யுத்த தந்திரம்…

”தோழரே!” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.

சிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா?” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….? அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்….? என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.

அந்த நேரம் பார்த்து….
தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த
உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….
ஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க….
நான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்….
அதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…
அதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….
ஆனால் இவுங்களைப் பிடிக்காதுங்க…..
என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.

எப்படி ஏற்பட்டது இந்த நிலை?
மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” படித்து…
ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடைக் குறிப்புகள்” வாசித்து…
நிரஞ்சனாவின் “நினைவுகள் அழிவதில்லை”யை சிலாகித்து….
ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன?” நூலை மனப்பாடம் செய்து….
மூலதனம்… உற்பத்தி…
உழைப்பின் பாத்திரம் என ஒவ்வொன்றுக்காய்
அர்த்தம் தேடி ஓடி வளர்ந்த நான்
அப்படி இவர்களை மறுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அதற்குப் பின்னணியில் “ஏகாதிபத்திய சதி”…
”குட்டி முதலாளித்துவ சக்திகளின் தூண்டுதல்” என ஏதுமில்லை.

அதற்குக் காரணமே அவர்கள்தான்.
அதாவது உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்”.
அல்லது மார்க்சிய லெனினியர் பார்வையிலோ…
மாவோவினர் பார்வையிலோ பச்சையாகச் சொன்னால் போலிக் கம்யூனிஸ்டுகள்.

மாமேதை லெனினோடு தங்களை ஒப்பிட்டு கற்பனை செய்து கொண்டு…
அவர்  ”டூமா”வைக் கைப்பற்றியது போல்
தாங்களும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி
அதை அம்பலப்படுத்தப் போகிறோம் என
ஆரம்பத்தில் ”போர்க்களம்” புகுந்தவர்கள்தான் இவர்கள்.

பாராளுமன்றத்தை இவர்கள் அம்பலப்படுத்தினார்களோ இல்லையோ
ஆனால் பாராளுமன்றம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது.

77 பாராளுமன்றத் தேர்தலில் இடதுகள் தி.மு.க.வோடு.
காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு.
காங்கிரசின் அப்போதைய வளர்ப்பு மகன் வலதோ தாயோடு.
பிற்பாடு வந்த சட்டமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியை ஆதரித்த
எம்.ஜி.ஆரோடு இடது இணைந்து கொள்ள…
வழக்கம்போல் வலது காங்கிரசோடு பிணைந்து நின்றது.

அடுத்து வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே(1980)
எமர்ஜென்சி சிறைக் கொடுமையால் இறந்து போன
சிட்டிபாபு… சாத்தூர் பாலகிருஷ்ணன் என சகலமும்
டோட்டல் அம்னீஷியாவில் தகர்ந்து போக
நேருவின் மகளோடு ”நிலையான ஆட்சி”க்காக கை நீட்டினார்
”அடக்குமுறை எதிர்ப்பாளர்” எம்பெருமான் கலைஞர்.
இடதுசாரி ஒற்றுமையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட
வலது இடதும் இப்போது எம்.ஜி.ஆர்.அணியில்.

நகர்ந்து போன நான்காண்டுகளில் 1984ம் வந்து சேர
நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதும் வலதும் தி.மு.க. அணியில்.
வாத்தியார் இறந்த பிறகு வந்த குடுமிபிடி தேர்தலில்(1989)
சேவலோடு சேர்ந்திசை பாடிய ஜெ.வோடு வலது.
திண்ணை காலியாகிய திருப்தியில் இருந்த தி.மு.க.வோடு இடது காம்ரேடுகள்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் ஜெ.வுக்கு டாட்டா காட்டிவிட்டு
வலதுகள் தி.மு.க.வுக்கு பொட்டி தூக்க…
இடதோ அணி மாற முடியாத களைப்பில் அதே அணியில்.

இதுக்கு மேலயும் நடந்த எழுபத்தியெட்டாயிரம் தேர்தல்களில்
யாரு எந்தப் பக்கம் சாய்ஞ்சாங்க….
அதுக்கு என்ன வியாக்கியானம் குடுத்தாங்க என்றெல்லாம்
எழுதிக்கொண்டே போனால் அப்புறம் நான் 108 இல் போக வேண்டியதுதான்.

ஆனால் உங்களுக்குள் எழும் கேள்வி என்னவென்று புரிகிறது.

