நாமே முத்துக்குமாரைக் கொன்றவர்கள்….


இரவு முழுக்க உறக்கமேயில்லை.

அரைத்தூக்கத்தில்……

துண்டு துண்டாய் வந்து போன கனவில்…..

விழிப்பில்…..

என எங்கும் முத்துக்குமாரே வந்து போனான்.

கடந்த 29 ஆம் தேதி வெள்ளியன்று காலையும் இப்படித்தான்.

மணி ஏழு : எழுந்தவுடனேயே ‘கடந்த வருடம் தம்பி முத்துக்குமார் இதே நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பான்? தனது இறுதி அறிக்கையை அடித்து முடித்திருப்பானோ…..?

மணி ஒன்பது: கொளத்தூரில் கையில் கேனுடன் பேருந்துக்காக காத்துக் கொண்டிருப்பானோ? இல்லை வழக்கம்போல் கையில் காசில்லாமல் சாஸ்திரி பவனை நோக்கி நடக்கத் துவங்கியிருப்பானோ……?

மணி பத்து: சாஸ்திரி பவன் வளாகத்துக்குள் கால் பதித்திருப்பான்.

மணி 10.15 : பாஸ்போர்ட் வாங்க வந்தவர்கள்….. அலுவலக ஊழியர்கள்….. வளாகத்துக்கு வெளியே தேநீர் ஆற்றிக்கொண்டிருக்கும் கடைக்காரர்கள்…… என அனைவர் மீதும் தீர்க்கமாக ஒரு பார்வையை இந்நேரம் படரவிட்டிருப்பான்.

மணி 10.30 : தன்னைத் தீயில் குளிப்பாட்டிக் கொள்வதற்காக கொண்டு வந்திருந்த கேனின் மூடியை நிதானமாக அறுக்கத் தொடங்கியிருப்பான் தம்பி.

மணி 10.40 : உலகை இன்னும் சில மணி நேரங்களில் உலுக்கப்போகும் அந்த அறிக்கையை சலனமின்றி விநியோகிக்கத் தொடங்கியிருப்பான்…….

“ஏங்க என்னங்க ஆச்சு உங்களுக்கு” என்றார் எதிரேயிருந்த என் துணைவி.

“ஒண்ணும் இல்லம்மா…… தம்பி முத்துக்குமார் ஞாபகம் வந்துருச்சு.” என்றபடி அழத் துவங்கினேன் நான்.

இதோ….. இப்போதும் என்னெதிரே அந்த அறிக்கை.

உலகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மானிடரையும் நோக்கி ”உங்கள் மெளனம் நியாயமா?” எனக் கெஞ்சும் அந்த அறிக்கை.

மனித உரிமைகளை சுவாசிக்கும் ஒவ்வொரு செயற்பாட்டாளரையும் “ஈழத்தின் துயருக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?” என கண்ணியமாக வினவும் அந்த அறிக்கை.

இன்னும் சில மணி நேரங்களில் தன் உடலைக் கூறுபோடப் போகும் மருத்துவ நண்பர்களின்  மனதுடன் கூட நெருக்கமாக நின்று அறிவுறுத்தும் அந்த அறிக்கை.

காவல்துறையினரைக் கூட பலங்களை உணர்ந்து பலவீனங்களைக் களைந்து கொண்டால் மக்களிடம் எப்படி மகத்தான மதிப்பினைப் பெற முடியும் என  நாகரீகத்தில் தோய்த்தெடுத்த வார்த்தைகளால் நிரப்பப்பட்ட அந்த அறிக்கை.

வழக்குரைஞர்களது வீதிக்கு வந்து போராடும் குணத்தையும், அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியதன் அவசியத்தையும் பகிர்ந்து கொண்ட பண்புமிக்க அறிக்கை.

ஆனால்….. அந்த அறிக்கையை இன்னுமொருமுறை படிக்கும் திராணி இல்லை எனக்கு. தம்பி முத்துக்குமாரின் மூச்சு அடங்கிய பின்னர் வந்த மூன்று நாட்களும் நம்மை மூச்சுத் திணற வைத்த நாட்கள்.

”எனது உடலை துருப்புச் சீட்டாக வைத்திருந்து எழுச்சியை உருவாக்குங்கள்.” என்கிற வரிகளின் வலி உணராமல்…… அல்லது ”உணர்ந்து”….. ”உடனே புதைத்துவிட வேண்டும்.” எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள் யார் யார்?

