சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

படம்

அன்புத் தோழி,

இம்மடல் ஆச்சர்யமாகத்தானிருக்கும் உனக்கு. ஏன் அதிர்ச்சியாகக்கூட.

“இதுவரையிலும் பெண்ணினத்துக்காக ‘வரிந்து கட்டிக்கொண்டு’ எழுதியதெல்லாம் வெறும் வேடமோ?” என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

“ஆண்களுக்கான ஒரு அப்பட்டமான வக்காலத்து” என அடிமனதில் ஆத்திரம்கூட எழும்.

என்ன செய்வது? எழுதுவது என்று வந்துவிட்ட பிறகு…. எதனோடு மோதுவது… எவரோடு மோதுவது…. என்னவாகும் விளைவு…. என்பதெல்லாம் என் புத்திக்கு உரைப்பதேயில்லை. என்ன செய்வது…. இனி எல்லாம் வல்ல பகுத்தறிவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எண்ணியதை எழுதித்தானாக வேண்டும்.

சரிகா :

இறந்த பிறகு எல்லா இதயங்களிலும் வாழத் துவங்கியிருக்கும் ஒரு மாணவி. பெண்களைக் கேலி செய்யும் போக்கிற்குக் கிடைத்த ஜூலை மாதத்து இரை.

நாளிதழ்கள் தொடங்கி வண்ணத் தொலைக்காட்சிகள் வரைக்கும் சரிகாவுக்காக வருந்தியாயிற்று….

வழக்கு மன்றத்திற்கு வந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊரே கூடி நின்று சரிகாவுக்காக சபித்தாயிற்று…..

சட்டென்று விழித்துக் கொண்ட அரசு சரிகாக்களுக்காக சட்டம் கூடப் போட்டாயிற்று…..

சரி…. இனி எல்லாம் முடிந்தது….

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்தியாயிற்று…

இனி அவரவர் வேலைகளுக்குப் போகலாம்.

சுபம்.

என்ன சரிதானே?

சரிகாவுக்காக வருத்தப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சி, பொதுமக்கள் என எல்லோரும் பார்க்கத் தவறிய விஷயமும் ஒன்று உண்டு. பெண்களைக் கேலி செய்யும் குற்றச்செயல் என்றில்லை. எல்லா குற்றச் செயல்களிலும் நாம் காணத்தவறும் விஷயம் அது.

அதுதான் : பிரச்னையின் ஆணிவேரை அடையாளம் காணும் விஷயம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு “மனஓசை” என்கிற ஆரோக்கியமான பத்திரிக்கையில் படித்த அற்புதமான கதை ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

என்ன தோழி…. கதை என்றதும் உனது பாலபருவம் நினைவுக்கு வருகிறதா? அது இருக்கட்டும் ஒருபுறம்.. இனி கதைக்கு வருவோம்.

“ஒரு ஊரில் வாழ்ந்த மக்கள் கொசுத் தொல்லையால் பயங்கரமான துன்பத்திற்கு ஆளாகிறார்கள். என்ன செய்தும் அவர்களால் கொசுக்களை விரட்ட முடிவதில்லை. அப்போது பார்த்து ஒருவன் கொசுவலையோடு அந்த ஊருக்குள் வருகிறான். மக்கள் அவனிடமுள்ள விதவிதமான வலைகளை வாங்கி உள்ளுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கொசுவை இவர்கள் விரட்டுவது மாறி கொசு இவர்களை விரட்டுகிறது. வாங்கிய வலையும் வசதிப்படுவதில்லை.

நாட்கள் நகர அடுத்ததாக அந்த ஊருக்குள் கொசுவத்திச் சுருள்களோடு இன்னொருவன் அறிமுகமாகிறான். இதைக் கொளுத்தி வைத்தால் போதும்… நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்… என்று அவனது சுருள்களை விற்றுப் போகிறான். ஆனால் அந்த மக்களுக்கோ கொசுத் தொல்லையோடு புகைத் தொல்லையும் சேர்ந்ததுதான் மிச்சம். அந்தப் புகையால் கொசு மயங்கியதோ இல்லையோ அவர்கள் மயங்கியதுதான் கண்டபலன்.

