ஒரு மாபெரும் மடையனின் மலேசியப் பயணம்…

Poster

 

 

ராட்டிணத்தில் சுற்றுவதே எனக்கு ஏகபயம். அதுவும் அது மேலே போகும்போது கீழே தெரியும் ஊரைப் பார்க்கும் போதே அடிவயிறு கலங்கிவிடும். இந்த லட்சணத்தில் விமானப் பயணம் என்றால் எப்படி இருக்கும்? அது கிளம்பி மேலே போகப்போக காய்ச்சல் வந்த மாதிரி ஆகிவிடும். விமானத்தில் ஏதாவது ஒரு சின்ன ஆட்டம் என்றாலும் அய்யோ…. காப்பாத்துடா” என்றோ….. ”காப்பாத்துடி….” என்றோ  கடவுளைக் கூப்பிட முடியாது. அதுவும் ஒரு நாத்திகன். போறப்ப எங்கே போறே?ன்னு அபசகுனமா கேட்காதே என்கிற ஜென்மங்களெல்லாம் ஒரு முறை விமானத்தில் போனால் போதும்…. ஏறி உட்கார்ந்தவுடனேயே விமானத்திற்கு விபத்து ஏற்பட்டால் எப்படி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு குனிந்து உட்கார வேண்டும்…. மூச்சு திணறினால் ஆக்ஸிஜன் பையை எப்படி மூக்கில் மாட்டிக் கொள்ள வேண்டும்…. அவசரகால வழி மூலமாக எப்படி தப்பித்தோம் பிழைத்தோம் என பாய்ந்தோட வேண்டும்…. என அக்கு வேறாக ஆணி வேராக விளக்கிப் பேசும் ஒரு பெண். இது போதாதா சகுனப் பேர்வழிகளுக்கு?

புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் உற்சாகபானங்கள் அடங்கிய சரக்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்தார் விமானப் பணியாளர். ரெண்டு மூணு உள்ளே போகவும் பயம் பாதி போயிருந்தது. இனி அடுத்த கண்டம் ஆரம்பம். பொதுவாக எனது பொழுதுபோக்கே சிறுநீர் கழிப்பதுதான்… அதிலும் ஏதாவது நீராகாரம் உள்ளே போய்விட்டால் எனதுபாடு பெரும்பாடுதான். அருகில் இருந்த இருவரிடம் பல்லைக் காண்பித்து எழுச்சொல்லி வெளியில் வந்து கழிப்பறைப் பக்கம் போனால்…. அங்கும் ஒரு கியூ. ஏழெட்டு பேர் நிற்கிறார்கள். எனக்கு சேலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கட்டணக் கழிவறை ஞாபகம் வந்தது. அங்கு ஒருவர் ஓயாமல் சத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார். ”போனமா வந்தமான்னு இரு”…. ”போனமா வந்தமான்னு இரு….” என்று. ஒருவேளை லாட்ஜில் ரூம் போட்ட நினைப்பில் அரைநாள் அங்கேயே இருப்போரும் உளர் போலிருக்கிறது. அப்பாடா என வெளியில் வரும் போது விமானம் மலேசியாவில் தரை இறங்கப் போவதாக விமானியின் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது.

இறங்கியாயிற்று. அடுத்து கையில் இருக்கிற ரூபாயை மலேசியப் பணமாக மாற்ற வேண்டுமே… எங்கே? என்றால் இன்னொரு பக்கம் காண்பித்தார்கள். அதற்கு உள்ளேயே இன்னொரு மின்னல் வேக ரயில். மலேசிய ரிங்கட்டுகளாக ரூபாயை மாற்றிக் கொடுத்த பெண் என் முகக்கெழுத்தியையும் முழுக் கோலத்தையும் பார்த்துவிட்டு நிறைய சில்லரையாகவே கொடுத்தார். பெட்டி நியாபகம் வந்தது. அதற்கு எங்கே போவது? என்றால் இன்னொரு டெர்மினலை காண்பித்தார்கள். மீண்டும் மின்னல் வேக ரயில். பெட்டியை எடுத்த பிற்பாடு வெளிவாயிலுக்கு எப்படி செல்வது என்று கேட்டால் அதற்கும் இன்னொரு டெர்மினலைக் காண்பித்தார்கள். மறுபடியும் உள்ளேயே ஓடும் மின்னல் வேக ரயில். சுங்கச் சோதனை முடித்து ரயிலேறிப் போய் பெட்டியை எடுத்துக் கொண்டு ரூபாயை மாற்றி வெளியில் வருவதற்கு பதில் மாறி மாறி மூன்று முறை ஒரே ரயிலில் காவடி எடுத்த ஒரே ”மாமேதை” நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.

