”முள் கிரீடம்”

ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.

ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக்  கொள்வார்கள்.?

“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கலாம் என்கிற பல்லவியை பழைய ’டெசோ’க்காரர் வீரமணி லாவகமாக ஆரம்பித்துவைக்க….

ஈழப்போரில் முன் நின்று போராடிய களைப்போடு ”முத்தமிழறிஞர்” சரணமாகத் தொடர….

சுபவீ சுருதி சேர்க்கக் களை கட்டி விட்டது தமிழீழக் கச்சேரி.

இதில் எரிச்சல்படவும் ஏகடியம் பேசவும் என்ன இருக்கிறது? வரலாறு தெரியாத விடலைகள் எல்லாம் அரசியல் கதைக்க வந்தால் இப்படித்தான் இருக்கும். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளானா நம் முத்தமிழ்க் காவலர்?

இன்று நேற்றல்ல…. ஏறக்குறைய இருபத்தி ஆறு வருடங்கள் முன்னரே இதே டெசோவை அமர்க்களமாக ஆரம்பித்து தரணி எங்கும் பவனி வந்தாரே எங்கள் ”தமிழினத் தலைவர்”….. அப்போதெல்லாம் இவர்கள் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். ஆனால் “தெய்வாதீனமாக” எம் பெற்றோர் கிருபையால் பிறந்து வளர்ந்து இருபத்தி நான்கு வயது கொண்ட இளைஞனாய் நின்றேன் அப்போது.

தடிமாடு மாதிரி வெறும் இளைஞனாய் அல்ல.

”இலட்சியத்தில் உறுதி”யும் ”கொள்கையில் நேர்மை”யும் கொண்டு எம் தலைவர் எங்கெங்கெல்லாம் அலைகடலென ஆர்ப்பரித்து வா அடலேறே என அழைக்கிறாரோ அங்கெல்லாம் போய் நின்றேன்.

நின்று?

தமிழீழத்துக்காக 1986 ஆம் ஆண்டு தமிழ்க் காவலரால் கூட்டப்பட்ட கூட்டங்களில் நின்று….

”இலங்கையில் தமிழீழம் மலர ஆதரவு தருவேன்….

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவேன்….

போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவறாமல் இருப்பேன்….

தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித்த் தியாகத்துக்கும் தயராக இருப்பேன்….

இந்தக் கடமைகளைச் செய்யும் போது மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பேன்…..”

என்று தலைவர் சொல்லச் சொல்ல கூடவே ஓங்கி உறுதிமொழி

எடுத்த இளைஞனாக நின்றேன். போதுமா?

இதுதானா தலைவர் செய்த குற்றம்? இது குற்றமென்றால் ஒரு முறை அல்ல

ஓராயிரம் முறை கூட என்னுயிரை அடச்சே…. தன்னுயிரை பலியிடத்

தயங்கமாட்டார் எம் தலைவர். இதைக்கூட புரிந்து கொள்ளாமல்….(மீண்டும்

ஒரு ”ச்சே” போட்டுக் கொள்ளவும்)

என்ன செய்ய இல்லத்தைப் போலவே ஈழத்திலும் வந்த ”சகோதர”ச்

சண்டையை சாக்கிட்டு சுற்றியிருந்தவர்களுக்குக் கூட சொல்லாமல்

டெசோவுக்குப் போட வேண்டியதாயிற்று பூட்டை.

எம் கொற்றவன் குற்றம் செய்யவில்லை.

குற்றம் செய்ததெல்லாம் நம் மக்கள்தான்.

பின்னே…..?

கடலில் போட்டாலும் கட்டையாவேன்….

கரையில் போட்டாலும் விறகாவேன்…. என்றிருந்தவரை எம்.ஜி.ஆர் போன

பின்பு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து “முள்கிரீடம்” சூட்டினால் அவர்தான்

என்ன செய்வார் பாவம்?

அதுவும் அவருக்கு எப்போதும் பிடிக்காத ”முள் கிரீடம்”.

