அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா……

கேள்வி         : நீங்கள் இந்த நாட்டின் முதல் மந்திரியானால்?

எம்.ஆர்.ராதா    : இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களைத் தூக்கில் போட

சட்டம் கொண்டு வருவேன்.

மூவாயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய ஒரு சமாச்சாரத்தை மூணே பக்கங்களில் எழுது என்றால் எப்படி எழுதுவது? சரி எப்படியோ ஓரளவுக்கு ஒப்பேத்தலாம் என்கிற அசட்டுத் துணிச்சலோடு எழுதத் துவங்குகிறேன் இதை.

நடிப்பின் சாகசத்தால் எனது பால்யப் பருவத்தைக் கட்டிப்போட்டது சந்திரபாபுவும் எம்.ஆர்.ராதாவும்தான் எனினும் அதற்கும் முந்தைய கலைவாணரது காலமும் ஓரளவுக்குப் பரிச்சயமாகித்தான் இருந்தது அப்போது. கலைவாணர் என்கிறபோது அவரது துணைவி டி.ஏ.மதுரத்தை  விட்டு விட்டு யாரும் தனித்துப் பார்த்துவிட முடியாது.

அம்பிகாபதி படத்தில் இளவரசி கொடுத்தனுப்பிய ஓலைச்சுவடியோடு வரும் டி.ஏ.மதுரம் “கம்பர் இல்லையா?” என்றதும் கலைவாணர் ”அவுரு கம்பரு…. நான் வம்பரு” என்றபடி ”கண்ணே….. உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?” என்றபடி துவங்கும் பல்வேறு அர்த்தங்கள் தொனிக்கப் பாடும் பாடல் இன்றும் கேட்கச் சலிக்காத பாடல். எவ்வித Kalaivanar_NS_Krishnan_Madhuramசமரசங்களும் இன்றி சமூக மாற்றமே தனது லட்சியமாகக் கொண்டதால் அவர் எதிர் கொண்ட இன்னல்களும் எதிர்ப்புகளும் கணக்கற்றவை. லட்சுமி காந்தன் கொலை வழக்கில் பொய்யாக சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் மீது காழ்ப்பும் வெறுப்பும் இருந்தது என்றால் கலைவாணர் எந்த அளவுக்கு சமூக அவலங்களை எள்ளி நகையாடி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் சினிமாவின் கலகக்காரனது வருகை 1937 இல் அரங்கேறுகிறது. முன்னரே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஆர்.ராதா என்னும் அப்புயல் திரைத் துறையில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது ”ரத்தக்கண்ணீர்” வருகைக்குப் பிறகு எனலாம். சமூகத்தின் மூட நம்பிக்கைகளையும் அவலங்களையும் சாடோ சாடென்று சாடிய இப்படத்திற்கு இணையாக இன்னொரு படம் இன்னமும் வரவில்லை. இன்றைக்கும் தமிழகத்தின் எந்த ஊர் மூலையில் திரையிடப்பட்டாலும் கைதட்டல்களும் கும்மாளங்களுமாய் ரசிக்கப்படும் படம் அது. திரை வாழ்வில் மட்டுமில்லை நிஜ MR.Radhaவாழ்விலும் ஒளிவு மறைவின்றி பட்டவர்த்தனமாக நடந்து கொண்ட ஒரே கலைஞன் நடிகவேள் எம்.ஆர்.ராதாவாகத்தான் இருக்க முடியும். அவர் வைத்திருந்த விலை உயர்ந்த இம்பாலா காரை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் தமிழக வருகையின் போது பயணம் செய்யக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு….”இந்த ராதா போறதுக்குத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன். அந்த ராதாவுக்கெல்லாம் கொடுக்க முடியாது” என்று ஜனாதிபதியாகவே இருந்தாலும் நெத்தியடியாக பதில் சொல்லக்கூடிய துணிச்சல் எவருக்கு வரும்? ஏறக்குறைய நாற்பதாண்டுகாலம் தமிழ் சினிமாவை சுழன்றடித்த இந்தச் சூறாவளி தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

இடைப்பட்ட காலங்களில் டி.ஆர். ராமச்சந்திரன், பாலையா, ஏ.கருணாநிதி, நாகேஷ், வி.கே.ராமசாமி என ஒவ்வொருவரும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள்தான்.

