கம்பீரமாக விடைபெற்ற பிரேமானந்த்….

225px-Basava_Premanand

அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.

ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின் தெற்குக் கோடியில் இருக்கும் போத்தனூரில் வைக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்……  தமிழகம் மட்டுமில்லை….. இந்தியாவில் மட்டுமில்லை…… உலகம் முழுக்க அந்த மனிதனுக்கு நண்பர்கள் பரந்து விரிந்திருந்தனர்.

ஆம் அந்த மனிதனின் பெயர் பிரேமானந்த்.

உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் மிகப் பரிச்சயமான பெயர்.

     நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உள்ள அந்த கிராமத்திற்கு திடீரென தாடி வைத்த சாமியார் ஒருவர் வருவார். கிராமமக்கள் உடனே சூழ்ந்து கொள்ள ஆரம்பமாகும் அவரது ”பூஜைகள்”. அருகில் உள்ள அந்த ஊர்க்காரரை அழைத்து “வா வந்து இந்தத் தேங்காயை உடை” என்பார். ஊர்க்காரர் ஓங்கி உடைத்த மறுநொடியே ஆச்சர்யத்தால் அதிர்ந்து போவார். உடைந்த தேங்காய்க்குள் இருந்து மல்லிகைப்பூக்கள் சிதறும்.

“சாமி” என்று காலில் விழுவார்கள் மக்கள்.

”சரி….. சரி…. நீ வா…… நீ அதே மாதிரி இந்தத் தேங்காயை ஓங்கி உடை” என்று மற்றொன்றைக் கொடுப்பார். அந்த ஆள் உடைத்த மறுநொடியே அதிர்ச்சியில் உறைந்து போவார். தேங்காய்க்குள் இருந்து ரத்தம் தெறிக்கும்.

மக்கள் மிரண்டுபோய் காலில் விழுந்து கும்பிட ஆரம்பிப்பார்கள்.

“மக்களே பொறுங்கள். நான் சாமியாருமில்லை. எந்த வித அற்புத சக்தியும் கொண்டவனுமில்லை. உங்களைப் போலவே மிகச் சாதாரண மனிதன். நம்புங்கள்” என்பார்.

வியந்து நிற்கும் மக்களிடம் தேங்காயின் குடுமியைப் பிய்த்து அதில் துளை போட்டு உள்ளே இருக்கும் நீரை எடுத்துவிட்டு மல்லிகைப் பூவை சொருகிய விதத்தையும், ரத்தத்தை செலுத்திய விதத்தையும் விளக்கிக் காட்டுவார்.

“நான் செய்ததெல்லாம் வெறும் மேஜிக்தான். இப்படித்தான் நாட்டில் பலபேர் இந்த மேஜிக்கை மந்திரசக்தி என்றும்….. இறைவனிடம் இருந்து பெற்ற அற்புதங்கள் என்றும் கூறி உங்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” என அறிவுறுத்திவிட்டு அடுத்த கிராமம் நோக்கி நகர்வார் அந்தப் பெரியவர்.

அந்தப் பெரியவர்தான் பிரேமானந்த்.

தான் சந்தித்த மக்களையெல்லாம் விழிப்படைய வைத்துவிட்டு இப்போது மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.

அக்டோபர் 4 ஆம் தேதி தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்ட பிரேமானந்துக்கு வயது 79. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொன்னது : ” நான் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் எனது உடலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடுங்கள். எனது உடல் மருத்துவ மாணவர்களது ஆராய்ச்சிக்காகப் பயன்படட்டும். எனது உடலை வைத்து எந்தவொரு சாதிச் சடங்கோ….மதச் சடங்கோ நடத்த அனுமதித்து விடாதீர்கள். ”

அதன்படியே அரங்கேறியது அந்த எளிய மனிதனது இறுதி ஊர்வலம். இப்போது அவர் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கான மேசையின் மீது கிடத்தப்பட்டிருக்கிறார் வெகு கம்பீரமாக.

பிரேமானந்த் என்றழைக்கப்படும் “பசவ பிரேமானந்த்”  பிறந்தது கோழிக்கோட்டில் என்றாலும் இருந்தது இறந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு பள்ளியைத் துறந்தவர் பகுத்தறிவின்பால் நாட்டம் கொண்டு நாற்பத்தி ஒன்பது நாடுகளைச் சுற்றி வந்தார்.

எண்பதுகளில் கோவையில் அவரின் பகுத்தறிவுப் பணிக்கு தோள் கொடுத்தவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் கு.ராமகிருஷ்ணனும், தலைமை நிலையச் செயலாளர் வெ. ஆறுச்சாமி போன்றவர்களும்தான்.

அதிலும் விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, அந்தரத்தில் மிதப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற மூட நம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு கூப்பிட்டதும் தயாராய் நின்றவர்கள் ஆறுச்சாமியும், ”தோழர்” அறக்கட்டளை என்கிற மனித நேய அமைப்பை நடத்தி வரும் சாந்தகுமாரும்தான்,

”படிக்காத மேதை” ஜி.டி.நாயுடுவின் மிக நெருங்கிய நண்பர் பிரேமானந்த். எல்லாவற்றை விடவும் தங்கத்தைத் தயாரிப்பவர்கள் அதற்கான லைசன்சைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற விதியைச் சுட்டிக்காட்டி லைசன்ஸ் இல்லாமல் தங்கம் எடுத்துக் கொடுக்கும் சாய் பாபாவை தங்கக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என இவர் போட்ட வழக்கு உலகப்பிரசித்தி பெற்ற வழக்கு. பி,பி.சி., டிஸ்கவரி சேனல் என பலவற்றில் இவரது பேட்டிகள் ஒளிபரப்பப் பட்டிருக்கின்றன.

இந்த மக்களின் அறிவியல் அறிவைப் பெருக்குவதற்காக அவர் விட்டு சென்றிருக்கும் சொத்து ஏறக்குறைய ஒன்றரை லட்சம் புத்தகங்களும் ஒரு அறிவியல் விளக்கக் கூடமும்தான்.

”கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு” என பிரேமானந்த் விடுத்த அறைகூவல் அவரைப் போலவே வெல்லப்பட முடியாமல் இன்னமும் சவால் விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறது.

**********

நடிகை புவனேஸ்வரி விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் சமாச்சாரம். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்….. ஆக்கக் கூடாது என்கிற வாதங்களைத் தாண்டி நமக்கு வருகின்ற கோபமெல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மீதுதான். ஆடம்பரங்களுக்காக இப்படிப் போனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் பிழைக்க வேறு வழியே கிடைக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இதைத் தேர்ந்தெடுத்து உயிர்வாழும் பெண்களைப் படம் பிடித்து “பிடிபட்ட விபச்சார அழகி இவள்தான்” என வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நமது கோபம். அப்படிப் படம் போடும் பத்திரிக்கைகள் அவர்களோடு உறவு கொண்ட பெரிய மனிதர்களைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வியே. பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணுக்குப் பெயர் விபச்சாரி என்றால்…. பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு என்ன பெயர்?

 

”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.

நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம்  செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன்.  அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?

ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……

அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..

என்ன நீதி இது?

யோசிக்கட்டும் ஊடகங்கள்.