அக்கிரீடம் படுத்தியபாடுதான் நேருவின் மகளை வரவேற்று நிலையான

ஆட்சியைத் தரச் சொன்னது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மண்டலை ஆதரித்தவரை கமண்டலக்

கட்சிக்காரர்களோடு கூட்டணி வைக்கச் செய்தது…..

அக்கிரீடம் படுத்தியபாடுதான் சொக்கத்தங்கம் சோனியாவோடு கூட்டு சேர வைத்து ஈழத்தமிழர் பிணங்களைப் பார்த்தும் அமைதி காக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் லஞ்ச் பிரேக் உண்ணாவிரதம் இருக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மழை விட்டாலும் தூவானம் இருக்கத்தான் செய்யும் எனப் பேச வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் முத்துக்குமார் செத்துக்கிடந்தாலும் மகனது பர்த் டே பார்ட்டியைக் கொண்டாட வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மருத்துவத்துகாக சாவின் விளிம்பில் தமிழகம் வந்திறங்கிய எளிய மூதாட்டி பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப வைத்தது…..

இப்பொழுது சொல்லுங்கள் யார் குற்றவாளி?

முள்கிரீடம் அளித்தவரா?

அல்லது அதைச் சுமந்தவரா?

டெசோவை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்…..

யார் வேண்டுமானாலும் பொறுப்பு வகிக்கலாம்…..

ஆனால் நோக்கம் தமிழீழமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆகவே தோழர்களே…..

எமது தலைவர் நிறுவனராக இருக்கும் இத்தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு

தலைவராக ராஜபக்சே….

செயலராக சோனியா….

பொருளாளராக பொன்சேகா……

கூட இருக்கலாம்

ஏனென்றால் நமக்குத் தேவை தமிழீழம்தான்.

அதற்காக அங்கு தமிழர்கள் உயிர்வாழ வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும்

கிடையாது.

(அதுசரி ஆளே இல்லாத கடைல ஏம்ப்பா இப்பிடி டீ ஆத்திகிட்டு இருக்கீங்க?)

(நன்றி : சண்டே இந்தியன் இதழ்)

10 thoughts on “”முள் கிரீடம்”

 1. நீங்களுந்தான் ஏமாத்திகிட்டு இருக்கீங்க, மாசக்கணக்கா, இல்ல வருஷக்கணக்கா இந்த பக்கமே வராம (வாரா வாரம் நாங்க வந்து பாத்து ஏமாந்துகிட்டு இருக்கோம்). அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா….

 2. சரி, நாளைக்கு சிறை நிரப்பு போராட்டம் தெரியும்லே!
  உள்ள போய்ட்டு பேச வேண்டிய வஜனம் உங்களுக்கு நல்லாவே தெரியும்!

  மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
  என்னை மாற்ற நினைத்திடும் சிறைச்சாலை!

  ஓய்ந்து விட்டது 2ஜி அலை
  திறக்க வேண்டும் அணு உலை!

  தை முதல் நாள் வெட்டுவோம் வாழை
  நில மோசடி என்றால் நிமிர்த்து உன் வாளை!

  சூடுவோம் வீரபாண்டியின் கழுத்தில் மலர் மாலை
  சூட தயங்ஙினால் நீ ஒரு கோழை!!!!

  வஜனம் முக்கியம் தோழரே!

 3. நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் கட்டுரை.
  கலைஞர் போன்றவர்கள் மக்களை இன்னும் ஏமாற்றி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறதே என்று வருத்தமாயிருக்கிறது.
  இதற்கு இந்த மக்களும் ஒரு காரணம்.

 4. அதெல்லாம் சரி.எங்க சாமி ரொம்ப நாளா ஆளையே காணோம்.

 5. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏதேதோ சொல்ல கூடாது . முள் கிரீடம் அளித்த முட்டாள்களை பற்றி மட்டும் தான் பேச வேண்டும் .

 6. Nanraaka ullathu. Thodarnthu intha thalathil eluthavum yenraavathu oru naal matum puthithaka katurai varukirathu….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s