உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம் 3

ஆசுபத்திரில இருந்து வந்ததுல இருந்தே பலமாசமா மனசு செரியில்ல. ஈழத்துல நம்ம சனங்கள அந்த நாசமாப் போறவனுக கொத்துக் கொத்தா குண்டப் போட்டுக் கொல்றாங்கன்னு வர்ற சேதிகளக் கேட்டா சோறு கூட உள்ள எறங்க மாட்டேங்குது. யாரு கூட எதப் பத்திப் பேசிகிட்டு இருந்தாலும் நெனப்பு அங்க கொண்டு போயி உட்டுருது.

இதுக்கெடையில எவனாவது அந்தப் படம் பாத்தியா? இந்தப் படம் பாத்தியா?ன்னு கேட்டா…… கால்ல இருக்குறத கழட்டி அடிக்கலாமான்னு கோபம் கோபமா வருது.

அவ்வளவு ஏன்….. எனக்கு உங்க படம் பாக்கக்கூட மனசு வர்லேன்னா பாத்துக்கங்களேன். ஆனா இந்த மனித உரிமை மார்த்தாண்டன்தான் “இப்புடியே ஊட்டுக்குள்ள கெடந்தா எப்படி? வா உங்காளு தமிழர்களோட அருமை பெருமைகளப் பத்தி  புர்ர்ர்ர்ட்சிகரமா ஒரு படம் தயாரிச்சு அதுல நடிச்சும் இருக்காரு பாக்கலாம்”ன்னு கூட்டிகிட்டு வந்தான்.

”உன்னைப் போல் ஒருவன்”ன்னு பேரே வித்தியாசமா இருந்துச்சு. ச்சே….. என்னதான் சொன்னாலும் நம்மாளு நம்மாளுதாண்டான்னு மனசுக்கு அப்பவே பட்டுச்சு.

அதைவிடவும் போலீசுக்கே உரிய தொப்பையும் தொந்தியுமா நம்ம மோகன்லாலு வேற ’உனிக்கு என்ன வேணம்’, ’எனிக்கு இப்புவே தெரிஞ்ஞ்ஞ்சாகணும்’ ’எண்ட பணி நான் செய்யும்’ன்னு வசனம் பேசப் பேச தியேட்டர்ல விசிலும் கைதட்டலும் காதைப் பொளக்குது. இதென்னடாது நாம கோயம்புத்தூர்ல இருக்கமா? இல்ல கோழிக்கோட்டுல இருக்கமா…… ன்னு சந்தேகம் வந்து சுத்தியும் முத்தியும் பாத்தா எல்லாம் நம்ம கேரளத்து சேட்டன்மார் கூட்டம்.

ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைல தண்ணி பிரச்சனை……. அது போதாதுன்னு இந்த மோகன்லால் வேற “Not only Kerala……. திஸ் ஈஸ் மை நாடு ஆல்சோ”ன்னு வசனம் பேசறதக் கேட்டதும் திக்குன்னு ஆயிருச்சு. நம்ம தமிழ்நாட்ட இன்னும் தனியாத்தான் உட்டுவெச்சிருக்கானுகளா இல்ல மொத்தமா கேரளாவோட சேத்தீட்டானுகளான்னு ஊட்டுக்குப் போனதும் மொதல்ல மேப்ப எடுத்துப் பாக்கணும்ன்னு முடிவுபண்ணீட்டு அப்புடியே படத்துல மூழ்கீட்டேன்.

ஒரு குத்துப்பாட்டு….. ஒரு பைட்டு….ன்னு இல்லாம இந்த நாட்டை சூறையாடுற தீவிரவாதிகள நீங்க போட்டுத் தள்றதப் பாத்ததும் அப்படியே மயிர்க்காலெல்லாம் சிலிர்த்துகிச்சு. அதுலயும் ”காலேஜு டீனேஜு பெண்கள்….. எல்லோர்க்கும் என் மீது கண்கள்”ன்னு அரை டவுசரோட ஆடாம கூடை நெறையா தக்காளிப்பழம், மொழகா, கொத்தவரங்கான்னு ஊட்டுக்கு வாங்கீட்டுப் போற காமன்மேனா வர்றீங்களே அதுக்கே குடுக்கனும்ங்க ஒரு ஆஸ்கார்.

