சோறா?…. மானமா?….

 

இந்தக் கதி ஏற்பட்டிருக்க வேண்டாம்……… உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவருக்கு.

கடைசியில் பண்டமாற்று முறையில் திறக்கப்பட இருக்கிறது வள்ளுவரது சிலை. கடந்த 18 ஆண்டுகளாய் முக்காடிட்டு மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை ஒருவழியாக திறக்க இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்திதான். ஆனால் அதுவும் எந்த அடிப்படையில் என்பதுதான் சற்று மனதை நெருடும் விசயம்.

நாம் வேண்டுமானால் வள்ளுவரை எந்த சமயத்துக்கும், எந்த இனத்துக்கும் ஏன் எந்த ஒரு தேசத்துக்கும்கூட‌ சாராத மனித குலத்தின் பிரதிநிதி் என பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இதுவெல்லாம் கன்னட வெறியர்களுக்கு உரைத்தால்தானே? கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையத் திறக்க விட்டால்தான் திருவள்ளுவரை விடுவிப்போம் என்பது ஆறறிவு உள்ள எவரையுமே ஆச்சர்யப்படத்தான் வைக்கும். சிங்களர்களுக்கு கோபம் வராமல் அப்ளிகேஷன் போடச் சொன்ன முதல்வர்  இந்த விஷயத்தில் கன்னடர்களுக்குக் கோபம் வராமல் இருக்க சர்வக்ஞர் சிலை திறப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

கன்னட வெறியர்களைப் போல  ”மொழி பார்த்துத்தான் சிலைகளை வைப்போம்” என தமிழர்களும் முடிவெடுத்து விட்டால் தமிழகத்தில் கணிசமான அள‌வுக்கு சிலைகள் காணாமல் போக நேரிடும். ஆனால் நாம்தான் எப்போதும் வந்தாரை வாழ வைப்பதில் பெருமை கொள்ளும் உலக மகா இளிச்சவாயர்களாயிற்றே. ஆக அப்படி எதுவும் இங்கு நடந்துவிடப் போவதில்லை.

எது எப்படி இருப்பினும் கர்நாடகத்தில் வள்ளுவருக்கு விழா எடுக்கட்டும் அவரது சிலைகளைத் திறக்கட்டும். அதில் ஒன்றும் முரணில்லை நமக்கு. ஆனால் அவை எல்லாவற்றையும்  விட முக்கியமாக மனித குலத்திற்கே பொதுவான மறையைத் தந்தவரின்  அந்த ஒப்பற்ற குறள்களை கன்னடத்தில் வரிக்கு வரி மொழிபெயர்த்து வீட்டுக்கு வீடு விநியோகிப்பதுதான் உண்மையில்   “அவர் நாண நன்னயம்” செய்யும் செயல்.

**********

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வையுங்கள் எனக் கரடியாகக் கத்தி….

பல போராட்டங்கள் அறிவித்து……

பிறகு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு வரிச் சலுகை என்கிற எலும்புத் துண்டை காட்டி….

ஒரு வழியாக வழிக்கு வந்திருக்கிறது கோடம்பாக்கம். ஆனால் அண்மையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அசந்து போனேன். இங்கு தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பேர் வைப்பதற்கே பெரும்பாடு பட்ட நிலையில் ஒரு இங்கிலீஷ் படத்திற்கு ”தூயதமிழ்ப் பெயர்” வைத்திருக்கும் எட்டாவது அதிசயத்தை என்னவென்பது?

இதற்காகவே  ”என் ஜன்னலுக்கு வெளியே…”            என்கிற அந்தப் படத்தை எடுக்கும் புண்ணியவானை ”பலமாகப் பாராட்டலாம்”.

ஆக….

தமிழில் பெயர் வைக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் தமிழக அரசு…..

இங்கிலீஷ் படமாகவே  இருந்தாலும் தமிழில் பெயர் சூட்டியிருக்கும் அந்தப் படத்துக்கு என்ன ”பரிசை” வழங்கப் போகிறது என்பதை சீக்கிரமே சொன்னால் நல்லது.

**********

MS

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்

பாடுனவன் பாட்டைக் கெடுத்தான்

என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த பழமொழி. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் வந்துவிட்ட பிறகு

”விஞ்ஞானி விவசாயத்தைக் கெடுத்தான்”

என்கிற புது மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஏற்கெனவே இந்திய விவசாயத்தை ”ஓகோ” என்று கொண்டுவந்து விட்டாயிற்று. இனி இலங்கை ஒன்றுதான் பாக்கி. விட்டேனா பார் என்று களத்தில் குதித்திருக்கிறார் வேளாண் ”விஞ்ஞானி” எம்.எஸ்.சுவாமிநாதன்.  1980 களில் மத்திய அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தபொழுதே அவைகளை அம்போவென விட்டு விட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில்  இருக்கிற சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஓடிப்போனார்.

