பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

பயணக்கட்டுரை என்றாலே வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததைதான் எழுதவேண்டுமா என்ன?

வேகாத வெய்யிலில் வெந்து ஊர் ஊராய் அலைந்ததெல்லாம் பயணம் ஆகாதா? அப்படித்தான் அலைந்தேன் கடந்த வாரம். அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொல்கிறேன் இந்தவாரம். முதலில்…….

திருநெல்வேலி

திருநெல்வேலிக்குக் கிளம்புகிறேன் என்றதுமே “மறக்காம கம்பளி எடுத்துக்க…… குளிர் தாங்காது” என்றார்கள். திருநெல்வேலியில் வண்டி நின்றபோது குறட்டை விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு……. வள்ளியூர் போய் இறங்க வேண்டியதாயிற்று. கூட வந்த நண்பர்கள் கு.செ.வும் அன்பழகனும் என்னைவிட ”சுறுசுறுப்பானவர்கள்” என்கிற உண்மை அப்போதுதான் புலப்பட்டது. ஒருவழியாக வள்ளியூரில் இருந்து மீண்டும் ரயில் பிடித்து திருநெல்வேலி போய் இறங்கியதும்தான் நண்பர்கள் கம்பளி எடுத்துக்கச் சொன்னதன் அர்த்தம்  புரிந்தது. மாலையில்தான் மணிவிழா.

இலக்கிய வட்டார நண்பர்களால் நேசத்துடன் “தொ.ப.”என்றழைக்கப்படும் தொ,பரமசிவன் அவர்களுக்கு. எனக்கு மிகவும் அதிர்வூட்டிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.ப.

தமிழ்ப் பேராசிரியர்……

”அறியப்படாத தமிழகம்”, “பண்பாட்டு அசைவுகள்”, “சமயங்களின் அரசியல்” என எண்ணற்ற நூல்களை எழுதியவர்……

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்…..,

சமூக ஆய்வாளர் என ஏகப்பட்ட முகங்கள் உண்டு தோழன் “தொ.ப” வுக்கு.

அப்படிப்பட்டவரது மணிவிழாவில் கலந்து கொள்ள இந்தச் சிறுவனும் (அட நான்தாங்க….)  அழைக்கப்பட்டது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை பற்றி அரிச்சுவடியாவது அறிந்தவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… உயிரே போனாலும் அவர்களைக் கொச்சைப்படுத்தாதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பெற்ற பெண்களையே வைத்து ”பழகலாம் வாங்க” என்று தரகர் வேலை பார்க்காதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… ரஜினியென்ன ஜாக்கிசானே அழைத்தாலும் “போய்யா நீயாச்சு…. உன் சினிமாவாச்சு” என்று உதறித் தள்ளுபவர் என்று அர்த்தம்…….

அப்படிப்பட்ட சுயமரியாதைக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.பரமசிவன்.

எளிய மக்களது பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் இருக்கும் அர்த்தங்கள்…. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்த ஆய்வுகள்…… என மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களது கொண்டாட்டங்கள்….. அவலங்கள் என அனைத்துக்குமான அர்த்தங்களைத் தேடி அலைவதுதான் “தொ.ப”வின் வாழ்க்கை.

மீதியுள்ள நேரங்களில் ஏதேனும் ஒரு டீக்கடை பெஞ்ச்சில் நண்பர்களோடு கழியும் அவரது பொழுது. (வசதிப்பட்டவங்க நண்பன் லெனா குமாருக்கு ஒரு போனைப் போட்டுத் தாக்குங்க (09443486285) ”தொ.ப.”வின் புத்தகங்கள் கைவசம் இருந்தால் அனுப்பி வைப்பார்.)

ஒரு ஊர் என்றால் அங்குள்ளவர்களது வாழ்க்கை முறை…. அவர்களது பழக்க வழக்கங்கங்கள்……. ஊர் பேருக்கான அர்த்தம்…… என அனைத்தையும் அலசி ஆராய்வதுதான் ”தொ.ப” வின் பணி.

