கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யார்?

 தமிழாய்ந்த தமிழர்களின் தலையாய கவலையான திருட்டு வி.சி.டி சமாச்சாரத்துக்கு முடிவுகட்ட தமிழக அரசு அதீத அக்கறையோடு மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது.

திருட்டு வி.சி.டி விற்பவர்கள் மீதும் போட்டுக் காண்பிப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்ற அறிவிப்பு சினிமாக்காரர்களுக்கு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. ஏற்கெனவே படம் பார்த்த தண்டனையில் இருப்பவர்களுக்கு மற்றுமொரு தண்டனை எதற்கு என்கிற பரிதாப உணர்ச்சியின் விளைவாக பார்ப்பவர்கள் மீதும் அந்தச் சட்டம் பாயும் என்று சொல்லாமல் விட்டார்கள்.

திருட்டு வி.சி.டி. விற்றால் குற்றம்…… போட்டுக் காண்பித்தால் குற்றம்…… வைத்திருந்தால் குற்றம்….. என்பதற்கெல்லாம் அவசரச் சட்டம் போடுகிற அரசு, அப்படியே கையோடு கையாக…….. கண்ணில் தென்பட்ட படங்களில் இருந்தெல்லாம் சகட்டுமேனிக்கு ”சுட்டு” படம் எடுப்பவர்கள் மீதும் பாய்வதற்காக ”கதைத் திருட்டுச் சட்டம்” ஒன்றைக் கொண்டு வந்தால் நல்லது.

அப்படிக்கிப்பிடி நடந்துடுச்சு……… தமிழக மக்கள் திரையுலகினரை விட பலமடங்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தத் தயாரா இருக்காங்க அப்பூ. அதையும் ஒரு ஓரத்துல கவனத்துல வெச்சுக்கங்க ராசா.

**********

காஞ்சீபுரம் கோயிலில் வைத்தே சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிப்பேருக்கு மேல் பல்டியடித்து “விசுவாசத்தை”க் காட்டிவிட்டார்கள்.

”கடவுளென்ன ஐ விட்னசுக்கா வரப் போகிறார்?” என்கிற ”நியாயமான” பகுத்தறிவுப் பார்வையில் மீதிப்பேரில் எத்தனை பேர் குட்டிக்கரணம் போடப் போகிறார்களோ?.

எனக்கென்னவோ நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம்….. அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம்…. ஏறிக்கொண்டே போகும் பணவீக்கம்…… இவற்றாலெல்லாம் மனம் நொந்து நூடுல்சாகிப் போய் சங்கரராமனே கத்தியின் மீதோ….. வீச்சறிவாளின் மீதோ தானாக சாய்ந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.

எதற்கும் சாட்சாத் அந்த வரதராஜபெருமாளுக்கே ஒரு சம்மன் அனுப்பி சாட்சிக்கு வரவழைத்தால் சகலத்தையும் அட்சரம்பிசகாமல் சொல்லிவிட்டுப் போகிறார். .தீர்ந்தது பிரச்னை.

என்னது?

வாய்மையே வெல்லுமா?

வெங்காயம்…… வாய்மையாவது வெல்லுவதாவது?

அடப் போங்கப்பா……. உங்குளுக்கு வேற வேலையில்லே?

**********

தனது சந்ததி பாதிக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்க அந்தப் பெண்மணி ஒரு “அமைதிப்படையை” அந்தக் கண்ணீர்த் துளி தீவிற்குக் கூட்டிப் போகிறாள். மத்திய அரசின் முழு ஆதரவும் அந்தப் படைக்கு கொடுக்கப்படுகிறது. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தமிழர்கள் அவர்களுக்கு ஆரம்பத்தில் துணை நிற்கிறார்கள். பிற்பாடு போகப் போக அது அமைதிப்படை அல்ல அட்டூழியப்படை என்று அறிந்ததும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.

”நாங்கள் எதைச் செய்தாலும் தேசபக்தியின் பேரால் நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மறுத்தீர்களோ தடா, பொடாவைப் போல சித்ரவதைதான் உங்களுக்கு” என்கிற ரீதியில் கூட்டிப்போகும் தமிழர்களிலேயே சிலரைப் போட்டுத்தள்ளுகிறான் சரத்பொன்சேகா சாயலில் இருக்கும் ராணுவ தளபதி. அடக்குமுறையின் காரணமாக வேறுவழியில்லாமல் அந்த அராஜகக் கூட்டத்தோடு பயணத்தைத் தொடர்கிறார்கள் கூட்டிச் செல்லப்படும் தமிழர்கள்.

