சின்னச் சின்ன ஆசை……


ஆனாலும் இந்த மீனவர்கள் இப்படி அடம் பிடிக்கக் கூடாது. ’மீன் பிடித்தால் கடலிலேதான் மீன் பிடிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்தால் எப்படித்தான் அதைத் தாங்கிக் கொள்ளும் “நம்” இந்திய அரசு. ஏன் இந்த மீனவர்களுக்கு கடலை விட்டால் வேறு இடமே கிடையாதா? எங்காவது ஏரி….. குளம்….. குட்டை அல்லது கூவம் என்று தேடிப் போக வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இப்படி உயிரை வாங்கினால் என்னதான் செய்யும் அரசு?

இப்படி எல்லோரும் ’தாம்தூம்’ என்று குதிப்பதற்குக் காரணம் மத்திய அரசு இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டுவருவதாக இருந்த “மீன்பிடி தொழில் ஒழுங்குமுறைச் சட்டம்”தான். இப்போதைக்கு தள்ளிவைத்திருக்கிற அந்தச் சட்டத்தில் அப்படி என்னதான் பஞ்சமாபாதகம் இருக்கிறது என்று எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்கிற வெறியே கிளம்பி விட்டது. இவர்கள் எல்லோரும் போட்ட கூப்பாட்டைப் பார்த்து. ஏதோ நமக்கு இருக்கிற அறைகுறை அறிவுக்கு படித்துப் பார்த்தால்…… அட….. இந்த அரசுக்கு நம்ம மீனவர்கள் மேல் இவ்வளவு கரிசனமா? என்று கண்ணில் தண்ணியே வந்துவிட்டது. அப்படியென்ன இல்லாததையும் பொல்லாததையும் அதில் சொல்லிவிட்டார்கள்.?

கடலுக்குள் மீன் பிடிக்கப் போகும்போது வழி தவறி வேற்று கிரகத்துக்குப் போய் விடாமல் இருக்க 12 கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும்…..

அதுவும் கடலோரக் காவல்படையிடம் பெர்மிட் வாங்கிக் கொண்டு போக வேண்டும்…..

அதிக மீன்களை ஏற்றி பாரம் தாங்காமல் மீனவர்கள் படகோடு கைலாயமோ……. பரலோகமோ போகாமல் தடுக்க பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது……

எந்தெந்த மீன்களைப் பிடிக்கலாம்………

எந்தெந்த மீன்களைப் பிடிக்கக் கூடாது…….

எந்தெந்த வலைகளைப் பயன்படுத்தலாம்……

என்றெல்லாம் அந்த சோதாவில்……..ச்சே அந்த மசோதாவில்  ”மீனவ நண்பர்கள்” அக்”கரை”யோடு சொல்லியிருப்பதை பார்த்தால் புல்லரிக்கிறது.

ஆனால் மீனவர்களோ “12 கடல் மைல் தொலைவுக்குள் மீன் பிடி என்றால் மீனல்ல…… நத்தைகூட கிடைக்காது. கடமா, சுறா, கனவாய் போன்ற நல்ல மீன்கள் வேண்டுமென்றால் ஆழ்கடலுக்குப் போனால்தான் கிடைக்கும். பத்தாயிரம் ரூபாயுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்றால் கடலுக்குள் போகவே வேண்டியதில்லை. கரையிலேயே கவுந்தடிச்சு குப்புறப் படுத்துக்க வேண்டீதுதான்.” என்கிறார்கள்.

இதிலென்ன பிரச்சனையோ நமக்குப் புரியவில்லை. வலை போட்டுப் பிடித்ததை வகை வகையாய் பிரித்து எந்த மீன் என்ன விலை என்று கணக்குப் பார்த்து பத்தாயிரம் ரூபாய் போக மிச்சமுள்ள மீன்களை ரோஜா பட கதாநாயகி மாதிரி “மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்று பாடியபடியே கடலில் கடாசிவிட்டு கரைக்குத் திரும்ப வேண்டியதுதானே என்று திருப்பிக் கேட்டால்…….

படகுக்கான டீசல் செலவே ஆறாயிரம் ரூபாய்…… இதில் வலை வாடகை, ஆள் கூலி எல்லாம் போனால் வெறும் ஊறுகாயை நாக்குல தடவீட்டு நடமாடவேண்டீதுதான். படகில் தப்பித் தவறி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தால் எங்களைக் கைது செய்து படகையும், வலைகளையும் பறிமுதல் செய்யலாமாம்…… படகில் உள்ள ஒவ்வொரு மீனவருக்கும் 25000 ரூபாய் அபராதம் விதிக்கலாமாம்…… அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதத்தோடு ஒரு ஆண்டு சிறையும் உண்டு என்கிறது இக்கூறுகெட்ட சட்டம்.” என்று அலறுகிறார்கள்.

