கோக்குமாக்கு பதில்கள்…

 

எடக்கு மடக்கு”ப் பேட்டி என்று  பாமரனுக்குச் சில கேள்விகள் தட்டினோம். பொறி பறக்க வந்து விழுந்தன கோக்குமாக்கு பதில்கள்…  

” கருணாநிதிக்கு விதவிதமான விருதுகள் வழங்குகிறார்கள். நீங்கள் கருணாநிதிக்கு, என்ன விருது  கொடுப்பீர்கள்?”

ஏற்கெனவே வக்கீல் நோட்டீஸ் வாங்கி வெச்சுக்கிட்டுக் கேக்குற கேள்வி மாதிரி இருக்கே! நானும் வாய் சும்மா  இருக்காம, ‘இமயம்கொண்டான்’, ‘கடாரம் வென்றான்’, ‘ஈழம் கொன்றான்’னு உளறித் தொலைச்சு, புழல், பாளையங்கோட்டை, வேலூர்னு அலையணுமாக்கும்? க்கும்… நான் மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும், அவர் என்னிக்குமே ஒரு ‘அரசியல் வடிவேலு’!


”நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது உண்மையா?”

 இதில் என்ன சந்தேகம்? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி இதுதான் என்கிற வரலாற்று உண்மையே அம்மணி தன் திருவாயைத் திறந்த பிறகுதான் தெரிய வந்தது!

 

‘நீங்கள் ஏன் பின்நவீனத்துவ இலக்கியம் எழுதுவது இல்லை?”

 சிம்பு…

செல்வராகவன்…

ஷங்கர்…

‘மிருகம்’ சாமி…. போன்ற ‘படைப்பாளிகள்’ ஏற்கெனவே அதைச் செய்து வருவதால்!

”தமிழில் ஆஸ்கர் விருது வாங்கத் தகுதி உள்ள நடிகர் யார்?”

உண்மையிலேயே சொல்ல வேண்டுமானால்…

அது நிச்சயம்…

நம்ம… ம்ம்ம்…

வேண்டாம் எதுக்கு வம்பு?

பேசாம, ஏற்கெனவே வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற ஆழ்வார்பேட்டை ஆண்டவனுக்கே தந்துவிடலாம்.

அப்பதான் நீட்ஷேவைப் படிச்சவன்…. சாக்ரடீஸைச் சாப்புட்டவன்…. ஐ.நா. சபையை அறைஞ்சவன்…. ஐரோப்பாவைக் கொடைஞ்சவன்….னு கௌம்புற கண்றாவிகளில் இருந்தெல்லாம், நம் தமிழ் மக்கள் தப்பிக்கமுடியும்!

”அமலாபாலுக்கும் ஆவின் பாலுக்கும் ஆறு வித்தியாசங்கள்?”

கார்ல் மார்க்ஸுக்கும் அ.மார்க்ஸுக்கும் உள்ள வித்தியாசம்தான்….

”ராகுல் காந்தி அடிக்கடி குடிசைகளுக்கே போவது ஏன்?”

”சுத்திச் சுத்தி வந்தீக”னு அப்பா ராஜீவ் அநேக முறை குடிசைகளை வலம் வந்தும் தேர்தல்ல மண்ணைக் கவ்வினாரே… அது எதனால் என்கிற ஆராய்ச்சிக்காக இருக்கலாம்!

”இலவச டி.வி,  இலவச கேஸ், அடுத்து கலைஞர்  இலவசமாக என்ன கொடுக்கலாம்?”

 வேறென்ன… வாட்டர் கிடைக்குதோ இல்லையோ… இனி, இலவச குவார்ட்டர் தான்!

”கொடநாடு ஓய்வுபற்றி ஒரு சின்னக் கவிதை?”

தேர்தலில் கொடா நாடு

எனும்போது கொடநாடு.

கேப்பில் வெட்ட கிடா

கிடைக்கும்போது புகா நாடு!

ஐய்ய்ய்ய்ய்… அவ்வளவு பொற்காசும் எனக்குத்தான்!

”ஏப்ரல் 1 முட்டாள்கள்  தினம் என்றால், அறிவாளிகள்  தினம் எது?”

அக்டோபர் ஆறு! (அப்பத்தான் நான் பொறந்தேனாம். அப்பத்தா சொல்லுச்சு!)

”ஒபாமா..?”

வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்!

”மன்மோகன் சிங் அரசின் சாதனைகள்?”

கூட்டம் கூட்டமாக விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளவைக்கும் விபரீத ‘விவசாயக் கொள்கை…’

நாட்டின் சொத்தாக இருக்கும் கனிம வளங்களைக் கண்டவனை எல்லாம் சுரண்டி எடுக்க விட்டுவிட்டு, எதிர்க்கும் அப்பாவி ஆதிவாசிகளை நக்சலைட் என்கிற பெயரால் போட்டுத் தள்ளும் ‘அகிம்சா கொள்கை…’

சிங்களக் கடற்படையால் பல நூறு தமிழக மீனவர்கள் ‘பரலோகம்’ போய்ச் சேர்ந்தாலும் ஏறிட்டும் பார்க்காத ‘எகத்தாளக் கொள்கை…’

முள்ளி வாய்க்கால் வரை சென்று முடங்கிய ஈழத்து மக்களைத் துல்லிய மாகக் கண்டுபிடித்துக் குதறி எறிய கச்சித மான ரேடார்களை வாரி வழங்கிய அருவருக்கத்தக்க ‘அணிசேராக் கொள்கை…’

இப்படி ஒண்ணா… ரெண்டா..?

”தமிழனுக்கான இலக்கணம் என்ன?”

காலையில் எழுந்ததுமே ராசி பலன் பார்ப்பவன்…

பொழைக்கத் துப்பு இல்லாம…

நேமாலஜியின் பேரால பேரை மாத்திக்கிறவன்…

மூணாவது வாய்ப்பாடுகூட முழுசாத் தெரியாட்டியும் ‘நியூமராலஜி’ பேரால நம்பர்களைக் கூட்டிக்கிட்டு கிறுக்குப் புடிச்சு சுத்தறவன்…

நாளைக்கு ஹேராலஜின்னு (Hairlogy) ஏதாவது ஒரு கருமம் வந்தாலும், கொத்தா முடியைப் பிச்சுக்கொண்டுபோயி…. ‘நல்லா பாத்துச் சொல்லுங்க’ன்னு பல்லிளிச்சுக்கிட்டு நிற்கிறவன்…

பத்து டேக் எடுத்து பஞ்ச் டயலாக் பேசறவன் படத்துக்கு பாலாபிஷேகம் பண்ணுறவன்.

அடப் போங்கப்பா… உங்களுக்கு வேற வேலை இல்ல?

(நன்றி : ஆனந்த விகடன் 26.1.2011)