நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….

 

”ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்….”

”ஐய்ய்ய்ய்ய்…….. நான் ரேவதி டெண்த் படிச்சிட்டு இருக்கேன்.”

”ஓ.கே…..ஓ.கே….. ரேவதி உங்குளுக்கு நல்லாப் பாடத் தெரியுமா?”

”ஊகூம்….. எனக்கு வீட்டை விட்டு ஓடத்தான் தெரியும்.”

”ரேவதி….. என்னது ஓடத்தான் தெரியுமா? சரி வீட்ல வேற யார் இருக்காங்க ரேவதி பக்கத்துல? ”

”இருங்க எங்க தாத்தா  இருக்காரு தர்றேன்.”

”ஹலோ தாத்தா உங்க நேம் என்ன?”

“முத்துசாமி……”

”ஹலோ முத்துச்ச்ச்சாமி…… உங்க ஹாபி என்ன?”

”இங்க அவனவனுக்கு கோவணமே காத்துல பறக்குது இதுல ஹாபியாவது….. கோபியாவது?”

”முத்துசாமி என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க முத்துச்சாமி?”

”வேறென்ன விவசாயம்தான்.”

”முத்துச்ச்சாமி வாட்? யு மீன் அக்ரிகல்ச்சர் ?”

”ஆமா அதே கல்ச்சர்தான்.”

”வாவ்….. முத்துச்சாமி அப்ப உங்க கிட்ட வயல் இருக்குமே?”

”இல்ல காங்கிரீட் தரைதான் இருக்கு.”

”யூ ஆர் வெரி funny முத்து…… வயலுக்கு வாட்டர் விடுவீங்கில்ல?”

”இல்ல கம்பங்கூழுதான் தினம் கரைச்சு ஊத்துவேன்.”

”வாட் கூழ்? முத்துச்சாமி…… அப்ப பசுமாடெல்லாம் நிச்சயம் வெச்சிருப்பீங்க…..அது என்ன குடுக்கும் கரெக்ட்டா சொல்லுங்க முத்துசாமீ……”

”ஆங்…… தினமும் ரெண்டு கூடை சாணி குடுக்கும்.”

”முத்தூச்சாமீ……. யூ மீன் கவ்டங்? அத வெச்சு என்ன பண்ணுவீங்க முத்துச்சாமி?”

”வறட்டி தட்டுவோம்”

”கிரேட் வறட்டியா? எதுல வெச்சு முத்துச்சாமி?”

”ஒன்ன மாதிரி அரைலூசுக எதிருல வந்தா அதுக மூஞ்சீல வெச்சு.”

என்ன குழப்பமாக இருக்கிறதா? இது நாம் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் கேட்டுத் தொலைக்கும் கண்றாவிகள்தான். எதிர் முனையில் பேசுபவர் யார்? வயது வித்தியாசம் என்ன? பெரியவர்களை எப்படி மரியாதையோடு அழைப்பது? என்கிற எந்தக் கருமமும் புரியாமல் பல்லுப் போனவர்களைக்கூட ஏதோ கூட கோலி குண்டு விளையாடியவர்களைப் போல இந்த காம்ப்பியர்கள் அழைப்பது அபத்தத்தின் உச்சம்.

இப்படி இவர்கள் தங்களது ”மேதகு” முதலாளிகளையும் ”வாட் விஸ்வநாதன்?”…… ”சபாநிதி…. சம்பளம் ஏன் டிலே சபாபதி?” ன்னு நொடிக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்தால் ஒத்துக் கொள்ளலாம் எங்கும் சமத்துவம்தான் என்று. ஆனால் அங்கெல்லாம் பம்பிப் பதுங்கிவிட்டு காசு கொடுத்து போன் போடுபவர்களை இப்படியா வயசு வித்தியாசமின்றி பேர் சொல்லி அழைப்பது?

திருந்துங்கப்பா.

**********

ச்சையாகச் சொன்னால் ஒருபுறம் வெட்கமாகவும் இருக்கிறது…… மறுபுறம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த எண்பத்தி நான்கு வயது இளைஞரது ஓயாத உழைப்பைப் பார்க்கும்போது.

தனது 19 ஆவது வயதில் பெரியாரைக் கண்டதில் இருந்து இன்று வரை அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளையும், அவைகளை நடைமுறைப் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்களும் நம்மை மெய்யாகவுமே மெய்சிலிர்க்க வைப்பவை.

