ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்….

இதை விட தமிழுக்கும், தமிழருக்கும் யார் முதல் மரியாதை தந்துவிட முடியும்? நம் தமிழக அரசைத் தவிர?

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் கொச்சைப் படுத்திய சிவாஜி சிறந்த படமாம். இதற்கு விருது வேறு. தொல்காப்பியத்திற்கு உரையும், குறளுக்கு ஓவியமும் தீட்டியவரின் அரசு அறிவித்திருக்கிறது.

பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைப் பார்த்து ரஜினி ”வாங்க பழகலாம்” எனப் பல்லிளிப்பதும்……

அழகுமிகு தமிழ்ப் பெயர்களைக் கொண்ட அச்சிறுமிகளை கேடுகெட்ட முறையில் விவேக் கிண்டல் செய்வதும்……..

அப்பா பொறுப்பில் இருக்க வேண்டிய பாப்பையா ”அத்தையின் கணவர்” வேலை பார்ப்பதும்….

கண்டு காறித் துப்பாத தமிழ் உணர்வாளர்களோ பெண்ணியவாதிகளோ இல்லை.(இயக்குநர் ஷங்கர்….. வசனகர்த்தா சுஜாதா போன்ற இத்யாதிகளை ஏற்கெனவே நான் பலமுறை திட்டித் தீர்த்தாயிற்று) பெண் இனத்தைக் கொச்சைப் படுத்தியது  போதாதென்று அப்பெண்களுக்கு முகத்தில் கருப்புச் சாயம் பூசி கருப்பினத்தையும் கொச்சைப்படுத்தியது கண்டு குமுறியவர்கள் அநேகம் பேர்.

இந்த லட்சணத்தில்தான் இதற்குக் கிடைத்திருக்கிறது ”சிறந்த” படத்திற்கான விருது.

அருமையோ அருமைன்னேன்.

இவர்களைத் தவிர உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் தகுதி வேறு எவருக்கு இருக்க முடியும்ன்னேன்?

**********

காலையில் எழுந்ததில் இருந்தே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வந்த ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் ஒவ்வொரு ரகம். அதிலும் சென்னையில் இருந்து அழைத்த ஒரு நண்பர் இதுவரையிலும் யாருமே கேள்விப்பட்டிராத “புதிய” ”புதிய” தகவல்களாகச் சொன்னார். நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி.

”வணக்கங்க தோழர்…. நலமா இருக்கீங்களா?”

ரொம்ப நல்லா இருக்கேன் தோழர். நீங்க எப்படி?

”நலம். அப்புறம் ஒரு மிக முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் கூப்பிட்டேன்.”

சொல்லுங்க தலைவா…. என்ன விஷயம்?

“தமிழக அரசியல்”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு தெரியுமா உங்களுக்கு?” (இதுல முப்பதாவது வாரமா எழுதும் எனக்கு இது தேவைதான்)

அடடே…… அப்படியா? தெரியாதே எனக்கு….. என்றேன்.

”அதுல என்னோட புத்தகம் பத்தி ஒரு செய்தி வந்திருக்கு. வாங்கிப் பாருங்க.” (அடப்பாவி மத்த பக்கங்களை புரட்டிக்கூட பார்க்கலியா….)

அவசியம் பார்க்கிறேன் தோழர்

”அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்…… நாங்க மறுபடியும் எங்க பத்திரிக்கையை அக்டோபர்ல இருந்து கொண்டு வர்றோம். அதுக்கு உங்க கட்டுரை வேணும்.”

கட்டாயம் குடுக்கிறேன் தலைவா…..

”இன்னொரு மிக முக்கியமான மேட்டர்…. ”

சொல்லுங்க தோழர்……..

”தமிழ்நாட்டுல “தினத்தந்தீ”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு……..”

அய்யய்யோ…….. என்னது காந்திய சுட்டுட்டாங்களா……..? எப்ப……?

**********

தமிழக அரசியலில் பதில் சொல்லும் சீனியர் உண்மையிலேயே சீனியர்தான் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். அவர் வெறுமனே பதில் அளிப்பதில் மட்டுமல்ல, வயதிலும் அனுபவத்திலும் சீனியர்தான் என்பதை ஒரே ஒரு பதிலில் உணர்த்திவிட்டார்.

