இந்த வாரம்……… காங்கிரஸ் வாரம்………

tblArasiyalnews_70975893736

காங்கிரஸ் தலைகளைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில்பட ஓடுகிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். பின்னே வேலியில் போகிற டைனோசரை எடுத்து வேட்டியில் விடுவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஏனெனில் காங்கிரசுக்கும் கலை உலகுக்குமான ”லட்சிய உறவு” அப்படிப்பட்டது. அதில் சேர்ந்த நடிகர்களில் ஒருவர் கூட ”வாழ்ந்ததாக” வரலாறு கிடையாது.

ஒருகாலத்தில் காங்கிரசில் சேர்ந்து ”தேசபக்த”த் தொண்டாற்றப் போன ”தேசிய நடிகை” மாயா கூட பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ சிக்கி சின்னாபின்னமாகி உதைபட்டு கடிபட்டு கடைசியில் ”நடிகை மாயா கடிபட்ட இடம் இதுதான்” என்று பத்திரிகைகளில் முதுகில் அம்புக்குறி போட்டு வந்த படங்களை லேசில் மறந்திருக்க மாட்டார்கள் பலரும்.

இந்த லட்சணத்தில் ரஜினியோ…… விஜய்யோ….. சூர்யாவோ போய் மாட்டித் தொலைத்தால் நாளை எந்த இடத்தில் அம்புக்குறி போட்டுப் படங்கள் போட வேண்டி வருமோ நமது பத்திரிக்கைகளுக்கு……. அது காங்கிரசுக்கே வெளிச்சம்.

ராகுலின் தமிழ் நாட்டுப் பயணத்தை ஒட்டி உள்ளூர் காங்கிரஸ் ஆசாமிகள் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத்தான் போகிறது என்பது. ஆனால் இங்கல்ல பிரிட்டனில் என்று. காரணம் : ஏறக்குறைய அத்தனை விளம்பரங்களுமே ஆங்கிலத்தில் இருந்ததுதான். இதில் ராகுல் அடித்த கூத்துகள் தனி ரகம். ஏற்கெனவே கோமா ஸ்டேஜில் கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்த என்னென்ன வழிகள் என்று அவர் ஊர் ஊருக்கு ஆலோசித்த காட்சிகள்தான் அற்புதத்திலும் அற்புதம்.

வாரிசின் அடிப்படையிலேயே உலா வந்திருக்கும் ராகுல்…..

அதே வாரிசு அடிப்படையில் வந்திருக்கும் கார்த்திக் சிதம்பரத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் ஒருபோதும் கூடாது என்று முழங்கிய முழக்கமென்ன……..

இன்னமும் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் போபர்ஸ் ஊழலின் பிதா யாருடைய பிதா எனக் கண்டுபிடிக்கக் கையாலாகாத நிலையில் “ஊழலை ஒழிப்பேன்” என கர்ஜித்த கர்ஜனையென்ன…….

அடடா…… எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்தான்.

சத்தியமூர்த்தி பவனில் பீட்டர் அல்போன்சை ”பேசாதே உட்காரு” என ஒரு கோஷ்டி சொல்ல…..

”பேசு தலைவா”ன்னு இன்னொரு கோஷ்டி திருப்பிச் சொல்ல…..

ரெண்டு கோஷ்டியையும் சேராத இன்னொரு கோஷ்டி மைக்கைப் பிடிக்க…….

மற்றொரு கோஷ்டி மைக்கை ஆப் செய்ய…….

இத்தனைக்கும் நடுவே ”கோஷ்டி பூசலை ஒழிப்பதுதான் என் லட்சியம்” என ராகுல் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டாராம்…….

ஆக இருக்கிற கோஷ்டிகள் போதாதென்று கடைசியில் காங்கிரசுக்குள் ”கோஷ்டியை ஒழிக்கும் கோஷ்டி” என்று புதிதாக ஒரு கோஷ்டி உருவானதுதான் மிச்சம்.

குடிசைக்குள்ளே திடீரென்று நுழைவது……

குழந்தைப் பசங்களோடு கோலி குண்டு விளையாடுவது……

தேர்தல் நேரத்தில் “வண்க்க்கம்” என்று பல்லிளிப்பது…….

போன்ற பல ஸ்டண்ட்டுகளை அப்பா ராஜீவ்….. பாட்டி இந்திரா…… கொள்ளுத் தாத்தா நேரு….. காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாகப் பார்த்த மாநிலம்தான் தமிழகம் என்கிற வரலாற்றையும் யாராவது சொல்லிக் கொடுத்து கூட்டி வந்திருந்தால் தேவலை.

எல்லாவற்றுக்கும் மேலாக…….

”ஊழலை ஒழிப்பேன்….”

”கோஷ்டி அரசியலை ஒழிப்பேன்…..”

”வாரிசு அரசியலை ஒழிப்பேன்….. ”

என்றெல்லாம் இப்படித் தனித்தனியாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கு பதிலாக பேசாமல் பெரியார் சொன்ன மாதிரி ”காங்கிரசை ஒழிப்பேன்” என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் ராகுல்.

                                                                           **********

 

நாட்டில் தலை விரித்தாடும் வறட்சியைப் போக்க சிக்கனத் திட்டங்களை அறிவித்துள்ளாராம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதில் ஒன்றுதான் மத்திய அமைச்சர்களும் எம்.பி.களும் இனி விமானப் பயணத்தின் போது முதல்வகுப்பில் பயணம் செய்யக் கூடாது. சாதாரண வகுப்பில்தால் பயணம் செய்ய வேண்டும் என்பது.

