”நேர் நேர் தேமா”…. ”நிரை நேர் புளிமா” ….

”அதிகாலை” ஏழரைக்கே எழுப்பி விட்டார்கள் ரேடியோ மிர்ச்சியில் இருந்து.

”சென்னையில் ஏறக்குறைய ஐம்பது சாலைகளில் உள்ள பிரிட்டிஷ்காரர்களது பெயரைத் தூக்கிவிட்டு அதற்கு பதிலாக தமிழ்ப் பெயர்களை பெயரைச் சூட்டப் போகிறார்கள் இது சரிதானா?” என்பதுதான் அவர்கள் எழுப்பிக் கேட்ட கேள்வி.

(அது சரி….. ஏன் தான் இந்த F.M.காரர்கள் பேசும்போது ஓடுகிற ரயிலைப் பிடிக்கப் போவதுபோல மூச்சு விடாமல் பேசுகிறார்கள்? என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.)

தம்பி ஷா என்பவர் பேசினார்.

வெள்ளைக்காரர்களை என்றும் எஜமான மனோபாவத்திலேயே பார்த்துப் பழகிவிட்ட அடிமைகள் அப்பெயர்களை தூக்கிச் சுமப்பதும் தவறு…..

அதைப்போலவே தாய்மொழி என்பதற்காக தரமற்றவர்களது பெயர்களைத் தாங்கிப் பிடிப்பதும் தவறு…. என்றேன்.

கோயமுத்தூர்ப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. “வெட்டிக்குப் பெத்து ’வெங்கட்டு’ன்னு பேர் வெச்ச மாதிரி” என்று. அப்படி இங்கு பெற்ற பிள்ளைக்குப் பேர் வைப்பதற்குக் கூட யோசிப்பதில்லை யாரும். அப்படி இருக்கையில் சாலைக்குப் பேர் வைப்பதற்கா சிந்திக்கப் போகிறார்கள்? 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேர் வைத்தால் ஒன்று ”சுரேஷ்” என்று வைப்பார்கள் அல்லது “ரமேஷ்” என்று வைப்பார்கள். அண்ணா சாலையில் நின்று ரமேஷ் என்று கூவினால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது நிச்சயம் திரும்பிப் பார்ப்பார்கள். இன்றைக்கு அதற்கு பதிலாக “ஆகாஷ்” அல்லது ”அபிலாஷ்”. அதுவுமில்லாவிட்டால் “ஜான்” அல்லது “ஜேம்ஸ்”.

தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்குக்கூட சிந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை அநேகம்பேர். அது இந்துவாகட்டும்…..அல்லது இஸ்லாமியராகட்டும்… அல்லது கிருஸ்தவராகட்டும்….. இவர்கள் எவருக்குமே தமிழ்ப்பெயர் என்றால் கசப்போ கசப்புதான். இதில் மட்டும் அபார ”ஒற்றுமை” இவர்களுக்குள்.

(நிலா…. அமுதன்…. செம்மொழி…. சொற்கோ….. யாழ்…… மகிழ்….. தமிழ்த்தென்றல்……..மணிமேகலை…. தமிழோவியா….. இளவேனில்….. தமிழீழம்….. என தூள் கிளப்புபவர்கள் இதில் விதிவிலக்கு.)

சரி…. தொடங்கிய இடத்துக்கே வருவோம்.

ஆங்கிலேயர் பெயர் சூட்டப்பட்ட அநேக சாலைகளிலும் அர்த்தமுள்ள சாலைகளும் ஓரிரண்டு உண்டு. அதில் ஒன்றுதான் “எல்லிஸ் சாலை.” ஆனால் “எல்லிஸ் சாலை”யில் அன்றாடம் சென்று வருபவர்களுக்குத் தெரியுமா அந்த மகத்தான மனிதன் எல்லீசன் பற்றி?

1796 இல் தமிழக மண்ணில் கால் பதித்தான் அந்த எல்லிஸ்.   வந்து சேர்ந்த நான்கே ஆண்டுகளில் ”தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளுக்கான இலக்கணம் மற்றும் அகராதிகளைத் தயாரிக்க வேண்டும்” என்று சென்னை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தான். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லிஸ் தமிழ் மீது தீராத காதல் கொண்டு….துல்லியமாகக் கற்றுக் கொண்டு….. நாம் இன்னமும் மண்டையைக் குழப்பிக் கொள்கிற ”நேர் நேர் தேமா”   ”நிறை நேர் புளிமா” என இலக்கணத்தையும் கரைத்துக் குடித்து பலபேர் வயிற்றில் புளியைக் கரைத்தான்.

தமிழ் மீதான இந்தக் காதல் அந்த எல்லீஸ் துரைக்கு எதுவரை சென்றதென்றால் நாம் இன்றைக்கும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோமே அந்த ”ஸ்”.  அந்த “ஸ்”யே தனது பெயரில் இருந்து தூக்கி எரியும் அளவுக்குச் சென்றது.