இத்தனைக்கும் எப்படி பணம் மாற்ற வேண்டும்….  எங்கே பெட்டியை எடுக்க வேண்டும்… தங்குமிடத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும்… என ஒவ்வொன்றையும் பள்ளிக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல அனைத்தையும் சொல்லியிருந்தான்  சிங்கப்பூரில் இருக்கும் எனது நீண்டகால கோவை நண்பன் முரளிதரன். போதாக்குறைக்கு நண்பர்கள் சிறீகாந்த், டி.எம்.செந்தில், சார்லஸ் போன்றவர்களின் அரிய ஆலோசனைகள் வேறு. யாரும் சொல்லாமலே புரிவதற்கும்…. அப்படிச் சொன்னாலும் மண்டையில் ஏற்றிக் கொள்வதற்கும் நானென்ன ஞானியா?படம்

ஏற்கெனவே பலமுறை மலேசியாவைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் (நினைத்தாலே இனிக்கும் படத்தில்) நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. வெளியில் காத்திருந்த தோழன் கருணாகரனோடு நகரம் நோக்கிய பயணம். வானுயர்ந்த கட்டிடங்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டே வந்தேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு எட்டுக்கு எட்டு லாட்ஜில் அடைக்கலமானோம் இருவரும். கழிப்பறைக்குள் குண்டானவரோ…. உண்டானவரோ போனால் வெளியில் வருவது சிரமம். ஜன்னல் கிடையாது. உள்ளே உள்ள காற்று வெளியேவோ… வெளியே உள்ள காற்று உள்ளேவோ வர வாய்ப்பே இல்லை. அறையையும் அறையின் தோற்றத்தையும் ஓட்டலின் இருமருங்கிலும் உள்ள மசாஜ் பார்லர்களையும் பார்த்தவுடனேயே அது தங்குவதற்கு மட்டுமான லாட்ஜ் இல்லை…. ”மற்றவற்றுக்கும்”தான் என்பது புரிந்து போயிற்று. அடைத்த அறைக்குள் நான் விடும் புகையையும் சேர்த்தால் தனக்கு சாவு அங்கேயேதான் என்பதைப் புரிந்து கொண்ட நண்பன் தன் தாய் மீதான பாசத்தையும்… தங்கை மீதான பரிவையும்…. அவர்களைப் பிரிந்து தான் படும் கவலையையும் எடுத்துச் சொல்லி பின்னங்கால் பிடறியில்பட ஓடிப்போனான். வெம்மையும் புகையுமாய் கழிந்தது என் முதல் இரவு.

விடிந்ததும் முதல் வேலையாக தமிழகத்தில் உள்ள என் நண்பன் சுரேஷ்பாபுவுக்குப் போனைப் போட்டு என் ”கற்பு”க்கு நேர இருக்கும் ஆபத்துக்களையும், அபாயங்களையும் எடுத்துச் சொல்லி…. இங்கு வந்தும் நண்பனோடு கதைக்கக்கூட இயலாத அறையில் தவிக்க வேண்டி வந்ததை வாய் விட்டுக் கதறி…. எப்படியாவது ஒரு ஜன்னல் உள்ள இடத்தில் ஒரு ரூமைப் போட்டால் கோடிப் புண்ணியம் என்றேன். பத்தே நிமிடத்தில் இணையதளத்தில் அறையை புக் செய்து விட்டு “ரூம் போட்டாச்சு… பிரிக் பீல்ட் போங்கள்… அங்கே நம்ம தமிழர்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள்” என்றான்.