ஆனா மனித உரிமை மார்த்தாண்டன்தான் கடுப்போட படத்தப் பாத்துகிட்டு இருந்தான். படம் உட்டதும் மனசே பாரமாப் போச்சு. என்ன ”மனித உரிமை” நம்மாளு நல்ல மெசேஜ்தான சொல்லீருக்காரு……. இதுலயும் என்னாவது கொறை கண்டுபுடுச்சுருக்கியா?ன்னேன்.

“வெங்காயம்……. அழுத்தக்காரன் சந்தைக்குப் போனா புழுத்த கத்தரிக்காங்குற மாதிரி…… இந்தில இருந்து ஒரு புழுத்தத் தூக்கீட்டு வந்திருக்காரு உங்க ஆஸ்கார் ப்ரியன்….. வழக்கம்போல குண்டு வெக்கறவன் எல்லாம் பாயு……. தாடி வெச்சவன் எல்லாம் தீவிரவாதி…..ங்குற வழக்கமான பல்லவிதான் இதுலயும்”ங்குறான் எரிச்சலோட.

”ஏம்ப்பா….. ஒரு இந்துவும்தான தப்புப் பண்ணுறதா காட்டீருக்காரு நம்ம காமன்மேன்?”ன்னான் பக்கத்துல இருந்த அறிவொளி அப்பாசு.

”அப்பாசு……… இந்த ஆளவந்தான்கூட சேர்ந்து நீயும் அதே மாதிரி ஆனதுதான் மிச்சம். ஒரு தீவிரவாதத்தை இன்னொரு தீவிரவாதத்தாலதான் தீர்க்கணும்ங்குற ’ மாபெரும் தத்துவத்தை’  சொல்றதுக்கு இம்மாம் பெரிய ’மேதை’ தேவையில்ல…… அதுக்கு பொட்டிகடை முன்னாடி பேப்பர் படிக்கறவங்க போதும். உண்மையா சமுதாயத்த நேசிக்கறவன் தீவிரவாதத்துக்கான காரணம் எங்கிருந்து கெளம்புது…… அதை எப்படி முதல்ல சரி பண்ணுறதுன்னுதான் யோசிப்பான்.

கொசுவ ஒழிக்கணும்ன்னா டார்டாய்ஸ் கொளுத்துன்னு சொல்றது புத்திசாலித்தனமில்ல……. சாக்கடைய மூடச் சொல்றதுதான் சரியான தீர்வு.

இதத்தான் எங்கூர்ல தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கறதுன்னு சொல்லுவாங்க புரியுதா?”ன்னு பட்டையக் கெளப்பறான்.

அப்ப தீவிரவாதம் சரிதான்னு சொல்ல வர்றியா?ன்னேன் கடுப்பு தாங்காம.

“யோவ் அரை லூசு ஆனைக்கு அர்றம்ன்னா……. குதிரைக்கு குர்றம்ன்னு சொல்லக் கூடாது. இஸ்லாமிய தீவிரவாதம் பத்தி நீட்டி முழங்குறவங்க இந்துத் தீவிரவாதம் பத்தி வாயே திறக்கறதில்லையேங்கறதுதான் நம்ம கேள்வி. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பப் பத்தி பேசறவங்க அதுக்கு மூணு மாசம் முன்னாடி நடந்த பதினேழு அப்பாவி இஸ்லாமியர்க படுகொலைகளப் பத்தி பேசறதில்ல…… மும்பை குண்டுவெடிப்புகளப் பத்தி பேசறவங்க அதுக்கு முன்னால பாபர் மசூதி இடிச்சப்ப நடந்த மும்பை படுகொலைகளப் பத்தி வாயே திறக்கறதில்ல.

அந்த மசூதிய இடிச்சு வருசம் பதினேழாச்சு. இன்னும் அதுக்குக் காரணமானவங்க தண்டிக்கப் படலை. பத்தாதுக்கு அந்தப் புண்ணியவானுக இன்னைக்கும் முதலமைச்சரா இருக்காங்க……  முன்னாடி மத்திய அமைச்சர்களாகவே இருந்திருக்காங்க.

மக்களைப் பலியாக்குற எந்தத் தீவிரவாதமா இருந்தாலும் கண்டிக்கணும் அது இந்துத் தீவிரவாதமா இருந்தாலும் சரி…. அது இஸ்லாமிய தீவிரவாதமா இருந்தாலும் சரி.”ன்னு பெரிய கதாகாலட்சேபமே நடத்தீட்டான் அந்த உருப்படாதவன்.

