நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….

 

”ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்….”

”ஐய்ய்ய்ய்ய்…….. நான் ரேவதி டெண்த் படிச்சிட்டு இருக்கேன்.”

”ஓ.கே…..ஓ.கே….. ரேவதி உங்குளுக்கு நல்லாப் பாடத் தெரியுமா?”

”ஊகூம்….. எனக்கு வீட்டை விட்டு ஓடத்தான் தெரியும்.”

”ரேவதி….. என்னது ஓடத்தான் தெரியுமா? சரி வீட்ல வேற யார் இருக்காங்க ரேவதி பக்கத்துல? ”

”இருங்க எங்க தாத்தா  இருக்காரு தர்றேன்.”

”ஹலோ தாத்தா உங்க நேம் என்ன?”

“முத்துசாமி……”

”ஹலோ முத்துச்ச்ச்சாமி…… உங்க ஹாபி என்ன?”

”இங்க அவனவனுக்கு கோவணமே காத்துல பறக்குது இதுல ஹாபியாவது….. கோபியாவது?”

”முத்துசாமி என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க முத்துச்சாமி?”

”வேறென்ன விவசாயம்தான்.”

”முத்துச்ச்சாமி வாட்? யு மீன் அக்ரிகல்ச்சர் ?”

”ஆமா அதே கல்ச்சர்தான்.”

”வாவ்….. முத்துச்சாமி அப்ப உங்க கிட்ட வயல் இருக்குமே?”

”இல்ல காங்கிரீட் தரைதான் இருக்கு.”

”யூ ஆர் வெரி funny முத்து…… வயலுக்கு வாட்டர் விடுவீங்கில்ல?”

”இல்ல கம்பங்கூழுதான் தினம் கரைச்சு ஊத்துவேன்.”

”வாட் கூழ்? முத்துச்சாமி…… அப்ப பசுமாடெல்லாம் நிச்சயம் வெச்சிருப்பீங்க…..அது என்ன குடுக்கும் கரெக்ட்டா சொல்லுங்க முத்துசாமீ……”

”ஆங்…… தினமும் ரெண்டு கூடை சாணி குடுக்கும்.”

”முத்தூச்சாமீ……. யூ மீன் கவ்டங்? அத வெச்சு என்ன பண்ணுவீங்க முத்துச்சாமி?”

”வறட்டி தட்டுவோம்”

”கிரேட் வறட்டியா? எதுல வெச்சு முத்துச்சாமி?”

”ஒன்ன மாதிரி அரைலூசுக எதிருல வந்தா அதுக மூஞ்சீல வெச்சு.”

என்ன குழப்பமாக இருக்கிறதா? இது நாம் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் கேட்டுத் தொலைக்கும் கண்றாவிகள்தான். எதிர் முனையில் பேசுபவர் யார்? வயது வித்தியாசம் என்ன? பெரியவர்களை எப்படி மரியாதையோடு அழைப்பது? என்கிற எந்தக் கருமமும் புரியாமல் பல்லுப் போனவர்களைக்கூட ஏதோ கூட கோலி குண்டு விளையாடியவர்களைப் போல இந்த காம்ப்பியர்கள் அழைப்பது அபத்தத்தின் உச்சம்.

இப்படி இவர்கள் தங்களது ”மேதகு” முதலாளிகளையும் ”வாட் விஸ்வநாதன்?”…… ”சபாநிதி…. சம்பளம் ஏன் டிலே சபாபதி?” ன்னு நொடிக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்தால் ஒத்துக் கொள்ளலாம் எங்கும் சமத்துவம்தான் என்று. ஆனால் அங்கெல்லாம் பம்பிப் பதுங்கிவிட்டு காசு கொடுத்து போன் போடுபவர்களை இப்படியா வயசு வித்தியாசமின்றி பேர் சொல்லி அழைப்பது?

திருந்துங்கப்பா.

**********

ச்சையாகச் சொன்னால் ஒருபுறம் வெட்கமாகவும் இருக்கிறது…… மறுபுறம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது. அந்த எண்பத்தி நான்கு வயது இளைஞரது ஓயாத உழைப்பைப் பார்க்கும்போது.

தனது 19 ஆவது வயதில் பெரியாரைக் கண்டதில் இருந்து இன்று வரை அவரது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளையும், அவைகளை நடைமுறைப் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்களும் நம்மை மெய்யாகவுமே மெய்சிலிர்க்க வைப்பவை.

அந்த இளைஞர்தான் வே.ஆனைமுத்து.

இயன்றவரையிலும் எந்த ஓட்டுக்கட்சிகளிடமும் தன் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைக்காமல் பெரியாரது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பவர்தான் ஆனைமுத்து.

அவர் செய்த பணிகளிலேயே தலையானதாக நான் கருதுவது 1974 இல் வெளிவந்த ”பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” என்கிற அந்த மூன்று தொகுப்புகளைத்தான். நான் சிறுவனாக இருந்தபொழுது வந்த தொகுப்புகள் அவை.

தட்டச்சு செய்ய கம்ப்யூட்டர்களும், பலவண்ணங்களில் அச்சடிக்கும் ஆப்செட் மிஷின்களும் அறிமுகமாகாத காலகட்டம் அது. அவ்வளவு ஏன் நகலெடுக்கும்(அதாங்க ஜெராக்ஸ்) கருவிகளும் கூட வராத காலத்தில் பெரியாரது பேச்சுக்களையும், கட்டுரைகளையும் தொகுத்து மூன்று பெரிய வால்யூம்களாக கொண்டு வருவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? அப்பணிகளுக்கு அன்று தோள் கொடுத்தவர்கள் அநேகம்பேர்.