இதில் டணால் தங்கவேலு தனி ரகம். கல்யாணப்பரிசு படத்தில் எழுத்தாளர் பைரவனாக டுபாக்கூர் விட்டு அவர் செய்யும் அலப்பரை இன்றும் மனதில் நிற்கிறது. பாலையா-நாகேஷ் கூட்டணி ”காதலிக்க நேரமில்லை”யில் கலக்கியதைப் போல.

”ஏன் சார் போராட்டம்ங்கிற உங்க கதைல கதாநாயகன் கடைசீல தற்கொலை பண்ணிகிட்டார்? ”

”கடைசீலதான தற்கொலை பண்ணிகிட்டான்…. என்ன செய்யறது அவன் தலை எழுத்து அப்படி…… செத்தான்….” எனும் தங்கவேலுவின்  சமாளிப்புகள் சுவாரசியமானவை.

சந்திரபாபு என்கிற சாகசக்காரனை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. எம்.ஆர்.ராதாவைப் போலவே திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை வகுத்துக் கொண்டு  வலம் வந்தவர்தான் சந்திரபாபு. நடை உடை பாவனை அனைத்திலும் தனி முத்திரை பதித்தது அவரின் உடல் மொழி. அவர் நகைச்சுவையின் உச்சம் மட்டுமில்லை…. c.babuநடனம் – பாடல் என அனைத்திலும் அவரது கொடி பறந்து கொண்டுதானிருந்தது. தூத்துக்குடியில் கிடைத்த எண்ணற்கரிய முத்துக்களிலேயே  அரிய வகை முத்து ஜோசப் பனிமயதாஸ் சந்திரபாபு எனும் முத்துதான்.

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் மறந்து விட முடியாத மற்றொரு மகத்தான நடிகர் சுருளிராஜன். தனித்துவமான குரல்…. தனித்துவமான பாணி என வலம் வந்த சுருளி வாழ்ந்த காலம் மிகக் குறைவு. நாற்பத்தி இரண்டு வயதில் மறைந்தாலும் மாந்தோப்புக் கிளியாய் மனதில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்.

ஆண்களை அடித்துத் துவைத்துக் காயப்போடும் அளவுக்கான பெண் நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பஞ்சமில்லாத பூமி இது. டி.ஏ.மதுரம் சரோஜா போன்றவர்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளத்தக்கவர்களாக அங்கமுத்து, முத்துலட்சுமி, சச்சு என அநேகர் உண்டு. அதில் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து வந்தவர்தான் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கையில் தொடங்கிய ஆச்சியின் பயணம் தில்லானா மோகனாம்பாளில் தொடர்ந்து சிங்கம் வரைக்கும் சிலுப்பிக் கொண்டுதானிருக்கிறது. அதைப் போலவே அலாதியான நகைச்சுவை உணர்வு கோவை சரளாவுக்கு உண்டு. “இந்த ஆம்பளைக கண்டீசனாப் பண்ணுவானுக கெரகம் புடிச்சவனுக” என கலை ஒலக நாயகனே கதி கலங்கும் வண்ணம் சதி லீலாவதியில் கபடி விளையாடியவர் கோவை சரளா.

தேங்காய் சீனிவாசன், குமரிமுத்து, லூஸ்மோகன், கல்லாப்பெட்டி சிங்காரம், ஜனகராஜ் போன்றவர்களும் நகைச்சுவை உலகில் தங்களுக்கான தனித்துவத்தை நிலைநாட்டிக் கொண்டவர்கள்தான்.

நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்தான் எனினும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் போன்றோர் பல படங்களில் பேசிய வசனங்களை கேட்ட பிற்பாடு காதை டெட்டால் போட்டுக் கழுவ வேண்டி வந்திருக்கிறது.

கதைநாயகனே காமெடியனாகவும் பரிணமித்த திறன் பாக்கியராஜுக்கே உரியது.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்குப் பிற்பாடு தமிழ்த் திரைப்படங்களில் அரசியல் எள்ளல் ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம். இந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு வந்தவர்தான் மணிவண்ணன்.