தமிழகத்தில் கடைகளுக்கு பெயர் வைப்பதென்றால் கூட “அம்மாஸ்…. பாட்டீஸ்….. ஆனந்தாஸ்….. ஆரியாஸ்… என்று இன்றைக்கும் பேர் வைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் அன்றைக்கே தனது பெயரில் “ஸ்” இருக்கக்கூடாது…… தமிழ் ஒலிநயத்திற்கேற்ப தனது பெயரை எல்லீசன் என்றுதான் அழைக்கவேண்டும் என்று தனது பெயரையே மாற்றிக் கொண்டவர்தான் எல்லீசன் துரை.

சென்னையில் ஒன்பது ஆண்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவராக (”தமிழில்” சொல்வதென்றால் ”கலெக்டர்”.) எல்லீசன் இருந்த பொழுதுதான் திருவள்ளுவர் உருவம் பொறித்த இரண்டு வராகன் தங்க நாணயத்தை வெளியிட்டார். இவை போக இவர் பதிப்பித்த எண்ணற்ற ஓலைச் சுவடிகள்….இலக்கிய மொழி பெயர்ப்புகள்….. என நீண்டுகொண்டே செல்லும் அந்த மாமனிதனின் பணி.  இத்தோடு மேலும் பல எண்ணற்ற பணிகளையும் செய்து முடித்த கையோடு தனது 42 ஆவது வயதில் இராமநாதபுரத்தில் அனாதையாகச் செத்துப் போனார் அந்த எல்லீசன்.

 சென்னை நகர மேயர் பெயர் மாற்றப் பணிகளில் ஈடுபட்டிருப்பதில் மாறுபாடு ஒன்றுமில்லை எமக்கு. ஆனால் அந்த சூரியன் மறையாத தேசத்துக்குச் சொந்தக்காரனாக இருந்து தமிழர்களின் வாழ்வோடு கலந்து மறைந்த அந்த எளியவனின் விருப்பப்படி ”எல்லிஸ்” சாலையையும் கையோடு எல்லீசன் சாலை என்று மாற்றி அமைப்பாரேயானால் உண்மையிலேயே மனம் மகிழும் தமிழ் உலகம்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். 

**********

நாம் இங்கே அவர்களது வாழ்வை எண்ணி குமைந்து கொண்டிருந்தால் அவர்களோ நம்மை எண்ணி துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரிரு நாட்கள்  முன்பு   லண்டனில்   இருக்கும்    ஈழ நண்பர் ”மைலோ” என்கிற சிவசுதன் தொலைபேசியில் அழைத்தார். போபால் மக்களுக்குத் தொடரும் அநீதி அவரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

“என்ன தோழர்….. போபாலில் 20000 பேரை விஷவாயுவில் கொன்றழித்ததோடு…. பல லட்சம் பேரை நிரந்தர நோயாளி ஆக்கியவர்களுக்கு இரண்டு வருஷம்தானா தண்டனை?” என்றார் கவலையோடு.

அத்தோடு நில்லாமல் ”உங்கட நாட்டுல  அவ்வளவு பேர் உசுர விட்டிருக்காங்க…. ஆனா அமெரிக்காவுல ஒரு எண்ணைக் கம்பெனி லீக் ஆயிடுச்சுன்னு அலறித் துடிக்கிறாங்களே…. இது அக்கிரமமா இல்லையா?” என்று கேட்டார் நண்பர். அப்போதுதான் எனக்கு பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனத்தின்(British Petrolium)  விபத்து பற்றி புரிய வந்தது. 

மெக்சிகோ வளைகுடாவில் இருக்கும் அந்த நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது.

அந்தக் கசிவால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது……

கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன…..

வியாபாரம் பாதிக்கப் படுகிறது…. என்று ஓலமோ ஓலம் அமெரிக்காவில்.

கடல் வாழ் உயிரினங்களின் மீது உள்ள கரிசனத்தில் நூற்றில் ஒரு பங்காவது போபாலில் செத்த மக்கள் மீது இவர்களுக்கு இருக்கிறதா? என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். மேலை நாடுகள் என்றைக்குத்தான் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களை மனிதர்களாக மதித்திருக்கிறார்கள்?

இந்த நாடுகளெல்லாம் அவர்களுக்கு தங்களது ஆயுதங்களையும், அபாயகரமான ரசாயணங்களையும் சோதனை செய்து பார்க்கும் சோதனைக்கூடங்கள்தானே?

பச்சையாகச் சொன்னால் இவர்களுக்கெல்லாம் இந்நாடுகள் ஒரு குப்பைத் தொட்டி. தொழிற்சாலைக்கழிவு தொடங்கி அணுக்கழிவு வரைக்கும்.

கட்டபொம்மன்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் எட்டப்பன்களுக்கு மட்டும் பஞ்சமில்லை இன்று.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 

**********

காலதாமதமான செய்திதான் என்றாலும் கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டிய செய்தி.

கொழும்பில் சந்தி சிரித்த சர்வதேச இந்திய திரைப்பட விழா செய்திதான் அது.

