மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும்

கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு.

“அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல்.

என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….?

அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று…….

அந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சிகர அமைப்பு என அழைப்பார்கள்.

சமூகத்தைப் பற்றிய சீரிய புரிந்துணர்வும்…. உலக நாடுகளது உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் அதனது படிப்பினைகளைப் பற்றிய துல்லிய பார்வையும் கொண்ட அமைப்புதான் அந்த ஈரோஸ். தனியான தலைவர் என்று எவருமில்லை அந்த இயக்கத்திற்கு. கூட்டுத் தலைமைதான். அப்படி அதில் ஒரு பொறுப்பாளராகத்தான் தோழர் பாலகுமாரன் அறிமுகம் எனக்கு.

எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் க.வே.பாலகுமார்.

ஆர்ப்பரிக்காத அரசியல்…..

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை….

இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை…..

இதுதான் தோழர் பாலா.

ஒருமுறை பத்திரிகை ஒன்றின் நேர்காணலுக்காக பாலாவைச் சந்தித்து முடித்த பின்னர் மிகுந்த தயக்கத்தோடு அவருடைய புகைப்படம் ஒன்றினைக் கேட்கிறேன். “நம்ம சனங்களுக்கு எங்கட கருத்துக்கள்தான் முக்கியமே தவிர படங்களல்ல…..” என மிக மென்மையாக மறுக்கிறார் பாலா. அதன்பிறகு சுந்தர், பார்த்திபன் என யாரைக்கேட்டாலும் அது கிடைக்காது என எனக்குத் தெரியும். வேறு வழியின்றி நடையைக் கட்டுகிறேன்.

அதன்பிறகு அந்தத் தோழனுடன் எழுத்தாளன் என்ற வகையில் எண்ணற்ற சந்திப்புகள்…..

ஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஏதிலிகளால்(அகதிகள்) ஏற்பட இருக்கும் கலாச்சார மாற்றங்கள்…..

பொறுப்பற்ற சில குழுக்களால் ஏற்பட இருக்கும் சில சட்ட ஒழுங்கு சிக்கல்கள்….

நாளை மலரப்போகும் ஈழம் எதிர் கொள்ள வேண்டிய பொருளாதார சவால்கள்….. என அனைத்தையும் முன்கூட்டியே தெளிந்த பார்வைகளோடு விளக்கிச் சொல்வார் க.வே.பாலகுமாரன்.

அமைச்சரைச் சந்தித்தாலும் சரி…… கோடம்பாக்கம் பெஸ்ட் ஆஸ்பத்திரி அருகிலுள்ள ஒரு டீக்கடைக்காரரைச் சந்தித்தாலும் அதே கனிவு…. அதே அன்பு….. அதே நிதானம்… அதுதான் பாலா.

1990க்குப் பிற்பாடு அந்த ஈரோஸ் இயக்கம் கலைக்கப் பட்டதும்….. அதில் கொஞ்சம் பேர் புலிகளுக்குப் போனதும்…. இன்னும் கொஞ்சம் பேர் தனித்து இயங்கியதும்…… இந்த இரண்டிலும் ஒப்புதலில்லாத கொஞ்சம் பேர் புலம்பெயர்ந்து போனதும் பின்னர் நடந்த நிகழ்வுகள். அதில் புலிகளோடு போன பிரிவில் இருந்தார் பாலா.

ஈரோஸில் பங்கெடுத்தாலும் சரி….. புலிகளோடு அரசியல் பணிகளைப் பகிர்ந்து கொண்டாலும் சரி….. எங்கிருந்தாலும் அதனைச் செழுமைப்படுத்தும் விதத்தில் பயனுள்ளதாகத்தான் பாலா இருப்பார் என்பதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டோம் நாங்கள். அதன் பிற்பாடு அவரைச் சந்திக்க விடாது காலம் தனது கனத்த திரையைப் போட்டு மூடி விட்டது.

கடந்த ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈழப்படுகொலைகளில் கொத்துக் கொத்தாய் குண்டுவீசிக் கொல்லப்பட்ட மக்கள் எத்தனை ஆயிரம் பேர்……?

கணவனைப் பறிகொடுத்து பரிதவிப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்….?

பெற்றோரைப் போருக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் மழலைகள் எத்தனை ஆயிரம் பேர்….?

இந்தப் பேரவலத்தில் எங்கே போய் எம் பாலாவைத் தேட? அதை அவரும் விரும்பமாட்டாரே…..

ஆனாலும் அவ்வப்போது சேதிகள் வந்து கொண்டுதான் இருந்தது.

