திக்கெட்டும் திட்டுக்கள்…


 ”உனக்கு எழுதறத விட வேறென்னய்யா வெட்டி முறிக்கிற வேலை? ஒவ்வொரு தடவையும் உன் வலைப்பக்கமா வந்து வெறுப்பேறிப் போறதுதான் கடுப்பா இருக்கு” என ஏகப்பட்ட “பாராட்டுரைகள்” எல்லா பக்கமிருந்தும்.

 

எல்லாம் சரி பண்ணீர்லாம் நண்பா… ஜூன் ரெண்டாவது வாரத்துல இருந்து நமது வலைக்கென்றே ஒரு புதிய தொடர் தொடங்கீட்டாப் போகுது. அதுக்கு பட்டாசா ஒரு தலைப்ப மட்டும் அனுப்பி வையுங்க.

 

அதுக்கு இடைல மனச நெருடுன “மாற்றான் தோட்டத்து கனகாம்பரங்களில்” இருந்து கொஞ்சம்…

 

முதலாவதாக…..

 

நீதியின் கண்களை திறக்க முற்படும் நம் அன்புத் தம்பி பேரறிவாளனின் நியாயக்குரல்……

 

என் குரலைக் கேளுங்கள்

பேரறிவாளன்


அனைவருமே எதிர்த்து நின்றாலும்
சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.

அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.

உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.

மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.

ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு பெருங்கதை என் போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு ‘மாமூல்’ தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதி யென அறிவித்து ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

சாதாரண பெட்டிக் கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான பேட்டரி செல் இரண்டு வாங்கித் தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில்    அரண்மனை  கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்து கிடக்கிறேன்.

எனது வழக்கில் மூடிமறைக்கப் பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”  என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு துவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழி யில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிக தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர், எனது குற்றமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர் களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.

எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ் காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல; அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ் காந்தி யின் உயிர்ப் பலிக்கு ஈடாக அக் குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனித நேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.

அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளைத் திருப்புங்கள். என் தரப்பு உண்மைகள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில், எனது விடுதலைக்காக உங்கள் வலிமை யான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக் குமுறலை உலகம் புரிந்து கொண்டது என வரலாறு குறிக் கட்டும்.

நீதி வெல்லட்டும்.

 நன்றி : சண்டே இந்தியன் – மே 18 – 2011

http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%EF%BF%BD%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/60/552/

16 thoughts on “திக்கெட்டும் திட்டுக்கள்…

 1. உங்கள் தொடருக்கு தலைப்பு – நேற்றைய பேய் ஆட்சிகளும் இன்றைய பிசாசு ஆட்சியும் !!!

 2. 13 ரூபாய் பேட்டரி, ஒருவனின் இளமையை 20 ஆண்டுகாலமாகத் தின்று கொண்டிருப்பது பெருங் கொடுமை.

  நம் நாட்டின் நீதித்துறையில் நடுவுநிலை விசாரணை இன்னும் மிச்சமிருக்கலாம். ஆனால் அது எப்போது உயிர்பெறும் என்பதுதான் யாருக்கும் தெரியாத இரகசியம்.

 3. இந்த மனிதர் நிரபராதி எனில் நிச்சயம் நீதி கிடைக்க பொறுப்பில் உள்ளவர்கள் உரியவர்கள் உதவ வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி மற்றும் பிரவீன் குமார் போன்ற அதிகாரிகள் நீதி துறையிலும் வர வேண்டும்.

 4. உங்களை போன்ற அப்பாவிகளின் வாழ்வை நசுக்கி விட்டு மனித மாமிசம் தின்னும் அதிகார வர்க்கத்திற்கு என்றுதான் முடிவு வருமோ! கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு எத்தனையோ அப்பாவி முஸ்லிம்கள் இன்னும் தங்கள் வாழ்வை சிறையில் இழந்து சின்னா பின்னமாகி கிடக்கிறார்கள், மக்கா மஸ்ஜிது குண்டு வெடிப்பில் இப்ப ஒரு சாமியார் மாட்டியுள்ளார், ஆனால் குண்டு வெடிப்பு நடந்த 20 நிமிஷத்தில் 19 அப்பாவி முஸ்லிம்களை பிடித்து கயவன் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் இது முஸ்லிம் தீவிர வாதத்தின் சதி என்று அறிக்கை விட்டு அப்ளாஸ் வாங்கி கொள்கிறான்.. எப்போது நீதியை நிலை நாட்ட போகிறோம் என்று நாம் கேட்டு கொண்டிருக்க, கேட்பவர்களை கம்பிகளுக்குள் அடைத்து விட்டு அதிகாரத்தை தக்க வைத்து இருக்கும் இந்த பார்ப்பன பாசிச வெறியர்களின் கொட்டத்தை அடக்க மக்கள் உணர்ந்தால் மட்டுமே முடியும்… இவர்களுக்கு ஒத்து ஊதும் பார்ப்பன பாசிச ஊடகங்களின் முகம் கிளியும் நாள் விரைவில் வரும் சகோதரரே! பாமரன் போல் சிந்தனையாளர்கள் மக்கள் மரமண்டைக்குள் இன்னும் ஓங்கி சம்மட்டியால் அடிக்க வேண்டும்..

 5. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீமானைச் சந்திக்கச்சென்றபோது பேரறிவாளனை காணும் வாய்ப்பு கிடைத்தது.

  சீமானின் தம்பியாக அவருக்கு எல்லா உதவிகளும் ஓடி ஓடி செய்து கொண்டிருந்தார்.

  ‘டேய் அறிவு!’ என்று உரிமையுடன் சீமான் அழைக்கும் போது சிறைக்கொட்டடியில் தொலைந்து போன தனது வாழ்க்கையைப் பற்றிய வேதனையைப் புதைத்துவிட்டு பெருமையுடன் புன்னகைத்தார்.

  சீமான் மற்றும் வைகோ போன்ற தமிழ்தேசிய போராளிகளின் கைகளில் உள்ளது அவரது விடுதலை.

 6. “அனைவருமே எதிர்த்து நின்றாலும்
  சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”
  real words

 7. பாமரன் அவர்களுக்கு,
  தங்களது புத்தகங்களை படிக்க விருப்பம்,
  அவை எந்த பதிப்பகத்தில் அல்லது எங்கு கிடைக்கும் என்று கூறுங்களேன்.

  அன்புடன் ,
  மகேஷ் .

 8. miga arumaiyana katturai thozhare. netruthan “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” puthagam periyar thidalil vanginaen

  kaalam thalthi vanthalum arumaiyana seithi thozhare,, mellum neriya eluthavaun……
  nandri

 9. இன்னுமா உறக்கம் பாமரன். புதிய தளம் எப்போ பாஸ்?

 10. மிகவும் அழுத்தமான பதிவு.தோழர் பாமரன் அவர்களுக்கு தங்களின் தளத்தை நவீனமும் எளிமையும் படுத்த்லாமே.

  • நிச்சயம். எப்படீன்னு சொல்லுங்க தலைவா…. பண்ணீரலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s