பெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….

”ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்” படத்திற்காகக் கொடுத்த பேட்டி ஜெயராமை சோக ஹஸ்பெண்ட் ஆக்கி விட்டது.

”மலையாளப் படத்தில் வருவது போல நீங்கள் நிஜத்திலும் உங்கள் வீட்டு வேலைக்காரியை “சைட்” அடித்திருக்கிறீர்களா?” என்கிற இந்த நூற்றாண்டின் அதி அத்தியாவசியமான  அறிவுபூர்வமான கேள்வியை கேட்டதற்கு பதில் சொல்லப் போய்தான் எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறார் ஜெயராம்.

முதலில் இப்படிப்பட்ட கேள்வி கேட்டவரைத்தான் காலில் இருப்பதைக் கழட்டி “கவனித்திருக்க” வேண்டும். ஆனால் தான் ஏற்கெனவே நடித்திருந்த படத்தின் லட்சணமும், அதற்காக கல்லாவில் போட்டுக் கொண்ட காசும் “கண்ணியவானை” அப்படிச் செய்ய விடுமா?

ஒரு அயோக்கியத்தனமான கேள்விக்கு மற்றொரு அயோக்கியத்தனமான பதிலை சொல்லப்போய் “சகல மரியாதையும்” கிடைத்திருக்கிறது நடிகருக்கு.

அப்புறம் என்ன?

“நான் அக்மார்க் தமிழன்.”

“கும்பகோணத்துத் தமிழன்”

“அய்யோ நான் ஒரிஜினல் தமிழனுங்கோ” எனக் கூப்பாடு மேல் கூப்பாடு போட்டு கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்.

”ஒரு தமிழச்சியை கறுத்த தடித்த மாடு என்று கொச்சைப்படுத்தலாமா? என்பதுதான் இப்போது பலரின் முன்பாகவும் உள்ள கோபம் கொப்பளிக்கும் கேள்வி.

ஆனால் நமது கேள்வியும்…… கோபமும் வேறுவகையானவை.

அது தமிழச்சியாக இருக்கட்டும். அல்லது தெலுங்கச்சியாக இருக்கட்டும். ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்காக வீட்டு வேலைக்கு செல்கின்ற பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பதும்…… அவர்களையெல்லாம் பிஸ்கெட் போட்டால் வாலைக் குழைக்கும் தங்கள் வீட்டு நாயாக கருதுவதும்…… இவர்கள் “சைட்” அடித்தால் உடனே மசிந்துவிடுவார்கள் எனக் கீழ்த்தரமாகக் கற்பனை செய்து கொள்வதும்….. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா என்பதுதான்.

வீட்டு வேலைகளுக்காக செல்லும்  பணிப்பெண்களுக்கும் ஒரு துணைவர் இருப்பார் என்பதோ……

அவர்களுக்கும் தங்களைப் போலவே பள்ளிக்குச் செல்லும் மழலைகள் இருக்கும் என்பதையோ…….

காசில்லாவிட்டாலும் கண்ணியமும் சுயமரியாதையும்தான் அவர்களது சொத்து என்பதையோ இந்த அறிவிலிகள் எப்போது உணரப்போகிறார்கள்?

இப்படிக் கேள்வி கேட்கும் ஜென்மங்களுக்கும்…… அதற்கு பல்லை இளித்துக் கொண்டு பதில் சொல்லும் ஜென்மங்களுக்கும்…. தங்களது தாயோ…. தங்கையோ……. அல்லது துணைவியோ…… பல வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து, கண்ட நாய்களது காமப்பார்வைகளுக்குத் தப்பித்து வீடு வந்து சேர்ந்து பசியாற்றி இருந்தால் புரிந்திருக்கும் அந்த வலி.

ஆனால் அவர்கள்தான் வானத்தில் இருந்து வந்து குதித்தவர்களாயிற்றே…. எப்படித் தெரியும் அந்தத் துயர்?

சினிமா மட்டுமில்லை. இந்த கேடு கெட்ட செயலை தமிழகத்தில் உள்ள பல பத்திரிகைகளும் அன்றிலிருந்து இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் “ஜோக்” என்ற பெயரில்.

இன்றல்ல ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்னரே ”பெண்மணி” என்கிற இதழில் “யாருக்கும் வெட்கமில்லை” என்கிற தலைப்பில்  இத்தகைய இழிசெயல்களை எதிர்த்து மிகக் கடுமையாக எழுதியிருக்கிறேன். என்ன எழுதி என்ன பயன்? அவரவர்களுக்குப் புரியும் மொழியில் பேசினால்தான் புரியும் போலிருக்கிறது.

வீட்டுப் பணிப்பெண்கள் என்றில்லை………

நர்சுகள்…….