”டிசம்பரிலேயே குண்டு தாக்குதலுக்கு ஆளான அவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்த நிலையில் மே 17 ஆம் தேதியன்று முன்னணிப் போராளிகள் சிலரை அழைத்துக் கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்துவிட்டார்….. ”

”கொழும்புக்கு கொண்டு சென்று விட்டார்கள்…… ”

”சிறுகச் சிறுக சித்ரவதை செய்து கொல்லும் “நாலாவது மாடி”க்கு கூட்டிப்போய் விட்டார்கள்…… ” என எதுவும் உறுதிபடுத்தப்படாத எண்ணற்ற சேதிகள்…… நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்காகவே உழைத்த அந்த நல்ல மானுடனையும் மறக்கத் தொடங்கினோம்.

முள்ளிவாய்க்காலில் தப்பி……. முள்வேலி முகாம்களில் சிக்கியவர்களைப் பற்றி மட்டுமே எங்களைப் போன்றவர்கள் பேசத் தொடங்கினோம்…..

அப்படியாயின் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்தப் பனிரெண்டாயிரம் போராளிகள்?

தன் வீடு….

தன் குடும்பம்….

தனது கல்வி…..

தனது காதல்… என சகலத்தையும் துறந்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண்ணின் விடுதலைக்காகவும் ஆயுதம் தரித்தார்களே…..

அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?

மக்களையே சிங்கள அரசு சின்னா பின்னப்படுத்தும்போது அந்தப் போராளிகளை எந்தெந்தவகைகளில் எல்லாம் சித்ரவதை செய்வார்கள்?

”நரகம்” என்றால் என்னவென்பதற்கான அர்த்தத்தினை இக்கட்டுரை எழுதும் நொடி தொடங்கி நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடி வரைக்கும் சந்தித்துக் கொண்டிருக்குமே அந்த ஜீவன்கள்……

சுயநலமற்ற அந்த ஜீவன்களின் விடுதலைக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?

போரில் சரண் அடைந்த எந்தப் போராளியாக இருந்தாலும் அவர்கள் கண்ணியத்துடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்கிற ஐ.நா.வின் அடிப்படை விதிகள் ஆகட்டும்…… ஜெனிவா உடன்படிக்கைகள் ஆகட்டும்…… போரியல் நியதிப்படி சிங்கள அரசு கடை பிடிக்கிறதா இல்லையா என்பதை யார் கண்காணிக்கிறார்கள்?

மக்கள் இருந்த முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு “பாலும் தேனும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடுகிறது” எனச் சொல்கிற மனித உரிமைப் புடுங்கிகள் எவராவது சரணடைந்த போராளிகள் இருக்கும் முகாம் பக்கமாவது எட்டிப் பார்த்தார்களா?

ரத்தமும் சிறுநீரும் மலமும் ஒரு சேர ஓடும்…… ஓலங்கள் ஓயாத அந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சிந்தித்தாவது பார்த்தார்களா?

அவர்கள் கிடக்கட்டும் நாமாவது சிந்தித்தோமா?

முதல் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் சரண் அடைந்த போர் வீரர்கள் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் எவ்வாரெல்லாம் நடத்தப்பட்டார்கள்…… சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டார்கள் என்கிற வரலாற்றையெல்லாம் நாவல்களாகவும்….. திரைப்படங்களாகவும் இன்றைய வரை பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் சரண் அடைந்த அந்தப் 12000 பேருக்காகக் குரல் கொடுத்திருக்கிறோம்?

அவர்கள் யாருக்காக போராளிகள் ஆனார்கள்?

நாம் பாதுகாப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பதுங்கு குழிகளுக்குள் நின்று பாதுகாத்தவர்களல்லவா அந்தப் பிள்ளைகள்?

போரியல் நியாயங்களின்படி எத்தனை பேர் சரண் அடைந்தார்கள்?

தெரியாது……

எத்தனை பேர் மிஞ்சியிருக்கிறார்கள்?

தெரியாது……..

எதற்காவது பட்டியல் இருக்கிறதா?

கிடையாது.

இன்று பாலகுமாரைப் பற்றிப் பேசுவோம்….

நாளை யோகியைப் பற்றிப் பேசுவோம்…..

நாளை மறுநாள் புதுவை இரத்தினதுரையைப் பற்றிப் பேசுவோம்…..

அப்புறம்?

இதோ ராணுவ பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தோழர் பாலா தனது மகனுடன் இருக்கும் காட்சி. இதனை லங்கா கார்டியன் பத்திரிகை வெளியிட்டு….

சரண் அடைந்த பின்னர் எடுக்கப்பட்ட இப்படத்திற்குப் பிறகு என்னவானார் பாலா?

அவருடன் சரண் அடைந்தவர்கள் கதி என்ன?

உயிருடன் இருந்தால் இப்போது அவர்கள் எங்கே?

அப்படி உயிரோடு இல்லாவிடில் சரண் அடைந்த போர்க் கைதிகளைக் கொல்வது போர்க்குற்றம் ஆகாதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பாலா சரண் அடைந்த பிறகு நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலின் போது பச்சைத் துரோகி கருணாவும், படுபாதகன் பசிலும் இவரை அணுகி மிச்சமுள்ள மக்களுக்கும் குழிவெட்டக் கூப்பிட்டிருக்கிறார்கள். ”இதற்கு மறுத்தால் என்னை என்ன செய்ய முடியும்! எனது உயிரைப் பறிக்க முடியும். அவ்வளவுதானே?” என்று சுயமரியாதை மிக்க மனிதனாக நின்று முழங்கினாராம் பாலா.