போகும்போதே கண்ணிவெடிகளைப் போல மறைந்திருக்கும் புதைமணலில் சிக்கி புதையுண்டு போகிறார்கள் சிலர்.

தாங்கள் உண்டு……. தங்கள் வாழ்வுண்டு என்று வாழும் அந்தத் தீவின் மக்களை நவீன ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவிக்கிறது ராணுவம். ரத்தத்தில் குளிக்கிறது அந்தத் தீவு. அத்தீவின் மக்களது துயரம் கண்டு துடிக்கிறார்கள் தெரியாமல் துணை போன தமிழகத் தமிழர்கள். அம்மக்களோ தாங்கள் வறுமையில் வாடினாலும் தங்களை வழிநடத்தும் தலைவன் மீது மாறாக் காதலும், நேசமும் கொண்டு “வாழ்ந்தாலும் உன்னோடு….. வீழ்ந்தாலும் உன்னோடு” என்று இறுதி யுத்தம் வரை துணை நிற்கிறார்கள். யுத்த நியதிகளை மீறி குடிநீரில் விஷம் கலந்து படைத்தளபதிகளைக் கொன்றழிக்கிறார் அப்பெண்மணி..

பழங்குடித் தமிழர்களது போராட்ட நியாயம் உணர்ந்து சகல ஒடுக்குமுறைகளையும் மீறி அவர்களோடு இணைகிறார்கள் தமிழர்கள். பழிவாங்கும் மூர்க்ககுணம் தீராத அப்பெண்மணி தலைவனைக் கொல்வதோடு மட்டுமன்றி பல்லாயிரம் பேரை முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய துணைபோகிறாள்..அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ராணுவத்தினரைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.

நடந்து முடிந்த அந்த அநீதியான யுத்தத்தில் மிச்சம் இருப்பது முகாம்களில் வாடும் தமிழர்கள் போக சிறுவர் சிறுமிகள் மட்டுமே. அந்தத் தீவின் மக்களது தார்மீக நியாயங்களுக்குத் துணை நிற்கும் வகையில் தமிழகத் தமிழர்களின் குறியீடாகக் காட்டப்படும் தலைவன் மிஞ்சிய சிறுவனை நெஞ்சில் சுமந்தபடி காட்டுக்குள் சென்று மறைகிறான்.

அந்நிய ராணுவத்தின் துணை கொண்டு வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டாலும் “பயணம் தொடரும்” என்கிற டைட்டிலோடு முடிவடைகிறது 1000 இல் ஒருவன் “திரைப்படம்”.

படத்தைப் பார்த்துவிட்டு அல்லது கதையைக் கேட்டுவிட்டு…….

காட்டப்படும் தீவு வியத்நாம் பக்கம் உள்ள தீவாக இருக்காது என்றோ …..

இந்த நாட்டுப் பெண்மணிக்குத் துணை நிற்கும் ராணுவ தளபதி அழகம்பெருமாள் பொன்சேகா சாயலில் இருக்கிறார் என்றோ……

குவாட்டரும்…… கோழிபிரியாணியுமாய் உழன்றாலும் அந்த உழைக்கும் மக்களின் மனதில் புலி இருக்கிறது என்றோ…….

அநீதியாய் தோற்கடிக்கப்பட்ட மக்கள் இன்றில்லாவிட்டால் என்றாவது கிளர்ந்து எழுவார்கள் என்றோ……

எல்லாம் உங்களுக்குத் தோன்றினால் அதற்கு செல்வராகவன் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்.

நமது மனப்பிராந்தி மனவிஸ்கிக்கெல்லாம் அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்.?

ஆனாலும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி……..

பழிவெறி அடங்காமல் அப்பாவி மக்களைக் கூட கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யாராக இருக்கலாம் என்பது தெரிந்தவர்கள் எழுதி அனுப்புங்கள்.

குலுக்கல் முறையில் ”பரிசு” கொடுக்கக்கூடும் “தமிழக அரசியல்”.

 

 

நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ்

 

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

பயணக்கட்டுரை என்றாலே வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததைதான் எழுதவேண்டுமா என்ன?

வேகாத வெய்யிலில் வெந்து ஊர் ஊராய் அலைந்ததெல்லாம் பயணம் ஆகாதா? அப்படித்தான் அலைந்தேன் கடந்த வாரம். அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொல்கிறேன் இந்தவாரம். முதலில்…….