அந்த இளைஞர்தான் வே.ஆனைமுத்து.

இயன்றவரையிலும் எந்த ஓட்டுக்கட்சிகளிடமும் தன் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைக்காமல் பெரியாரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்தான் ஆனைமுத்து.

அவர் செய்த பணிகளிலேயே தலையானதாக நான் கருதுவது 1974 இல் வெளிவந்த ”பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” என்கிற அந்த மூன்று தொகுப்புகளைத்தான். நான் சிறுவனாக இருந்தபொழுது வந்த தொகுப்புகள் அவை.

தட்டச்சு செய்ய கம்ப்யூட்டர்களும், பலவண்ணங்களில் அச்சடிக்கும் ஆப்செட் மிஷின்களும் அறிமுகமாகாத காலகட்டம் அது. அவ்வளவு ஏன் நகலெடுக்கும்(அதாங்க ஜெராக்ஸ்) கருவிகளும் கூட வராத காலத்தில் பெரியாரது பேச்சுக்களையும், கட்டுரைகளையும் தொகுத்து மூன்று பெரிய வால்யூம்களாக கொண்டு வருவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? அப்பணிகளுக்கு அன்று தோள் கொடுத்தவர்கள் அநேகம்பேர்.

இதோ….. இன்று அதே சிந்தனைகள் தொகுப்பு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் மெருகூட்டப்பட்டு 9000 பக்கங்களில் இரண்டாம் பதிப்பாக நம் முன் தவழ இருக்கிறது. அதுவும் முதல் பதிப்பில் இடம் பெறாத எண்ணற்ற தகவல்களோடு. ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியாரது கட்டுரைகள்….. பேச்சுக்கள்….. நேர்காணல்கள் என 20 தொகுப்புகளாக வருகிற பிப்ரவரியில் வெளிவருகிறது.

முன்பதிவுக்கான தொகை 3500 ரூபாய் என்பது நம்மைப் போன்ற தனி மனிதர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் இரண்டு மூன்று தோழர்கள் இணைந்து வாங்கினால் அது சாத்தியப்படக் கூடிய சமாச்சாரம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதையும் கூட ஓரிரு தவணைகளில்  அளிக்கலாமாம்.  

ஆனைமுத்து அவர்களிடம் பணபலம் எதுவும் இல்லை. ஆனால் நினைத்ததைச் சாதிக்கக் கூடிய மனபலம் இருக்கிறது.

”வரலாறு” என்பதில் வெறும் பானிப்பட்டுப் போர்கள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதில் நமது பாட்டன்…. முப்பாட்டன்களது போராட்டங்களும் அடங்கியிருக்கின்றன.

ஏனென்றால் வரலாற்றைப் படிப்பவர்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்களாக மாற முடியும்.

எனவே அழையுங்கள் : 094448 04980

உங்களின் அழைப்புக்காக ஆனைமுத்து அவர்களது அலைபேசி காத்திருக்கிறது.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.

அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது.

அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும், சாதி மறுப்புத் திருமணங்களும், கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.

நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அப்படிச் சிந்தியவனின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிக்குத் துணையாவது நிற்போம்.

 

யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

ர்நாடகத்தின் கைகா அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த  “விபத்து”(?),  அல்லது                   ”நாசவேலையை”  ஏதோ பஸ் விபத்து……. ரயில் விபத்தைப் போல் சித்தரிக்கின்றன நமது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும். ஆனால் அதன் உண்மையான தீவிரம் யாருக்கேனும் உரைத்திருக்கிறதா என்பதுதான் நமது கவலையே.

இந்த சம்பவம் ஒன்றல்ல…. ஓராயிரம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது பல்வேறு அறிஞர்களுக்கு. அதில் மிக முக்கியமானவர் சுரேந்தரா. இந்த சுரேந்தர் என்னைப் போல பி.காம் படிப்பைக் கூட உருப்படியாக முடிக்காத உதவாக்கரை அல்ல என்பதுதான் விசயமே.