அலுவலக ஸ்டெனோக்கள்…… எனப் பலரையும் நமது ஊடகங்கள் இன்றுவரை கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

நம்மில் சரிபாதியாய் இருக்கின்ற பெண் இனம்

கல்வி மறுக்கப்பட்டு…..

வேலை மறுக்கப்பட்டு……

மறுமணம் மறுக்கப்பட்டு……

ஜாக்கெட் அணிவது கூட இந்த  நூற்றாண்டின் ஆரம்பக் காலம் வரை மறுக்கப்பட்டு…….

தேவரடியார்களாக கோயில்களில் பொட்டுக்கட்டப்பட்டு……….

செத்த கணவனோடு சதியேற்றப்பட்டு…….. என சகிக்கவியலாத சுமைகளைச் சுமந்தே வந்திருக்கிறது.

சமூக மாற்றத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர்களின் வரவால் இன்றுதான் கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது அந்த இனம், ஆனாலும் நவநாகரீகப் போர்வையோடு நயவஞ்சகத்தையே ஊட்டுகின்றன நமது தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும். அதுவும் நகைச்சுவை என்கிற பெயரில்.

எனக்குத் தெரிந்து பெரும்பாலான மலையாளப் படங்கள் தமிழர்களை  கேணையர்களாகவே சித்தரிக்கின்றன. வில்லன்களாகவும்……. கையாலாகாதவர்களாகவும்……….. “பாண்டி” என்றும் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லை. அதைப்போலவே தமிழ்ப்படங்களும் கேரளப் பெண்களை கொச்சைப்படுத்தும் கதாபாத்திரங்களாகவே உலாவருகின்றன.

இத்தகைய முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இருதரப்பும்.

பெண் இனத்தை கொச்சைப்படுத்துபவர்கள் வரிசையில் ஊடகங்களுக்குத்தான் பங்குண்டு என்றில்லை. மெத்தப் படித்த மேதாவிகளுக்கும் உண்டு பங்கு.

சிலி நாட்டை சேர்ந்த கவிஞர் பாப்லோ நெரூடா 1929 இல் கொழும்பு நகரில் தங்கியிருந்தபோது ”ஒரு ………… இன பணிப்பெண்ணுடன் உறவு கொண்டேன்” என எழுதியதை மறுத்து ”அந்த பணிப்பெண் நிச்சயம் இந்த சாதி கிடையாது(அதாவது இவரது சாதி). அப்பெண் நிச்சயம்………….சாதிப் பெண் ஆகத்தான் இருக்க முடியும்.”என்று பொங்கியெழுந்து எழுதியவர் இன்றைக்கும் சட்டமன்ற உறுப்பினராகத்தான் இருக்கிறார்.

ஆனால் உண்மையில் வஞ்சிக்கப்படும் பெண் இனத்துக்கு  சாதி கிடையாது….. மதம் கிடையாது…. உட்பிரிவுகள் கிடையாது…… பூகோள எல்லைகள் கிடையாது. அத்தகைய கேடுகெட்டதனங்கள் எல்லாம் ஆண் இனத்துக்கே சொந்தமானவை.

ஆக……..

உளறிக்கொட்டியதற்காக நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்கவேண்டியது தமிழினத்தை நோக்கி மட்டுமல்ல.

உழைப்பை உன்னதமாக நேசிக்கும் பெண்ணினம் எங்கெங்கெல்லாம் உள்ளதுவோ அந்தத் திசையெல்லாம் நோக்கி குவியட்டும் அவரது கரங்கள்.

Advertisements

12 thoughts on “பெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….

 1. நான் இதற்கு பாராட்ட மாட்டேன். பாராட்டி எழுதினால் உசுப்பேத்தி புல் ஆப் அரிக்கிறது என்பீர்கள். முதன் முறையாக ஜெயராம் நிகழ்வுக்கு பிறகு நடந்து கொண்ட ஒவ்வொரு செயல்பாடுகளும், அவருடைய வருத்தம் தோய்ந்த குரலில் வந்த வார்த்தைகள் அவரைப் பொறுத்தவரையில் மன்னிப்பாக இருந்தாலும் அதைப்பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் இங்கு நிறைய பேர்கள் உண்டு.

  என்ன செய்வது பால்தாக்ரே என்று ஒருவர் இங்கு உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்போலிருக்கு.