படம்

போய் இறங்கியதில் இருந்து என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் ஒரு இடத்தில் கூட வண்டிகள் எழுப்பும் ஒலி சத்தம் கேட்காததுதான். இரவு மூன்று மணி என்றால் கூட…. மூன்று பக்கமும் ஆள் நடமாட்டமே இல்லாவிட்டாலும் கூட சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்து புறப்படுகிறார்கள். சாலை ஓர உணவகங்களில் உணவோடு மது அருந்தினாலும் அலப்பரை செய்யாமல் கிளம்பிப் போகிறார்கள். இவைகள் ஆச்சர்யங்கள் என்றால் துயரங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லோருக்கும் வாயிற்கதவுகளைத் திறந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பல்வேறு தெருக்களில் பாலியலுக்கு அழைக்கும் தோழிகளுக்கும் அளவில்லை. உணவுக்குக்கூட வக்கற்ற அபலைகளை பாலியல் தொழிலாளிகளாக மாற்றி தாய்லாந்து, இந்தோனேசியா எனப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வைத்திருக்கிறது இந்நாடுகளது வெட்கமற்ற பொருளாதாரக் கொள்கைகள். இதில் மட்டும் மொழி, இன, மத, எல்லைப்பாகுபாடுகள் இல்லை.

மூன்றாம் நாள் ரயிலேறி ஷா ஆலம் நகருக்குப் போனால் நண்பர் வரதராஜன் வெளியில் காத்துக் கொண்டிருந்தார். “தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கப் போகலாமா?” என்றார் நண்பர். வருகையின் நோக்கமே அதுதானே என்றேன். அடுத்து நாங்கள் பயணப்பட்டது கொஞ்சம் தொலைவில் இருந்த பத்துதீகா நோக்கி. தமிழ்ப்பள்ளி என்றதுமே கதியற்றோரின் கடைசி புகலிடமாக…. கேட்பாரற்றுக் கிடக்கும் மெலிந்த நம் நோஞ்சான் குழந்தைகளின் பாடசாலைகளாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்ட நம் தமிழகப் பள்ளிகளின் நினைவுதான் வந்தது. (மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பம்மாத்துகளைத் தாண்டி தூள் கிளப்பும் தமிழ்ப் பள்ளிகள் தமிழகத்தில் ஏராளம் என்பது வேறு விஷயம்.) நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நின்றது. உடன் வந்த நண்பர் அங்கிருக்கும் யாரையோ பார்க்கத்தான்  அழைத்துப் போகிறார் என்று நினைத்தால் ”இதுதான் நாம் பார்க்க வந்த தமிழ்ப் பள்ளி” என்கிறார். ஒரு கணம் ஆடிப் போகிறேன் நான்.

முதல் அறையில் நுழைந்தால் பேக்ஸ்…. இணையதளம்… சிசிடிவி கேமரா சகிதம் கார்ப்பரேட் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியைப் போல் வரவேற்கிறார் பள்ளி முதல்வர். சில நிமிட உரையாடல்களுக்குப் பிறகு வகுப்பறைகளைப் பார்ப்போமா என்கிறார் கிளன்மேரி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் மனோகரன். ஆய்வகம்… நூலகம்…. வகுப்பறை என அனைத்துமே அசத்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஆறாம் வகுப்புவரை மட்டுமே படிக்கும் ஆரம்பப் பள்ளிதான். இதற்கே மாணவர்கள் கற்பதற்காக 50 கம்ப்யூட்டர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்புக்குப் பிற்பாடு தமிழ்ப்பள்ளியில் தொடர வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது சேர்ந்திருக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகளுக்கு லைசன்ஸ் பெறுவதிலும் அதைத் தக்க வைத்துக் கொள்வதிலும் எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் பாராமுகம்… அரசுகளின் மலாயா சார்புப் பார்வைகள்… என பின்னர் விரிவாக எழுத ஏராளம் இருக்கிறது.

படம்

அடுத்து நான் அடியெடுத்து வைத்தது எலுமினா எஸ்டேட். மலேசியா மார் தட்டி நிற்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் இம்மண்ணின் தோட்டத் தொழிலாளர்கள்தான். காடும் மலைகளுமாய்க் கிடந்த நாட்டைச் செதுக்கி செப்பனிட்டதில் தமிழகத்தில் இருந்து சென்ற இந்தத் தோட்டத் தொழிலாளர்களது ரத்தம் தோய்ந்து கிடக்கிறது. வெள்ளையர்களால் அடிமைகளாய் கூலிகளாய் கூட்டி செல்லப்பட்ட  தலித் மக்களது வாழ்வில் சொல்லாத சேதிகள் ஏராளம் இருக்கிறது.