திருநெல்வேலி

திருநெல்வேலிக்குக் கிளம்புகிறேன் என்றதுமே “மறக்காம கம்பளி எடுத்துக்க…… குளிர் தாங்காது” என்றார்கள். திருநெல்வேலியில் வண்டி நின்றபோது குறட்டை விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு……. வள்ளியூர் போய் இறங்க வேண்டியதாயிற்று. கூட வந்த நண்பர்கள் கு.செ.வும் அன்பழகனும் என்னைவிட ”சுறுசுறுப்பானவர்கள்” என்கிற உண்மை அப்போதுதான் புலப்பட்டது. ஒருவழியாக வள்ளியூரில் இருந்து மீண்டும் ரயில் பிடித்து திருநெல்வேலி போய் இறங்கியதும்தான் நண்பர்கள் கம்பளி எடுத்துக்கச் சொன்னதன் அர்த்தம்  புரிந்தது. மாலையில்தான் மணிவிழா.

இலக்கிய வட்டார நண்பர்களால் நேசத்துடன் “தொ.ப.”என்றழைக்கப்படும் தொ,பரமசிவன் அவர்களுக்கு. எனக்கு மிகவும் அதிர்வூட்டிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.ப.

தமிழ்ப் பேராசிரியர்……

”அறியப்படாத தமிழகம்”, “பண்பாட்டு அசைவுகள்”, “சமயங்களின் அரசியல்” என எண்ணற்ற நூல்களை எழுதியவர்……

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்…..,

சமூக ஆய்வாளர் என ஏகப்பட்ட முகங்கள் உண்டு தோழன் “தொ.ப” வுக்கு.

அப்படிப்பட்டவரது மணிவிழாவில் கலந்து கொள்ள இந்தச் சிறுவனும் (அட நான்தாங்க….)  அழைக்கப்பட்டது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை பற்றி அரிச்சுவடியாவது அறிந்தவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… உயிரே போனாலும் அவர்களைக் கொச்சைப்படுத்தாதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பெற்ற பெண்களையே வைத்து ”பழகலாம் வாங்க” என்று தரகர் வேலை பார்க்காதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… ரஜினியென்ன ஜாக்கிசானே அழைத்தாலும் “போய்யா நீயாச்சு…. உன் சினிமாவாச்சு” என்று உதறித் தள்ளுபவர் என்று அர்த்தம்…….

அப்படிப்பட்ட சுயமரியாதைக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.பரமசிவன்.

எளிய மக்களது பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் இருக்கும் அர்த்தங்கள்…. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்த ஆய்வுகள்…… என மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களது கொண்டாட்டங்கள்….. அவலங்கள் என அனைத்துக்குமான அர்த்தங்களைத் தேடி அலைவதுதான் “தொ.ப”வின் வாழ்க்கை.

மீதியுள்ள நேரங்களில் ஏதேனும் ஒரு டீக்கடை பெஞ்ச்சில் நண்பர்களோடு கழியும் அவரது பொழுது. (வசதிப்பட்டவங்க நண்பன் லெனா குமாருக்கு ஒரு போனைப் போட்டுத் தாக்குங்க (09443486285) ”தொ.ப.”வின் புத்தகங்கள் கைவசம் இருந்தால் அனுப்பி வைப்பார்.)

ஒரு ஊர் என்றால் அங்குள்ளவர்களது வாழ்க்கை முறை…. அவர்களது பழக்க வழக்கங்கங்கள்……. ஊர் பேருக்கான அர்த்தம்…… என அனைத்தையும் அலசி ஆராய்வதுதான் ”தொ.ப” வின் பணி.

“திருக்காவலூர்” என்றால் அன்னையின் காவலில் இருக்கும் ஊர் என்று அர்த்தமாம்.

அப்படிப்பார்த்தால் அன்றைக்கு திராவிட நாட்டுக்காக போர்ப்பரணி பாடியவர்கள்……. முரசொலித்தவர்கள் என  திராவிடக் கொழுந்துகள் பலதும் திருக்காவலூர்க்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். இதில் சில தலித் உறவுகளும் உள்ளடக்கம்.

ஈழமே எரிந்தபோதுகூட இவர்கள் “அன்னையின்” காவலில் இருந்தவர்கள்தானே?

தொ.பரமசிவனின் அருமை எனக்குப் புரிந்தது ஜெயலலிதா ”கோயில்களில் ஆடு கோழி பலியிட தடைச் சட்டம்” கொண்டுவந்த போதுதான்.

சங்கரமடத்தில் கிடாய் வெட்டச்சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது…… சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சக்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது என்பதைப் புரிய வைத்தது இவரது புத்தகங்கள்தான்.

எந்தவொரு விஷயத்தையும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை புரிந்துகொண்ட பொழுது அது.