நம்ம அரசுகளைப் பற்றி ஒரு இழவும் இந்த மீனவர்களுக்குப் புரிபடமாட்டேன் என்கிறது.

மீனவர்களோ அல்லது விவசாயிகளோ வாழமுடியாமக் கரடியாகக் கத்தும்போது வர்றாங்களோ இல்லியோ…. ஆனா கரெக்டா வாய்க்கரிசி போடும்போதாவது வந்து சேருவாங்கில்ல….. லேட்டா வந்தாலும் செத்ததுக்கு பேட்டா குடுக்க கண்டிப்பா வருவாங்க. அதுவும் இடைத்தேர்தல் ஏதாவது பக்கத்துலதான்னா…… அடிச்சுது யோகம்…. அவங்க குடும்பங்களுக்கு. வீணாப் ’போய்ச் சேர்ந்தவங்க’ வீட்டுல ஒருத்தருக்கு வேலை…. இடைக்கால நிவாரணத் தொகை…… விரைவிலேயே முழு பட்டுவாடாவுக்குமான உத்தரவாதம்…….ன்னு அவங்க காட்டுல அடைமழைதான். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்தால் எப்படி.? இந்த மீன் பிடி தொழில் ஒழுங்குமுறைக்கான சட்டமே நாட்டின் “பாதுகாப்பு” கருதி கொண்டுவரப் படும் சட்டம். அதுவும் மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை மனதில் வைத்து கொண்டு வர இருக்கின்ற சட்டம் என்று சொன்னால் அதையும் பிரித்து மேய்கிறார்கள் மீனவர்கள்.

மும்பை கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுக்கு முன்னதாகவே தகவல் கொடுத்தது மீனவர்கள்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டுவிட்டு காவல் அரண்களா இருக்கின்ற எங்களுக்கு எல்லைகள் வகுத்து அபராதம் விதிப்பது அயோக்கியத்தனம். உண்மையில் அபராதம் விதிக்க வேண்டுமென்றால் முன் கூட்டியே தகவல் தந்தும் பிடிக்கக் கையாலாகாத உளவுத்துறைக்கும் உள்துறை அமைச்சருக்கும்தான் அபராதம் விதிக்க வேண்டும். மாண்டால் கடல்…… மீண்டால் கரை என்று அன்றாடம் செத்துப் பிழைக்கும் எங்கள் வாழ்வோடு விளையாடுவது எங்கு கொண்டு போய் விடப்போகிறது என்பது போகப் போக தெரியும்” என்று கோபத்தோடு குமுறி எடுக்கிறார்கள்.

நமக்கென்னவோ…….

”12 கடல் மைலைக் கடந்தால் 9 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை…..”

”பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தா பறிமுதலோடு 25000 ரூபாய் அபராதம்…..”

”கடலில் மீன் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக இறங்கினால் கூட தண்டனை…….”

”மாநில அரசு கொடுத்த அனுமதி போக கடலோர காவல்படையின் பெர்மிட் இல்லாவிட்டால் கைது, தண்டனை……”

”கைதானவர்களை நீதி மன்றத்தில் எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் ஆடி அசைந்து எப்போது வேண்டுமானாலும் ஆஜர் படுத்தலாம்….. யாரும் கேள்வி கேட்க முடியாது…..”

”யோக்கிய சிகாமணிகளான அதிகாரிகள் ”நல்ல எண்ணத்தோடு” எடுக்கும் நடவடிக்கையைக் கேள்வி கேட்டால் 10 லட்சம் அபராதம், சிறை……..”

”எந்த மீனைப் பிடிக்கலாம்…… எந்த வலையில் பிடிக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள்…….”

என இப்படியெல்லாம் ”நாட்டின் பாதுகாப்புக்காக” கொண்டு வரப்பட இருக்கிற சட்ட மசோதாவில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான்.

அது:

மீனவர்களுக்கு எந்தெந்த நாட்களில் அந்த மூடு வரலாம்……

மீனவர்கள் எந்தெந்த நாட்களில் தங்கள் பெண்டாட்டிகளோடு தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம்…….

எந்தெந்த நாட்களில் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்….. என்பது மட்டும்தான் விடுபட்டிருக்கிறது

அதையும் அப்படியே இந்த மசோதாவில் சேர்த்து விட்டால் நாடு ஓகோன்னு உருப்பட்டு விடும் .