மீண்டும் கொஞ்சநாள் கழித்து அந்த ஊருக்குள் மற்றொருவன் வருகிறான். புதிதாக வந்தவன் கொசுவலைகளையும் கொண்டு வரவில்லை, கொசுவத்திச் சுருளையும் கொண்டு வரவில்லை. மாறாக விதவிதமான கிரீம்களோடு வந்திருந்தான். அவன் கையிலிருந்த கிரீம் குழாய்களை மக்கள் வியப்போடு பார்த்தனர். “இனி நீங்கள் அதிக விலை கொடுத்து வலையையும் வாங்க வேண்டியதில்லை…. சுருளையும் வாங்க வேண்டியதில்லை…. இந்தக் கிரீமை உடல் முழுக்க பூசிக் கொண்டால் போதும். பக்கத்தில் வராது கொசு…..” என்று தான் கொண்டு வந்திருந்த கிரீம்களை விற்றுத் திரும்பினான். கிரீம் தடவிய மக்களோ அது ஏற்படுத்திய உடல் எரிச்சலில் கொசுக்கடியே பரவாயில்லை என்று எண்ண ஆரம்பித்தனர்.

அந்த வேளையில் ஊருக்குள்ளிருந்த உருப்படியான இளைஞர்கள் ஆறேழு பேர் மண்வெட்டி, கடப்பாறை, சட்டி சகிதம் எதிரில் வரக் கண்டனர் மக்கள்.

“இந்தக் காலை வேளையில் கடப்பாறை சட்டியோடு எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” என அந்த இளைஞர்களைப் பார்த்து ஊர் மக்கள் கேட்டதற்கு…. அவர்களில் ஒருவன் சொன்னான்….

“நீங்களும் இது வரைக்கும் கொசுவை விரட்ட ஏதேதோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டீர்கள். கொசுவை நீங்களும் விடுவதாயில்லை…. கொசுவும் உங்களை விடுவதாயில்லை. கொசு வலைக்காரன் பேச்சைக் கேட்டு வலை வலையாய் வாங்கி அதற்குள் நுழைந்து கொண்டீர்கள்….. விடவில்லை கொசு. கொசுவத்திச் சுருள்களை விடிய விடியக் கொளுத்தி தப்பிக்கப் பார்த்தீர்கள்….. விடவில்லை கொசு. கண்டகண்ட கிரீம்களைத் தடவி உடல்களைப் புண்ணாக்கிக் கொண்டீர்கள்…. விடவில்லை கொசு.

கொசுவலைக்காரன், கொசுவத்திச் சுருள்காரன், கொசுக்கிரீம்காரன் என எல்லோரும் உங்களால் பெரும் பணக்காரன் ஆனதுதான் மிச்சம். இவர்கள் மூவரும் கொசுவை விரட்டத்தான் வழி சொன்னார்களே தவிர கொசுவை அடியோடு ஒழிக்க வழி சொல்லவில்லை. அதுதான் நாங்கள் புறப்பட்டு விட்டோம்….” என்றனர் அந்த இளைஞர்கள்

”அடடே…. கடப்பாறையில் கொசு அடிக்கும் கலை நமக்குத் தெரியாது போயிற்றே…” என்று கிண்டல் செய்தனர் ஓரிருவர். இந்த இளைஞர்களிடம் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒருவர் மட்டும் சற்றே அவர்களை நெருங்கி…. “நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் கடப்பாறை, மண்வெட்டி எதற்கு என்றுதான் புரியவில்லை” என்றபோது….

“கொசுவின் ஊற்றுக்கண்ணாக ஊரைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை மூடுவதற்கு….”என்று நெத்தியடியாய் பதில் வருகிறது. ஊரே அப்போதுதான் அது குறித்து யோசிக்க ஆரம்பிக்கிறது.