நாம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் அறிவாலயத்தையோ…… போயஸ்தோட்டத்தையோ புண்படுத்தி விடக் கூடாது என ஆலோசனைகளில் ஆழ்ந்தவர்கள் யார் யார்?

தம்பி முத்துக்குமார் ஏற்றுக் கொண்ட ஈழத்தையோ….. அதற்காக அவன் நேசித்த தலைமையையோ அணுவளவும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் முத்துக்குமாரின் உடலைச் சுற்றி கொளத்தூரில் மீன் பிடிக்கக் காத்திருந்தவர்கள் யார் யார்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்குள்.

அவர்கள் கிடக்கட்டும். நான் மட்டும் என்ன வாழ்ந்தேன்? ஒவ்வொரு முறை முத்துக்குமாரின் படத்தைப் பார்க்கும்போதும்….. அவன் நினைவு வரும் போதும் கூனிக் குறுகிப் போகிறேன் நான்.

மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வியாபித்து நின்று கேலி செய்கிறான் அவன்.

என் இயலாமையைப் பார்த்து.

என் கையாலாகாத்தனங்களைப் பார்த்து.

எனது செயலின்மையைப் பார்த்து.

எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சில்லரைத்தனமான நடுத்தரவர்க்கத்து சமாளிப்புகளைப் பார்த்து.

எதுவுமே நடவாதது போல் இயல்பான வாழ்க்கைக்குள் ஒளிந்துகொள்ளத் துடிக்கும் எனது அற்பத்தனங்களைப் பார்த்து.

ஏளனமாய்ச் சிரிக்கிறான் அவன்.

எந்தத் தேர்தல் பாதை முத்துக்குமாரை சாஸ்திரி பவன் வரை துரத்தியதோ…… அதே தேர்தல் பாதைக்கு முத்துக்குமாரையும் இழுத்து வந்து மீண்டும் ஒரு முறை புதைத்தோம் நாம். இலைக்குள்ளும்…. சூரியனுக்குள்ளும்…… ஈழத்தின் சுதந்திரத்தைத் தேடினோம் நாம். தேர்தல் வரை சூடு கிளப்பியது கதிர் அரிவாள். பிணக்குவியல்களைக் கண்டும் வழக்கம்போல் வேடிக்கை பார்த்தது சுத்தியல் அரிவாள். இவர்களுக்கு மத்தியில் என்ன செய்ய முடியும் அர்ப்பணிப்பும் தீரமும் மிக்க இளைஞர்களால்?

ஆனாலும் இவ்வளவு இருட்டடிப்புகளுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கில் கூடி மறையாத முத்துக்குமாருக்காக நடுகல் நட்டிருக்கிறார்கள் திருநெல்வேலி இளைஞர்கள்.

எண்ணற்ற வழக்குரைஞர்கள் சேர்ந்து முத்துக்குமாரின் கனவை நனவாக்க உறுதி பூண்டிருக்கிறார்கள் மதுரையில்.

சென்னையிலும், கோவையிலும் பத்திரிகை உறவுகள் பலபேர் கூடி முத்துக்குமாரின் எண்ணங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இதில் விடுபட்ட ஊர்களும் பேர்களும் அநேகம். இவர்களே நமது நம்பிக்கைகள்.

அமைப்பிற்காகவோ….. ஆட்சிக்காகவோ……. கூட்டணி அதர்மங்களுக்காகவோ ஈழத்தை இரண்டாம்பட்சமாக்காத இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கைக் கீற்றினை நம்முள் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வேளையில் எனது நேசிப்பிற்குரிய கவிஞர் விக்கிரமாதித்தன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்னால்.

நீ

ஒத்துக்கொள்ளாமல் போகலாம்.

அதனால்

என்ன?

என் தோட்டத்தில்

சில சில பூக்கள்.

என் வானத்தில்

கொஞ்சம் கொஞ்சம் நட்சத்திரங்கள்

என் நதியில்

சிறிது நீரோட்டம்.

காத்திருக்கிறேன்

நான்.

இந்தக் கவித்துவமான வரிகள் தரும் நம்பிக்கையைப் போல தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள் நமக்குள் நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்கள்.

அது நிச்சயம் முளைவிட்டு கிளை பரப்பும்.

வயிற்றுவலிக்கான தீர்வுகூட

வாக்குச்சாவடிகளில்தான் இருக்கிறது

என்கிற மூடநம்பிக்கைகளுக்குள்

தம்மைப் புதைத்துக் கொள்ளாத இத்தகைய இளைஞர்கள்தான் நமக்கு

திசைமானிகள்.