நிகழ்ச்சி நடக்கும் திருநெல்வேலி நூலக வளாகமே நண்பர்களால் நிறைந்திருந்தது. தன் கவிதைகளால் கிறங்கடிக்கும் கல்யாண்ஜி, வயது எண்பதைக் கடந்தாலும் சமூக அக்கறையில் சளைக்காத தி.க.சி ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன், எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழிசை அறிஞர் மம்முது, பேராசிரியர் மு.இராமசாமி, எழுத்தாளர் செ.திவான், என ஏகப்பட்டவர்களது அன்பு மழையில் மூழ்கியது அரங்கு.

இப்படிப்பட்ட நெகிழ்வான நிகழ்வுகள் எப்போதாவதுதான் வாய்க்கிறது. மனம் நிரம்பி வழியும் மகிழ்வோடு மறுநாள் காலை திருச்சிராப்பள்ளிக்கு ரயிலேறினோம்.

திருச்சிராப்பள்ளி

இறங்கும்போதே நாங்கள் தஞ்சைக்குச் செல்ல வேண்டிய ரயில் கிளம்பிப் போயிருந்தது. இரண்டு மணி நேரம் த்ரிஷா…… அடச்சே திருச்சி ”குளிரில்” சுற்றி அலைந்து விட்டு நாலரைக்கு வந்த நாகூர் பாசஞ்சரில் ஏறி அமர்ந்தோம் என்று எழுதத்தான் ஆசை.

ஆனால் நிற்கக்கூட இடமில்லை.

திடீரென “மகளிர் மசோதாவுல என்னதாம்ப்பா சிக்கல்?” என ஒரு அசரீரி. திரும்பிப் பார்த்தால் நான்கு கல்லூரி மாணவிகள். மகளிர் மசோதா பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கேட்கக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீரியல்கள் பற்றியும்…… அஜித் விஜய் பற்றியும் பேசாமல் இப்படி ஆரோக்கியமாக அளவளாவிக் கொள்கிறார்களே என்பதைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது. சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்ததை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆண் வர்க்கத்தில் சிலர்.

தஞ்சையில் ரயில் நின்றதும் முதல் வேலையாக அவர்களிடம் சென்று எங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.

தஞ்சாவூர்

நண்பன் சசிக்குமாரின் திருமண நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் நுழையும் போதே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் முன்னதாகவே  அமர்ந்திருந்தார்.

நண்பன் சசிக்குமார் நிறைய குறும்படங்களை இயக்கியவர். அடுத்து ஒரு பெரும்படம் எடுக்கும் முயற்சியில் இருப்பவர்.  அவரது முதல் முயற்சியான “சித்திரமாடம்” விரைவிலேயே திரைக்கு வர இருப்பதாகச் சொன்னார். இவை எல்லாவற்றைக் காட்டிலும் நல்ல உணர்வாளர். தாடியைக் கூட எடுக்காமல் அநியாயத்துக்கு எளிமையாக அமர்ந்திருந்தார் சசி.

ஒலி பெருக்கியைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். சரி அதற்குள் ஒரு புகையைப் போட்டு விட்டு வரலாம் என்று மண்டபத்தின் ஓரத்தில் ஒதுங்கினோம். “கடமையை” முடித்துவிட்டு மீண்டும் மண்டபத்தின் உள்ளே நுழைந்தால் சசிக்குமார் – உமாராணி திருமணம் நடந்து முடிந்திருந்தது. அநாவசியத்துக்கு எந்தச் சடங்குகளும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் முடிந்து விட்டது.

தோழர்.நெடுமாறன் அவர்களது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த அனைவரும். தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினது தலைவர் தோழர்.பெ.மணியரசன் உட்பட பலரது பேச்சிலும் ஈழத்துயரம் பற்றிய கவலையும், அக்கறையும் வெளிப்பட்டது.

குடும்ப நிகழ்வை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி அனைவரையும் அதில் பங்குகொள்ள வைத்த சசிக்குமாரின் மனிதநேயத்தை மனதுக்குள் அசை போட்டபடி கோவைக்கு ரயிலேறினோம்.

மூணார்

அப்புறம் இவ்வளவு “உழைத்த” பிறகும் ஓய்வெடுக்காவிட்டால் எப்படி? தலைவர்கள்தான் பெங்களூர்…….கொடநாடு…… என்று செல்ல வேண்டுமா? நாம் போனால் என்ன குடிமுழுகி விடப் போகிறது என்கிற யோசனையில் நண்பர் தங்கமுருகனோடு கிளம்பினோம் மூணார்.

அப்புறம் என்ன? ”பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா”தான். ரொம்ப கற்பனை பண்ணாதீங்க அப்பு.

நான் நித்யானந்தா அல்ல.