ஐம்பெரும் ஐடியாக்கள்….

பொதுக்குழு பரபரப்பு

தி….க்கு            மு…..க்காடும்           க…..ட்சி?

திமுக இப்போது  செய்யவேண்டிய முக்கிய ஐந்து சீர்திருத்தங்கள் என்ன? என்று அரசியல் சமூக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். சில தீவிரமான, உபயோகமான, கிண்டலான யோசனைகள் கிடைத்தன.

ஞாநி,  விமர்சகர்

  
1  திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது. அதாவது மு.க.ஸ்டாலின் நீங்கலாக மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

2  ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தைத் தடுப்பது. தந்தை மாவட்டச் செயலாளர் என்றால் மகனும் பொறுப்பில் இருப்பதை தடை செய்ய வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

3 ஒரு முறையான உட்கட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அந்தத் தேர்தலை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் நடத்தலாம்.

4  கட்சித் தொண்டர்களுக்கு ஐம்பதுகளில் நடத்தியதுபோல வாசக சாலைகள் ஏற்படுத்தவேண்டும். திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு பற்றிய வகுப்புகளை நடத்தவேண்டும்.

5  கட்சியில் யார் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும்.

 

 

 

 

 

பாமரன்,  விமர்சகர்

1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)

 2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.

3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.

4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.

5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.

 

 

 

 

நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

 

 1  திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க முயலவேண்டும். திமுக என்ற இயக்கத்திற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தியவர்களின் தியாகத்தை பரிசீலனை செய்யவேண்டும்.

2  ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத் தோற்றமளிக்கும் திமுகவை மறுபடியும் மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

3  எல்லா அரசியல் தலைவர்
களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் தமது குடும்பம் என்பதை திமுகவின் கட்சித்தலைமை உணரவேண்டும்.

4  ஈழம் சார்ந்த திமுகவின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும்

5 வெறுமனே மேடைப்பேச்சு, கோஷங்கள் ஆகியவற்றைவிட்டு தமிழ் மொழி, பண்பாட்டுத் துறையில் உண்மையான வளர்ச்சிக் கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

 

 

 

இமையம், எழுத்தாளர்

 

   1  திமுக படிப்படியாக தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவந்திருக்கிறது. அக்கட்சி மீண்டும் தன்னுடைய வேர்களை மீட்டெடுக்க வேண்டும்.

2 மாவட்டச் செயலாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.

3  அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சியில் முக்கிய பதவியோ, மாவட்டச் செயலாளர் பதவியோ வகிக்கக்கூடாது.

4  மாவட்டச் செயலாளர்களின் மகன்கள், மனைவிகளின் புகைப்படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5  யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலை திமுகவில் உருவாகவேண்டும்.

 

 

 

 

 

கலாப்ரியா, கவிஞர்

1  எங்கள் பதின் பருவத்தில், எங்களைப் போன்றவர்களை, திராவிட இயக்கம் ஈர்த்தது போன்ற சூழலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அவர்கள் இன்று அடைந்துள்ள பல சமூக நீதிகளுக்கு தி.மு.க முக்கிய காரணம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதற்கு தொண்டனை வைத்துதான் கட்சி என்ற ஆதி மனோபாவம் பலப்பட வேண்டும்.

2  மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷம் ஒரு நிகழ்வாய் உருப்பெறத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது.  உண்மையான ஒரு ஃபெடரல் அமைப்பை உருவாக்கத் தவறியதாகவே உணர்கிறேன். அதற்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது .

3  ஊடகங்கள் சித்தரிக்கிற, பொதுப்புத்தி சார்ந்த ‘குடும்ப அரசியல்’ குறித்த எதிர்மறைக் கருத்துகள் பற்றி உள்ளபடியே ஆராயவேண்டும்

4   ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும் சரி வேறு எந்த ‘தேசியக் கட்சி ஆனாலும் சரி) அணுகுமுறைகள் முற்றிலும் தவறானது என்று  மத்திய அரசுடன் எந்த சமரசமும் இன்றி உணர்த்தவேண்டும்.

5  ‘வீழ்வது நாமாக இருந்தாலும்.வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கோஷத்தை அதே அக்கறையுடன் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள், என்ற கவலை பரவலாக உள்ளது. இதற்காக அறிவார்ந்த தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.   

நன்றி : சண்டே இந்தியன் இதழ் (ஜூலை 12, 2011)