விடைபெற்றுவிட்ட அக்கா செங்கமலம் நினைவாக…..

DSC_2678 copy

ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஒரு பிரபல வார இதழின் ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு உலகமகா விஷயத்தைக் கண்டுபிடித்தவர் போல என்னை ரகசியமாக ஓரங்கட்டினார். “யார் கிட்டயும் சொல்லீர வேண்டாம்….. இது நமக்குள்ளயே இருக்கட்டும்….. உங்கள ஒண்ணு கேட்பேன்…… மழுப்பாம பதில் சொல்லுவீங்களா?” என்றார்.

முதலில் விஷயத்தை சொல்லுங்க என்றேன்.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு…… “நம்ம கலைஞர் ஒரு தீவிரமான நாத்திகர். ஆனா…. அவங்க வீட்டுல பலபேர் சாமி கும்புடுறாங்களே…… இது நாத்திகத்துக்கு கிடைத்த தோல்விதானே?” என்றார் படுரகசியமாக.

நீங்க சொல்ற மாதிரி அப்படியும் வெச்சுக்கலாம். ஆனா இதுல இன்னொரு கோணமும் இருக்கிறதே….. என்றேன்.

”அதென்ன கோணம்?” என்றார் பத்திரிகை ஆசிரியர்.

“தன்னை நாத்திகராய் சொல்கிற கலைஞர் வீட்டில் சிலர் சாமி கும்பிடுவது நாத்திகத்துக்குக் கிடைத்த தோல்வி என்றால்……. ஆன்மீகத்தைக் கடைபிடித்த அவரது பெற்றோர் முத்துவேலருக்கும் அஞ்சுகத்தம்மாளுக்கும் கலைஞர் மகனாகப் பிறந்தது ஆத்திகத்துக்குக் கிடைத்த தோல்விதானே?”என்றேன்.

அதன் பிறகும் என்னோடு பேசிக் கொண்டிருக்க அவருக்கு என்ன மண்டையில்  மறையா கழண்டிருக்கிறது? என்ன ஆனாலும் சரி..… எப்போதும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் அவரது பெயரை மட்டும் ஒரு போதும் சொல்ல மாட்டேன் நான்.

இப்படித்தான் இப்போது இன்னொரு உலகமகா சர்ச்சை. இயக்குநர் மணிவண்ணன் சீரடி சாய்பாபா கோயிலுக்குப் போய் ஆத்திகராக அவதாரம் எடுத்துவிட்டார் என்று.

பொதுவாக அவரும் நானும் சினிமா தவிர உலக நிகழ்வுகள் குறித்தே உரையாடிக் கொண்டிருப்போம்.  ஒரு புத்தகம் வெளிவந்து அச்சு காய்வதற்குள் படித்து முடித்து விடுவது அவரது வழக்கம்.

கடந்த வாரம் பேசிக் கொண்டிருந்தபோது “என்ன தலைவா….. நம்மளையும் ஒரு சீரடி சிஷ்யனாக சேர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்றேன். அவரோ சீரடிக்கு அருகிலுள்ள மகாத்மா பூலே அவர்களது சிந்தனையாளர் வட்டத்தைப் பற்றியும் அவர்கள் நடத்தி வருகிற நூலகம் பற்றியும் சொல்லிக் கொண்டு போனார்.

எனக்குத் தெரிந்து தோழரின் துணைவியார் செங்கமலம் அவர்கள்தான் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர். ஓரிரு அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்ட அவருக்குத் துணையாக எங்கும் அழைத்துச் செல்வது  மட்டுமே மணிவண்ணன் அவர்களது பணி. அவர் சீரடி போனதும் தெரியும். திரும்பி வந்ததும் தெரியும் நண்பர்களுக்கு. இதற்குள் யாரோ ஒரு புண்ணியவான் திரித்துவிட்டார் கயிரை.

அதுவும் ஆன்மீகவாதிகள் கொலைக்கேசு……. ரேப் கேசு……. போதை மருந்து மிக்சிங் கேசு…… என்று ஆன்மீகத்தின் அண்டர்வேரே கிழிந்து தொங்கும் நேரமாகப் பார்த்து அங்கே போய் தஞ்சம்புக அவருக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

1983 லேயே வாடிகன் போனபோது போப்பாண்டவரைப் பார்த்துவிட்டு வந்தவர்தான் நம்ம மணி.