”ஈழத்தில் இனப்படுகொலையே வெறித் தாண்டவமாடினாலும்…..
”முதல்ல எங்க கிளை முடிவு பண்ணனும் தோழர்…
அப்புறம் மாவட்ட தப்பு தப்பு ஜில்லா கமிட்டி முடிவு பண்ணனும்…
அதற்கப்புறம் மாநிலக் கமிட்டி முடிவெடுக்கும்….
பிற்பாடு அதை மையக்கமிட்டி அலசி ஆராஞ்சு முடிவு சொல்லும்”
என ஆற அமர வெத்திலை பாக்கு போட்டுக் கொண்டு
பேசிய காம்ரேடுகள்(வலது கொஞ்சம் விதிவிலக்கு)
புர்ர்ச்சித்தலைவி தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து
ஒரு எத்து எத்தியதும் எந்தக் கமிட்டியைக் கூட்டி முடிவு பண்ணிவிட்டு
விஜயகாந்த் ஆபீசில் போய் அடைக்கலம் ஆனார்கள்?

செங்கோவணம் காற்றில் சிதறடிக்க விஜய்காந்த் அலுவலகம் நோக்கி
காவடி தூக்கியபடி ஆலாய்ப் பறந்து போனார்களே
அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்?

ஜெயலலிதாவோ…. கருணாநிதியோ….. விஜயகாந்தோ…..
குறைந்தபட்சம் தங்கள் ஈகோவுக்காக ஆவது உறுதியாக நிற்பார்கள்.

ஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய புத்தகங்களையும்….
தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர்கள்
கேவலம் பத்துப் பதினைந்து சீட்டுகளுக்காக
எவரிடம் வேண்டுமானாலும் கையேந்துவதா?”

இதுதானே ஜெண்டில்மேன் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?

தப்பு கண்ணியவான்களே தப்பு.

மூன்றாவது அணிக்காக விஜயகாந்திடம் மட்டுமல்ல…..

நான்காவது அணியாக ஒன்றை
சிம்பு என்கிற சிலம்பரசன் அறிவித்தாலும்
”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை மீட்பதற்காக”
அவரோடும் அணி சேர்வார்கள் அவர்கள்.

அவ்வளவு ஏன்…
ஐந்தாவது அணியாக
அனுஷ்க்கா ஒன்றை அறிவித்தாலும்
அதிலும் அணி சேர அவர்கள் தயார்.

அதுதான் யுத்த தந்திரம்.

லால்சலாம் சகாக்களே.

நன்றி: சண்டே இந்தியன் இதழ்

15 thoughts on “யுத்த தந்திரம்…

 1. நலமா? – டிசம்பருக்கு பிறகு ஏப்ரலில் தான் விடிந்திருக்கிறது.. வருக.. வருக.. தொடர்ந்து எழுத்தமுதம் தருக…

 2. என்ன பாஸ், ரொம்ப நாளா ஆளக் காணோம்!
  BTB, இதை வாசித்தாவது அவர்கள் திருந்தட்டும்.

 3. அட முளுச்சிட்டீகளா? எலெக்ஷன் நேரம் முடியப்போகுது.. போய் உங்க வோட்டப்போட்டு ஜனநாயக கடமைய ஆத்திட்டு வாங்க..

 4. hello chumma solla kudathunga… 15 seatla 2 ketaichalum Jayalaitha,vijaykanth,anushka elloratayum sernthu communisma neelai natiruvangaga namma alunga…. wait panni parunga.. athika patcham oru 500crore years avalothan…. 🙂

 5. வணக்கம் தலைவா! நீண்ட நாள் மெளனத்துக்குப் பிற்பாடு மறுபடியும் ‘எழுத்து வறுவலை’ச் சுடச்சுடத் தந்திருக்கின்றீர்கள்! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

  உங்கள் எழுத்துப் பயணம் தொடர வேண்டும் இன்னமும்… பலகாலம்!

 6. தோழரே, ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க வருங்கால முதல்வர் சிம்புவ இவ்ளோ அசிங்கப்படுத்திருக்க கூடாது. அட ஏன் சார் சிரிக்கிறீங்க… இப்படியே போய்க்கிட்டே இருந்தா, கண்டிப்பா 2020ல சிம்பு முதல்வராக வாய்ப்பு அபோதய கருத்துக்கணிப்பு படி 73% ன்னு செய்தி வரும். இரண்டாவது இடத்துல வயது முதிர்ந்த மூத்த அரசியல்வாதி தலைவர் விஜயக்கந்த் இருப்பார்…. வாழ்க சினிமா… வாழ்க தமிழ் நாடு…. வாழ்க தமிழக மக்கள்…. ஏய்… எங்கப்பா பால் குடம்… இன்னிகி தலைவர் தனுஷ் நடிச்ச படம் வருது… முதல் ஷோவுக்கு டிக்கட் எடுக்கணும்… கட் அவுட்டுக்கு பால் ஊத்தனும்… நெறய வேலை கிடக்கு…

  • தோழரே !