செம்பனை மரத்தில் செதில்களுக்கிடையே ஏறி பழம் பறிப்பதற்குள் அவர்கள் பட்டபாடு எழுத்துக்களில் கொடுத்துவிட முடியாது. முக்கால் மரம் ஏறுவதற்குள் செதில் பிய்ந்து மேலிருந்து மல்லாக்க விழுவதில் தொடங்கி…. செதில்களுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகள் தீண்டி மருந்து கட்டும் முன்பே மரணத்தைத் தழுவிய துயரங்கள் வரைக்கும் ஏராளம் இருக்கிறது. அங்கிருந்த தோழர்கள் சிலரிடம் நெடுநேரம் பேசிவிட்டு தோட்டத்தில் கிடந்த சில செம்பனைப் பழங்களையும் அவர்கள் நினைவோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் “லிட்டில் இந்தியா” பகுதிக்குப் போனால் எல்லாம் தமிழ்மயம். தடுக்காமல் விழுந்தாலும் தமிழர்கள் மீதுதான் விழ வேண்டும். இதற்காகவே மலேசியத் தமிழர்கள் “லிட்டில் தமிழ்நாடு” எனப் பெயர்மாற்றப் போராட்டம் அறிவிக்கலாம். இங்குள்ளவர்களுக்கு காதில் ஏதோ கடும் பிரச்சனை போலிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் பிரமாண்ட ஸ்பீக்கர்கள் வைத்து ஊரை அலற விடுகிறார்கள். இவர்களுக்கென்றே பிரத்யேகமாக இலவச காது சிகிச்சை முகாம்களை நடத்தலாம் மலேசிய அரசு. உணவு விடுதி ஒன்றில் என்னை அடையாளம் கண்டு கொண்ட குருமூர்த்தி கைகளை நேசத்துடன் பற்றிக் கொண்டார். அவருடன் மலேசிய அரசியல்… தமிழக அரசியல் குறித்தெல்லாம் கதைத்துவிட்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.

இப்போது ஓட்டல் அறையில் இளையராஜாவும் நானும் மட்டும்தான். (அவர் எப்ப அங்க வந்தார்?ன்னு என்னைப் போலவே கேணயனாட்டக் கேட்டுராதீங்க அப்பு. நான் பாட்டுக் கேட்டதை அப்படிச் சொன்னேன் அம்புட்டுதான்)

சரி ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று ஓட்டலை விட்டுக் கீழே இறங்க… ஓட்டல் கதவைத் திறந்துவிட்ட ஊழியர் எந்த ஊர்? என்று கேட்டார். தமிழ்நாடு என்றேன். நீங்க? என்றதற்கு ”பாகிஸ்தான்” என்றார். ”உங்களைக் காட்டி பயமுறுத்திதான் எங்களுக்கான கல்வி…. எங்களுக்கான வேலை…. என அனைத்தையும் பறித்துக் கொள்கிறது எங்கள் அரசு…” என்றார். அங்கும் அதே கதைதான் என்றேன்.

இந்த ஓட்டலில் தங்கியிருப்பதால் என்னை ஏதோ லார்டு லபக்கு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்…. நாலு நண்பர்கள் பிச்சை போட்டதால் மலேசியா வந்திருக்கிறேன். நானும் உங்க ரகம்தான் என்றேன். நேரம் காலை நாலு மணி என்றது.