சொல்லி வாய் மூடுவதற்குள்ளாகவே “நானோ குண்டு. நானெப்படி சாதாரண வகுப்பில் பயணம் செய்ய முடியும்?” என்று விவசாய அமைச்சர் புலம்ப……

“நான் எக்கச்சக்க உயரம் என்னால் எப்படி வர முடியும் சாதாரண வகுப்பில்?” என்று அமைச்சர் அப்துல்லா அலற…..

“வெளிநாட்டுப் பயணத்தில் சாதாரண வகுப்பில் வந்தால் பெண்டு கழண்டுவிடும்” என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா அங்கலாய்க்க…..

சந்தி சிரிக்கிறது காந்தீய வழியில் நடக்கும் காங்கிரசின் லட்சணம்.

நட்சத்திர ஓட்டல்களில் இனி கருத்தரங்குகளை நடத்தக்கூடாது என்று சொன்னால்…… ”விருந்துகளை மட்டுமாவது வைத்துக் கொள்ளலாமா?” என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா.

”வெளிநாட்டுப் பயணத்தின்போது எங்கள் தினப்படியைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்” என்று சோத்துக்கு வழியில்லாமல் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு கிடக்கும் பரம ஏழையைப்போல் பரிதவிக்கிறார் மற்றொரு அமைச்சர்.

நம்மைப் பொறுத்தவரை இந்த விமானப் பயணச் சிக்கனம்….. ஆடம்பர ஓட்டல் சிக்கனம்…. போன்ற டுபாக்கூர் சிக்கன நடவடிக்கைகளுக்கு பதில்…..

ஆண் அமைச்சர்கள் இனி காந்தியைப் போல மேல்சட்டை அணியாமல் வெறும் வேட்டியை மட்டும்தான் கட்டிக்கொண்டு வர வேண்டும்……

பெண் பிரமுகர்கள் நூல் புடவைதான் கட்ட வேண்டும்…..

விமானத்தில் கூட நுழைய முடியாமல் தவிக்கிற அமைச்சர்கள் இனி காந்தியைப் போல ஆட்டுப்பாலும், வேர்க்கடலையும்தான் சாப்பிட வேண்டும்……

அல்லது உடம்பு இளைக்கும்வரை வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு ஓடித்தான் வரவேண்டும்…..

சம்பளத்தில் 20 சதவீதத்தை வறட்சிக்குக் கொடுப்பதற்கு பதில் சேர்த்துள்ள சொத்தில் 20 சதவீதத்தைக் கொடுக்க வேண்டும்…..

என்பது போன்ற உருப்படியான உத்தரவுகளைப் போட்டால்தான் நாட்டில் உள்ள பணவீக்கம் குறைவதோடு அவர்கள் உடலில் உள்ள வீக்கமும் குறையும்.

இது போக இன்னும் என்னென்ன சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டால் நாட்டை முன்னேற்றலாம் என்பதற்கு அரிய ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் அணுக வேண்டிய முகவரி:

காங்கிரஸ் கட்சி அலுவலகம்

சத்தியமூர்த்தி பவன்

சென்னை.

ஏனெனில் இந்தியாவிலேயே இங்குதான்

கோட்டு சூட்டுடனோ…….

வேட்டி சட்டையுடனோ உள்ளே நுழைபவர்கள் வெறும் கோவணத்தோடு வெளியில் வருகிற ”உச்சகட்ட சிக்கன நடவடிக்கை முகாம்கள்” அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் அம்புட்டுதானுங்கோ.

Advertisements

7 thoughts on “இந்த வாரம்……… காங்கிரஸ் வாரம்………

 1. போட்டுத் தாக்குங்க!

  இந்த பாகுல் பூந்தி ச்ச ராகுல் பூந்தி அதாங்க ராகுல் காந்தி இருக்காரே, அவர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது சில கேள்விகளுக்கு உளறிக்கொட்டியிருந்தாரே!

  ‘இட ஒதுக்கீடு அதிக சீட்டுகள் இருந்தால் தேவையில்லை’ – ‘நதிகளை இணைப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும்’ னு. அவரு எப்பவுமே இப்படிதான் உளறுவாப்லயா?

 2. ராகுலைப் பற்றி நல்லாவே தாளிச்சிருக்கீங்க பாமரன்! ஆனா, அது என்ன புகைப்படம்? காங்கிரஸ் கோஷ்டி சண்டையா?

 3. மேலே உள்ள இரண்டாவுது இடுகையில் ஏதேனும் மறைமுக செய்தி உண்டா? அல்லது சும்மா காமடிக்காக எழுதப்பட்டதா? மூன்றாவது இடுகை மிகவும் வித்தியாசமான பார்வை (உண்மையும் கூட!). இதைதான் Negative impact எண்பார்களோ?

  பி. கு. நானும் புதிதாக வலை ஒன்று ஆரம்பித்து எழுதத் தொடங்கி உள்ளேன் (http://aathimanithan.blogspot.com). அதற்கு தூண்டுகோலாக அமைந்ததில் உங்களின் எழுத்தும் ஒன்று என்பதை குறிப்பிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

  தங்கள் வரவிற்காக ஆவலுடன் காத்திருக்கும்…ஆதிமனிதன்.

 4. மேலே உள்ள என்னுடைய பின்னூட்டம் “ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்… ” என்ற இடுகைக்கு இடப்பட்டது… தவறுதலாக இங்கே பதிவாகிவிட்டது…

 5. இந்த வாரம் காமடி வாரம்…..வெறும் நாலு பேர கட்சியில வச்சுகிட்டு பத்து கோஸ்டி ஆரம்பிக்கிரானுக ,இதுல வேற இவனுக ஒருங்கிணைந்த இலங்கைய பத்தி அப்பப்ப கூவூரானுக …கைய தூக்காத கர வேட்டி அவுந்திரும் ….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s