உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகமூட்டும் உன்னத தத்துவம் உமது மண்ணில்தான் முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த மகோன்னத தத்துவத்தை மதிக்காதவன் மனித ரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டியாய் இருப்பான் அல்லது அவனது துதிபாடியாய் இருப்பான்.
உலகில் ஒவ்வொரு நாடும் உம்மையும் உமது மண்ணையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
சீனச்சதுக்கம் சிவப்பானது கண்டு சிரிப்பை இழந்தவர்கள், சிறிது காலம் கழித்து சிந்தும் ரத்தம் கண்டு சிரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ரத்தம் கண்டு சிரிப்பவர்களின் சிந்தைக் கோளாறினை அறிவோம் நாம். நாம் அழும்போது அவர்கள் சிரிப்பார்கள். நாம் சிரிக்கும்போது அவர்கள் அழுவார்கள். தத்துவங்கள் சாவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் உங்களையே உற்று நோக்குகிறான்.
காலச்சக்கரம் சுழன்று காட்சிகள் மாறும்போது ஆட்சிகளும் மாறுகின்றன.
லெனின்கிராடு ஸ்டாலின்கிராடாவதும்
ஸ்டாலின்கிராடு மீண்டும் லெனின்கிராடாவதும்
ஆட்சி மாற்றங்களே.
இருப்பினும்….
“இந்தத்தேசம்” “இந்தப்பாதை”யிலிருந்து மாறி “அந்தப் பாதை”க்குப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தாயா? எனப் பக்கத்தில் வந்து கிசுகிசுப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை எமக்கு.
தனிப்பட்ட ஸ்டாலின்களுக்கோ
குருச்சேவ்களுக்கோ
கோர்ப்பச்சேவ்களுக்கோ
காவடிதூக்கத் தயாரில்லை நாங்கள்.
நாங்கள் நேசிப்பது
அந்த மண்ணை
அந்த மக்களை
அந்த தத்துவத்தை.
தத்துவம் தோற்காது.
தோற்கடிக்க முயலும்போது ஜாரைத் துரத்தியடித்த மக்கள் தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
தத்துவம் தோற்காது.
எனவே கோர்ப்பச்சேவ் அவர்களே !
மீண்டும் சொல்கிறோம்……. நாங்கள் நேசிப்பது :
சோவியத்து மண்ணை.
சோவியத்து மக்களை.
பொதுவுடைமைப் பாதையை.
எனவே,
ஸ்டாலினை விமர்சிப்பதோ
குருச்சேவை விமர்சிப்பதோ
உங்களை விமர்சிப்பதோ
மனிதகுல விடிவிற்கான பொதுவுடைமைச் சித்தாந்தத்தை விமர்சிப்பது ஆகாது. அதனை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் ஆன முயற்சியே இது.
தங்களது மறுசீரமைப்புக் கொள்கையினையும்(பெரிஸ்த்ரோய்க்கா), பகிரங்கத்தன்மை(கிளாஸ்னஸ்து) பற்றியும் உலக மக்கள் பரபரப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவை….. இப்படி….. இருக்க……
இனி…..,
உங்கள் உதவியோடு உருவாக இருக்கின்ற ‘அமைதிக்கான’ அணு உலைகள் பற்றி பகிர்ந்து கொள்வோமா?
கிறுக்குப் பிடித்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “அமைதிக்கான அணுகுண்டு” பற்றியும், அவை நாகசாகி, ஹிரோசிமாவில் ஏற்படுத்திய “நிரந்தரமான அமைதி” பற்றியும் அறிவீர்கள்.
அதைப்போலவே…….
“அமைதிக்கான அணு உலை” பற்றியும்
“அமைதிக்கான அணுகுண்டு” பற்றியும்
“அமைதிக்கான ஏவுகணை” பற்றியும்
“அமைதிக்கான படை” பற்றியும்
எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
விஞ்ஞானி கோரஸ்மெத்வதேவ் பற்றித் தெரியும் உங்களுக்கு.
உங்கள் மண்ணிலுள்ள யூரல் மலைச்சாரலும் தெரியும் உங்களுக்கு.
ஆனால்…… அங்கு நிகழ்ந்த அணு உலை விபத்து பற்றி?
தெரியும் எங்களுக்கு.
ஐம்பத்தி எட்டில் நிகழ்ந்தது
எழுபத்தி ஆறில் தெரிந்தது.
வெளியில் வந்த கோரஸ்மெத்வதேவ் மூலமாக.
பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கிய ஆர்மீனியப் பூகம்பத்திற்குப் பின்னர்தான் அங்கே இயங்கி(?) வந்த ‘ஆக்டெம்பர்யான்’ அணு உலை இழுத்து மூடப்பட்டது. அதுவும் மக்களது கொந்தளிப்பிற்குப் பிறகு….. ஏன் இந்த நிலை?
அணு உலைகளைப் பொறுத்தவரை சோசலிச நாடாயினும் சரி…. முதலாளித்துவ நாடாயினும் சரி….
ஒரே குரலில்தான் முழங்குகின்றார்கள்.
“அதிக பாதுகாப்பு”
”கதிரியக்கம் கட்டுக்குள்தான்” என்று.
வெடித்தபிறகுதான் முழங்கியவர்கள் முளிக்கிறார்கள். அதற்குப்பிறகு பகிரங்கமாக்குவதோ…. விசாரணைக் கமிஷன் வைப்பதோ…. இழந்த உயிர்களை மீட்டு வருமா எனச் சிந்தியுங்கள். மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை தோழரே!.
இருப்பினும் கோர்ப்பச்சேவ் அவர்களே !
இந்த நிலையிலும் நீங்கள்
இந்தியாவின் ஒரு மூலையிலுள்ள
கூடங்குளத்து மக்களுக்கு சோவியத்தின் பரிசாக
அளித்திருப்பது அணுஉலைகளைத்தானா…..?
அதுவும் உங்கள் நாட்டில் ஏறக்குறைய
எட்டு அணு உலைகளை மூடியதற்குப் பிறகு….?
யூரல் மலைச்சாரல் விபத்தும்
செர்னோபில் விபத்தும்
ஆர்மீனியப் பூகம்பமும்
அறிவுறுத்துவது என்ன அதிபர் கோர்ப்பச்சேவ் அவர்களே?
அங்கு இழுத்து மூடிவிட்டு வந்து
இங்கு திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கிறீர்களே
அதுதான் புரியவில்லை எமது மக்களுக்கு.
சோவியத்து மக்களே வீதிக்கு வந்து அணு உலைக்கெதிராகக்
குரல் கொடுக்கும் போது,
எங்கள் வீட்டிற்குள் நுழைந்து
வெடி வைக்கிறீர்களே நியாயம்தானா…..?
சோவியத் மக்களின் எழுச்சிக்குப் பணிந்து
மின்ஸ்க்,
ஒடெஸ்ஸா,
கிராஸ்னடார்,
பைலோரஷ்யா,
ஜியார்ஜியா,
அசர்பைஜான்,
ஆகிய இடங்களில் அணு உலைத்திட்டங்கள்
கைவிடப்பட்டதனை அறிவோம் நாங்கள்.
மின்ஸ்கிலும், ஒடெஸ்ஸாவிலும் உடைப்பில் போடப்பட்ட அதே உலைகள் கூடங்குளத்தில் குடியேறப்போவது கண்டு கூடங்குளத்து மக்கள் குறட்டை விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மக்கள் கருத்தினைப் புறக்கணித்து
புதுதில்லியில் போட்ட கையெழுத்தினையோ
ஏற்பட்ட ஒப்பந்தத்தினையோ எப்போதும்
ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எமது மக்கள்.
நவம்பர் 19 :
– இதுதான் இங்குள்ள மக்களை கூண்டோடு “கைலாசத்திற்கு” அனுப்ப
கூட்டாகக் கையெழுத்திட்ட நாள்.
மக்கள் கருத்தினைப் புறக்கணித்து ஏற்படும்
எந்த ஒப்பந்தமும் காலாவதியாகிப் போனதே அன்றி
நீடித்திருந்ததாய் வரலாறு இல்லை.
ஒப்பந்தக்காரர்கள் போன வேகத்தில்
துரத்தியடிக்கப்படுவார்கள் என்பதற்கு
ஈழமே சாட்சி.
ஒப்பந்தம்
சோவியத்து அரசுக்கும் இந்திய அரசுக்கும்தானே அன்றி
சோவியத்து மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் அல்ல.
ஒப்பந்தங்களுக்கு எப்போதும்
மண்டியிடமாட்டார்கள் மக்கள்.
ஏனெனில்
அவை
மன்னர்களுக்கிடையேயானவை
மக்களுக்கிடையேயானவை அல்ல.
பாமரன்.
(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)