அவர் பெயர் சுஜாதா….

அவர் பெயர்: சுஜாதா 

வயது : 12 

ஊர் : இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டை 

”நடந்த” சம்பவம் : ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இச்சிறுமியை அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் 6.4.1997 அன்று கடத்திச் செல்கிறான். அதன்பின் சுஜாதாவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மகளைக் காணவில்லை என்று  அவரது தந்தை சேவுகன் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தருகிறார்.

விசாரிக்கிறது போலீஸ்.

குற்றவாளிபெயர் :கிருஷ்ணமூர்த்தி  

தொழில் : ஆட்டோ ஓட்டுநர் 

செய்த ”குற்றம்”: சிறுமி சுஜாதாவைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது. பிற்பாடு அவரது உடலை 5 லிட்டர் பெட்ரோல் கேன் கொண்டு சுடுகாட்டில் எரித்தது.

இந்தப் படுபாதகச் செயலுக்கு துணை நின்ற பழனி என்பவரையும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லாத சுஜாதாவின் தந்தை சேவுகன் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலீசின் வழியிலேயே வழக்கைக் கொண்டு செல்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்கள்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வந்த வேளையில்….

யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக 11.10.2006 அன்று ”படுகொலை செய்யப்பட்ட” சுஜாதாவே தன் கணவர் மற்றும் கைக்குழந்தை சகிதம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக…

வெட்கித் தலைகுனிகிறார்கள் போலீசாரும் நீதித் துறையினரும்.

தற்போதைய நிலவரம் : பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கும் தலா ரூ ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வழங்க வேண்டும். சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்படியாயின்….

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கொடுத்த வாக்குமூலம்….?

கொலை செய்ததாக கொடுத்த ஒப்புதல்….?

ஒரு வேளை விசாரணையும் விரைந்து நடைபெற்று… உச்சபட்ச தண்டனையாக மரணதண்டனையும் விதிக்கப்பட்டு…. அதன் பிற்பாடு சுஜாதா கோர்ட்டுக்கு வந்து நின்றிருந்தால்?

யாருக்குக் கவலை இதன் மீதெல்லாம்?

“முறையாக” விசாரித்து…. ”முறையாக” வழக்குத் தொடுத்து…. ”முறையாக” விசாரணை நடைபெற்ற இந்த வழக்கின் கதியே இதுவென்றால் ”என்கவுண்ட்டர் கொலை” வழக்குகளின் கதி?

தவறு செய்தவர்கள் யாராயினும் நிச்சயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். ஆனால் அது எந்த வழியில்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

                                         கோவையில் பள்ளி செல்லும் இரு பிஞ்சுகள் குதறிக் கொல்லப்பட்டதைக் கேட்டதும் பதறாத உள்ளம் இருந்திருக்கவே முடியாது. இதைக் கண்டு கலங்காதவர்களும்…. கண்டிக்காதவர்களும்…. மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது.

அந்த மொட்டுகளின் வாழ்வை சிதைத்த கொடூர குற்றவாளிகள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உரியவர்கள். நீதியை விரைந்து நிலைநாட்டவும்…. வழக்கு நேர்மையாகவும் துரிதமாகவும் நடைபெறவும் கோவை நகர மக்களது ஒத்துழைப்பு அத்தியாவசியத் தேவை.

நாம் அந்தப் பிஞ்சுகளின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறோம் என்றால் அந்த ஒத்துழைப்புதான் நீதியை விரைந்து நிலைநாட்ட துணை நிற்கும்.

அதற்காக “எண்கவுண்ட்டர்” கொலைகளுக்கு நாம் பட்டாசு வெடிப்பதும்…. இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதும்… போலீசாருக்கு பணத்தைக் குறிப்பிடாமல் காசோலையை கொடுப்பதற்குச் சமம்.(BLANK CHEQUE). நாளை அது நம் மீதும் திரும்பாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.

பிஞ்சுகளைக் கொன்ற பாதகர்கள் மிக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த தண்டனையை விரைவான விசாரணையின் மூலம் வாங்கித் தர ஒத்துழைப்பதே நம் அனைவரது கடமையும். அதற்காக குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜின் ”மோதல் சாவு”க்கு பட்டாசு வெடிப்பதல்ல நம் வேலை.