(”அட என்னப்பா சந்தடி சாக்குல நம்ம பேரச் சொல்லி கூப்பிடுற….?”

”அப்பறம் மணிதானுங்களே உங்க பேரு?”)

அதற்காக……..

இஸ்ரேல் போனதற்காக யூதராகவோ……

வாடிகன் போனதுக்காக கிருஸ்தவராகவோ…….

மெக்கா போனதுக்காக முஸ்லிமாகவோ…….. ஆகின்ற சமாச்சாரமெல்லாம்

அண்ணாத்தையின் அகராதியில் கிடையாது.

இருவரும் இதைப்பற்றிப் பேசுவதைக் கேட்ட அவரது துணைவியார்…..”அவரு கொள்கை அவருக்கு. என்னோட கொள்கை எனக்கு.  எனக்குத் துணையாக வருவதால அவரு ஆத்திகருமில்ல….. அவருடன் கூட்டங்களுக்குச் செல்வதால் நான் நாத்திகருமில்ல தம்பி.” என்று பெரிய போடாய் போட்டார் அக்கா செங்கமலம்.

இது எப்படி இருக்கு?

நன்றி : தமிழக அரசியல் இதழ்

2 thoughts on “விடைபெற்றுவிட்ட அக்கா செங்கமலம் நினைவாக…..

  1. ஆத்திக தம்பதிகளுக்குப் பிறந்த கலைஞர், ஆத்திகத்திற்குக் கிடைத்த அடி என்ற பதில் அருமை. தமிழகம் தன் கால ஏடுகளில் பொறித்து வைக்க வேண்டிய நிகழ்ச்சி. கலைஞரையும், ஆத்திகத்தையும், நாத்திகத்தையும், பா……மரமான பாமரனையும் இணைத்துப் பேசி மகிழக் கிடைத்த அரிய சந்தர்பம். பிறகு தந்தை பெரியார், நாத்திகரானது அன்று ஆன்மீகத்தின் பெயரால், இறைவனின் பெயரால் பிறந்த மூட நம்பிக்கைகளையும், நடந்த அட்டூழியங்களையும் எதிர்த்து திராவிட மக்களைக் காக்கத்தானே. இத்தனை அட்டூழியங்களைக் கண்டிக்கவும், அதை செய்பவர்களைத் தண்டிக்கவும் இயலாத இறைவன் இருப்பதும், இல்லாததும் ஒன்றே என்னும் முடிவெடுக்கத் தூண்டியதும் அன்றையச் சூழல்கள்தான். இது போன்ற இறைவன் பெயரால் நடந்த அட்டூழியங்கள் தான் 1917ல் அன்றைய ரஷ்யாவில் நடந்த புரட்சி. தென்னகத்தில் தமிழகத்தில் மட்டுமே திராவிடப் பண்பாடு, ஆரிய பண்பாடுகளின் பாதிப்பு இல்லாமல் இருக்கிறது. அதற்கு நம் தந்தை பெரியார்தான் காரணம். உயர்வு தாழ்வு மனப்பான்மையுள்ள அந்தணர்கள் மற்றும் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் அட்டூழியத்தை வேரோடு அழித்த அவதாரம்தான் அவர். எங்கும் எளிதில் வேரோட்டம் நடத்தும் உயர்வு, தாழ்வு மனப்பான்மை இப்போது எப்படியோ திராவிட மனதுகளை ஆக்ரமித்திருக்கிறது. சாதிக் கட்சிகள், சாதி அரசியல் என்று அதற்கு உரமாக்கும் சூழல்களும் செழிப்போடு வளர்கிறது இத்திராவிட மண்ணில். எனவே தமிழகத்திற்கு ஒரு பெரியார் தேவை. இறைவனையே இல்லை என்று நிரூபித்த பெரியாரால் மட்டுமே எப்போதோ தமிழ் இதயங்களில் வந்து ஒட்டிக்கொண்ட உயர்வு தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க முடியும். காத்திருப்போம் ஒரு பெரியாரின் வரவுக்காக. ஆத்திகர்கள் அதற்காக இறைவனை வேண்டுவதிலும் தவறில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s