அவர்களே நமது வழிகாட்டிகள்.

Advertisements

8 thoughts on “நாமே முத்துக்குமாரைக் கொன்றவர்கள்….

 1. உண்மைதான். ஏராளமான இளைஞர்கள் நம்பிக்கை விதைக்கிறார்கள். அதே சமயம் தன்னலமற்ற தங்களை வழி நடத்தும் ஆற்றல் பெற்ற ஒரு தலைவனுக்காகவும் காத்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
  முத்துக்குமரனின் தியாகம் என்றும் வீண் போகாது.

  நம்பிக்கையுடன்,
  பா.இளங்கோவன்.

 2. /என் இயலாமையைப் பார்த்து.

  என் கையாலாகாத்தனங்களைப் பார்த்து.

  எனது செயலின்மையைப் பார்த்து.

  எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சில்லரைத்தனமான நடுத்தரவர்க்கத்து சமாளிப்புகளைப் பார்த்து.

  எதுவுமே நடவாதது போல் இயல்பான வாழ்க்கைக்குள் ஒளிந்துகொள்ளத் துடிக்கும் எனது அற்பத்தனங்களைப் பார்த்து/

  உங்களை மட்டுமல்ல. எல்லா மிடில் கிளாஸ் மாதவன்களையும் பார்த்துதான்.

 3. anbula pamaran, i am a regular reader. But not have tamil font to write in tamil. sorry.
  YES. ur r correct. Every time i talk about elam and ela-tamiler no body is interest. It’s another serial to the TAMILAN. one more think Comment by PA.ELANGOVAN – waiting for good leader? its shamful – we all r good leader – but we must get political power. To get political power he is corrupted. So we need a self revolution by the people. Otherwise????????

  “WE ALL UNDER ONE JAIL – NAME AS COUNTRY”

 4. அன்புள்ள ‘பாமர’னுக்கு,
  நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த மடலை எழுதுகிறேன். (சென்ற 22/09/2008 ல் முதன்முதலாகத் தொடர்பு கொண்ட ஞாபகம்). முத்துக்குமாரை மறக்காதிருக்கின்ற பல லட்சம் பேரில் தாங்களும் உள்ளீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்போதெல்லாம், தியாகங்களைக் கூட நினைவூட்டியவாறிருந்தால் மட்டுமே ‘தமிழனு’க்குச் ‘சொரணை’ வருகிறது. இல்லையேல், சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும், தேர்தல்களின் போது இலவசங்கள் மற்றும் ‘பண வாச’த்திலும் தன்னைத் தொலைத்துவிடுகிறான்.
  என்ன செய்வது ?” சொந்தக் காலால் நடந்து செல்பவனை விடவும் இரவல் ‘காரி’ல் பயணம் செய்பவனை மதிக்கும் சமூக”த்தில் ஒவ்வொருவரும் தங்கள் ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் என்று அவற்றை நிறைவு செய்வதிலேயே குறியாய் இருப்பது இயல்புதானே. உலகமயமாதலில் சுயங்களைக் கரைத்துக் கொள்வதில் சுகங்காணும் மனிதர்களிடம் எம்மைப்போன்ற சிலர் தேடிக்கொண்டிருக்கும் ‘மனிதம்’ வெறும் பேசுபொருள் மட்டுமே! [ http://www.sarvachitthan.wordpress.com]

 5. i feel painful:i came all the way from karaikal to participate in his final procession:no one can erase his memories from our heart!

 6. //”எனது உடலை துருப்புச் சீட்டாக வைத்திருந்து எழுச்சியை உருவாக்குங்கள்.” என்கிற வரிகளின் வலி உணராமல்…… அல்லது ”உணர்ந்து”….. ”உடனே புதைத்துவிட வேண்டும்.” எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள் யார் யார்?//
  அண்ணன் முத்துக்குமார் அவர்களின் தியாகம் புனிதமானது. அதை சம்பந்தப்பட்டவர்கள் வெகு விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.
  வைர வரிகள். வாழ்த்துக்கள் அண்ணா

 7. நண்பர் ஆ.கலைச்செல்வன் முத்துக்குமாரின் நினைவுகளை அவரது கவிதைகளை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். தமிழ்த்தேசம் வெளியீடு. ‘முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்’என்பது அதன் தலைப்பு. வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s