அரசியல் நையாண்டியும், சமூக Maniசிக்கல்கள் குறித்து சூடு கிளப்பும் நக்கல்களும் இவர் தனக்கென வகுத்துக் கொண்ட தனிப்பாணி.

அது இனி ஒரு சுதந்திரமாகட்டும் அல்லது அமைதிப்படை ஆகட்டும் அரசியல் தலைகளை வசனங்களால் தவிடுபொடியாக்குவது என்பது இவருக்கு அல்வா கொடுப்பது…..

சாரி அல்வா சாப்பிடுவது மாதிரி.

ஒவ்வொரு  தேர்தலுக்கும் கருவேப்பிலையாய் பயன்படுத்துவதற்கு தி.மு.க.வுக்கு ஒரு ஆள் தேவைப்படும்.  சந்திரசேகர், டி.ராஜேந்தர் தொடங்கி பலர் தங்கள் பிழைப்பைத் தொலைத்திருக்கிறார்கள் என்கிற வரலாறு தெரியாமல் போய் வகையாய் மாட்டிக் கொண்டவர்தான் வைகைப் புயல்.

அண்டர்வேர் தெரிய ஒய்யார நடை நடப்பது…. வருத்தப்படாத வாலிபர் சங்கமாய் அலப்பரை பண்ணுவது…. வட்டச் செயலாளர் வண்டு முருகனாய் வலம் வருவது…. ”சேகர் செத்துருவான்” என நாய் சேகராய்த் துரத்துவது…. அடித்துத் துவைத்தாலும் ”என்னை நல்லவன்னு சொல்லீட்டான்யா”ன்னு அப்பாவியாய் அழுது புலம்புவது…. என ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதமாய் வடிவமைத்துக் கொண்டவர்தான் வடிவேல். தொண்ணூறுகளுக்குப் பிறகு தனக்கென ஒரு ரசிகப்பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார் வடிவேலு. இவரது படம் ஓடாத தொலைக்காட்சிச் சேனல் vadivelu2இன்னும் உருவாகாத சேனலாய்த்தான் இருக்க முடியும். ஆளும் கட்சி ஏதாவது நினைத்துக் கொள்ளுமோ என்கிற பயத்தில் வடிவேலுக்கு வாய்ப்புகள் வராமல் இருக்கலாம். ஆனால் அந்த இழப்பு அவருக்கல்ல. தமிழ் திரையுலக ரசிகர்களுக்குத்தான்.

எனது பால்ய காலங்களைப் பலர் பங்கு போட்டுக் கொண்டாலும் எனது இளமைக் காலத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் இருவர் மட்டுமே. ஒன்று : இளையராஜா. மற்றொன்று: எனது தானைத் தலைவன் கவுண்டமணி.

எண்பதுகளில் ஒரு திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்றால் அது இளையராஜா இசையமைத்ததாய் இருக்க வேண்டும். அல்லது கவுண்டமணி நடித்ததாய் இருக்க வேண்டும்.

என் திரை உலகத் தலைவன் Counter மணி குறித்து ஒரு கட்டுரை அல்ல…. பல புத்தகங்கள் போடவேண்டும். எம்.ஆர்.ராதாவைப் போலவே படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல்…. எதிரில் இருப்பவர் எம்மாம் பெரிய நடிகர் என்றாலும் நையாண்டியால் நடு நடுங்க வைக்கும் நக்கல்… எல்லாம் கவுண்டமணிக்கே கைவந்த கலை. உடுமலைப்பேட்டை பக்கம் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து திரை உலகையே தனது நக்கல் நையாண்டியால் திரும்பிப் பார்க்கவைத்த பெருமை கவுண்டமணிக்கே உரித்தானது. வாழ்வின் மிக மிக எளிய மனிதர்கள்தான் இவரது கதாபாத்திரங்கள்.