இப்படி கேட்பாரற்ற அனாதைகளாய்ப் போன அவர்களில் இருந்து ஒவ்வொரு ஜீவனாய் இழந்து கொண்டே இருக்கப் போகிறோமா நாம்?

அல்லது சரணடைந்த ஜீவன்களுக்கான நேர்மையான விசாரணையை…….

சித்ரவதைகளற்ற கண்ணியமான பாதுகாப்பினை……

தொலைத்தவர்கள் போக இருப்பவர்கள் பட்டியலினை…….. வலியுறுத்தி வீதியில் இறங்கப் போகிறோமா?

இதுதான் களத்திலும்….. புலத்திலும்…. இருக்கும் நம் போன்றோர் முன்னிருக்கும் பிரதான கேள்வி.

நாளை நமது முழக்கம் :

ஒன்று விசாரணை செய்.

அல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.

அதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.

எனக்குத் தெரிந்து அவர்கள் செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்:

அது : தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.

11 thoughts on “மனித உரிமைப் புடுங்கிகளும்… 12000 போராளிகளும்

 1. உங்களைப் போன்று மனிதாபிமானமும்,இன உணர்வும் ஒருசேர வாய்த்தவர்கள் இப்போது அருகி வருகிறார்கள். இவ்வாறிருக்கையில், மயான பூமியில் திரைப்பட விழாக்களையும், எழுத்தாளர் மாநாடுகளையும் நடாத்துவதன் மூலம், உலகின் காதுகளில் ‘பூ சுற்ற’ எண்ணும் ராஜபக்சே கும்பலுக்கு ஒத்தூதும் கூட்டந்தான் பெருகி வருகிறது போல் தெரிகிறது. மானுட விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் புதிய தலைமுறை ஒன்று வீறு கொண்டு எழும்வரை, இந்த ‘வகையறா’க்களில் கொட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். முப்பது கோடி மக்களுக்கும் ( அப்போது இந்திய மக்கட்தொகை முப்பது கோடிதான்) உடுப்பதற்கு துணி கிடைக்கும்வரை நான் இப்படித்தான் உடையணிவேன் என்று கூறி அதன் படி வாழ்ந்த அந்த மகானின் நாட்டில், இன்னும் வறுமை தீரவில்லை.ஆனால் கோடீஸ்வரர்களும்,ஆடம்பர அரசியல் வாதிகளும் பெருகிவிட்டார்கள். இலங்கையிலும் இதே கதை தான். ஊழல் மூலம் பணம்சேர்த்து மீண்டும் அதனை மக்களிடமே கையூட்டாக வழங்கி அதிகாரத்தைப் பிடிக்கும் அல்லது தக்கவைக்கும் ‘ஜனநாயகம்’ இப்போது கோலோச்சுகிறது. நீங்கள் சொல்ல்வதுபோல் நீதிக்காகக் குரல் தரவும் போராடவும் முன்வருபவர்களைக்கூடப் பணத்தால் விலை பேசக் காத்திருக்கிறது அதிகாரவர்க்கம். இந்த லட்சணத்தில் ‘ஜன நாயகம்’ விடிவைத் தருமா ?

 2. //ஒன்று விசாரணை செய்.
  அல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.
  அதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.////

  வாழும் வரை போராடு! வாழ்வதற்காகவும் போராடு! போராடுவோம்

 3. மனம் கனத்துப்போகிறது. யாரும் பேசாத யோசித்துக்கூட பார்க்காத ஒரு விடயத்தை எழுதியுள்ளீர்கள். வதை முகாம்களில் இருக்கும் மக்களுக்காகவே சரியாக குரல் கொடுக்காத அறிவு சீவிக்கள் அந்த சரணடைந்த போராளிகளை பற்றியா கவலைப்பட போகிறார்கள்.

 4. ஒரு நெடிய மௌனம் குற்ற உணர்ச்சியுடன் வாசித்து முடித்ததும்.

 5. மிகவும் தாமதாமாகவே இதை படித்திருக்கிறேன். மனம் கனக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியோடு கேவி நிற்கிறேன்.

 6. படிக்கும்போதே நெஞ்சு வலிக்கிறது.
  ##தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.##
  ஆழமான வரி இது!

  • என் வாழ்வில் அர்த்தமுள்ள நாட்கள் உண்டென்றால்….
   அது தோழர் பாலாவைச் சந்தித்த நாட்கள்தான்.

   தங்கள் அன்புக்கு என்றும் எமது நன்றி.

   தொடரும் நினைவுகளோடு
   பாமரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s