்கு” என்பார்
“பிரச்னையையே பிரச்ச்ச்ச்சனையாகச் சொல்லக்கூடியவர் தோழர் சுந்தர்தான்” என நக்கலடிப்பார் செழியன்.
தோழர்களோடு உணவு உண்ணும்போது ஈழப் பிரச்சனையை நினைத்துக் கண்ணீர் விடுகிறோமா இல்லையோ….. ஆனால் ஒரு கவளம் வாயில் வைத்ததுமே கண்களில் நீர் தழும்பி நிற்கும். அவ்வளவு காரம். ”தோழர் உங்களுக்காக இன்னைக்கு உறைப்பு கொஞ்சம் குறைவா போட்டிருக்கு” என்கிற விளக்கம் வேறு தருவார்கள்.
சென்னையில் தங்கி இருக்கும் பொழுதுகள் தோழர்கள் பாலகுமார்….. சுந்தர்….. ராஜா….. பார்த்திபன்….. அன்னலிங்கம்….. என எண்ணற்றவர்களோடு நகரும்.
ஈழம் குறித்த கனவுகளோடு…..
எதிர்ப்படும் எதார்த்தங்களை எவ்விதம் எதிர்கொள்வது என்கிற விவாதங்களோடு பொழுதுகள் விடியும். இத்தனைக்கும் கத்துக்குட்டி நான். இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்று தோழர். சுந்தரோ, பாலாவோ ஒருபோதும் எண்ணியதில்லை. அபத்தமாக என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மிக நிதானத்துடன் விளக்கிச் சொல்வார்கள். அந்தப் சகிப்புத்தன்மையும், பண்பும், அன்பும் இன்றைய வரைக்கும் எனக்குள் முளைவிடாத ஒன்று. ஈரோசின் நிறுவனர்களில் ஒருவரான தோழர்.ரத்னாவும் அவ்வப்போது எம்முள் பல கேள்விகளை கிளப்பி விட்டுவிட்டு கிளம்பிச் செல்வார்.
Mr.Balakumar meets PM today என்று செய்தித்தாளில் முந்தைய நாள்தான் பார்த்திருப்போம். ஆனால் மறுநாளே “தோழர்” எனக் கை அசைத்தவாறு தனது சைக்கிளில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருப்பார் பாலா. அநியாயத்துக்கு எளிமையானது ஈரோஸ் என்கிற மொச்சைக்கொட்டை பட்டாளம்.
சுந்தர் சென்னைப் பொறுப்பாளராக இருந்தபோது வெளிக்கொண்டு வந்த ”இந்த மண்ணும் எங்கள் நாட்களும்” நூலையும், “பொதுமை” இதழ்களையும் இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
சென்னையில்தான் இப்படிப்பட்ட உறவுகள் என்றால்….. கோவைக்கு திரும்பினாலோ ஈரோஸின் கோவைப் பொறுப்பாளர்களோடுதான் போகும் பொழுது. கோவையை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் தோழர்களைக் கூட்டிக் கொண்டு போகவேண்டும். கரும்பலகைகளை வைத்து வகுப்பெடுப்பார்கள் தோழர்கள். ”சித்திரையில் ஈழம் மலரும்….. தை யில் கொடியேற்றுவோம்….. என்றெல்லாம் உங்களை ஏமாற்றத் தயாராயில்லை நாங்கள். இந்த விடுதலைப் போராட்டத்திற்கு காலக்கெடுவெல்லாம் விதிக்க முடியாது. உங்கள் அடுத்த தலை முறை கூட போராட வேண்டி வரலாம்” என்று தொடரும் வகுப்பு. மக்கள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அதை.
பல நாட்கள் விடிந்தும் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னை எழுப்பிவிட வேண்டும் என்றால் “தோழர் ஈழம் கிடைச்சுடுச்சு தோழர். எழும்புங்க…..” என்றுதான் எழுப்புவார்கள் குட்டியும், மெல்ட்டசும். அவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் சுந்தரின் மச்சான் முகிலன்.
1986 ஜூலை 23 ஆம் தேதி ஈழ நண்பர்கள் கழகத்தின் சார்பாக சுந்தரின் கருத்தரங்கம் கோவையில். ஜூலைப் படுகொலைகள் நினைவு தினத்திற்காக. எதிர்பாராத கூட்டம் அன்று. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியின் அவலங்களையும், திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களையும், ஈழத்தின் தேவைகளையும் எடுத்துரைக்கிறார் சுந்தர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் ரயில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம்.