சூரத்தில் பிறந்த சுரேந்தரா மெத்தப் படிக்கும் மேதாவிகளுக்கென்றே இருக்கும் ஐ.ஐ.டி.யில் தனது முனைவர் பட்டத்துக்கான படிப்பையும் பிற்பாடு அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலையில் மேற்படிப்பும் படித்தவர். அவர் இந்திய அணுசக்தித் து(ரை)றையினரைப் பார்த்து கேட்கின்ற கேள்விகள் நம்மை தலை சுற்றிக் கீழே விழ வைப்பவை.

  1. ”சம்பவம்” நடந்தது நவம்பர் 25. ஆனால் வெளியே தெரிந்தது நவம்பர் 28. எதற்காக இந்த அவகாசம்?
  2. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 இல்லை….. 40 இல்லையில்லை 55 என்று ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையைச் சொல்கிறார்களே…… உண்மையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
  3. பாதிப்பு குறைந்த அளவுதான் என்றால் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களது சிறுநீரில் கண்டறியப்பட்ட உண்மையான கதிரியக்க அளவு எவ்வளவு?
  4. உச்சகட்ட பாதுகாப்புக் கொண்ட அணுசக்தி நிலையத்தில் குளிர் நீரில் கலக்கக் கூடிய அளவுக்கு கதிரியக்க அபாயம் கொண்ட டிரிட்டியம் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்ததா?
  5. ஒரே ஒரு கிராம் டிரிட்டியத்தின் அமெரிக்க விலையே 50 லட்சம். இத்தனை விலை மதிப்பு மிக்க அதனை அங்குள்ள ஒருவரே குளிர் நீரில் கலந்து ஊழியர்களுக்கு தீங்கு விளைவிக்கமுடியும் என்றால் வெளியில் உள்ள மக்களுக்கு யார் பாதுகாப்பு?

இப்படி எண்ணற்ற கேள்விகளை இந்திய அணுசக்தி துரைமார்களை நோக்கி வீசுகிறார் காந்தியவாதியான சுரேந்தரா.

இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற பல்வேறு அறிஞர்களது கேள்விகளெல்லாம் அதிஉச்சகட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் நிலையத்துக்குள்ளேயே யாரோ ஒரு போக்கிரி புற்று நோயை உண்டாக்கும் டிரிட்டியத்தை குளிர் நீரில் கலந்து ஆபத்தை உருவாக்க முடியுமென்றால் சுனாமி….. பூகம்பம்…..போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது அவைகளை எப்படி எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றப் போகிறது அணுசக்திக் கழகம்?

”உள்ளேயே பணிபுரியும் ஊழியரின் நாசவேலையாக இருக்கலாம்” என்கிறார் அணுசக்திக் கழகத்தின் தலைவர் ககோட்கர். ஆனால் உள்ளூர் ஆசாமிக்கே ஈடுகொடுக்க முடியாத அணுசக்தித் துறை  ஒருவேளை அணுமின்நிலையங்கள் மீது ஏதாவது அந்நியர் தாக்குதல் நிகழ்ந்தால் அதில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றப் போகிறது.? என்பவைகள்தான்.

இவை எல்லாவற்றையும் விட நமக்குள் கோபம் கொப்பளிக்கும் கேள்வியும் ஒன்றுண்டு. சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் சகல துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துங்கள் என்கிற நியாயமான கோரிக்கைகள் எழும்போதெல்லாம் ”அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் அதெல்லாம் கூடவே கூடாது……. ”தகுதி,” “திறமை”க்கு மட்டும்தான் இங்கு முதலிடம்” என்று  சண்டித்தனம் செய்து வருகின்றன அணுசக்தித் துறை உட்பட பல்வேறு “உயர்” நிறுவனங்கள். ஆனால் இவர்களது “தகுதி” ”திறமை” எல்லாம் இப்படி டிரிட்டியமாய்ச் சிரிக்கிறதே அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்?

**********

ரு மாபெரும் அறிவியல் ஆராய்ச்சி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்துவிட்டு மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் குறைச்சல்.

யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்காது? என்கிற மெகா மருத்துவ ஆராய்ச்சி அது.

யான் பெற்ற துன்பம் பெறட்டும் இவ்வையகம்:

கண்டுபிடிப்பு நம்பர் 1. : ”சுக்கிரன், சந்திரன் 5 ஆம் வீட்டுக்காரன் ஆகியோர் 6 ஆம் வீட்டில் அமர்ந்து அந்த இடம் பெண் ராசியாகவும் இருந்தால் அந்த ஸ்திரீக்கு பெண் குழந்தையே பிறக்குமாம்.”

