யூஸ் அண்ட் த்ரோ மனுசலு……

எப்படியோ  20 தேதி  வர இருந்த இடைத்தேர்தல் ஒரு வழியாக தள்ளிப் போயிற்று. இதை உண்மையிலேயே  மக்கள் விரும்பினார்களா? அல்லது இந்தப் பொங்கலை இடைத்தேர்தல் வைபவங்களுக்கு நடுவே ”ஏகபோகமாக”க் கொண்டாடலாம் என்று காத்திருந்தார்களா….. எல்லாம் பென்னாகரம் மக்களுக்கே வெளிச்சம். ஆனால் வருவது இடைத் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ பொதுவாக அவைகள் என்ன லட்சணத்தில் நடக்கின்றன என்பதற்கு பெரியாரே சாட்சி.

இன்று நேற்றல்ல…. எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடை பெற்ற தேர்தல் பற்றிய பெரியாரின் நெத்தியடி இன்றைக்கும் அப்படியே அப்பட்டமாகப் பொருந்துகிறது என்பதுதான் சூப்பரோ சூப்பர். இதோ 19.7.1925 அன்று குடியரசு இதழில் பெரியார் எழுதிய தலையங்கம் :

”சென்னையில் இப்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரங்களின் யோக்கியதையைப் பார்த்தால் புதுச்சேரி தேர்தலுக்கு சமமாய் வந்துவிடும் போல் இருக்கிறது. கூட்டங்களில் ஒரு கட்சியார் மற்றொரு கட்சியார் மீது காலிகளைவிட்டுக் கல்லெறியச் செய்வதும், நூற்றுக்கணக்கான போக்கிரிகளை விட்டுக் கூட்டத்தைக் கலைப்பதும் போன்ற காரியங்கள் நடைபெறுவதாய் இரண்டு கட்சிப் பத்திரிகைகளிலும் பார்த்து வருகிறோம்.. யார் கலகத்திற்குக் காரணம்? யார் தூண்டுதலின் மேல் இம்மாதிரியான காரியங்கள் நடக்கின்றன என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராவிடினும் இம்மாதிரியான காரியங்கள் நடந்தன என்பதைப்பற்றிச் சந்தேகங்கொள்ள இடமில்லை. ‘……………..கடையில் திருடாதவன் பாவி’ என்பது போல், சரியான கல்வி அறிவும், நன்மை தீமைகளை அறிய ஆற்றலும் இல்லாத ஜனங்களிடமிருந்து  ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமாயின் கையில் பலத்தவன்தான் காரியத்தை அடைவான். எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ, எவனுக்கு பொய்ப்பிரச்சாரம் செய்ய சவுகரியமிருக்கிறதோ அவனுக்குத்தான் வெற்றி கொடுக்க நம் நாடு தயாராயிருக்கிறது. எவ்வளவோ சீரும் சிறப்பும் பண்டைப் பெருமையும் உள்ள நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமது இந்தியா இக்கதியில், ’பிடித்தவனுக்கெல்லாம்  பெண்சாதியாயிருக்கின்ற’ தெனச் சொன்னால் நாம் எதற்குத் தகுதியுடையவர்களாவோம்?”

எப்படி இருக்கு பெரியாரின் பஞ்ச்?

ஒருவேளை பெரியார் இன்று இருந்திருந்தால் இப்படி பொட்டில் அடித்த மாதிரி அறிக்கை விட வெளியில் விட்டு வைத்திருப்பார்களோ அல்லது “இறையாண்மையின்” பேரால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளியிருப்பார்களோ என்னவோ யார் கண்டது?

**********

உத்ரா மகாஸ்த்ரீலோலடு…..

யூஸ் அண்ட் த்ரோ மனுசலு……

எக்கட கூச்சுண்டுக்காரு…..

என சகட்டுமேனிக்கு வீடியோ ஆதாரங்களுடன்  A B N ஆந்திர ஜோதி போட்டுத் தாக்கோ தாக்கென்று தாக்க மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு தத்தித் தவழ்ந்து போய்ச் சேர்ந்திருக்கிறது நாராயண் தத்தி திவாரி.

மூன்று முறை உத்திரப் பிரதேசத்திலும்….. ஒரு முறை உத்தரகாண்டிலும் முதலமைச்சராக இருந்த ஆளாயிற்றே  என்று ஆந்திராவின் கவர்னராகப் போட்டால் தனது “முன் அனுபவங்களை” இப்படிக் காண்பித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறது அது. போதாக்குறைக்கு “நான் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியாக்கும்….. இது அப்பட்டமான அரசியல் சதி….. தெலுங்கானா போராட்டக்காரர்கள்தான் இப்படிப் புரளி கிளப்பி விட்டார்கள்.” என்கிற உளறல்கள் வேறு. இவரது இந்த லீலைகளுக்கு அங்கிள் (அதாகப்பட்டது தமிழில் மாமா) ஆக இருந்தவர் கவர்னர் மாளிகையின் சிறப்பதிகாரி  அரவிந்த் சர்மா.

நடக்கவே முடியாதவர்கள்…..

குழந்தைகளோடு ஓட்டப் பந்தயம் வைத்தால் கூட ஜெயிக்க முடியாதவர்கள்……

ஏரோபிளேனையே தடவிப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆட்களை தேடித் தேடி கண்டுபிடித்து கவர்னராகப் போட்டா…..

அதுக என்னடான்னா…… ராஜ்பவனையே ராசலீலா பவன் ஆக்கிவிட்டுத்தான் ஓய்வேன் என அடம் பிடிக்கிறதுகள்.

ஆனாலும் எனக்கென்னவோ இந்த பிக்காரி….. அடச்சே திவாரி சொல்வதிலும் உண்மை இருந்தாலும் இருக்குமோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை. ஏனென்றால் நம்ம ஆள் கவர்னர் மாளிகையில் ”டிஸ்கஸ்” செய்துகொண்டிருந்த நேரம் ஒன்றும் சாதாரண நேரமல்ல. இந்த தேசத்தையே கை தூக்கிவிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் 125 ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கிற நேரம். அப்படிப்பட்ட வேளையில் இவர் இப்படிப் பட்ட வேலையில் இறங்கியிருப்பார் என நம்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.

ஒருவேளை நேரு மாமா காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் பற்றியோ……

அன்னை இந்திரா காலத்திலிருந்து ”கரீபி ஹட்டாவ்” என வறுமையை வெளியேற்ற யோசித்துக் கொண்டிருப்பதைப் பற்றியோ……

அல்லது பேரன் ராஜீவ் டைரக்டாக கம்ப்யூட்டர் யுகத்துக்கு நம்மைக் கொண்டுபோய் நிறுத்துவேன்….. என்று முழங்கிய முழக்கங்களைப் பற்றியோ கூட அந்த மூன்று பெண்களிடமும் ”விவாதித்துக்” கொண்டிருந்திருக்கலாம்…….

நிஜம் ஏமண்ட்டி ஆ ஏழு கொண்டலவாடுக்குத்தான் தெலுசு..