கண்டிக்கறது இருக்கட்டும்……. கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சு தண்டிக்கிறது எப்போ?ங்குறதுதான் நம்ம காமன்மேன் கேக்குற கேள்வி….ன்னேன் பொட்டுல அடிச்சாப்புல.

”இப்படிப்பட்ட அபத்தமான கேள்விய எந்தக் காமன்மேனும் கேட்கமாட்டான். காமன்சென்சே இல்லாதவன்தான் கேட்பான். இப்படித்தான் முதலமைச்சர் மோடியக் கொல்லவந்தவங்கன்னு சொல்லி ’இர்ஷத்’ அப்படீங்குற காலேஜ் படிக்குற 19 வயசு புள்ளைய 2004லுல அநியாயமா சுட்டுக் கொன்னாங்க குஜராத்துல. ஆனா அது மோடிகிட்ட நல்ல பேரும்…… பிரமோசனும் வாங்குறதுக்காக குஜராத் போலீஸ்காரங்க நடத்துன பச்சைப் படுகொலைன்னு அஞ்சு வருசத்துக்குப் பிறகு உண்மையக் கண்டறிஞ்சு 2009ல அறிக்கை குடுத்திருக்காரு மாஜிஸ்ட்ரேட் ”தமங்”. அவரும் ஒரு நேர்மையான இந்துதான். இப்புடித்தான்….. எப்பவுமே ஒங்க ஒலகநாயகன் உப்பு விக்கப் போனா மழையடிக்குது……. உமி விக்கப் போனா காத்தடிக்குது என்ன செய்ய?.”ன்னு நக்கலாச் சிரிக்கிறான் மார்த்தாண்டன்.

இவனுக பேசறதக் கேட்டா எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல குருவே. நீங்க எம்மாம் பெரிய படிப்பாளி….. நீங்க போயி இப்புடி ஒரு ஊத்தைக் கதைய வடநாட்டுல இருந்து தூக்கிக்கிட்டு வரலாமா? ஏதோ கேக்கணும்ன்னு தோணுச்சு கேட்டுட்டேன். மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க துர்நாதரே….. அடச்சே…… வாயு கொளறுது……… சாரி……குருநாதரே.

நல்லவேளை நம்ம கலாரசனையத்த கந்தன்தான் நான் முழிச்சுகிட்டு நின்ன நேரமாப் பாத்து உள்ளாற புகுந்து பேச்சோட ரூட்டையே மாத்துனான்.

”அதுசரி நம்மாளோட கனவுத்திட்டமான “மருதநாயகம்” எப்ப வெளிவரும்?”ன்னான் கந்தன்.

எது அந்த வரலாறு படைக்கப் போற வரலாற்றுப் படமா? வரும்….. ஆனா வராதுகிற கதைதான் அது….ன்னேன்.

”என்னது……..? வரலாற்று சம்பவத்தைப் பத்துன படமா? அதுவும் உங்காளு எடுக்குறாரா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி.” ன்னான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏன் எடுக்கக் கூடாதா?ன்னேன் கோபமா.

”உ.போ.ஒருவன்லயே தெரிஞ்சுதே உங்காளுக்கு இருக்குற வரலாற்று ”ஞானம்”………. அதுல இது வேறயா? 2002ல குஜராத் பெஸ்ட் பேக்கரில மூணாவது பொஞ்சாதியக் கொன்னதுக்கு பழிவாங்க 1998ல கோவைல குண்டுவெச்சேன்….ன்னு சொல்ற வரலாற்றுச் சிரிப்பு மிக்க தீவிரவாதிய உங்காளு படத்துலதான் பார்க்க முடியும். அதைவிட ரெண்டாவது பீவி…… மூணாவது பீவீன்னு உங்காளு படத்துல பேசறதக் கேட்டாத்தான் சிரிப்பா இருக்கு”ன்னு எகத்தாளமாப் பேசறான் அந்த வெத்து வேட்டு. எனக்கே வெக்கமாப் போச்சு அவன் பேசுனதக் கேட்டு. நீங்குளும் இனியாவது கொஞ்சம் வெவரமாப் பேசணும் குருவே.

