யுத்த தந்திரம்…

”தோழரே!” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.

சிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா?” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….? அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்….? என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.

அந்த நேரம் பார்த்து….
தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த
உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….
ஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க….
நான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்….
அதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…
அதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….
ஆனால் இவுங்களைப் பிடிக்காதுங்க…..
என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.

எப்படி ஏற்பட்டது இந்த நிலை?
மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” படித்து…
ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடைக் குறிப்புகள்” வாசித்து…
நிரஞ்சனாவின் “நினைவுகள் அழிவதில்லை”யை சிலாகித்து….
ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன?” நூலை மனப்பாடம் செய்து….
மூலதனம்… உற்பத்தி…
உழைப்பின் பாத்திரம் என ஒவ்வொன்றுக்காய்
அர்த்தம் தேடி ஓடி வளர்ந்த நான்
அப்படி இவர்களை மறுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அதற்குப் பின்னணியில் “ஏகாதிபத்திய சதி”…
”குட்டி முதலாளித்துவ சக்திகளின் தூண்டுதல்” என ஏதுமில்லை.

அதற்குக் காரணமே அவர்கள்தான்.
அதாவது உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்”.
அல்லது மார்க்சிய லெனினியர் பார்வையிலோ…
மாவோவினர் பார்வையிலோ பச்சையாகச் சொன்னால் போலிக் கம்யூனிஸ்டுகள்.

மாமேதை லெனினோடு தங்களை ஒப்பிட்டு கற்பனை செய்து கொண்டு…
அவர்  ”டூமா”வைக் கைப்பற்றியது போல்
தாங்களும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி
அதை அம்பலப்படுத்தப் போகிறோம் என
ஆரம்பத்தில் ”போர்க்களம்” புகுந்தவர்கள்தான் இவர்கள்.

பாராளுமன்றத்தை இவர்கள் அம்பலப்படுத்தினார்களோ இல்லையோ
ஆனால் பாராளுமன்றம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது.

77 பாராளுமன்றத் தேர்தலில் இடதுகள் தி.மு.க.வோடு.
காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு.
காங்கிரசின் அப்போதைய வளர்ப்பு மகன் வலதோ தாயோடு.
பிற்பாடு வந்த சட்டமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியை ஆதரித்த
எம்.ஜி.ஆரோடு இடது இணைந்து கொள்ள…
வழக்கம்போல் வலது காங்கிரசோடு பிணைந்து நின்றது.

அடுத்து வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே(1980)
எமர்ஜென்சி சிறைக் கொடுமையால் இறந்து போன
சிட்டிபாபு… சாத்தூர் பாலகிருஷ்ணன் என சகலமும்
டோட்டல் அம்னீஷியாவில் தகர்ந்து போக
நேருவின் மகளோடு ”நிலையான ஆட்சி”க்காக கை நீட்டினார்
”அடக்குமுறை எதிர்ப்பாளர்” எம்பெருமான் கலைஞர்.
இடதுசாரி ஒற்றுமையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட
வலது இடதும் இப்போது எம்.ஜி.ஆர்.அணியில்.

நகர்ந்து போன நான்காண்டுகளில் 1984ம் வந்து சேர
நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதும் வலதும் தி.மு.க. அணியில்.
வாத்தியார் இறந்த பிறகு வந்த குடுமிபிடி தேர்தலில்(1989)
சேவலோடு சேர்ந்திசை பாடிய ஜெ.வோடு வலது.
திண்ணை காலியாகிய திருப்தியில் இருந்த தி.மு.க.வோடு இடது காம்ரேடுகள்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் ஜெ.வுக்கு டாட்டா காட்டிவிட்டு
வலதுகள் தி.மு.க.வுக்கு பொட்டி தூக்க…
இடதோ அணி மாற முடியாத களைப்பில் அதே அணியில்.

இதுக்கு மேலயும் நடந்த எழுபத்தியெட்டாயிரம் தேர்தல்களில்
யாரு எந்தப் பக்கம் சாய்ஞ்சாங்க….
அதுக்கு என்ன வியாக்கியானம் குடுத்தாங்க என்றெல்லாம்
எழுதிக்கொண்டே போனால் அப்புறம் நான் 108 இல் போக வேண்டியதுதான்.

ஆனால் உங்களுக்குள் எழும் கேள்வி என்னவென்று புரிகிறது.

”ஈழத்தில் இனப்படுகொலையே வெறித் தாண்டவமாடினாலும்…..
”முதல்ல எங்க கிளை முடிவு பண்ணனும் தோழர்…
அப்புறம் மாவட்ட தப்பு தப்பு ஜில்லா கமிட்டி முடிவு பண்ணனும்…
அதற்கப்புறம் மாநிலக் கமிட்டி முடிவெடுக்கும்….
பிற்பாடு அதை மையக்கமிட்டி அலசி ஆராஞ்சு முடிவு சொல்லும்”
என ஆற அமர வெத்திலை பாக்கு போட்டுக் கொண்டு
பேசிய காம்ரேடுகள்(வலது கொஞ்சம் விதிவிலக்கு)
புர்ர்ச்சித்தலைவி தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து
ஒரு எத்து எத்தியதும் எந்தக் கமிட்டியைக் கூட்டி முடிவு பண்ணிவிட்டு
விஜயகாந்த் ஆபீசில் போய் அடைக்கலம் ஆனார்கள்?

செங்கோவணம் காற்றில் சிதறடிக்க விஜய்காந்த் அலுவலகம் நோக்கி
காவடி தூக்கியபடி ஆலாய்ப் பறந்து போனார்களே
அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்?

ஜெயலலிதாவோ…. கருணாநிதியோ….. விஜயகாந்தோ…..
குறைந்தபட்சம் தங்கள் ஈகோவுக்காக ஆவது உறுதியாக நிற்பார்கள்.

ஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய புத்தகங்களையும்….
தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர்கள்
கேவலம் பத்துப் பதினைந்து சீட்டுகளுக்காக
எவரிடம் வேண்டுமானாலும் கையேந்துவதா?”

இதுதானே ஜெண்டில்மேன் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?

தப்பு கண்ணியவான்களே தப்பு.

மூன்றாவது அணிக்காக விஜயகாந்திடம் மட்டுமல்ல…..

நான்காவது அணியாக ஒன்றை
சிம்பு என்கிற சிலம்பரசன் அறிவித்தாலும்
”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை மீட்பதற்காக”
அவரோடும் அணி சேர்வார்கள் அவர்கள்.

அவ்வளவு ஏன்…
ஐந்தாவது அணியாக
அனுஷ்க்கா ஒன்றை அறிவித்தாலும்
அதிலும் அணி சேர அவர்கள் தயார்.

அதுதான் யுத்த தந்திரம்.

லால்சலாம் சகாக்களே.

நன்றி: சண்டே இந்தியன் இதழ்