”வேலை கெடைச்சா….. யார் எங்க வேணும்ன்னாலும் போலாம்…. இதெலென்ன தப்பு?” எனக் கேட்கலாம் நீங்கள்.

ஆனால் அவர் இருந்தது நீங்களும் நானும் இருப்பதைப் போல லேசுப்பட்ட வேலை இல்லை கண்ணியவான்களே. அவர் அப்போது வகித்து வந்த வேலையின் தன்மை அதிமுக்கியமானது என்பதுதான் விஷயம்.

நாட்டினுடைய  விஞ்ஞான ரகசியங்களை அறிந்திருந்த, தந்திராபோயம் மிக்க, குறிப்பாக உணவுப் பிரச்சனைகளை அறிந்து வைத்திருந்த முக்கியப் பதவி அது. அப்படிப்பட்ட பொறுப்புமிக்க அரசு பதவியை உதறிவிட்டு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படும் அந்த நிறுவனத்துக்கு ஊழியராகப் போய் சேர்ந்ததில் பல மர்மங்கள் இருப்பதாக இன்னுமும்  ஊருக்குள் ஒரு முணுமுணுப்பு உண்டு.  அரிசி திங்காத அமெரிக்காக்காரனுக்கு அரிசியில் என்ன ஆராய்ச்சி என்கிற அரசியல் எல்லாம் நமக்கு எதற்கு?.

ஆனால் ஏற்கெனவே இந்தியாவில் பிழைக்க வழியில்லாமல் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும்….

(விஞ்ஞானிகள் தயவால்) போய்ச்சேர்ந்தது போக மீதம் இருப்பவர்களுக்கு 11000 கோடி மகான் மன்மோகன் நிதி ஒதுக்கியதும்……

நிதி போக திதிக்கு ஆளொன்றுக்கு லட்ச ரூபாய் ”அள்ளிக் கொடுத்ததும்” .. உலகறிந்த ”ரகசியங்கள்”.

இந்த லட்சணத்தில் மாடி ஏறி ஆண்டெனாவைக் கட்டக் கையாலாகாதவன் வானம் ஏறி சாட்டிலைட்டை சரி பண்ணப்போன கதையாய்…..வவுனியா போய் விவசாயம் பண்ணப் போறாராம் இந்த சாமிநாதன்.

அதுவும் எப்பேர்ப்பட்ட வேளையில்? ஆண்கள் முழுக்க சித்ரவதை முகாம்களிலும், முள்வேலிகளுக்கிடையே துப்பாக்கி முனையிலும் முடக்கி வைக்கப்பட்டிருக்க….. முகாம்களில் இருந்து பெண்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஊர்களுக்குள் அழைத்துப் போய் சிங்களச் சிப்பாய்களுக்கு மத்தியில் விவசாயம் செய்ய வைக்கப் போகிறாராம் இந்த விஞ்ஞானி.

சரி….அப்பெண்களது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று கேட்டால்….”வலுக்கட்டாயமாக மீளக்குடியமர்த்தப் படப் போகின்ற இந்தப் பெண்களால் சிங்களமயமாக்கப்பட்டுள்ள வன்னியில்  மானத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி பற்றி சிந்திக்க வேண்டியது என்னைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளின் வேலையல்ல. அவர்களின் பசித்த வயிறுக்கு நிரந்தரமாக சோறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இலங்கை  அரசு என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், விதைப்புக் காலம் தொடங்கும் அக்டோபருக்கு முன்பு அவர்களைக் குடியமர்த்தி, பயிற்சிகளை அளித்தாக வேண்டும்” என ” பொறுப்போடு ” பதில் சொல்கிறது இந்த ஜென்மம். இத்தனைக்கும் இதற்கு மூன்று பெண்பிள்ளைகள் வேறு.

சாமிநாதன்களது தலைமுறைகளைப் பொறுத்தவரை சோறா? மானமா? என்பதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளட்டும். அது அவர்களது உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை

“ சோறா? ”

”மானமா? ”

என்றால் எதைத் தேர்வு செய்வார்கள் என்பதற்கு அவர்களது தீரமிக்க போராட்டங்களே பதில்கூறும்.

மானத்தை இழந்து மகசூல் எடுக்கக் காத்திருக்கும் இந்தத் திட்டத்திற்கு பெயர் வடக்கின் வசந்தமாம்.

உண்மையில் வசந்தமில்லை அது.

வடக்கின் மக்களுக்கான வாய்க்கரிசி.

( நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ் )