ஏம்ப்பா கந்தா!…… நான் உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்குறேன். அவுரு  வெறும் நடிகர் மட்டும்தான். டைரக்டர் என்ன சொல்றாரோ அத அப்படியே செய்யறதுதான் அவுரோட வேலை. டைரக்டர் பண்ணுன தப்புக்கு அந்தக் கதாபாத்துரத்துல நடிச்சவரை குத்தம் சொல்றது சரியான்னு நீயே யோசிச்சுப் பாரு….ன்னேன் உருக்கமா.

Kamal Hassan Unnai Pol Oruvan

“நீ சொல்றதும் ஓரளவு உண்மைதான்.

ஆனா……உங்காளு நடிச்ச படங்க நல்லா பேசப்பட்டுச்சுன்னா……. அதை இயக்குன டைரக்டர்க சுனாமீல சிக்குன சூட்கேஸ் மாதிரி காணாமப் போயிர்றதும்……..

படம் சந்தி சிரிச்சுதுன்னா…… அதுக்குக் காரணம் டைரக்சன்தான்னு நழுவுறதும்தானே இதுவரைக்கும் நடந்துகிட்டு இருக்கு.

நானும் தெரியாமத்தான் கேக்கறேன்…. ராஜபார்வையைப் பத்தி பேசும்போது அதோட டைரக்டர் சிங்கீதம் சீனிவாச ராவ் பத்தி யாராவது எங்கியாவது பேசி கேட்டியா?

”மகாநதி”ய மனசத் தொட வெச்சதுல அதோட இயக்குனர் சந்தானபாரதிக்கும் பங்குண்டுன்னு யாராவது முணுமுணுத்ததையாவது கேட்டியா?

”அன்பே சிவம்” படம் பெரிய அளவில் பேசப்பட்டபோது அதனோட உருவாக்கத்துல சுந்தர்.சி யோட உழைப்பும் ஒளிஞ்சிருக்குன்னு யாராவது சொல்லிக் கேட்டியா?

அவ்வளவு எதுக்கு இந்த உ.போ.ஒருவனோட டைரடக்கரு டெக்கால்ட்டியோ…… டக்கால்ட்டியோ அவுரோட போட்டோவையாவது எங்கியாவது பாத்தியா நீ?

படம் ஓடுச்சுன்னா அது கமல்னாலதான்னும்…… படம் ஊத்திகிச்சுன்னா அது டைரக்டர்னாலதான்னும் நடந்துக்குறது மத்தவங்க உழைப்பைக் கொச்சைப் படுத்தறவிசயம். நான் சொல்றது சரியா?இல்லையான்னு நீயும் யோசிச்சுப் பாரு”ங்குறான் அவனும் பதிலுக்கு உருக்கமா.

யோவ் எங்காளு எவ்வளவு பெரிய மேதை……. கோட்சே……. காந்தி…… ப்ராய்டு……..பெரியாரு….ன்னு பல பேரப் பத்தி கரைச்சுக் குடிச்சவரு….. எங்காளப் போயி குத்தம் சொல்றியே…….. இதே எங்காளு ’தேவர்மகன்’ல வர்ற பாட்டுல ”தமிழச்சி பால் குடிச்சவண்டா”ன்னு பாடுனப்ப மட்டும் வாயப் பொளந்துகிட்டு விசில் அடிச்சீங்கல்ல….. அப்ப எங்க போச்சு புத்தி?ன்னு போட்டேன் ஒரு போடு. ஆனா அதுவே வாயக் குடுத்து வம்புல மாட்டுன  மாதிரி ஆயிடுச்சு.

”இங்கபாரு ஞானசூனியம்…….. பெரியார ஏத்துக்கறவன் சாதிய ஏத்துக்க மாட்டான்……. சாதிய ஏத்துக்கறவன் பெரியார ஏத்துக்க மாட்டான். ரெண்டையும் ஏத்துக்கறேன்னு சொன்னா அவனுக்கு தலைக்குள்ள எங்கியோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். இத உங்க கோமானுக்கு மட்டும் சொல்லல….. பல சீமானுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். உங்காளு திடீர்ன்னு தேவர்மகனா வருவாரு……… அப்புறம் தமிழச்சி பால் குடிச்சவன்பாரு…….. திடுதிப்புன்னு நான் இந்தியண்டான்னு சாமியாடுவாரு. இந்தக் கடவுள்பாதி….. மிருகம்பாதி பிசினெஸ் எல்லாம் எங்க கிட்ட செல்லுபடியாகாது அதுக்கு வேற ஆளப்பாக்கச் சொல்லு உங்காள……”ன்னு போட்டுப் பொளக்குறான் கலாரசனையத்த கந்தன்.