ஆம் தோழி…. அதைப்போன்றே நம்மில் யாரும் ஒரு குற்றத்திற்கான ஊற்றுக்கண்ணை உற்று நோக்குவதேயில்லை. பெண்களைக் கேலி செய்பவர்களைப் பிடிக்க, மாறுவேடத்தில் காவலரை நிறுத்துவது….. தர்ம அடி கொடுப்பது….. வித விதமான சட்டங்கள் போடுவது… என்பதெல்லாம் கொசுக்கடிக்கு கிரீம் தடவுகிற வேலைகள்தான். கொசுக்களின் ஊற்றுக்கண் சாக்கடை என்பதைப் போல இந்தக் கேலி…. கிண்டல்களின் ஊற்றுக்கண் எது? என்பதைப் பார்த்தால் எல்லா விஷயமும் புரிந்து போகும். சரி தோழி…. இவை இப்படி ஒருபுறம் இருக்க நாமும் இந்தக் கேலியின் மூலம் நோக்கி முன்னேறலாமா? இனி?

ஹரி :

சென்னை மாநிலக் கல்லூரி மாணவன். இருபதே வயது. ஒரே இரவில் தமிழகத்தின் பொதுமக்கள் பலராலும்…. பத்திரிகைகளாலும் கொடூரமானவனாக சித்தரிக்கப்பட்டு விட்டவன். ஏழை கூலித் தொழிலாளியின் மகன்.

எது துரத்திற்று அவனை இக்கொலைப்பட்டத்தை நோக்கி?

எது துரத்திற்று அவனை சிறைக்கம்பிகளை நோக்கி?

எது துரத்திற்று அவனை எத்திராஜ் கல்லூரி வாசலை நோக்கி?

அவன் பிறக்கும்போதே பெண்களைக் கேலி செய்து சிறைக்குப் போகவேண்டுமென சங்கற்பம் செய்து கொண்டு பிறந்தவனா? ஏன் இப்படி மக்களது ஏச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிப் போனான்?

பட்டதாரியாகப் பட்டம் பெறப்போனவன் கொலைகாரப் பட்டத்தைச் சுமக்கும் அளவுக்கு அவனைத் துரத்தியது எது?

இன்றைக்கு எதுவெல்லாம் அவனைக் குற்றவாளியென குற்றம் சாட்டுகிறதோ அதுவெல்லாம்தான் அவனைத் துரத்திற்று.

‘மச்சி அவ துப்புனா எச்சி’ என பெண்களைச் சுற்றும் விடலைகளை ஹீரோக்களாக்கிய திரைப்படங்கள்….

’நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி’ எனப் பாடும் பொறுக்கிகளை உருவாக்கிய, நியாயப்படுத்திய பாடல்கள்….

’டேட்டிங் ஸ்பெஷல்’….. தழுவல் ஸ்பெஷல்….. நழுவல் ஸ்பெஷல்… என காசுக்காக எதையும் விற்றுத் தள்ளும் பத்திரிக்கைகள்….

கை வண்டி இழுக்கும் உழைப்பாளிகளைக் கூட தடுத்து நிறுத்தி ‘உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒன்ணச் சொல்லுங்க’ என செயற்கையாய் இளித்தபடி கேட்கும் தொலைக்காட்சிகள்…..

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை குற்றவாளியாக்கியவர்கள்.

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை உற்பத்தி செய்பவர்கள்.

குதிரை குப்புறத் தள்ளியதோடு நிற்காமல் குழியும் தோண்டிய கதையாய்…. ஹரிகள் பிடிபடாமல் இருக்கும்போது “கல்லூரிக் காம்பவுண்ட்”, “கழிப்பறைக் காம்பவுண்ட்” என இவர்களை ஹீரோக்களாய் வர்ணித்துவிட்டு…..

பிடிபட்டவுடன் “பிறக்கும்போதே பிச்சுவாவோடு பிறந்தவனாம் ஹரி” என்று கவர் ஸ்டோரியும் எழுதிவிடுவதுதான் அவர்கள் பாணி.