”நீங்க எழுத்தாளர் என்பதால் இதை கேட்கிறேன்….தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…. நம் இரண்டு நாடுமே ரா(RAW)வைப் பற்றி பேசுகிறார்கள்….. ஐஎஸ்ஐ(ISI) பற்றிப் பேசுகிறார்கள்….. ஆனால் ஒரு போதும் அமெரிக்க உளவுத் துறையின் FBI பற்றி சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்களே…. ஏன்?” என்றார். தெரியலியேப்பா என்றேன். ஒரு கடைநிலை ஊழியரின் அறிவுக்கு முன்னே நான் இன்னும் சிறியதாகி இருந்தேன். சரி கிளம்பலாம் என்று எண்ணி அந்த நண்பனிடம் கைகொடுத்து விட்டு தோழா! உங்கள் பெயர்? என்றேன்.  பஃஸி என்றான் அந்தத் தோழன். நம்ம ரெண்டு நாட்டுக்குமே இதுதான் பிரச்சனை. அதுதான் பசி. சில நேரங்களில் ப.சி.யும் கூட. புரியாமல் சிரித்தான் அந்த எளிய நண்பன்.

 

சாலை ஓரத்தில் உணவகம் வைத்து பிழைப்பு நடத்தும் பெருமாள் என்பவரை நண்பர் அறிமுகம் செய்து வைத்தார். மலேசியக் கல்வி முறையில் இருந்து அமைப்புமுறை வரைக்கும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார் பெருமாள். அவர் உணவாளர் மட்டுமல்ல உணர்வாளரும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அங்கு யாரிடம் நம்மை அறிமுகப்படுத்தி வைத்தாலும் “ஊர்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். ஊர் என்றதுமே…. “நான் ராமநாதபுரம்… நீங்க அங்க எங்கே?” என்கிறார்கள். அவர்களுக்கு ஊர் என்றாலே தமிழகம்தான். இந்தத் தலைமுறையில் சிலரைத் தவிர அனைவரும் “ஊர்” நினைவை மனதில் சுமந்து திரிகிறார்கள். பல வருடங்களுக்கு ஒரு முறை வந்து போக வசதியுள்ளவர்கள் தவிர….. மற்றவர்கள் ஊர் நினைவிலேயே வாழ்கிறார்கள்.

ஊர் சரி…. பார் எப்படி இருக்கிறது எனப் பார்க்கவேண்டாமா? நண்பர் கணேஷ்தான் தமிழாய்ந்த தமிழ்குடி எப்படிக் குடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் என அழைத்துப் போனார் ஒரு “தமிழ்” பாருக்கு. உள்ளே நுழைந்தால்….காது சவ்வு நார் நாராய்க் கிழிந்து விடுவதைப் போல இரைச்சல். ஆர்கெஸ்ட்ராவாம். குத்துப்பாட்டுகளுக்கு குடும்பம் குடும்பமாய் ஆடுகிறார்கள். யாரும் யாரோடும் பேசிவிடக் கூடாது என்கிற அதீத கவனத்தில் பத்து நொடிகூட இடைவெளி இல்லாமல் பாடல் சாரி….இரைச்சல் தொடர்கிறது. ”வாடா மாப்ளே வாழைப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்றார் பாடகி. “நண்பா! காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதுங்கிறது இதைத்தானோ?” என்றேன் கணேஷிடம்.

நாராச ஒலி காதைக் கிழிக்க எழுந்து வெளியில் வந்து ஒரு புகையைப் பற்ற வைத்தேன். எதிரே தொங் நாம் மூல வியாதி மருத்துவர் என்கிற ஒரு பெயர்ப்பலகை. அழகிய தமிழில். அப்புறம் இந்த முக்கு முக்குனா மூல வியாதி வராம என்ன செய்யும்?

மீண்டும் உள்ளே போனால்…. ”சொய்…. சொய்” என தமிழினி பாடலைத் தாறுமாறாகக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். அத்தோடு விடுவார்களா…. கூறு ஒண்ணாக…. கூறு ரெண்டாக…. சிங்சாங்….. சிங்சாங்…. என்று விஜலஷ்மி நவநீதகிருஷ்ணனையும் கூறு போட ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக இவர்களிடம் சிக்காமல் பி.பி.சிறீனிவாஸ் செத்துப்போனார்.