கலைமாமணியே!……… இவனுக கிட்ட போயி இப்புடி எக்குத்தப்பா மாட்டிகிட்டமேன்னு மனசுக்குக் கஸ்டமாப் போச்சு.

ஆனா……. உங்க உன்னைப் போல் ஒருவன் படத்தப் பாத்து நமக்கே கோபம் வந்துச்சுன்னா பாத்துக்கங்களேன்.

”எது?”ங்கறீங்களா?

அதுதான் ஐம்பது வருசமா உங்களத் தூக்கிச் சொமக்கிற நம்ம தமிழனுகளுக்கே பல இடங்கள்ல உள்குத்து விடறீங்களே அதுதான்.

தமிழ்நாட்டுல தலைமைச் செயலாளர்ல இருந்து பஸ் கண்டக்டர் வரைக்கும் எல்லாரும் பிரச்சனைக்கு பயந்தவங்க……. அல்லது பொறுப்பில்லாதவங்க…… மலையாள மாறார் மட்டும்தான் ஒரே நேர்மையான அதிகாரி. ஆனா அவுரும் தன் கடமையச் செய்த பாவத்துக்காக கமிசனர் பதவியப் பறிகொடுப்பவரு……ன்னு மொத்த தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தி இருக்கீங்களே அதை நெனச்சாத்தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு.

அதைவிட நீங்க தமிழனுகளுக்கு அறிவுரை சொல்றேன்னு அவுத்து உடற வஜனங்கள் இருக்கே….. அதக் கேட்டா பின்னால பிளேடுலயும் கீறி மிளகாயவும் தேய்ச்ச மாதிரி இருக்கு.

“மும்பைல குண்டு வெடிச்சா அதப் பத்தி நமக்கென்ன? நம்ம வேற ஊரு….. பாம் மேல பாம் வெடிச்சா நம்ம டீ.வி.ல போட்டுக்கூட காட்டமாட்டோம். நமக்கு நடந்தா அது நாசம். அவனுக்கு நடந்தா அது நியூஸ். நம்ம தமிழ்நாடு….. அமைதிப் பூங்கா. பாம்பேல நெஞ்சுல ஈட்டி பாஞ்சா நமக்கென்ன? கன்யாகுமரில கால் ஊணி நாமதான் நிம்மதியா நின்னுகிட்டு இருக்கோமே……”ன்னு போட்டிருக்கீங்களே பெரிய போடு….. அதக் கேட்டதும்தான் எதுல  சிரிக்கறதுன்னே தெரியல.

பாம்பேலயாவது நெஞ்சுல ஈட்டி பாஞ்சுது…… ஆனா ”கன்யாகுமரியும் எங்குளுக்குத்தான்”னு பட்டக்சுலயே ஈட்டிய உட்டானுக உங்க மாறார் தேசத்துக்காரனுக…… நம்ம மார்ஷல் நேசமணி மாதிரி பல நல்ல மனுசனுக போராடுலேன்னா கன்யாகுமரியும் திருப்பதி மாதிரி……. நம்ம சாரி…. எங்க கைய விட்டுப் போயிருக்கும்.

மும்பைல குண்டுவெடிச்சதக்கூட தமிழ்நாட்டு டீ.வீ .ல காட்டமாட்டேங்கராங்க….ன்னு கொந்தளிக்குறீங்களே…….. மாசத்துக்கு நாலு  தடவையாவது சுட்டுக்கொல்லப் படறாங்களே நம்ம தமிழக மீனவருக….. அதை எந்த வட இந்தியாக்காரன் போட்டுப் போட்டு காட்டுனான்.?

மே மாசம் ஈழத்துல எங்க உறவுக ஆயிரக்கணக்குல கொத்துக் கொத்தா செத்து உளுந்தாங்களே அதை எந்தப் புடுங்கி கவலையோட போட்டுக் காமிச்சான்? அவ்வளவு எதுக்கு……. நீங்க தனிப்பட்ட விதத்துல மனம் துடிச்சுப் போயி என்னத்தைக் கிழிச்சீங்க?