இதோ….. இன்று அதே சிந்தனைகள் தொகுப்பு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் மெருகூட்டப்பட்டு 9000 பக்கங்களில் இரண்டாம் பதிப்பாக நம் முன் தவழ இருக்கிறது. அதுவும் முதல் பதிப்பில் இடம் பெறாத எண்ணற்ற தகவல்களோடு. ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியாரது கட்டுரைகள்….. பேச்சுக்கள்….. நேர்காணல்கள் என 20 தொகுப்புகளாக வருகிற பிப்ரவரியில் வெளிவருகிறது.

முன்பதிவுக்கான தொகை 3500 ரூபாய் என்பது நம்மைப் போன்ற தனி மனிதர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் இரண்டு மூன்று தோழர்கள் இணைந்து வாங்கினால் அது சாத்தியப்படக் கூடிய சமாச்சாரம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதையும் கூட ஓரிரு தவணைகளில்  அளிக்கலாமாம்.  

ஆனைமுத்து அவர்களிடம் பணபலம் எதுவும் இல்லை. ஆனால் நினைத்ததைச் சாதிக்கக் கூடிய மனபலம் இருக்கிறது.

”வரலாறு” என்பதில் வெறும் பானிப்பட்டுப் போர்கள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அதில் நமது பாட்டன்…. முப்பாட்டன்களது போராட்டங்களும் அடங்கியிருக்கின்றன.

ஏனென்றால் வரலாற்றைப் படிப்பவர்கள் மட்டுமே வரலாற்றைப் படைப்பவர்களாக மாற முடியும்.

எனவே அழையுங்கள் : 094448 04980

உங்களின் அழைப்புக்காக ஆனைமுத்து அவர்களது அலைபேசி காத்திருக்கிறது.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மட்டுமே எழுதிப் பழகிய அந்த ஈரோட்டுக் கிழவனது போராட்டங்களால்தான் நம்மில் பலர் இன்று பட்டதாரிகளாகவும், பெரிய பெரிய பொறுப்புகளிலும் அமர்ந்திருக்க முடிகிறது.

அவன் அன்று கருப்புச்சட்டை போட்டிராவிட்டால் நம் தலைமுறை இன்று வெள்ளைச்சட்டை அணிந்திருக்க முடியாது.

அந்தக் கிழவன் போராடியிருக்காவிட்டால் அன்று கூனிக்குறுகி கக்கத்தில் இடுக்கியிருந்த துண்டை நாம் இன்று நமது தோள்களுக்கு மாற்றி கம்பீரமாக நடை போட்டுக் கொண்டிருக்க முடியாது.

படிப்பறிவில்லாத பெரியார் அன்று போர் முரசு கொட்டாது இருந்திருந்தால் இன்று காதல் திருமணங்களும், சாதி மறுப்புத் திருமணங்களும், கைம்பெண்களது மறுமணங்களும் சாத்தியப்பட்டிருக்காது.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.

நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அப்படிச் சிந்தியவனின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிக்குத் துணையாவது நிற்போம்.

 

Advertisements

12 thoughts on “நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….

 1. ”ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்….”….//////

  arumai…..

 2. \\பெரியவர்களை எப்படி மரியாதையோடு அழைப்பது? என்கிற எந்தக் கருமமும் புரியாமல் பல்லுப் போனவர்களைக்கூட ஏதோ கூட கோலி குண்டு விளையாடியவர்களைப் போல இந்த காம்ப்பியர்கள் அழைப்பது அபத்தத்தின் உச்சம்.// சரியாச் சொன்னீங்க. காம்பியர்கள் மட்டுமில்லை; இன்றைய இளைய தலைமுறையே இப்படித்தான் இருக்கிறது. இவர்களை எப்படித் திருத்துவது?

 3. நல்ல பகிர்வு அண்ணா..

  //ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது.
  நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அப்படிச் சிந்தியவனின் வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சிக்குத் துணையாவது நிற்போம்.//

  கண்டிப்பாக அண்ணா..

 4. பெயர் சொல்லி அழைப்பதை பெரியார் இவ்வாறுதான் எதிர்கொள்வார் எனக் கருத இயலவில்லை. ஆனால், 24 மணி நேரமும் நடக்கும் அபத்தமான அரட்டைக் கலாச்சாரத்தை சரியாகத் தோலுரித்திருக்கிறீர்கள். தோழர் ஆனைமுத்து குறித்து அவசியமான நேரத்தில், தேவையான முறையில் அறிமுகம் செய்துள்ளமைக்கு நன்றி.

 5. ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உருமை உண்டு.ஆனால் அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்ற பெரியாரின் வரிகளின் வலிமை உங்களிடமும் உள்ளது அண்ணா;

 6. ம் நல்ல பகிர்வு..எனக்கும் இது போன்ற தொகுப்பாளர்களை பார்த்தால் கோபம்தான். இது போன்ற தொலைக்காட்சிகள் நடன்ப் போட்டி என்ற பெயரில் மாமா வேலையும் பார்க்கின்றன

 7. வர்ணனை அற்புதம். இதே போல் காதல் காதல் என்றொரு “அற்புத நிகழ்ச்சியை” யும் கவனத்தில் கொல்(ள்)ளுங்கள்?????????

  படுக்கையறை வரை பகிர்ந்து கொள்ளும் “தரமான” நிகழ்ச்சீசீசீ

 8. கண்டிப்பாக! ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய அறிவு தொகுப்பு!

 9. கண்டிப்பாக! ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s