கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யார்?

 தமிழாய்ந்த தமிழர்களின் தலையாய கவலையான திருட்டு வி.சி.டி சமாச்சாரத்துக்கு முடிவுகட்ட தமிழக அரசு அதீத அக்கறையோடு மின்னல் வேகத்தில் செயல்பட்டிருக்கிறது.

திருட்டு வி.சி.டி விற்பவர்கள் மீதும் போட்டுக் காண்பிப்பவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்ற அறிவிப்பு சினிமாக்காரர்களுக்கு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. ஏற்கெனவே படம் பார்த்த தண்டனையில் இருப்பவர்களுக்கு மற்றுமொரு தண்டனை எதற்கு என்கிற பரிதாப உணர்ச்சியின் விளைவாக பார்ப்பவர்கள் மீதும் அந்தச் சட்டம் பாயும் என்று சொல்லாமல் விட்டார்கள்.

திருட்டு வி.சி.டி. விற்றால் குற்றம்…… போட்டுக் காண்பித்தால் குற்றம்…… வைத்திருந்தால் குற்றம்….. என்பதற்கெல்லாம் அவசரச் சட்டம் போடுகிற அரசு, அப்படியே கையோடு கையாக…….. கண்ணில் தென்பட்ட படங்களில் இருந்தெல்லாம் சகட்டுமேனிக்கு ”சுட்டு” படம் எடுப்பவர்கள் மீதும் பாய்வதற்காக ”கதைத் திருட்டுச் சட்டம்” ஒன்றைக் கொண்டு வந்தால் நல்லது.

அப்படிக்கிப்பிடி நடந்துடுச்சு……… தமிழக மக்கள் திரையுலகினரை விட பலமடங்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தத் தயாரா இருக்காங்க அப்பூ. அதையும் ஒரு ஓரத்துல கவனத்துல வெச்சுக்கங்க ராசா.

**********

காஞ்சீபுரம் கோயிலில் வைத்தே சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிப்பேருக்கு மேல் பல்டியடித்து “விசுவாசத்தை”க் காட்டிவிட்டார்கள்.

”கடவுளென்ன ஐ விட்னசுக்கா வரப் போகிறார்?” என்கிற ”நியாயமான” பகுத்தறிவுப் பார்வையில் மீதிப்பேரில் எத்தனை பேர் குட்டிக்கரணம் போடப் போகிறார்களோ?.

எனக்கென்னவோ நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம்….. அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம்…. ஏறிக்கொண்டே போகும் பணவீக்கம்…… இவற்றாலெல்லாம் மனம் நொந்து நூடுல்சாகிப் போய் சங்கரராமனே கத்தியின் மீதோ….. வீச்சறிவாளின் மீதோ தானாக சாய்ந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.

எதற்கும் சாட்சாத் அந்த வரதராஜபெருமாளுக்கே ஒரு சம்மன் அனுப்பி சாட்சிக்கு வரவழைத்தால் சகலத்தையும் அட்சரம்பிசகாமல் சொல்லிவிட்டுப் போகிறார். .தீர்ந்தது பிரச்னை.

என்னது?

வாய்மையே வெல்லுமா?

வெங்காயம்…… வாய்மையாவது வெல்லுவதாவது?

அடப் போங்கப்பா……. உங்குளுக்கு வேற வேலையில்லே?

**********

தனது சந்ததி பாதிக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்க அந்தப் பெண்மணி ஒரு “அமைதிப்படையை” அந்தக் கண்ணீர்த் துளி தீவிற்குக் கூட்டிப் போகிறாள். மத்திய அரசின் முழு ஆதரவும் அந்தப் படைக்கு கொடுக்கப்படுகிறது. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தமிழர்கள் அவர்களுக்கு ஆரம்பத்தில் துணை நிற்கிறார்கள். பிற்பாடு போகப் போக அது அமைதிப்படை அல்ல அட்டூழியப்படை என்று அறிந்ததும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள்.

”நாங்கள் எதைச் செய்தாலும் தேசபக்தியின் பேரால் நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மறுத்தீர்களோ தடா, பொடாவைப் போல சித்ரவதைதான் உங்களுக்கு” என்கிற ரீதியில் கூட்டிப்போகும் தமிழர்களிலேயே சிலரைப் போட்டுத்தள்ளுகிறான் சரத்பொன்சேகா சாயலில் இருக்கும் ராணுவ தளபதி. அடக்குமுறையின் காரணமாக வேறுவழியில்லாமல் அந்த அராஜகக் கூட்டத்தோடு பயணத்தைத் தொடர்கிறார்கள் கூட்டிச் செல்லப்படும் தமிழர்கள்.

போகும்போதே கண்ணிவெடிகளைப் போல மறைந்திருக்கும் புதைமணலில் சிக்கி புதையுண்டு போகிறார்கள் சிலர்.

தாங்கள் உண்டு……. தங்கள் வாழ்வுண்டு என்று வாழும் அந்தத் தீவின் மக்களை நவீன ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவிக்கிறது ராணுவம். ரத்தத்தில் குளிக்கிறது அந்தத் தீவு. அத்தீவின் மக்களது துயரம் கண்டு துடிக்கிறார்கள் தெரியாமல் துணை போன தமிழகத் தமிழர்கள். அம்மக்களோ தாங்கள் வறுமையில் வாடினாலும் தங்களை வழிநடத்தும் தலைவன் மீது மாறாக் காதலும், நேசமும் கொண்டு “வாழ்ந்தாலும் உன்னோடு….. வீழ்ந்தாலும் உன்னோடு” என்று இறுதி யுத்தம் வரை துணை நிற்கிறார்கள். யுத்த நியதிகளை மீறி குடிநீரில் விஷம் கலந்து படைத்தளபதிகளைக் கொன்றழிக்கிறார் அப்பெண்மணி..