வேணாங்க மாஜி தலைவரே…… ஏற்கெனவே நாங்க நொந்து போயி இருக்கோம். எங்க உணர்வுகளோட விளையாடாதீங்க. காமன்மேன்….. காமன்மேன்…..ன்னு கதை அளக்குறீங்களே உங்க பாணீலயே சொல்றேன்…. கேரளத்துக் காமன்மேன முல்லைப் பெரியாறுல புது அணை கட்டாம நிறுத்தச் சொல் நானும் காமன்மேனா ரோட்டுக்கு வர்றேன்.

காவிரில ”சண்டியர்த்தனம்” பண்ணாம ஒழுங்கா தண்ணி விடச் சொல் நானும் காமன்மேனா கவலைப்படுறேன்.

மும்பைக்குப் போனா ஓட ஓட வெரட்டுரானே ”அந்த சேட் கம்மனாட்டி”(உங்க நாயகன் வஜனம்தான்) அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்.

இந்த லட்சணத்துல …… ”மறதீங்குறது ஒரு தேசிய வியாதி” ன்னு வஜனம் வேற…… இங்க தேசியமே ஒரு பெரும் வியாதியாத்தான் இருக்கு அதைப் புரிஞ்சுக்கங்க மொதல்ல.

தமிழ்நாட்டுல எந்த ஊருக்குள்ள நொழஞ்சாலும்……

அங்க ”பட்டேல்” ரோடு இருக்கும்……

”சாஸ்திரி” நகர் இருக்கும்…..

”காந்தி” புரம் இருக்கும்…….

”நேரு” சிலை இருக்கும்.

அதைப் போல நீங்க தலைல தூக்கிவெச்சுகிட்டு கூத்தாடுகிற மத்த மாநிலங்கள்ல எங்கியாவது

காமராசர் சாலையையும்……

செக்கிழுத்த சிதம்பரனார் நகரையும்……

கொடி புடிச்சு அடிவாங்கியே இறந்த குமரன் புரத்தையும்…..

கட்டபொம்மன் சிலையையும் காட்டுங்க…..

அப்ப ஒத்துக்கறோம் நாங்களும் இந்தியன்…… அவனுகளும் இந்தியன்னு.

எல்லாத்தை விடவும் நீங்க கமலஹாசனா இருந்து கமல் ஹாசனாப் போனாலும் உங்க அற்புதமான நடிப்ப வடக்கத்தியான் ஏத்துக்கல. எங்க இளையராஜாவ ஒத்துக்கல. சிறந்த பாடகர் ஜேசுதாச கண்டுக்கல.

இங்க பாரம் தூக்கிப் பொழைக்கறவங்ககூட ”தேசிய பாரம் தூக்குவோர் சங்கம்”ன்னுதான் வெச்சுருக்காங்க. ஆனா இந்தத் தேசியமே பெரும் பாரம்தானோ?ங்குற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துகிட்டே வருது அதப் புரிஞ்சுக்கங்க.

உங்களக் கெஞ்சிக் கேக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்……களத்தூர் கண்ணம்மாவுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஐம்பது வருசமா உங்க நடிப்பை மனசார மதிக்கற…… உங்க கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகமும் பண்ணுற தமிழனுகள கொச்சைப் படுத்தறத விடுங்க.

அதுதான் நீங்க  சோத்துல போட்டு சாப்புடுற உப்புக்கு குடுக்குற உண்மையான மரியாதை.

தமிழ்நாட்டப் பொறுத்தவரை இந்துவோ முஸ்லிமோ கால்வயிறு கஞ்சியாவது நெரைஞ்சா போதும்டா சாமின்னு ஒருத்தருக்கு ஒருத்தர் பழசெல்லாம் மறந்து தாயா, புள்ளையா பழகிக்கிட்டு இருக்காங்க. நீங்க இந்த நேரத்துல உங்க வட நாட்டு சரக்க இங்க இறக்குமதி பண்ணி அவுங்க பொழப்பக் கெடுத்தறாதீங்க.

ஏன்னா சகலகலா வல்லவனா இருந்தாலும் சரி……

அது உன்னைப் போல் ஒருவனா இருந்தாலும் சரி………

சினிமாங்குறது உங்குளுக்குக் காசு.

எங்குளுக்கு வாழ்க்கை.

அதுல மட்டும் மண்ணள்ளிப் போட்டுறாதீங்க.

உங்கள் இரக்கத்தை நாடும்,

பாமரன்.