போன வாரம் “தமிழகத்தில் பெரியார் பிறந்திருக்காவிட்டால்….?” என்கிற கேள்விக்கு “ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.” என்று பதிலளித்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்,

கடந்த தலைமுறையில் நடந்த பல சமாச்சாரங்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லையே என்கிற ஆதங்கத்தை அவர் நாசூக்காக வெளிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நேற்று சிறு கூட்டத்தவர்களிடம் மட்டும் ஆலயங்கள் இருந்த நிலை மாறி, இன்று பெரும் கூட்டம் அங்கு கூடுகிறதே ஏன்? என்பதற்கான விடையை அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும். அந்த வகையில் என்ன சொன்னாலும் சீனியர் சீனியர்தான். ஜூனியர் ஜூனியர்தான்.

உண்மைதான்.

தந்தை பெரியார் இங்கு பிறந்திருக்காவிட்டால் ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காதுதான்.

கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில்  கால் பட்டால் கூட தீட்டாகி விடுமென்று சொன்னதை நம்பி ஒரு பெரும் கூட்டம் ஊரைச் சுற்றி வலம் வர…..

”கோபுர தரிசனமே கோடி புண்ணியம்” என்று அளந்ததைக் கேட்டு இன்னொரு கூட்டம் கோயிலுக்கு வெளியே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க…….

”ஆகமத்துக்கு ஆகாது. அப்படியே நில்” என்றதை ஏற்று கருவறைக்கு வெளியே மற்றொரு கூட்டம் காத்துக் கிடந்த வேளையில்தான் அந்தக் குரல் ஒலித்தது……..

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால் இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?” என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாற்றியேசுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடாநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

 

 

 

 

என்று சிவவாக்கியர்கள் கரடியாய் கத்தியும் விழித்தெழாத இந்த சமுதாயம்…….

அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான் விழித்துக் கொண்டது. அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான். சமத்துவமற்ற சமயத் தலங்களை சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

வைக்கம் நகரத்து வீதிகளில் ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள் கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

”ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல் உரக்க எழுந்திருக்க முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து குறி சொல்லிக் கொண்டிருக்கும் ”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே வழிபடுவது மட்டுமல்ல….. பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள் தோன்றியிருக்க முடியாது.

 

தெருநுழைவுப் போராட்டம்……

கோயில் நுழைவுப் போராட்டம்…..

கருவறை நுழைவுப் போராட்டம்……

சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………

என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்

“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

எனது முப்பாட்டன் கோயிலுக்குள் நுழைய முடியாமல் இருந்த நிலை மா(ற்)றி

இன்று எனது தலைமுறை நுழைகிறதென்றால் அதற்குக் காரணம் அந்தப் பெரியார்தான்.

 

ஆம்.

பெரியார் நாத்திகர்களுக்கு  மட்டுமில்லை

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.

6 thoughts on “ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்….

  1. //பெரியார் நாத்திகர்களுக்கு மட்டுமில்லை
    ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.//

    அதே! அதே!!

  2. பெரியார் நாத்திகர்களுக்கு மட்டுமில்லை
    ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்//

    மிக நன்று, பாமரன்!!

  3. தெருநுழைவுப் போராட்டம்……

    கோயில் நுழைவுப் போராட்டம்…..

    கருவறை நுழைவுப் போராட்டம்……

    சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………

    என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்

    “போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

    எனது முப்பாட்டன் கோயிலுக்குள் நுழைய முடியாமல் இருந்த நிலை மா(ற்)றி

    இன்று எனது தலைமுறை நுழைகிறதென்றால் அதற்குக் காரணம் அந்தப் பெரியார்தான்.///

    போங்க தலைவா ,இந்த மாதிரி சமுதாய சீர்திருத்தங்களுக்கு காரணம் “பெரியவாதான்னு ” சுட சுட ஒரு புத்தகத்தை ராமகோபாலன் எழுதி ஒன்று படுங்கள் இந்துக்களேன்னு இன்னும் கொஞ்ச நாள்ல கூவ போறாரு பாருங்க…..

  4. கடைசி வார்த்தை உண்மை தான். ஆத்திகர் நாத்திகர் இருவருக்கும் தந்தை பெரியார் தான் வழிகாட்டி. அவரவர் எடுத்துக்கொண்ட முறைகளைப் பொறுத்து அது நம்பிக்கையா அல்லது மூட நம்பிக்கையா என்பது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s