   எம் ஜி ஆர் முதல் நம்ம கலைஞர் வரை நடிப்பிலிருந்து தான் அரசியலுக்கு வந்து மக்களின் கோவணத்த வுருவுரங்க அத தான் கேப்டனும் செய்வாரு அடுத்த தலைவர் விஜய் யும் செய்வாரு நாம என்று தோழர் அப்பு வாகவோ பலனாகவோ கலமிரங்குகிரமோ அந்த நிமிடமே இடது வலது சாயங்கள் நீர்த்துவிடும் .நடிகனுக்கு பால்குடம் துக்குவதும் அழிந்து விடும்.. களம் எறங்குவோம் சாதிப்போம் மார்சியத்தையும் லெனின்னிசதையு ம மாவோவியதையும் இந்தியாவில் வெள்ளவைபோம்

 7. dear pamaran,sorry for the language i dont have the tamil letters installed,will do soon.really getting fedup by clicking your blog every day, abart from the voice from annai,second thing is waiting for your writing everyday,this is the final warning if you dont write atleast five times a week you will have to face lamp post punishment.

 8. // annai… if you dont write atleast five times a week you will have to face lamp post punishment.// Comment by egalaivan on April 21, 2011 9:41 pm

  அடக் கடவுளே,

  என்ன ஏகலலைவன் அண்ணை (?), பாமரன் தொடர்ந்து எழுதாவிட்டால் அவருக்கு விளக்குக் கம்பத் தண்டனையா? ‘படைப்பாளிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஒன்றையும் படைக்காமலும் பறையாமலும் படம் காட்டும் சாருநிவேதிதா போன்ற ‘ஜாம்பவான்கள்’ இருக்கும் இந்த உலகத்திலே, பாமரர்களான எங்களுக்காக எழுதி வரும் (அவரது பாசையில் சொல்லப் போனால் ‘எழுதிக் கிழிக்கும்’) பாமரன் எவ்வளவோ மேல்.

  தமிழின் காரசாரமான பாவனையைத் தன் ‘பகிரங்கக் கடிதங்கள்’ வழியாக வெளிக்கொணர்ந்த பாமரன் வழியில் பேனா தூக்கியவர்கள் எத்தனையோ பேர். பாமரன் எழுத்துலகில் ஒரு புதிய ‘வறுவல்’ தசாப்தம்தான். அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

  என்னதானானாலும், எங்களின்ர ஊரில் சொல்லுற மாதிரி ‘மரத்தடிக்கு வா” என்றும் “விளக்குக் கம்பத்தில் தூக்கி விடுவேன்” என்றும் அன்பாக வெருட்டுவது கொஞ்சம் மிகைதான்.
  அதற்காகத் தோழர் பாமரன் தனது எழுத்துக்களால் பலரையும் தொடர்ந்து விளக்குக் கம்பத்தில் ஏற்றி முகத்திரை களையாமல் இருக்கப் போவதில்லை. எழுத்துப் போராட்டம் தொடர வாழ்த்துகின்றேன்… பாமரன்!

 9. சுடு,சொரனை.வெடகம்,மானம் தலைவர்களுத்தான் இல்லை.அனிகளுக்கும் இ்லை என்றபோது வருத்தமாக இருக்கிறது.

  • அணிகளை நாம் குறை கூறுவது தவறு , தலைமை என்பது ஒரு சரியானதாக இருக்கவேண்டும் . இங்கு தலைமை ஒரு பொறுக்கிகலாக இருக்கும் போது என்ன செய்ய முடியும் அரசியல் தெளிவில்லாத அணிகள் என்ன செய்வார்கள் . நமது முதல் வேலை அரசியல் தெளிவற்ற அணிகளை அரசியல் படுத்துவதும் சீரழிந்த தலைமையை மக்களிடம் அம்பலபடுத்த வேண்டும் .

 10. கம்யுனிசமும், அக்கட்சியும் இப்படி நம் ஊரில் அவல நிலைக்கு ஆனதை எண்ணி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி போல ஆத்திரமும், அவமானமும் ஒரு சேர வருகிறது!!!

 11. ராணிக்காக வாலாட்டினால் 15எலும்புத்துண்டு கிடைக்கும் ராஜாக்கு வாலாட்டினால் பச்சதண்ணியும் கிடைக்காது என்பதை புரிந்துகொண்ட இடது வலது புர(ட்)சியாளர்கள் ஊழலை ஓழிக்க , மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க , தேவியின் பாதம் பணிந்துள்ளனர் இவர்கள் கையூர் தியாகிகளையும் மேற்குவங்க நக்சல்பரியின் தியாகங்களையும் மறந்தவர்கள் தான் நாட்டை விற்க பார்பனிய பணியக்களிடம் அடிமையாவதில் ஆச்சரியம் இல்லை .! சிவப்பு சாயம் புர்த்த நரியின் நிறம் காவியாகி விட்டது .இந்த நரியை நந்திகிராம் செருப்பால் adithu viratiyathaipoll namum virtinalthan இந்த நரியின் kottathai adakkamudiyum .

 12. Really a nice post. Communists will work for some principles and in TN their only principle is to get 4-12 seats in Assembly. Great work comrades…. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s