அந்தச் சாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாமும் ஒரு வகையில் மோகன்ராஜுக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மோகன்ராஜ்கள் இப்படி காமவெறியும் கொலை வெறியும் கொண்டு அலைந்ததற்கு நமது மீடியாக்களும் ஒரு மிக முக்கியக் காரணம். நாளிதழ்கள்…. வார இதழ்கள்…. தொலைக்காட்சி சேனல்கள்… என அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஆபாசங்களும், வக்கிரங்களும் எளிய மனிதர்களைக்கூட கிரிமினல்களாக மாற்றுவதில் போய் முடிகின்றன. சம்பவங்கள் நடந்த பிற்பாடு அதற்கு பலியானவர்களை பிரதான குற்றவாளிகளாக முன் நிறுத்திவிட்டு பின் ஒளிந்து கொள்கின்றன இந்த மீடியாக்கள்.

இந்த நேரத்தில் எனக்கு மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களது ”உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிதான் நினைவுக்கு வருகிறது. மற்ற மனிதர்களுக்கு துன்பத்தைத் தருவதை மட்டுமே ”லட்சியமாக” வைத்திருக்கும் விஜயனை ஊர் மக்களே ஒன்று சேர்ந்து விரட்டிப் போய் ஆற்றில் குதித்து சாகச் சொல்வார்கள். அப்போது விஜயன் பேசும் அந்த இறுதி வசனம்தான் என் மனதுக்குள் இப்போதும் ஓடுகிறது.

அது:

”நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்னப்போல மாத்தீட்டேன்.

நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதான்.”

ஆம்….

நாம் ஒருபோதும் மோகன்ராஜ்களாக ஆக வேண்டாம்.

அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் நல்ல மனிதர்களாக ஆவோம்.

அதுதான் கற்கால மனோபாவங்களில் இருந்து நம்மை விடுவித்து நாகரீக உலகை நோக்கி நடைபோட வைக்கும்.

இதையே தத்துவமேதை ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்……

“நான் மிருகத்தனமாய் இருந்து 

என்னை முறியடிக்க நீங்களும் 

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால் 

நீங்களும் என்னைப்போலவே  

மிருகமாகி விடுகிறீர்கள்.

 

 

நன்றி : ”த சண்டே இந்தியன்”(The Sunday Indian)

15 thoughts on “அவர் பெயர் சுஜாதா….

 1. மிக அருமையான பதிவு. உப்புக்கோட்டை சுஜாதாவைப்போல, வாய்ப்பூட்டாம்பட்டி பாண்டியம்மாள் வழக்கையும் கூறலாம். சரியான நேரத்தில் சரியான வழக்கை நினைவுகூர்ந்து எழுதியமைக்கு நன்றி.

  இந்த பிரசினை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவு: சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!
  http://www.makkal-sattam.org/2007/07/blog-post.html

 2. நல்ல கட்டுரை. போலி மோதல்களை போற்றிப்பாராட்டும் தினமல[ம்]ர் உள்ளிட்ட அனைத்து நச்சு ஊடகங்களுக்கு இடையே உங்கள் கருத்துகள் போல நிறைய வரவேண்டும். போலி மோதல்களின் கோவை நிகழ்வின் அளவுகோல்படி பார்த்தால் முதலில் போட்டுத்தள்ளப்பட வேண்டிய நபர் காஞ்சி சங்கராச்சாரி தான்.

 3. இதில இன்னொரு விஷயம்… அந்த பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டது யார், கொன்றது யார் என்பதையும் காவல் துறை கண்டுகொள்ளாது. இவர்களையும் மக்கள் நம்புகிறார்களே….வேதனை.

 4. உண்மைதான்
  ஆனா தீர்ப்பு மிக தாமதமா வருவதால்தாங்க மக்களுக்கு இந்த மனோபாவம் வந்திருக்கு 😦

 5. மிக அற்புதம் பாமரன்; இது போன்ற கட்டுரைகள் தான் உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது. மீடியா உற்பத்தி செய்யும் கருத்துக்கள் கொடிய விஷமானது அது மக்களின் சிந்தனை போக்கை அரசின் பயங்கரவாதத்துக்கு துணை நிற்க செய்கின்றன. சில போலி இலக்கியவாதிகளும், மனித உரிமையாளர்களும் இந்த பொது புத்திக்கு ஆதரவளிக்கும் சூழலில், உங்களை போன்றவர்கள் தான் அரச பயங்கரவாதத்தின் உண்மை முகங்களை வெளிப்படுத்த வேண்டும்! வாழ்த்துக்கள்.