ஆளாளுக்கு தனித் தனியே நின்று குரல் எழுப்பினாலும் காரியம் கை கூடி இருக்கிறதே என்கிற மகிழ்ச்சிதான் நமக்கு. இலங்கை அரசு இந்த விழாவை வைத்து போட்ட கணக்கு தப்பாகிப் போயிருக்கிறது. அமிதாப்பச்சன் தொடங்கி ஷாருக்கான் வரைக்கும் அங்கு ஒதுங்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இதில் மனமார பாராட்டப்பட வேண்டியவர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர்தான்.

இவர்கள் மட்டுமில்லை ”இளந்தமிழர் இயக்கம்” அதே இலக்கோடு வேறு விதமாகப் பயணப்பட்டார்கள் என்றால்……

”மே 17 இயக்க”த்தைச் சேர்ந்தவர்களோ வைத்த குறி தவறாமல் மற்றொரு விதமாகப் பயணப்பட்டார்கள்…..

”பெரியார் திராவிடர் கழக”த் தோழர்கள் ஒரு பக்கமும்….. ”தமிழ்த் தேசிய விடுதலை இயக்க” நண்பர்கள் மறுபக்கமுமாய் ஆளுக்கொரு வியூகம் வகுத்துப் பணியாற்றினார்கள்….

”நாம் தமிழர்” இயக்கமோ அமிதாப்பச்சன் வீட்டையே முற்றுகை இட்டு ”போக வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்கள்…..

இது தொடர்ந்தால் இன்னும் பல நல்ல சேதிகளும் நம்மைத் தொடர்வதை தடுக்க முடியாது யாராலும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

**********

பின்குறிப்பு:

அய்யா தர்மதொரைகளே……!

செம்மொழி மாநாட்டை ஒட்டி ஊருல சுத்துற பிச்சைக்காரர்களை எல்லாம் புடுச்சுக் கொண்டு போயி மண்டபத்துலயோ…… ஒதுக்குப் பொறத்துலயோ வெச்சு சோறு போடறாங்களாம். நம்மளக் கண்டா அப்புறம் நம்ம கதி அதோகதிதான்.

அதுனால எங்கியாவது கேரளா பக்கம் கையேந்தலாம்ன்னு ஒரு யோசனை. எந்தப் புண்ணியவானாவது ஒரு ”எக்ஸ்ட்ரா லார்ஜ்” வாங்கி குடுத்தான்னா….. அதை அப்புடியே உள்ள கவுத்தீட்டு குப்புறச் சாஞ்சுறலாம்…. அதுனால இப்பவே சொல்லீர்றேன்……

நான் அடுத்த வாரம் லீவுங்கோ…..

(நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ் )

 

9 thoughts on “”நேர் நேர் தேமா”…. ”நிரை நேர் புளிமா” ….

 1. தோழர் நாங்கள் எல்லீசன் என்கிற வெள்ளைக்காரன் பெயரை தூக்கி எறிந்து அடிமைத்தனத்தை உதறி விட்டு தூய தமிழர்களான கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, கயல்விழி பெயர்களை சூட்டுமாறு செம்மொழி மாநாடு கண்ட ராஜராஜ சோழன், குலோத்துங்க பாண்டியன் கவிஞர், கலைஞர் கருணாநிதி அவர்களிடம் வேண்டுகின்றோம்…

  • கட்டுரை அருமை, தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

   கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், ராஜராஜன்- இதுல எதுவுமே தமிழ் பெயர் அல்ல என்பது தான் கொடுமை.

 2. //இவர்கள் எவருக்குமே தமிழ்ப்பெயர் என்றால் கசப்போ கசப்புதான். இதில் மட்டும் அபார ”ஒற்றுமை” இவர்களுக்குள்// இதிலாவது ஒற்றுமையாக இருக்கிறோமே 🙂
  எல்லீஸ் பற்றிய தகவல் புதியது. நன்றி!

 3. மத்த கருமத்த விடுங்க. மணிரத்னம் எடுத்த ராவணன் படத்தப்பத்தி ஒரு பகிரங்க கடுதாசி பிளீஈஈஈஈஸ்…

 4. //மேலை நாடுகள் என்றைக்குத்தான் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களை மனிதர்களாக மதித்திருக்கிறார்கள்?//

  Sorry to write in english… our own judge and govt not treating indians as humans, how can we expect westerners to do so…

 5. நீண்ட நாட்கள் கழித்து பாமரன் எழுத்துக்களைப் படிக்கிறேன். அதே நக்கல், நையாண்டி அருமை. குமுதத்தில் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர்கள்?

  “எஸ்கா”.

  (யூத்ஃபுல் விகடன் டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம், உயிரோசை டாட் காம் ஆகிய வலைதளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவற்றில் வெளியான என்னுடைய கட்டுரைகளை தொகுத்து என் ப்ளாக்கில் பதிவேற்றியுள்ளேன். எனது ப்ளாக் முகவரி http://yeskha.blogspot.com/ வரவேற்கிறேன்.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s