மொத்தத்தில் இது ”தடா”வுக்கு தம்பி…… ”பொடா” வுக்கு அண்ணன்.

s

கதவைத் சாத்து…… கழுதை போகட்டும்……


வாடிக்கையாளர் : ஏங்க சாமி பீடிஇருக்கா?

கடைக்காரர் : “சாமி பீடிஇல்ல…. வேணும்ன்னா சாமி சி.டி.” இருக்கு….

தரட்டுமா?


ஏதாவது ஒரு டுபாக்கூர் காரணத்தைச் சொல்லி இந்த வாரமும் எழுதுவதற்கு ”ஜூட்” விட்டு விடலாம் என்று பார்த்தால் பரமஹம்ச நித்யானந்தர் படு வேகமாக ”செயல்பட்டு” நம்மையும் செயல்பட வைத்து விட்டார்.

அடச்சே….. எழுதவைத்து விட்டார்.

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாயில்லை” என்று மாமேதை மாவோ சொன்னது இத்தகைய ”புண்ணியவான்களை” நினைத்துத்தான் போலிருக்கிறது.

சூரியன் சாய்ந்ததில் இருந்தே ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்…. ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்.கள் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லி.

சரி எப்படியாவது பார்த்துத் தொலைப்போம் என்று அடித்துப் பிடித்துச் சென்று தொலைக்காட்சியைப் பார்த்தால் அதில் ஸ்வாமி நித்யானந்தர் ஏதோ ஒரு நடிகைக்கு அந்தரங்கமாய் அருளாசி வழங்கிக் கொண்டிருந்த காட்சி அமோகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பார்க்கப் பார்க்க தமிழகத்தில் பக்தி மார்க்கம் கட்டிலில் கால் பரப்பிக் கிடப்பது பட்டென்று புரிந்தது.

அன்று கொலை வழக்கில் ஒரு ஜெயேந்திரர்.

நேற்று கருவறை லீலைகளில் தேவநாத குருக்கள்.

இன்று காற்றாய் வரும் நடிகைகளுக்காக கதவைத் திறந்து வைத்திருக்கும் ஒரு நித்யானந்தர்.

பேஷ்……. பேஷ்…… ரொம்ப நன்னாயிருக்கு.

இப்போதெல்லாம் பெண்களில் பாதிப்பேர் வீட்டிலேயே கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். இந்த சாமியார்கள் புராணம் இதே மாதிரி தொடர்ந்தால் நாளை ஆண்கள் கதியும் அதோகதி ஆகிவிடக் கூடிய வாய்ப்புகள் அநேகம் இருக்கிறது.

மாதம் ஒரு சாமியாரோ…… ஒரு பாதிரியாரோ….. இப்படி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.

போன ஆட்சியில் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சியில் அந்த ஆசாமிக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு.

இப்போதிருக்கிற ஆட்சி காலத்தில் ஒருவர் கம்பி எண்ண அனுப்பி வைக்கப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சிக் காலத்தில் அதே ஜென்மத்துக்கு ராஜமரியாதை.

இதை மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிறவர்கள் கடவுளின் ஏஜெண்ட்டுகளும்…… அரசியல் ஏஜெண்ட்டுகளும்தான்.

ஆனால்……

அரளியைச் சாப்பிடு ஆஸ்த்துமா போகட்டும்……..

கடப்பாரையைக் கடி கண்ணு தெரியட்டும்……….

என்று அட்வைஸ் மழையை அள்ளிவிட்ட இந்த நித்யானந்தனோ மற்றவர்கள் மாதிரி இல்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அவரே எழுதுவாரா இப்படி?

ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை.

வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது. உயிர் போன்றது.

இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம். ஆசையை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம்.

எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்தவுடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.” என்று பொட்டில் அடித்த மாதிரி அவரே ஒரு வார இதழில் எழுதியிருக்கிறார்.

ஆக……

பரமஹம்ஸ நித்யானந்தர் தான் ஒரு எருமை மாடு இல்லை என்று நிரூபிப்பதற்காகப் படுக்கையில் புரண்டதற்குபோய் இப்படியா பிராணனை வாங்குவது.?

எருமை மாட்டுக்கு ஆசைகள் இல்லையென்று சொன்னது எருமை மாடுகளை அவமதிக்கும் செயல்” என்று புளூகிராஸ் நண்பர்கள் அவர் மீது வழக்கோ……..

அல்லது…….