 6. உண்மை இல்லாத பத்தரிக்கை செய்திகளுக்கு இடையில் உங்கள் கட்டுரைகள் கொஞ்சம் தெம்பை தருகின்றன. சராசரி நடுநிலையை எதிர்பார்க்கும் நடுத்தர மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் உண்மையான செய்திகளை தரம்பிரித்து பார்பதே கடினமான ஒன்றாகி விட்டது. உங்கள் கட்டுரைகளை படிக்கையில் உண்மை உலகில் இன்னமும் மிச்சம் இருக்கிறது என்ற நம்பிக்கை வருகிறது.

 7. மிக அருமையான பதிவு. நாட்டில் தினந்தோறும் எத்தனையோ குழந்தைகள் கொடுமைக்கு ஆளாகிறார்கள், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். சாதாரன குப்பன் சுப்பன் வீட்டுக் குழந்தைகள் கொல்லப்பட்டால் இங்கு எந்த என் கவுண்டரும் நடந்து விடப்போவதில்லை. சாயல்குடி அருகே அவத்தாண்டை கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ஜந்தே வயதான சிறுமி தாஜ்முன்னிஷா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி தலை சிதைக்கப்பட்டு க் கோடூரமான முறையில் கொல்லப்பட்டாள். இன்று என் கவுண்டர்/செட்டியார் என்று மார் தட்டிக்கொள்ள்ளும் இந்த அதிகார/சதிகார வர்க்கம் , இந்த ஏழைக் குழந்தைக்கு என்ன நியாயம் வழங்கியுள்ளனர். ஏழை என்றால் எவ்வளவு கோடூரத்தையும் தாங்கிக்கொள்வான் என்று ஊடகங்கள் கூட கண்டுகொள்வதில்லை. சிறுமி முஸ்க்கினைக் கொன்ற மோகன்ராஜிற்கு இந்த தண்டனை அவசியமே! அநியாதிற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை நினைத்தால் பெருமை யாக உள்ளது. ஆனால் இல்லாத வீட்டுக் குழந்தையான தாஜ்முன்னிஷா கொலையில் இந்த மீடியாக்களும், மக்களும் ,அதிகாரவர்க்கமும், மரத்துப்போனது ஏன்?

 8. So sad … system which needs to protect us is working this inefficiently.. miga varuthamm.. eppodaan thirundhuvaargalo .. 😦

 9. தோழரே நீங்க சொல்வது போல் விட்டதால் தானே நாட்டில் பல திருடர்கள் ஆட்சிக்கே வந்து விட்டனர் . இவர்கலை எதிர்க்க நம் களமிறங்கினால் மட்டுமே திருத்த முடியும். ஒதுக்கு வதால் அவர்களை தவறை மீண்டும் செய்யவைகவே முடியும் .

 10. மக்கள் மனதில் கொடூர எண்ணங்களை இந்த பத்திரிக்கைகள் விதைக்கிறார்கள் என்ற உண்மையை…! அதாவது, ஒருவனை குற்றவாளி என்று யாரோ ஒருவர் சொன்னவுடன் அவனை கொல்ல வேண்டும் என்ற உணர்வை மெல்ல, மெல்ல அல்ல…, மிக விரைவாக
  மக்கள் இருதயத்தில் ஊட்டுகின்றனர். அதன் ஒரு
  பகுதிதான் எண்கவுன்டருக்கான ஆதரவாக வெடி வெடித்து, இனிப்பு வழங்கி, கொண்டாட்டம். உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் பத்திரிக்கைத்துறையில் இருந்தும் சாதிக்க விடாமல் ஆதிக்க சக்திகள் தடுத்து விடுகின்றன என்பதை, உணருகிறேன். உண்மைகளை வெளிப்படுத்தியதற்காக நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s