“திருக்காவலூர்” என்றால் அன்னையின் காவலில் இருக்கும் ஊர் என்று அர்த்தமாம்.

அப்படிப்பார்த்தால் அன்றைக்கு திராவிட நாட்டுக்காக போர்ப்பரணி பாடியவர்கள்……. முரசொலித்தவர்கள் என  திராவிடக் கொழுந்துகள் பலதும் திருக்காவலூர்க்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். இதில் சில தலித் உறவுகளும் உள்ளடக்கம்.

ஈழமே எரிந்தபோதுகூட இவர்கள் “அன்னையின்” காவலில் இருந்தவர்கள்தானே?

தொ.பரமசிவனின் அருமை எனக்குப் புரிந்தது ஜெயலலிதா ”கோயில்களில் ஆடு கோழி பலியிட தடைச் சட்டம்” கொண்டுவந்த போதுதான்.

சங்கரமடத்தில் கிடாய் வெட்டச்சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது…… சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சக்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது என்பதைப் புரிய வைத்தது இவரது புத்தகங்கள்தான்.

எந்தவொரு விஷயத்தையும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை புரிந்துகொண்ட பொழுது அது.

நிகழ்ச்சி நடக்கும் திருநெல்வேலி நூலக வளாகமே நண்பர்களால் நிறைந்திருந்தது. தன் கவிதைகளால் கிறங்கடிக்கும் கல்யாண்ஜி, வயது எண்பதைக் கடந்தாலும் சமூக அக்கறையில் சளைக்காத தி.க.சி ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன், எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழிசை அறிஞர் மம்முது, பேராசிரியர் மு.இராமசாமி, எழுத்தாளர் செ.திவான், என ஏகப்பட்டவர்களது அன்பு மழையில் மூழ்கியது அரங்கு.

இப்படிப்பட்ட நெகிழ்வான நிகழ்வுகள் எப்போதாவதுதான் வாய்க்கிறது. மனம் நிரம்பி வழியும் மகிழ்வோடு மறுநாள் காலை திருச்சிராப்பள்ளிக்கு ரயிலேறினோம்.

திருச்சிராப்பள்ளி

இறங்கும்போதே நாங்கள் தஞ்சைக்குச் செல்ல வேண்டிய ரயில் கிளம்பிப் போயிருந்தது. இரண்டு மணி நேரம் த்ரிஷா…… அடச்சே திருச்சி ”குளிரில்” சுற்றி அலைந்து விட்டு நாலரைக்கு வந்த நாகூர் பாசஞ்சரில் ஏறி அமர்ந்தோம் என்று எழுதத்தான் ஆசை.

ஆனால் நிற்கக்கூட இடமில்லை.

திடீரென “மகளிர் மசோதாவுல என்னதாம்ப்பா சிக்கல்?” என ஒரு அசரீரி. திரும்பிப் பார்த்தால் நான்கு கல்லூரி மாணவிகள். மகளிர் மசோதா பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கேட்கக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீரியல்கள் பற்றியும்…… அஜித் விஜய் பற்றியும் பேசாமல் இப்படி ஆரோக்கியமாக அளவளாவிக் கொள்கிறார்களே என்பதைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது. சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்ததை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆண் வர்க்கத்தில் சிலர்.

தஞ்சையில் ரயில் நின்றதும் முதல் வேலையாக அவர்களிடம் சென்று எங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.

தஞ்சாவூர்

நண்பன் சசிக்குமாரின் திருமண நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் நுழையும் போதே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் முன்னதாகவே  அமர்ந்திருந்தார்.

நண்பன் சசிக்குமார் நிறைய குறும்படங்களை இயக்கியவர். அடுத்து ஒரு பெரும்படம் எடுக்கும் முயற்சியில் இருப்பவர்.  அவரது முதல் முயற்சியான “சித்திரமாடம்” விரைவிலேயே திரைக்கு வர இருப்பதாகச் சொன்னார். இவை எல்லாவற்றைக் காட்டிலும் நல்ல உணர்வாளர். தாடியைக் கூட எடுக்காமல் அநியாயத்துக்கு எளிமையாக அமர்ந்திருந்தார் சசி.