அவரைச் சுற்றியுள்ள எருமைகளுக்கும் மரபணு சோதனைகள் நடத்தி ’எருமைகள் அவரால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை’ என்று.டாக்டர்கள் சர்டிபிகேட் தந்தால்தான் அவரை வெளியே விடுவோம்” என்று நாளை எவரும் போராட்டமோ……. நடத்தாமல் இருக்க…..

தூணிலும் இருக்கும்…….

நடிகையின் துகிலிலும் இருக்கும்………

அந்த ஆண்டவன் அருள் புரியக்கடவாராக.

கதவைச் சாத்து கழுதை போகட்டும்.


**********

மத்திய அரசு இந்தியாவில் இன்னமும் பண்டமாற்று முறைதான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்கிறார்கள் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும்.

என்னவோ ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மக்கள் அரிசியைக் கொடுத்து கோதுமையை வாங்கிக் கொள்வதைப் போலவும்….. காய்கறிகளைக் கொடுத்து உப்பும்,சக்கரையையும் பரிமாறிக் கொள்வதைப் போலவும் பினாத்துகிறார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்பட்டால்தான் பரிவர்த்தனையே நடக்கும். அப்படிப் பயணப்பட வேண்டுமென்றால் லாரிகளில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓட்டமுடியாது. அப்படிப்பட்ட மகத்தான தொழில் நுட்பத்தையும் இந்த மேதைகள் நமக்குக் கண்டுபிடித்துத் தரவில்லை.

அப்படியிருக்கையில் டீசல் விலை உயர்ந்தால் லாரி வாடகை உயரும்….. லாரி வாடகை உயர்ந்தால்…. அதில் பயணப்படும் கட்டுமானப் பொருட்கள் தொடங்கி உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் வரைக்கும் அத்தனை பொருட்களது விலையும் கட்டாயம் உயரும் என்பது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் பையனுக்குக் கூடத் தெரியும் ஆனால் உலக வங்கியிலேயே குப்பை கொட்டிய இந்த ”மகாமேதை” மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?

இந்த லட்சணத்தில்…..

2011 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும்……

அதைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தை எட்டும்…….

18 சதவீதத்தை எட்டியுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு அப்படியே தொபுக்கடீர்ன்னு குறையும்…….

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்தை அதிக அளவுக்கு அதிகரிக்காது…….

ஒட்டுமொத்தமாக 0.4 சதவீதம்தான் பணவீக்கம் இருக்கும்….” என்று ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள்.

கேட்கிறவன் காங்கிரஸ்காரன்னா….மன்மோகன்சிங்கே மார்க்சீயவாதிம்பாங்க போலிருக்கு.

இதில் திருணாமூல் ஒரு ஆர்ப்பாட்டம்……..

வழக்கம்போல் கலைஞர் புறாக் காலில் கட்டிவிட்ட ஒரு கடுதாசி…… என ஜமாய்க்கிறார்கள்.

தோழமைக் கட்சிகளை எப்படி சரிக்கட்டுவதென்று எங்களுக்குத் தெரியும்.” என்று ஏற்கெனவே ஈழப்பிரச்சனையில் சரிக்கட்டிய அனுபவத்தில் பட்டாசு கிளப்புகிறார் பிரணாப்.

விலைவாசியைக் குறைக்க கொடநாட்டில் முகாமிட்டிருக்கிற புர்ச்சித்தலைவியோ அடுத்த தேர்தல் கூட்டை மனதில் வைத்தபடி ‘பாம்பும் சாகாமல்….. தடியும் உடையாமல்’ அறிக்கை விடுகிறார்.

அதே கணக்கில் இருக்கும் விஜயகாந்த் “மாநில அரசு நினைத்தால் குறைக்கலாம்” என்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோருமே ஒரே கட்சிதான் போலிருக்கிறது. ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு காலம் தள்ளப் போகிற மக்கள் மட்டும்தான் எதிர்க்கட்சி.

மொத்தத்தில்……..

பொருளாதாரமும் சரியாகப் போவதில்லை…….

விக்கிற விலையில் இருக்கிற தாரமும் தாக்குப் பிடிக்கப் போவதில்லை…….

இப்படி ஒத்தை ஆளா காலம் தள்ளுவதற்கு பதிலாக பேசாமல் சுவாமி பாமரானந்தான்னு பேரை மாத்திகிட்டு ஒரு ஆசிரமம் போட்டறதுதான் சரி போலிருக்கிறது.

அப்புறம் என்ன…..

காசுக்குக் காசுமாச்சு.

———–       ———–ஆச்சு.