 2. //இப்படிக் கேள்வி கேட்கும் ஜென்மங்களுக்கும்…… அதற்கு பல்லை இளித்துக் கொண்டு பதில் சொல்லும் ஜென்மங்களுக்கும்…. தங்களது தாயோ…. தங்கையோ……. அல்லது துணைவியோ…… பல வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து, கண்ட நாய்களது காமப்பார்வைகளுக்குத் தப்பித்து வீடு வந்து சேர்ந்து பசியாற்றி இருந்தால் புரிந்திருக்கும் அந்த வலி.//

  சத்திய வார்த்தைகள் இவை. பத்து பாத்திரம் தேய்த்து கழுவிச் சம்பாதித்த என் தாயினுடைய காசில் படித்தவன், ஊனை வளர்த்தவன் என்கிற முறையில் அந்த வார்த்தையின் வலி எனக்கு புரிகிறது தோழர்.

 3. அருமையான பதிவு பாமரன் அவர்களே.

  ஒரு ஆணாக, ஒரு தமிழனாக, ஒரு மலையாளியாக , ஒரு எதோ ஒரு சாதியை சேர்ந்தவனாக இல்லாமல் ஒரு மனிதனாக இருந்து எழுதி இருக்கிறீர்கள்.

  சூர்யகதிர்

 4. வணக்கம் ஐயா..

  பாராட்டுக்கள். உங்கள் பதிவு மிக அருமை.

  ஆயிரகணக்கான பதிவாளர்கள் இருந்தும்…புனிதமான பெண்ணினதை பற்றி கச்சிதமாக எழுதுபவர்கள் மிக குறைவு தான் என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். பெண்களின் எந்த விஷயமும் சமூகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது.

  உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…

  அஷிதா.

 5. பாமரன் அண்ணே !!! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை !!!
  பரமஹம்ச நித்தியானந்தா லீலை பத்தி உங்க ஸ்டைல்ல கொஞ்சம் சீக்கிரம் எழுதுங்கள் !!! ஆவலோடு எதிர்பார்கிறோம் !!!!! சன் டிவி செய்த நீலப்பட ஒளிபரப்பை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க !!!!

 6. \\அது தமிழச்சியாக இருக்கட்டும். அல்லது தெலுங்கச்சியாக இருக்கட்டும். ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்காக வீட்டு வேலைக்கு செல்கின்ற பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பதும்…… அவர்களையெல்லாம் பிஸ்கெட் போட்டால் வாலைக் குழைக்கும் தங்கள் வீட்டு நாயாக கருதுவதும்…… இவர்கள் “சைட்” அடித்தால் உடனே மசிந்துவிடுவார்கள் எனக் கீழ்த்தரமாகக் கற்பனை செய்து கொள்வதும்….. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா என்பதுதான்.// நியாயமான கேள்வி பாமரன்! மிகச் சரியான கோணத்தில் சிந்தித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். கைகொடுங்க தோழர்!

 7. அது தமிழச்சியாக இருக்கட்டும். அல்லது தெலுங்கச்சியாக இருக்கட்டும். ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்காக வீட்டு வேலைக்கு செல்கின்ற பெண்களை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பதும்…… அவர்களையெல்லாம் பிஸ்கெட் போட்டால் வாலைக் குழைக்கும் தங்கள் வீட்டு நாயாக கருதுவதும்…… இவர்கள் “சைட்” அடித்தால் உடனே மசிந்துவிடுவார்கள் எனக் கீழ்த்தரமாகக் கற்பனை செய்து கொள்வதும்….. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா என்பதுதான்.

  ஆனால் உண்மையில் வஞ்சிக்கப்படும் பெண் இனத்துக்கு சாதி கிடையாது….. மதம் கிடையாது…. உட்பிரிவுகள் கிடையாது…… பூகோள எல்லைகள் கிடையாது. அத்தகைய கேடுகெட்டதனங்கள் எல்லாம் ஆண் இனத்துக்கே சொந்தமானவை.

  தெளிவான பார்வை. தெளிவான பதிவு…

 8. பாமரன்,

  உங்கள் பதிவுகள் பொதுப்புத்தியில் சவுக்கடியாக விழுகின்றன.

  இப்போதும் வேலைக்காரி-எசமானன் நகைச்சுவைகளுக்குப் பஞ்சமில்லை. எல்லா வேலைக்காரிகளும் கையைப் பிடித்தால் போய்விடுவார்கள் போலவும் எல்லா எசமானர்களும் வேலைக்காரிகளை வைத்திருப்பதொன்றே வாழ்வின் ஒரே இலட்சியமாகக் கொண்டவர்கள் எனவும் சஞ்சிகைகள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

 9. மிக நேர்மையான பார்வையோடு எழுதி இருக்கீர்கள்,தமிழச்சியோ,தெளுங்கச்சியோ,வீடு வேலை செய்வோர் எல்லாம் கீழ்த்தரமானவர்கள் போல் சித்தரிப்பதும்,தங்களது தாய்,தங்கையாக இருந்தால் என்பதும்,இதைபோல் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு சாட்டை அடி பாமரன்
  B.M.Ahamed Jan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s