ஒலி பெருக்கியைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். சரி அதற்குள் ஒரு புகையைப் போட்டு விட்டு வரலாம் என்று மண்டபத்தின் ஓரத்தில் ஒதுங்கினோம். “கடமையை” முடித்துவிட்டு மீண்டும் மண்டபத்தின் உள்ளே நுழைந்தால் சசிக்குமார் – உமாராணி திருமணம் நடந்து முடிந்திருந்தது. அநாவசியத்துக்கு எந்தச் சடங்குகளும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் முடிந்து விட்டது.

தோழர்.நெடுமாறன் அவர்களது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த அனைவரும். தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினது தலைவர் தோழர்.பெ.மணியரசன் உட்பட பலரது பேச்சிலும் ஈழத்துயரம் பற்றிய கவலையும், அக்கறையும் வெளிப்பட்டது.

குடும்ப நிகழ்வை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி அனைவரையும் அதில் பங்குகொள்ள வைத்த சசிக்குமாரின் மனிதநேயத்தை மனதுக்குள் அசை போட்டபடி கோவைக்கு ரயிலேறினோம்.

மூணார்

அப்புறம் இவ்வளவு “உழைத்த” பிறகும் ஓய்வெடுக்காவிட்டால் எப்படி? தலைவர்கள்தான் பெங்களூர்…….கொடநாடு…… என்று செல்ல வேண்டுமா? நாம் போனால் என்ன குடிமுழுகி விடப் போகிறது என்கிற யோசனையில் நண்பர் தங்கமுருகனோடு கிளம்பினோம் மூணார்.

அப்புறம் என்ன? ”பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா”தான். ரொம்ப கற்பனை பண்ணாதீங்க அப்பு.

நான் நித்யானந்தா அல்ல.

Advertisements

13 thoughts on “பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

 1. அறச்சீற்றம் குறைந்து அமைதி வழியே போனதற்கு காரணம் இந்த உய் தானா?

  நன்றாக இருந்தது. படிப்பதற்கு மட்டுமல்ல?

 2. dear brother allow me to join your readers and friends circle and i request you to read my comment as one out of disapointment because you and thangamurugan left me for the trip

 3. அண்ணன் பாமரன்

  உங்கள் பயணத்தை ரசித்தேன். அதில் கூடவே நாமும் பயணிக்கவில்லையே என்ற வருத்தம் உள்ளது.

  இதுப் போல நிறைய பயண கட்டுரைகள் எழுத வேண்டும்…

  மயிலாடுதுறை சிவா…

 4. SUN TV இல் நான் எபோளுதாவது விரும்பி பார்ப்பது, சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம். எப்பொழுது அவரை
  ரஜினியுடன் சேர்ந்து கூத்து அடித்ததை பார்த்தேனோ அன்று முதல் இவரின் பட்டிமன்றம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

  காசு கொடுத்தால் இவர் என்னவும் பண்ணுவார் என்ற எண்ணமே எனக்கு இவரின் மேல் இருந்த மதிப்பை குறைத்து.

 5. அன்புள்ள பாமரன் என்கிற எழிற்கோ அவர்களுக்கு,

  பாமரன் என்றால் தமிழில் “ஒன்றும் தெரியாதவன் ” என அர்த்தம். ஆனால் உங்கள் பகிரங்க கடிதங்களை படித்த பொழுது நீங்கள் அப்படி பட்டவராக தெரியவில்லை. உங்களால் ஆசியாவின் அறிவு ஜீவி என அழைக்கப்பட்ட “சோ” வை விட நீங்கள் தான் உண்மையான உலக அறிவு ஜீவி என்று சொல்ல தோன்றுகிறது.

  குறை சொல்லி பேர் வாங்குபவர் பலர் இருந்தாலும், நீங்கள் தான் எல்லோரையும் விஞ்சி நிற்கிறீர்கள்.