படம்

 

”ஊர்” கிளம்பும் நாள் வந்தது. நானும் ஊர் விட்டு வந்து ஆறு நாட்களாயிற்று. லண்டனில் இருந்து தன் வயதான அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஈழத்து நண்பன் கருணாகரனும் அன்றுதான் லண்டன் திரும்ப வேண்டும். எனக்குப் பிறகுதான் அவருக்கு விமானம் என்றாலும் அதிகாலையிலேயே எழுந்து என்னை வழியனுப்ப வந்திருந்தான் நண்பன். இருவரும் கிடைத்ததைக் கொறித்து விட்டு நேரம் பார்த்தோம். ஊருக்குக் கிளம்ப எனக்கு இன்னும் 20 நிமிடம் இருந்தது. சரி…. ஒரு தம் அடிக்கலாம் என்று அதற்கான அறையைத் தேடிப் போனோம். புகை வாசனை ஒத்துக் கொள்ளாமல் வெளியிலேயே எனக்காக நின்றிருந்தான் நண்பன். விமானத்தில் நுழைய கடைசி ஐந்து நிமிடம் இருக்கும்வரைக்கும் என்னுடனேயே இருந்துவிட்டு தன்னுடைய பெட்டியை நகர்த்தியபடி சென்ற கருணாகரனைப் பார்த்தபடி ஓரிரு நிமிடம் நின்றேன்.

”ஊர்”.

ஆறே நாட்கள்  பிரிந்து இருந்துவிட்டு மீண்டும் ஊர் பார்க்கும் மகிழ்ச்சியில் நான்.

எப்போதாவது ஊர் திரும்புவோம் என்கிற நம்பிக்கையில் எண்ணற்ற மலேசிய மக்கள்.

எப்போதுமே ஊர் திரும்ப முடியாது என்கிற எதார்த்தம் புரிந்து வாழ்வின் வலிகளைச் சுமந்தபடி கருணாகரனும் அவனது மக்களும்.

 

நன்றி : ”அந்திமழை” மாத இதழ்.

13 thoughts on “ஒரு மாபெரும் மடையனின் மலேசியப் பயணம்…

  1. அன்புள்ள பாமரனுக்கு,

    கட்டுரையின் இரண்டாம் பத்தியில் (சேலம் கழிவறை)வாய் விட்டு சிரித்த நான் கட்டுரையின் கடைசி பத்தியில் கண்கள் கலங்கி போனேன்.

  2. நல்லா இருக்கே.. விழுந்து விழுந்து சிரித்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது வாசிக்க.

  3. தப்பாக எண்ணவேண்டாம்.”செம்பனை’ என்பது என்ன?

  4. கடைசி பத்தியில் கண்கள் கலங்கி போனேன்.

  5. உரிய மீனுக்காக ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கு போல . உங்களது எழுத்துக்களை வாசிக்க ஒற்றைக் காலில் எங்களை நிற்க வைத்துவிடுகிறீர்கள் . புனைவு என்ற பெயரில் மற்ற எழுத்தாளர்கள் எங்களைக் கொல்கிறார்கள் .அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றவாவது நீங்கள் மாதம் ஒரு கட்டுரையாவது எழுதுங்கள் .

    பிரியமுடன் ,
    சக தோழர் .

  6. வணக்கம் தோழரே! இரத்தினச்சுருக்கமாக எழுதினாலும் மனதை தைத்து நிற்கிறது தங்களது மலேசியப் பயணம். மீண்டும் வாருங்கள் படிக்கவும் கிழிக்கவும் நிறையவே இருக்கிறது மலேசியாவில்,நன்று. தோழர் பெருமாள்.

  7. கொங்கு தமிழ் +பாமரன் ஸ்டைல் வர்ணிப்பும் ..எப்போதும் போல கலக்கல்… ஒரு நேயர் விருப்பம்…(எல்ல நேயர்களும் சொல்லிருபங்க ..)நிறைய எழுதுங்க சார்..

  8. செம்பனை மரத்தில் ஏறுவார்கள் என்பது அபத்தமாக இருக்கின்றது, இங்கு செம்பனை காய் களை கீழே நீண்ட கழியின் முனையில் அரிவாள் போன்ற கத்தியை வைத்து இழுத்து அறுப்பார்கள். யார் இவரிடம் இப்படி ஒரு இல்லாத கடையை சொன்னார்களோ தெரியவில்லை , ஒரு வேளை, சொன்னர்வருக்கும் செம்பனை எப்படி அறுப்பார்கள் என்று தெரியாது போலும்.

Leave a reply to தமிழினி Cancel reply