அவர் பெயர் சுஜாதா….

அவர் பெயர்: சுஜாதா 

வயது : 12 

ஊர் : இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டை 

”நடந்த” சம்பவம் : ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இச்சிறுமியை அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் 6.4.1997 அன்று கடத்திச் செல்கிறான். அதன்பின் சுஜாதாவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மகளைக் காணவில்லை என்று  அவரது தந்தை சேவுகன் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தருகிறார்.

விசாரிக்கிறது போலீஸ்.

குற்றவாளிபெயர் :கிருஷ்ணமூர்த்தி  

தொழில் : ஆட்டோ ஓட்டுநர் 

செய்த ”குற்றம்”: சிறுமி சுஜாதாவைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது. பிற்பாடு அவரது உடலை 5 லிட்டர் பெட்ரோல் கேன் கொண்டு சுடுகாட்டில் எரித்தது.

இந்தப் படுபாதகச் செயலுக்கு துணை நின்ற பழனி என்பவரையும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லாத சுஜாதாவின் தந்தை சேவுகன் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலீசின் வழியிலேயே வழக்கைக் கொண்டு செல்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்கள்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வந்த வேளையில்….

யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக 11.10.2006 அன்று ”படுகொலை செய்யப்பட்ட” சுஜாதாவே தன் கணவர் மற்றும் கைக்குழந்தை சகிதம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக…

வெட்கித் தலைகுனிகிறார்கள் போலீசாரும் நீதித் துறையினரும்.

தற்போதைய நிலவரம் : பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கும் தலா ரூ ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வழங்க வேண்டும். சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்படியாயின்….

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கொடுத்த வாக்குமூலம்….?

கொலை செய்ததாக கொடுத்த ஒப்புதல்….?

ஒரு வேளை விசாரணையும் விரைந்து நடைபெற்று… உச்சபட்ச தண்டனையாக மரணதண்டனையும் விதிக்கப்பட்டு…. அதன் பிற்பாடு சுஜாதா கோர்ட்டுக்கு வந்து நின்றிருந்தால்?

யாருக்குக் கவலை இதன் மீதெல்லாம்?

“முறையாக” விசாரித்து…. ”முறையாக” வழக்குத் தொடுத்து…. ”முறையாக” விசாரணை நடைபெற்ற இந்த வழக்கின் கதியே இதுவென்றால் ”என்கவுண்ட்டர் கொலை” வழக்குகளின் கதி?

தவறு செய்தவர்கள் யாராயினும் நிச்சயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். ஆனால் அது எந்த வழியில்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

                                         கோவையில் பள்ளி செல்லும் இரு பிஞ்சுகள் குதறிக் கொல்லப்பட்டதைக் கேட்டதும் பதறாத உள்ளம் இருந்திருக்கவே முடியாது. இதைக் கண்டு கலங்காதவர்களும்…. கண்டிக்காதவர்களும்…. மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது.

அந்த மொட்டுகளின் வாழ்வை சிதைத்த கொடூர குற்றவாளிகள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உரியவர்கள். நீதியை விரைந்து நிலைநாட்டவும்…. வழக்கு நேர்மையாகவும் துரிதமாகவும் நடைபெறவும் கோவை நகர மக்களது ஒத்துழைப்பு அத்தியாவசியத் தேவை.

நாம் அந்தப் பிஞ்சுகளின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறோம் என்றால் அந்த ஒத்துழைப்புதான் நீதியை விரைந்து நிலைநாட்ட துணை நிற்கும்.

அதற்காக “எண்கவுண்ட்டர்” கொலைகளுக்கு நாம் பட்டாசு வெடிப்பதும்…. இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதும்… போலீசாருக்கு பணத்தைக் குறிப்பிடாமல் காசோலையை கொடுப்பதற்குச் சமம்.(BLANK CHEQUE). நாளை அது நம் மீதும் திரும்பாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.

பிஞ்சுகளைக் கொன்ற பாதகர்கள் மிக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த தண்டனையை விரைவான விசாரணையின் மூலம் வாங்கித் தர ஒத்துழைப்பதே நம் அனைவரது கடமையும். அதற்காக குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜின் ”மோதல் சாவு”க்கு பட்டாசு வெடிப்பதல்ல நம் வேலை.

அந்தச் சாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாமும் ஒரு வகையில் மோகன்ராஜுக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மோகன்ராஜ்கள் இப்படி காமவெறியும் கொலை வெறியும் கொண்டு அலைந்ததற்கு நமது மீடியாக்களும் ஒரு மிக முக்கியக் காரணம். நாளிதழ்கள்…. வார இதழ்கள்…. தொலைக்காட்சி சேனல்கள்… என அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஆபாசங்களும், வக்கிரங்களும் எளிய மனிதர்களைக்கூட கிரிமினல்களாக மாற்றுவதில் போய் முடிகின்றன. சம்பவங்கள் நடந்த பிற்பாடு அதற்கு பலியானவர்களை பிரதான குற்றவாளிகளாக முன் நிறுத்திவிட்டு பின் ஒளிந்து கொள்கின்றன இந்த மீடியாக்கள்.

இந்த நேரத்தில் எனக்கு மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களது ”உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிதான் நினைவுக்கு வருகிறது. மற்ற மனிதர்களுக்கு துன்பத்தைத் தருவதை மட்டுமே ”லட்சியமாக” வைத்திருக்கும் விஜயனை ஊர் மக்களே ஒன்று சேர்ந்து விரட்டிப் போய் ஆற்றில் குதித்து சாகச் சொல்வார்கள். அப்போது விஜயன் பேசும் அந்த இறுதி வசனம்தான் என் மனதுக்குள் இப்போதும் ஓடுகிறது.

அது:

”நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்னப்போல மாத்தீட்டேன்.

நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதான்.”

ஆம்….

நாம் ஒருபோதும் மோகன்ராஜ்களாக ஆக வேண்டாம்.

அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் நல்ல மனிதர்களாக ஆவோம்.

அதுதான் கற்கால மனோபாவங்களில் இருந்து நம்மை விடுவித்து நாகரீக உலகை நோக்கி நடைபோட வைக்கும்.

இதையே தத்துவமேதை ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்……

“நான் மிருகத்தனமாய் இருந்து 

என்னை முறியடிக்க நீங்களும் 

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால் 

நீங்களும் என்னைப்போலவே  

மிருகமாகி விடுகிறீர்கள்.

 

 

நன்றி : ”த சண்டே இந்தியன்”(The Sunday Indian)