கண்டுபிடிப்பு நம்பர் 2 :ஐந்தாம் வீட்டுக்குடையவன் சந்திரனுடன் கூடினாலும் ஸ்திரி ராசியிலோ, ஸ்திரீ நவாம்சத்திலோ இருந்தாலும் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லையாம்.

கண்டுபிடிப்பு நம்பர் 3 : ஏழாம் வீட்டில் புதன், இருந்தால் பெண் குழந்தைகள் எக்கச்சக்கமாகப் பிறக்குமாம்.

கண்டுபிடிப்பு நம்பர் 4 : ஆண் கிரகங்களுக்கு வலுக்குறைந்து, பெண் கிரகங்களின் ஆதிக்கம் வலுவடையுமானால் அவர்களுக்கு 5 ஆம் வீட்டுத் தொடர்பு ஏற்பட்டு ஆண் குழந்தைக்கு வழி இல்லாமல் போய் விடுமாம்.

இதெல்லாம் நமது ஜோசிய சிகாமணிகள் அவிழ்த்து விட்ட உடான்சு.

நம்மைப் பொறுத்தவரை சந்திரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறானோ….

இல்லை சுக்கிரன் 3 ஆம் வீட்டில் இருக்கிறானோ……

அல்லது ரெண்டு பேரும் சேர்ந்து போயி பத்தாம் நம்பர் வீட்டைத் தட்டுறாங்களோ…….

புருசனும் பொஞ்சாதியும் ஒண்ணா ஒரே வீட்டுல இருந்தாலே போதும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒண்ணு பொறக்கும். மொதல்ல அதக்கு வழியப் பாருங்க அப்பு.

அத விட்டுட்டு ஜோசியக்காரன்…… சூனியக்காரன்…….ன்னு போனா அப்புறம் ஒரு டைனோசர்தான் வந்து பொறக்கும்.

”சிறிமாவோ மகளே வருக….. சீரான ஆட்சி தருக”

”ஆலயம் தொழுதல் சாலவும் நன்று”

நன்றுதான் ஆனால் எந்த ஆலயம் என்பதுதான் பிரச்சனையே. ஏற்கெனவே காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்குப் பிரச்சனை முடிவு தெரியாமல் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. இது போதாதென்று அதே காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாத குருக்கள் வேறு சில்மிஷமும் செல்போனுமாய் சிக்கியிருக்கிறார். 

”வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்” என சில சில்மிச ”சகோதரர்கள்” காட்டிய வழியில் இவரும் கருவறையிலேயே தனது லீலைகளை அரங்கேற்றி அற்புத சுகமளித்ததன் விளைவு கம்பி எண்ண வேண்டி வந்துவிட்டது.

கோயிலுக்கு  வந்த பெண்களிடம் கருவறையிலேயே ”குடும்பம்” நடத்தியது போதாதென்று செல்போனிலும் அதைப் படம்பிடித்துப் பரவசப்பட்டிருக்கிறார்.

ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் “கோயில் கூடாதென்பதல்ல. கோயில் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது” என்கிற கலைஞரின் பராசக்தி வசனமும் இந்நேரத்தில் நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

ஆறு கால (உண்மையான)பூஜை நடத்துபவர்களுக்கு தேவை தேங்காய், பழம், போன்றவைகள்தான். செல்போன் எதற்கு?

பள்ளி, கல்லூரி செல்பவர்கள் செல்போன் கொண்டுபோக தடை விதித்ததற்கு பதிலாக ”கோயில் குருக்கள்கள் இனி செல்போனும் கையுமாக சுற்றக்கூடாது” என அரசு ஒரே ஒரு உத்தரவைப் போட்டுவிடுவதே உத்தமம்.

இல்லாவிட்டால்……  ” ’அந்த மாதிரி’ படங்களைப் பார்க்க கண்ட கண்ட தியேட்டர்களுக்குப் போவதற்கு பதில் பேசாமல் பக்கத்தில் உள்ள குருக்களிடம் சி.டி.வாங்கிப் பாத்துக்கலாம்” என்று விடலைப் பட்டாளம் படையெடுத்துவிடப் போகிறது எச்சரிக்கை.