இருப்பினும் கருப்பாய் இருப்பவர்களைச் சீண்டுவது… மாற்றுத் திறனாளிகளைக் கிண்டலடிப்பது போன்றவைகளைத் தவிர்க்கலாம். இதற்கு என்ன காரணமாய் இருக்கும் என யோசித்துப் பார்த்தால்… எம்.ஆர்.ராதாவுக்கு இருந்தது போன்ற இயக்கப் பின் புலமோ…. தந்தை பெரியாரைப் போன்றோரது தத்துவத் தலைமையோ இவருக்கு இல்லாததுதான் இப்பிழைகளுக்குக் காரணமாய் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இந்தியனில் கமலையே கலாய்க்கும் கிண்டல்களில் ஆகட்டும்…

மன்னனில் ரஜினியையே மிரள வைக்கும் நக்கல்கள் ஆகட்டும்….

சத்யராஜை “இது ஒலக நடிப்புடா சாமி”ன்னு ஓரங்கட்டுவதில் ஆகட்டும்…. கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணியேதான்.

கவுண்டமணியும் செந்திலும் வெறுமனே உதைத்துக் கொள்கிறார்கள்…. சட்டித் தலையா…. கோமுட்டித் தலையா…. என்று திட்டுவது மட்டும்தான் இவர்களது நடிப்பாக இருக்கிறது….. என்று சலித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அடி-உதையைப் பொறுத்தவரை லாரல்-ஹார்டி தொடங்கி சாப்ளின் வரைக்கும்கூட உதைத்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

நகைச்சுவை என்பது ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒவ்வொரு வகையாகத்தான் இருக்கிறது. குப்பத்து நகைச்சுவைக்கும் அக்கிரகாரத்து நகைச்சுவைக்குமிடையே அநேக மாறுபாடுகள்.

சேரிப்பகுதியின் நட்புக்கும், காஸ்மோபாலிட்டன் ‘நட்பு’க்குமிடையிலேயே எண்ணற்ற வித்தியாசங்கள். எனவே இதுதான் நகைச்சுவை என்று ஒரு பொதுப்பண்பை நிறுவுவது ஆதிக்க மனோபாவத்தின் இன்னொரு வெளிப்பாடாகத்தான் அமையும்.

மேல்தட்டு மக்களுடைய கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் மீதும் திணிப்பது இமாலயத் தவறு.

பிணம் புதைப்பவர்…

முடி திருத்துபவர்…..

சலவையாளர்…..

சைக்கிள்கடைக்காரர்….. என சமூகத்தின் எளிய நிலையிலுள்ள மக்கள் கூட்டங்களின் நாயகர்கள்தான் கவுண்டமணியும் செந்திலும்.

“ஏண்டா அம்பி…. உன் பையன் பள்ளிக்கூடம் போயிட்டா அப்புறம் மோளம் அடிக்கிறது யாருடா…?”

“ஏன் உன் பையன அனுப்பு….”

போன்ற வசனங்கள் தொடங்கி….

“என்னடா ட்வெண்டியத் செஞ்சுரீல இன்னும் மொறப்பொண்ணு…..நொரைப் பொண்ணுன்னு சொல்லிகிட்டு சுத்தறீங்க?” என்பதில் தொடர்ந்து….

”அதென்ன மொதல் மரியாதை…? ரெண்டாவது மரியாதை குடுத்தா ஒத்துக்க மாட்டியா?

பரிவட்டமாவது…. சொரிவட்டமாவது….. மடிச்சுக் கட்டுனா கோவணம்…. விரிச்சுக் கட்டுனா வேட்டி…. தோள்ல போட்டா துண்டு…. இதுக்குப் போயி ஏண்டா அடிச்சுகிட்டு சாகறீங்க….?” போன்ற நெத்தியடி வசனங்களில் மூடத்தனமான பழம் பெருமைகளைச் சாடுவதில் முத்திரை பதித்தவர் கவுண்டமணி.

”என்னடா ஓட்டவாய் நாராயணா….. திருட்டுக் கணக்கு எழுதியே பாதி காட்ட வாங்கீட்ட போலிருக்கு….. குளிக்கிறியோ இல்லியோ சிவகடாட்சமாட்ட நெத்தீல ஒரு பொட்டு அம்சமா வெச்சிருக்கடா…. ஆனா இந்த மாதிரி வேல செய்யறவங்க இப்படித்தான் இருப்பாங்க….” என்கிற வசனத்தைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஏனோ மத்திய அமைச்சர் நாராயணசாமி நினைவுதான் வரும்.