பழங்குடித் தமிழர்களது போராட்ட நியாயம் உணர்ந்து சகல ஒடுக்குமுறைகளையும் மீறி அவர்களோடு இணைகிறார்கள் தமிழர்கள். பழிவாங்கும் மூர்க்ககுணம் தீராத அப்பெண்மணி தலைவனைக் கொல்வதோடு மட்டுமன்றி பல்லாயிரம் பேரை முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய துணைபோகிறாள்..அப்பாவிப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ராணுவத்தினரைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.

நடந்து முடிந்த அந்த அநீதியான யுத்தத்தில் மிச்சம் இருப்பது முகாம்களில் வாடும் தமிழர்கள் போக சிறுவர் சிறுமிகள் மட்டுமே. அந்தத் தீவின் மக்களது தார்மீக நியாயங்களுக்குத் துணை நிற்கும் வகையில் தமிழகத் தமிழர்களின் குறியீடாகக் காட்டப்படும் தலைவன் மிஞ்சிய சிறுவனை நெஞ்சில் சுமந்தபடி காட்டுக்குள் சென்று மறைகிறான்.

அந்நிய ராணுவத்தின் துணை கொண்டு வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டாலும் “பயணம் தொடரும்” என்கிற டைட்டிலோடு முடிவடைகிறது 1000 இல் ஒருவன் “திரைப்படம்”.

படத்தைப் பார்த்துவிட்டு அல்லது கதையைக் கேட்டுவிட்டு…….

காட்டப்படும் தீவு வியத்நாம் பக்கம் உள்ள தீவாக இருக்காது என்றோ …..

இந்த நாட்டுப் பெண்மணிக்குத் துணை நிற்கும் ராணுவ தளபதி அழகம்பெருமாள் பொன்சேகா சாயலில் இருக்கிறார் என்றோ……

குவாட்டரும்…… கோழிபிரியாணியுமாய் உழன்றாலும் அந்த உழைக்கும் மக்களின் மனதில் புலி இருக்கிறது என்றோ…….

அநீதியாய் தோற்கடிக்கப்பட்ட மக்கள் இன்றில்லாவிட்டால் என்றாவது கிளர்ந்து எழுவார்கள் என்றோ……

எல்லாம் உங்களுக்குத் தோன்றினால் அதற்கு செல்வராகவன் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்.

நமது மனப்பிராந்தி மனவிஸ்கிக்கெல்லாம் அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்.?

ஆனாலும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி……..

பழிவெறி அடங்காமல் அப்பாவி மக்களைக் கூட கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யாராக இருக்கலாம் என்பது தெரிந்தவர்கள் எழுதி அனுப்புங்கள்.

குலுக்கல் முறையில் ”பரிசு” கொடுக்கக்கூடும் “தமிழக அரசியல்”.

 

 

நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ்

 

4 thoughts on “கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யார்?

 1. நக்கல் நையாண்டியையே தன் அடையாளமாய்க் கொண்டு, மன இறுக்கத்துக்கு மருந்து தடவி,
  நம் இனம் அழிந்ததினால் ஏற்பட்ட காயத்துக்கு, இயன்ற அளவு எம்மைத் தேற்றும் எம் நண்பர் பாமரன் (எழிற்கோ) அவர்களே… முதலில் உங்களுக்கு என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டு, இணைய உலகில் மற்றுமோர் நம்பிக்கை விண்மீனாய் துலங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எம் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு…
  வெளியிலே இந்தியாவும் பாகிசுதானும் எதிரிகளாம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையாம்.
  ஆனால் இவர்களெல்லாம் எதிரியாய் நினைப்பது யாரை? தமிழனையா? அதனால்தானே, வெளியிலே
  அடித்துக் கொள்ளும் இவர்களெல்லாம் தமிழனைக் கொன்று அழிக்க வேண்டும் என்பதற்காக மட்டும்
  ஒரே அணியில் வந்து, ஒன்றாக ஆலோசனை நடத்தி, ஆலோசனை கொடுத்து ஈழத்திலே நாற்பதாயிரம் தமிழர்களைக் கொன்று அழித்தார்கள், இந்த கொலைகாரக் கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தியவர்
  இந்தியர்களின் இரக்கமுள்ள தாய், அன்னை சோனியா அவர்கள் அல்லவா? 1000 ல் ஒருவனில் படை நடத்திய பெண்மணி அய்யத்துக் கிடமின்றி, காங்கிரசு அகிம்சா மூர்த்திகளின் தலைவிதான் அய்யா!
  காசிமேடு மன்னாரு.

 2. காதலில் நான் சைவம் தானுங்க அசைவம் இல்லீங்க ஏனென்றால் சொக்க வைக்க யாரங்கே கூப்பிடுங்கள் அந்த பெண்னை…

  கைப்புண்னுக்கு எதுக்குங்க … இத்தாலியன் மிர்ர்ரு

 3. //பழிவெறி அடங்காமல் அப்பாவி மக்களைக் கூட கொன்று குவிக்கும் பட்டாளத்திற்குத் தலைமையேற்கும் பெண்மணி யாராக இருக்கலாம் என்பது தெரிந்தவர்கள் எழுதி அனுப்புங்கள்.//

  சோனியா! சோனியா! சொக்கவைக்கும் சோனியா!

  எங்கே என் ‘குலுக்கல்’ பரிசு?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s