அதற்கிடையில் ஈழ இயக்கங்களை அணுகும் போக்கில் இந்திய அரசிடம் எண்ணற்ற மாற்றங்கள். ”இலங்கை அரசுக்கு இந்தியா எச்சரிக்கை”, ”இந்திய விமானங்கள் வடக்கில் உணவுப் பொட்டலங்கள் வீச்சு” போன்ற அநேக நாடகங்கள். அதை அடுத்து வந்த ஒப்பந்தக் காட்சிகள். ஒவ்வாத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி இந்திய அரசின் வற்புறுத்தல்கள்….. இல்லையில்லை அச்சுறுத்தல்கள்.
உங்களுக்காக சோறெல்லாம் போட்டோமே….. ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது ஒப்பந்தத்தை? என்கிற அரைவேக்காட்டுத்தனமான உளறல்கள். மனம் நொறுங்கிப் போயினர் போராளிகள். எரிச்சலும்,அவமானமும் தாள முடியாமல் அப்போது சுந்தர்தான் ஒரு மேடையில் கேட்டார்: ”சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?” என்று. அதைத்தான் நான் 21 ஆண்டுகள் கழித்து ஈழ இன்னல்கள் குறித்து ஒரு வார இதழுக்கு எழுதும்போது தலைப்பாக்கினேன். உண்மையில் அந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் சுந்தர்தான்.
ஒப்பந்தத்தை ஏற்காத போராளிகளை ஒப்புக்கொள்ளுமா மத்திய அரசு?. அந்த வேளையில் அவர்கள் வேண்டா விருந்தாளிகள். மனம் நொந்து கப்பல் ஏறுகிறார் சுந்தர். கப்பல் ஏறும் முன் அவர் கி.பி.அரவிந்தனாக பாலம் இதழுக்கு அனுப்பிருந்த ”எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற கடிதம் ஈழத்தை நேசித்த ஒவ்வொரு உயிரையும் என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை வரிகளால் வர்ணித்து விட முடியாது. இன்னமும் தோழர்களும் நானும் தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு உன்னதம் அது. அதில் உள்ள வரிகளை வாசித்தால் புரியாது. அவர்களுடன் வாழ்ந்திருந்தால் மட்டுமே புரியும்.
எல்லாம் முடிந்தது. காலை தொடங்கி நடுச்சாமம் வரைக்கும் எனது உலகமாக இருந்த தோழர்கள் எல்லாம் புறப்பட்டாயிற்று. பாலா, சுந்தர் தொடங்கி….. குட்டி மெல்ட்டஸ் வரையிலும் எல்லோரும் கிளம்பியாயிற்று.
நான் மட்டும் தனியே கரையில் நின்றபடி.
எனக்கு இங்கு எவரைத் தெரியும்? தெரிந்தாலும் அவர்களோடு என்ன பேசுவது? குறைந்தபட்சம் ஏதாவது கட்சியில் இருந்திருந்தாலாவது நேரத்தை ஓட்டி விடலாம். ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்திருந்தாலாவது எங்காவது மன்றத்தில் உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்.
என்ன செய்யப்போகிறேன் இனி?
”ஈழம் கிடைச்சிடுச்சு தோழர்….. எழும்புங்க.” என எவர் எழுப்பப் போகிறார்கள் என்னை?
”எங்கிருந்தோ வந்தான்….. இடைச்சாதி நான் என்றான்.” என்பதைப் போல எங்கிருந்தோ வந்தார்கள். அரைவேக்காடாய்த் திரிந்த என்னைப் போன்றவர்களுக்கு மானுடத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதனாக்கினார்கள். திடுதிப்பென ஒரு பொழுதில் புறப்பட்டு விட்டார்கள். எனது உலகம் தொலைந்து போயிற்று.
இனி நான் இந்த மண்ணில் வாழப் பழக வேண்டும்.
“ஓடம் நதியினிலே…..” என்கிற பாடல் வரிகள் என்னுள்ளே கேட்கிறது.
முதலிலேயே சொன்னதைப் போல இது அணிந்துரை அல்ல நண்பர்களே. எப்படி எழுத முடியும் என்னால்? ஈழத்தின் முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரனோடு எழுபதுகளில் களமாடிய தோழனின் நூலுக்கு…..
ஈழத்தின் விடிவுக்காய் பாலஸ்தீனப் பயிற்சி பெற்று போராளியாய்ப் படைக்கருவிகளை பாவித்தவன் படைப்புக்கு…..
”விண்ணப்பித்தால் ஈழக் குடியுரிமைக்கே விண்ணப்பிப்பேன். அதுவரை அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்…..” என்று பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காது நிற்கும் ஒரு சுயமரியாதைக்காரனின் நினைவலைகளுக்கு…..
எப்படி எழுத முடியும் என்னால்.