Advertisements

25 thoughts on “உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம் 3

 1. //கொசுவ ஒழிக்கணும்ன்னா டார்டாய்ஸ் கொளுத்துன்னு சொல்றது புத்திசாலித்தனமில்ல……. சாக்கடைய மூடச் சொல்றதுதான் சரியான தீர்வு.//

  எப்படி தலைவா ஒரு பெரிய மேட்டருக்கு இம்புட்டு சுழுவா தீர்ப்பு சொல்றிங்க!

 2. you expressed the same what i thought.

  we need to let him know this article…Kamal hassan’s thinking all childish..
  I wonder how this soceity call him as “Intellectual”.

 3. we need to let him know this article…Kamal hassan’s thinking all childish..
  I wonder how this soceity call him as “Intellectual”.

  • அண்ணா பாமரன்

   மிகவும் நல்ல பதிவு. இதை கமல் நிச்சயமாக பார்க்க வேண்டும். நானும் கமல் ரசிகனாகத்தான் இருந்தேன் அவரின் தசாவதாரம் பார்க்கும் வரையில். எங்கேயோ படித்த ஞாபகம் கமலுக்கு இரண்டு சிவாஜிகளால் தான் பிரச்னை என்று. ஓன்று நடிகர் திலகம் மற்றது சிவாஜி ராவ்.

 4. //”இங்கபாரு ஞானசூனியம்…….. பெரியார ஏத்துக்கறவன் சாதிய ஏத்துக்க மாட்டான்……. சாதிய ஏத்துக்கறவன் பெரியார ஏத்துக்க மாட்டான். ரெண்டையும் ஏத்துக்கறேன்னு சொன்னா அவனுக்கு தலைக்குள்ள எங்கியோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். இத உங்க கோமானுக்கு மட்டும் சொல்லல….. பல சீமானுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்.//

  இங்கே இன்னொருத்தருக்கும் உள்குத்து விடுறமாதிரி இருக்குதே ( பால்தாக்கரே வை புகழ்ந்து பேசிய பெருமகனைத்தான்…….)

 5. padatha padama pathuttu ponga thalaiva,

  ana societykki enna nama sonna lum endha ………. kekka poradhu illa,

  enna seiyyalam sollunga namma kootta tha thiruttha?

  pudhiya vidiyalai ninaithu,

 6. நல்லா சொன்னீங்க போங்க!!!.. ஒன்னொரு கொடுமைய விட்டுடீங்க.. குப்பனும் சுப்பனும் காமன்மேன் இல்லையாம் ஸ்ரீநிவாச ராமானுஜம்தான் காமன்மேனாம்…என்னத்த சொல்லறது இந்த அறிவாளியை!!!!!!!

  !!! தசாவத்தாரத்திலையே வெளுத்து போச்சு நம்மவர் சாயம்.. இனிமே என்ன என்ன பண்ணப் போறாளோ!!

  என்னமோ போங்க

  மார்த்தாண்டம், அப்பாஸ் மற்றும் கந்தனை கேட்டதாக சொல்லுங்க அண்ணா

 7. ”இங்கபாரு ஞானசூனியம்…….. பெரியார ஏத்துக்கறவன் சாதிய ஏத்துக்க மாட்டான்……. சாதிய ஏத்துக்கறவன் பெரியார ஏத்துக்க மாட்டான். ரெண்டையும் ஏத்துக்கறேன்னு சொன்னா அவனுக்கு தலைக்குள்ள எங்கியோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். இத உங்க கோமானுக்கு மட்டும் சொல்லல….. பல சீமானுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்”

  இத இத இதத்தான் நாங்களும் எதிர்பார்த்தோம்.பூனூல் பார்ட்டிக எப்பவும் இப்படித்தான் இருப்பாங்க,நம்ம கவலையெல்லாம் ரத்தம் சுன்டிப்போகக் கூடாது என்பதே.

  யாருக்கா ?
  வேற யாரு ரத்தத்துக்குத்தான்..

 8. கமல்ஹாசனின் அறிவு வேண்டுமென்றால் ஒரு வசதிக்காக பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கலாம், ஆனால் மனமும் குணமும் உயர் சாதீயம் எனும் ஒரு வகை திமிருக்குள்ளேயே தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதற்கு அவரின் படங்களே சாட்சி.