தோழர் மணிவண்ணன் அவர்களது மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது திரை உலகமே திரண்டு வந்திருந்தது. அவர்களிடம் பேசுவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது? ஆனால் அதிலும் சமூக அக்கறையும், புத்தக வாசிப்பும் உள்ள திரையுலக நண்பர்கள் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு கிளம்பலாம் என்றிருக்கையில் நண்பன் ஓடி வந்தான்…. “தலைவா…. கவுண்டமணி வந்துட்டு கிளம்பிப் போயிகிட்டு இருக்காரு” என்றான் மூச்சு விடாமல். ”எங்கடா?” என்றேன் பரபரப்பும் உற்சாகமும் தொற்றிக் கொள்ள. ”அதோ…. அங்கே” என்று வாசலைக் காண்பித்தான். பின்னங்கால் பிடறியில் பட ஓடினேன். படி இறங்குவதற்குள் சென்று குறுக்கே விழுந்தேன். ”தலைவா நானும் உங்கூர்ப் பக்கம்தான்…கோயம்புத்தூர்” என்றேன். எனது கையை வாஞ்சையோடு பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு ”ச்சொல்லுங்க…” ”ச்சொல்லுங்க…” என்றார். அதற்குள் தானைத் தலைவனுக்குப் பக்கத்தில் நின்ற ஒருவர்…. ”சார் போன திங்கக் கிழமை பூஜை போட்டாங்கல்ல…. அவரும் இவுங்க ஊர்தான்” என்று சொல்லி வாய் மூடுவில்லை…. ”பூஜை எல்லாம் நல்லாத்தான் போடுவானுக….. ஆனா படம்தான் ரிலீசாகாது” என்று மறு நொடியே ஒரே போடாய்ப் போட….. அங்கு எழுந்த காதைப் பிளக்கும் சிரிப்பொலியில் நான் காணாமல் போயிருந்தேன்….

இதுதான் கவுண்டமணி.

Thalaivan

நன்றி : ”அந்திமழை”  மாத இதழ்

Advertisements

6 thoughts on “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா……

  1. Kalaivaanar muthal kavundamani varai enna oru thelivana,aazhamana judgement neenga Paamaran illa sir bayankaran.Madura style ‘Intha aalu bayankaramana aalappo’.Vaikaipuyalai thotta neengal vivekaippatri konjam solliyirukkalam.Athe mathiri Thengai seenivaasanaippatriyum konjam solliyirukkalam. Oh ! ….neenga MR Radha sir fan…..naanthan sutten….. appa… Thenga…..sorry sir…. Vennai thirandu varumpothu thayirthaaliya….morthaaliya?…etho oru thaali udayakkoodathu.Udaya vidamatten sir. Kalayulaka methaikaludan,avarkal uiyir kodutha kaalathai vellum kathapaathirankalai arumaiyaka kan kulira kolam pottu kaanpiththatharkku, nantri…nantri.Ithu pol puthupputhu kolangalai kaanakkathirukkun anban, Thulaidharan Thillaiakathu.

  2. அருமையான ஒரு அலசல் அந்தக் காலம் தொட்டு இப்பொழுது வரை காமெடியில் கலக்கியவர்கள் பற்றி. இது ஓகே. ஆனா இப்பவயசானலும் ஹீரோங்கர பேர்ல சிலர் காமெடி பண்றாங்களே அவங்க ரவுசு தாங்கலையே அவங்கள எப்ப அலசிக் காயப் போடப்போறீங்க?

  3. நன்றாகச் சிரித்து மகிழ்ந்து ரசித்து வாசித்தேன். அருமை. பொதுவாகவே உங்களின் எழுத்தில் நகைச்சுவை உணர்வு மிகுதியாக இருக்கும். இப்பதிவில் நகைச்சுவை மன்னர்களின் ரகளைகளைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள்.. கலாட்டாவான பதிவுதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s