இதில் இருப்பவையெல்லாம் வெறும் எழுத்துக்கள்….. வார்த்தைகள்….. வாக்கியங்களாகப் படவில்லையே எனக்கு. வலிகளாக இருக்கிறதே. என்ன செய்வேன் நான்?
அம்மாவின் இறுதிப் பயணத்தைப் பற்றி வாசிக்க வாசிக்கவே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. என்ன செய்வதென்று புரிபடாமல் இணையதளத்தைத் திறந்து இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன் பிரான்ஸிஸ் ஆகவும்….. சுந்தராகவும்….. அறியப்பட்ட கி.பி.அரவிந்தனுக்கு :
சுந்தர்……
இப்போது நான் உங்களுடன் இருக்கிறேன்.
அம்மாவின் தலைமாட்டிற்கு அருகே ஐயா, தம்பியரோடு நானும்…..
உங்கள்,
பாமரன்.
இதை வாசிக்க வாசிக்க
யாழ்
லெபனான்
கொழும்பு
வெலிக்கடை சிறை
தமிழகம்
பிரான்ஸ் என இப்படி ஒவ்வொரு இடமும் நீங்களும் அரவிந்தனோடுதான் இருந்து கொண்டு இருப்பீர்கள்.
இனி, அவருடனான உங்கள் பயணம் தொடங்க நான் விடைபெறுகிறேன் இப்போதைக்கு.
தோழமையுடன்,
பாமரன். “
இப்படித்தான் எழுதியிருந்தேன் அதில்.
இந்நூலில் எனக்குப் பிடித்த விசயமே…..…..
”நான் எவ்வளவு பெரிய ஜாம்பவான் தெரியுமா?
ஈழப்போராட்டமே எனது தலையில்தான் நடந்தது…..…..” என்றெல்லாம் பீற்றிக்கொள்ளாமல்…..…..
பலத்தையும், பலவீனத்தையும் சமமாய் பாவித்து…..…..
இன்றைக்கு ஈழப்போராட்டம் வேறொரு முக்கிய கால கட்டத்தில் வந்து நிற்கும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள் நிதானித்து தேர்வு செய்ய வேண்டிய வழி எது என்பதைச் சொல்வதுதான்.
இதில் முரண்படவும் உண்டு சில விசயங்கள். ஆனால் அம்முரணும் பல ஓடுகாலிகளது விமர்சனங்களைப் போல் பகை முரணாய் இன்றி நட்பு முரணாய் இருப்பது மனதுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் விசயம்.
ஈழப்போரின் பல்வேறு காலகட்டங்களை…..…..
அது கடந்து வந்த பாதையை…..…..
அது சென்றடைய வேண்டிய திசையை…..…..
ஓரளவுக்காவது உணர்த்தும் இந்த நூலைப் பெற…..…..
வழக்கம்போல் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் 09445182142 என்கிற எண்ணுக்கு அழைத்து நூலின் விலையையும் அதை வாங்கும் வழிமுறையையும் விசாரிக்க வேண்டியதுதான்.
மொத்தத்தில்…..…..
மனித உயிர்களை கிள்ளுக்கீரைகளாக…..…..
ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி உயிர்களை காலில் தேய்க்கும் கரப்பான்பூச்சிகளாக…..…..
தேய்த்து அழித்திருக்கிறது ஒரு நேர்மையற்ற யுத்தம்.
மானுட தர்மங்களை மீறிய யுத்த வெறியைக் கண்டு விக்கித்துப் போனவர்கள் மக்களுக்காக தங்கள் ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..
“மக்களுக்காக ஆயுதம் ஏந்தியது மாபாதகச் செயல்” எனக் குற்றம் சுமத்திய சர்வதேச சமூகம் இனி அந்த மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறது? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..
“உங்கள் வழிமுறைகள் தவறானவை” எனச் சகட்டுமேனிக்கு பழித்தவர்கள் அநாதரவாய் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் அந்த மூன்று லட்சம் மக்களுக்காக தம் சுட்டு விரலையாவது அசைக்கிறார்களா? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..
இந்த உலகத்தின் மெளனத்தைக் கலைக்க
ஆயுதங்கள் மெளனமாக்கப்பட்டிருக்கிறதே தவிர
அவைகளுக்கு முற்றாக விடை கொடுக்கப்படவில்லை.
இதையே மாவோவின் வார்த்தைகளில் சொல்வதானால்.…..…..
”அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.
யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.”
ஆம்.
முன்னதான அந்த ரத்தம் சிந்தா யுத்தத்தினை உலகம் முழுக்கக் கொண்டுபோகும் பணி பரந்து விரிந்திருக்கிற நம் தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதுவரை பின்னதற்கான ஒரு சிறிய விளம்பர இடைவேளை இப்போது.