*********

வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. என்று 17 வருசமாய் காத்துக் கொண்டிருந்த பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான லிபரான் கமிசன் அறிக்கை இறுதியில் வந்தே வந்து விட்டது.

”அந்த அறிக்கையும் ஏதோ ஒரு பத்திரிகைக்கு லீக் ஆகிவிட்டது அதைப் பற்றி விசாரிக்க வேண்டும்” என்கிற கூச்சல் காதைக் கிழிக்கிறது.

அதனாலென்ன? அந்த அறிக்கை எப்படி லீக் ஆச்சுன்னு அதுக்கொரு கமிசனப் போட்டுத் தாக்க வேண்டியதுதான். அந்த அறிக்கையும் இன்னும் அம்பத்தேழு வருசம் கழிச்சு ரிலீஸ் ஆச்சுன்னா அதை நியாபகம் வைத்திருப்பவன்ல பல பேரு ”டிக்கெட்” வாங்கீட்டுப் போயே சேர்ந்திருப்பான். இதுதான் ஜனநாயகம். இதக் கூடப் புரிஞ்சுக்காம போயிருதுக பலதுக கையில மை வெச்சுக்கறதுக்கு.

’ வாராது வந்த மாமணியாய் ’ வந்த அந்த கமிஷன் அறிக்கையில் பாபர் மசூதி இடிப்புக்கு யாரெல்லாம் உடந்தை என்கிற பட்டியலைப் பார்த்ததும் அடிவயிறே கலங்கி விட்டது.

வாஜ்பாய், அத்வானி, கல்யாண்சிங், பால்தாக்கரே, உமாபாரதி போன்றவர்கள்தான் மசூதி இடிப்புக்குக் காரணம் என்று அதில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நாட்டில் ”நல்லவங்களே” நடமாட முடியாது போலிருக்கிறது.

என்ன கொடுமை சரவணன் இது?

இது வரைக்கும் நான் நம்ம திப்புசுல்தான் தான் இடிச்சாருன்னு நெனைச்சுகிட்டு இருந்தா இப்புடி ஒரு குண்டத் தூக்கிப் போடுறாரே லிபரான்?.

சரி….. எப்புடியோ அறிக்கை வந்ததுதான் வந்தது…… அப்படியே இடிப்புக்குக் காரணமானவங்கள கூண்டிலேற்றி தண்டனை வாங்கிக் குடுக்கப் பாருங்கப்பா வர்ற கி.பி. 2447க்குள்ள.

**********

முத்தமிழறிஞர்…..

வாழும் வள்ளுவர்…….

செம்மொழி தந்த செம்மல்…..

வாழும் தொல்காப்பியர்…..

அஞ்சுகச் செல்வர்…….

அருந்தமிழ்க் காவலர்……

டாக்டர்……. கலைஞரின் காமெடி வர வர வடிவேலுவையும் மிஞ்சி விடும் போலிருக்கிறது..

ஈழத் தமிழர்களுக்காக இவர் மவுனமாக விட்ட கண்ணீரின் விளைவால்  கோபாலபுர மக்கள் தங்கள் சைக்கிள், ஸ்கூட்டர், கார்களை விட்டுவிட்டு இப்போது படகில் பயணிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பதுதான் நமது வருத்தமே. ஆனால் கடந்த வாரம் இவர் விட்ட அறிக்கையில் காமெடி பீசுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

”எம்.ஜி.ஆர்.காலத்தில்  கூட்டிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மாநாட்டில் எல்லா அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டாலும் பிரபாகரன் அவர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை….. ”

”தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக்காசுகளாகி விட்டன…… ”

”ஜனநாயக ரீதியான வாய்ப்புகள் வந்தும் எட்டி உதைத்து விட்டார்கள்…….”

”வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்தவில்லை…….  ”

என்றெல்லாம் முழங்கியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் இவர் இங்கு இருப்பதை விட இலங்கையில் இருந்திருந்தால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே தனிஈழம் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்குள் எழாமலில்லை.

ச்சே என்ன செய்வது ஈழமக்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ஆனால் ”1986 இல் நடந்த டெசோ மாநாட்டில் பிரபாகரன் மட்டும் கலந்து கொள்ளவில்லை” என்கிற வார்த்தைகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று பார்த்தால் அதுவும் அபத்தமாகத்தான் இருக்கிறது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பாக கலந்து கொண்டது பத்மநாபா அல்ல மாறாக வரதராஜபெருமாள் தான்.