  கூட்டத்தின் நடுவே தனிமை (alone in the crowd) என்பார்களே அது போலே தமிழனின் நிலை உலகம் முழுதும் சொந்தங்கள் நிறைந்து இருந்தாலும் யாருமே இல்லாத அநாதை போல் தான் தமிழனின் நிலை உள்ளது.

  காலம் காலமாய் புரையோடிப் போன சாதீயத்தை விட்டு தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒழித்தாலொழிய அதாவது சாதீயத்தை மரணிக்க செய்து விட்டு தமிழனாக பிறந்தாலொழிய உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வு யாருக்கும் ஏற்பட போவதில்லை.

 9. பாமரன் அண்ணா அவர்களுக்கு வணக்கம். தங்கள் கடிதம் மிக அருமையாக இருக்கிறது.
  இதை உலக நாயகன் வாசிப்பார் என நம்புகிறன். இந்த உலக நாயகன் “”ஈழம் : நமது மௌனம்” புத்தகத்திற்கு கருத்து சொல்லியிருக்காராம். என்னத்த சொல்லுவார் என்று தல சுத்துது.
  தோழமையுடன்
  தமிழ்த்தோழன்- France

 10. Hi,
  I need to tell you one thing. Kamal is a brand like Nokia, Sony etc. How do we restrict him from his marketing on other states?. Unnai Pol Oruvan is one of his product. Encourage him for being a market leader for the past 50 years with some failure products. I would like to tell all our Tamilians “Please aviod to see brands as human beings”

  If you like the product use it else avoid your contribution for that. If keep on you dislike the products from particular brand that will automatically loose its brand name don’t worry!

  For Mr Pamaran : HATS OFF !!!

 11. Dear pamaran,
  There are so many peoples in the cine field and political etc., then why you are notifying kamal only. you can also comment such peoples(because we want to know the other peoples also.)

  with so many thanks,
  Vijay.

 12. very precise letter. original agmark pamaran style.
  pamaran should write another letter regards ‘ the title which he carry’ ULGA NAYAGAN.

  we eagarly wait to read many open letters

  prabhakar
  your friend

 13. கமலஹாசனைப் புரிந்து கொள்வதற்கு ஒருசார்பு அற்ற சிந்தனை வேண்டும். ஒவ்வொரு படமும் வாழ்வில் அவர் கண்ட ஒரு நிஜபாத்திரத்தின் திரைக்காக சற்று மிகைப்படுத்தப் பட்ட வெளிப்பாடுதான். வெறும் பொழுது போக்குப் படமாக இல்லாமல் ஒவ்வொரு முறையும் புதுமாதிரியாக அவர் மாதிரி எவ்வளவு பேர் தருகிறார்கள்? ஒரு சமயத்தில் ஒன்றைச் சாடலாம்.பிறிதொரு முறை அதையே பாராட்டலாம். குழு மனப்பான்மை இல்லையெனில் அது சாத்தியமே.மனதார தான் கண்டதையும் கேட்டதையும் வியாபார நோக்கமே முக்கியம் என்று இல்லாமல் எத்தனை போர் தருகிறார்கள். அவருடைய சிறப்புக்கு ரஜினியின் பாராட்டு ஒன்றே போதும். தமிழன் மற்றவன் என்ற சிந்தனை யெல்லாம் கலைஞனுக்கு இருக்கமுடியாது. ரஜினியைப் போல் வியாபார ரீதியில் அதுவும் இந்தியில் தந்துகொண்டிருந்திருக்க அவரால் முடிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே.

 14. hi sir this is vasanthi madam ‘s son

  hmm unga karuthukkal alagai ullathu

  i just do’nt want you to be a rebel
  i want you to be a revolutionist

  verum poraliyaga mattum illamal
  puratchiyalar aaga vazthukal

 15. அது சரி. சர்ச்சைக்குரிய கதைகளைக் கையாளும்போது எல்லோரையூம் திருப்திப் படுத்திவிட முடியாது என்பதற்கு கமல்தான் சாட்சி. மாருதி ஜிப்சியை ஒற்றைக்காலில் கட்டி அசையவிடாது இழுத்துக் கொண்டிருக்காமல் சமூக அவலங்களை கமல் போன்றவர்கள் சாடும் போது மற்றொரு விடயத்தில் சிறு சிறு சறுக்கல்கள் ஏற்படுவது இயல்பே. அப்படியூம் நிகழா விட்டால் கமல் போன்றவர்களின் மிச்சங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் கதியேது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s