  உங்கள் எழுத்து மெத்த படித்தவர்களையும் சிந்திக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்,
  பெ. வஜ்ரவேல், சென்னிமலை.

 6. தோழர் அவர்களுக்கு,

  முன்பு குமுதத்தில் தொடர்ச்சியாக ‘பாமரன் பக்கம்’ வாசிப்பது வழக்கம். பிறகு பெரிய இடைவேளைக்குப்பிறகு, மீண்டும் தாங்கள் எழுதிய பகிரங்கக் கடிதத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் கூகுல் வலைத்தளத்தில் ‘பாமரன் பக்கம்’ என்று எழுதி தேடிய போது, https://pamaran.wordpress.com/ வலைப்பக்கம் கிடைக்கபெற்றதில் மெத்த மகிழ்ச்சி. உங்களுடைய எழுத்து நடை மிக அற்புதம், இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. மீண்டும் தாங்கள் குமுதத்தில் எழுதினால், கணிப்பொறி இல்லாதவரும் படித்து மகிழலாம்.

  பல வருடங்களாக நானும் கணிப்பொறி பிரிவில்தான் வேலை பார்த்து வருகிறேன்.கணினியே வாழ்க்கைக்கு அனைத்தும் ஆகி விடாது, ஆனால் காலத்திற்கேற்ப அனைவரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதில் தவறேதும் இல்லை என்பது, இந்த பூகோளத்தில் தங்களுக்கு எதிர் முனையில் வசிக்கும் இந்த ரசிகனின் கருத்து.

  சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களும் சிறந்த எழுத்தாளர்கள்தான், ஆனால் அவர்களுடைய நடையில், பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தாக்கம் அதிகமாக இருக்கும். உங்களுடைய கட்டுரையைய் படித்ததற்கு பிறகு, வேறு ஒரு நடையைய் விரும்பி படிப்பது கடினம்தான். என்னுடைய நண்பர்கள் பலருக்கும், தங்களுடைய வலைப்பக்கத்தை மின்னஞ்சல் செய்துள்ளேன். உங்களுடைய எழுத்துக்கள் மேலும் பலரை சென்றடைய என் வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு உங்கள் வாசகன்,
  ஆனந்த்.

 7. நீண்ட நாள் கழித்து உங்கள் பயணப்பதிவு மூலம் உங்கள் எழுத்தைப் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி தொடர்ந்து உங்கள் வலைப்பக்கத்திற்கு வருவேன்.
  சீனி மோகன், உடுமலை. 9443889906 ( உங்கள் எண் தரலாமே )

 8. எழுத்துக்களால் இங்குள்ள சுயநலக்காரர்களுக்கு சாட்டையடி கொடுத்துக்கொண்டிருக்கும் பாமரன் அவர்கட்கு…..
  வணக்கம்:)
  உங்களுக்கு ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன்…………

  http://vanakkammalaysia.com/Tamil/detail_news.php?prop_id=3081

  இந்த கட்டுரையும் தமிழனின் பெருமையை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது….
  தயவு செய்து படியுங்கள்….

 9. பாமரன் அண்ணே!
  வணக்கம் . சென்னிமலையில் இருந்து எழுதுறுங்க . என்ன நல்லா இருக்கீரீங்களா அப்பு! கோயம்புத்தூர் செம்மொழி மாநாடு போனீங்களா? அதில் என்ன புதுசா சொன்னங்கா?

  அப்புறம் நீங்க எழுதின ” பயணக்கட்டுரை என்றாலே வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததைதான் எழுதவேண்டுமா என்ன?…”
  நல்லா இருந்தாலும் அது யாரை ” பொடி ” (தாக்கி) வைத்து எழுதியது ? இந்த மர மண்டைக்கு புரியல்லே ! ரொம்ப யோசிச்சா மூளை சூடு ஆகுது . அதனால் எனக்கு மட்டுமாவது சொல்லுங்க அண்ணே !

  பெ.வஜ்ரவேல்
  சென்னிமலையில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s