பிளாட் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டது அதன் தலைவர் உமா மகேஸ்வரன் அல்ல. மாறாக வாசுதேவன் தான்.

டெலோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சபாரத்தினமும் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டது மதி.

ஈரோஸ் அமைப்பின் சார்பிலும் அதன் நிறுவனர் ரத்னசபாபதி கலந்து கொண்டாரே தவிர வே.பாலகுமார் கலந்து கொள்ளவில்லை.

எதார்த்தம் இப்படி இருக்கையில் இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உண்மைக்கு மாறான செய்தியைச் சொல்ல முத்தமிழ் அறிஞருக்கு எப்படி மனது வந்தது என்பதுதான் நமது கேள்வி.

தமிழ்நாட்டு மக்கள் மனதில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலையும்….. தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரை காவு கொண்ட துயர சம்பவமும் இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிற லட்சணத்தில் ”சகோதர யுத்தம்” பற்றி மீண்டும் மீண்டும் முழங்குவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

தினகரன் அலுவலகத்தில் நடந்த யுத்தம் சகோதர யுத்தமா?

அல்லது அந்நிய நாட்டுப் படையெடுப்பா?

இங்கு நடந்தது குழாயடிச் சண்டை. அங்கு நடந்ததோ இரு நாட்டு உளவுப் பிரிவுகளும் மூட்டிவிட்ட பிரித்தாளும் சூழ்ச்சி.

1950 களில் இருந்து இன்றையவரைக்கும் தமிழர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத சிங்களர்கள் ”2005 தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஓட்டுப் போட்டிருந்தாலேயே போதும் ’தமிழர் மனநிலை’ புரிந்திருக்கும்” என்கிற கலைஞரின் உபதேசம்தான் அந்த அறிக்கையின் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சி.

இத்தகைய காட்சிகள் எல்லாம் இனிதே நடந்தேறிட அது தமிழகம் அல்ல.

ஈழம்.

இத்தனைக்கும் இந்த ரணில் ஏற்கெனவே 2001 இல் இருந்து 2004 வரை பிரதமராகக் குப்பை கொட்டிய ஜென்மம்தான் என்கிற வரலாற்று உண்மை கூடவா ஈழமக்களுக்குப் புரியாது?

இந்த எல்லாக் கண்றாவிகளையும் கேட்கும்போது நமக்கும் பிரபாகரன் அவர்கள் மேல்தான் கோபம் வருகிறது. இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பிழைக்கத் தெரியாத ஒரு மனுசன் இருக்க முடியுமா என்று.

லட்டு மாதிரி ரெண்டு பிள்ளைகள்…..

அதில் ஒருவரை மத்திய அமைச்சராகவும்……

மற்றொருவரை துணை முதல்வராகவும் “ஜனநாயக முறைப்படி” ஆக்கிவிட்டு அவரே வட கிழக்கு மாகாண முதல்வராகவும் ”முள்கிரீடம்” சூட்டியிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்?

அதை விட்டுவிட்டு யாராவது பெற்ற பிள்ளையை போர்க்களத்துக்கு அனுப்புவார்களோ?

மற்றொரு மகளையும் எம்.பி.ஆக்கி கொழும்புக்கு அனுப்பி அழகு பார்த்திருக்கலாம்….

தப்பித் தவறி யாராவது ஈழம்…. கீழம்…. என்று முணுமுணுத்தால் “நாங்கள் ஈழக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம். ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன” என திராவிட நாடு கடையை மூடிய பாணியில் நச்சுன்னு பதில் சொல்லியிருக்கலாம்.

ரணில் விக்ரமசிங்கே கிடக்கட்டும்……

நம்ம சந்திரிகாவோடே கூட கூட்டு சேர்ந்து ”சிறிமாவோ மகளே வருக….. சீரான ஆட்சி தருக”  என்று அமைச்சரவையைப் பங்கு போட்டிருந்திருக்கலாம்……

ச்சே பிழைக்கத் தெரியாத ஆளய்யா பிரபாகரன்.

(நன்றி : தமிழக அரசியல் வார இதழ் 27-11-2009)