ஆக…. ஒரு குற்றத்தைப் புரிந்தவனை விட அக்குற்றச் செயலை புரிய தூண்டுகோலாய் இருப்பது மாபெரும் குற்றம் என்கிறதாம் இந்திய குற்றவியல் சட்டம்.

ஆனால் இங்கு…. ஹரிகளை சிறைச்சாலைகளுக்குள் அனுப்பி விட்டு….. பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை எழுதியவர்களுக்கு பாரதிதாசன் விருதும், ஜனாதிபதி விருதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் கேலி, கிண்டல்களின் உற்பத்தித் தலங்கள் எது எது என்று அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான திரைப்படங்கள் எடுக்கும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான பாடல்களை எழுதும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான கதைகளை எழுதும் பத்திரிக்கைகளின் முகவரி அரசுக்குத் தெரியாதா?

இந்த லட்சணத்தில் ஈவ் டீசிங்கைத் தடுக்க அதிரடிப்படையாம்…. கராத்தே கற்ற பெண்காவலர்களாம்…. அதுவும் மாறுவேடத்திலாம்….. இப்பெண் காவலர்களை ஒவ்வொரு கல்லூரி வாசல்களுக்கும் அனுப்புவதற்கு பதிலாக… ஒவ்வொரு பாடலாசிரியர் வீட்டுக்கும்…. ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகத்துக்கும் அனுப்பி அவர்களது கராத்தே ’கலையை’ கொஞ்சமாவது காண்பிக்கச் சொல்லியிருந்தால்…. குறைந்தபட்சம் குற்றச் செயல்களின் ஊற்றுக்கண்ணை ஆட்டம் காணச் செய்த புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

சமூகமே செல்லரித்துப்போய் கிடக்கும்போது அதிலிருந்து வருபவன் மட்டும் சொக்கத்தங்கமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த நூற்றாண்டின் வேதனையான நகைச்சுவை.

ஆபாச சினிமா… ஆபாச பாடல்… ஆபாச தொலைக்காட்சி…. ஆபாச புத்தகங்கள்…. என எல்லாம் அப்படியே இருக்க வேண்டும்….. ஆனால் இந்தச் சூழலில் உருவாகி வருபவன் மட்டும் புடம் போட்டவனாய் இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ராகிங்கா….. உடனே அதற்கொரு சட்டம்.

கேலி கிண்டலா…. உடனே அதற்கொரு சட்டம்.

அப்படியானால் இப்போது இருப்பில் உள்ள சட்டங்கள்……..?

இத்தகைய செயல்களை சட்டங்களால் சாதிக்க முடியாது. பிரச்னைகளின் ஆணிவேரை அடையாளம் காட்டும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால்தான் சாதிக்க முடியும். இப்போதைய தேவை சட்டங்களல்ல. சமூக மாற்றங்கள்.

தோழி! சரிகா விஷயத்திலாகட்டும் அல்லது எந்த விஷயத்திலாகட்டும் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்தவே விரும்புகின்றேன். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் எமக்குள் இல்லை. ஆனால் அதற்கும் முன்னதாக குற்றங்களை உருவாக்குகிற சூழல்கள் களையப்பட்டாக வேண்டும் என்பதே எமது கருத்து.

தொலைக்காட்சி….

திரைப்படம்….

பத்திரிக்கை…. போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் பலியாக்கப்பட்டது சரிகாக்கள் மட்டுமில்லை…. ஹரிகளும்தான்.

இனிய தோழி!,

இம்மடலுக்கான இறுதி வரிகளை இரவலாகத் தந்திருப்பவர் வேறு யாருமில்லை நமது திருவள்ளுவர்தான். ஈவ் டீசிங்கிற்கு மட்டுமில்லை…. இம்மண்ணின் அனைத்து அவலங்களுக்கும் ஆப்படித்த மாதிரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதி வைத்துவிட்டுப் போன வைர வரிகள்தான் இனி வரும் வரிகள் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

( பின்குறிப்பு : ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளுக்கு முன் (1998) “பெண்மணி” மாத இதழில் எழுதிய கட்டுரை. )