கொடை புடிச்சு நைட்டுல….. பறக்கப் போறேன் ஹைட்டுல….

 

முன்பெல்லாம் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. அப்பாவிடம் வருட இறுதியில் இருந்தே நச்சரிக்க ஆரம்பித்தால்தான் ஆறு மாதம் கழித்துக் கிடைக்கும் அந்த வருடத்தைய ”புது” டைரி. இடைப்பட்ட காலங்களில் எவள் எவளிடமெல்லாம் பல்லிளித்தேன்…. எவள் எவள் காறித் துப்பினாள் என்கிற ”வரலாற்றுச் சாதனை”களெல்லாம் எழுதுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும் என்பது பெருந்துயரம். டைரி எழுதச் சொல்லிக் கொடுத்த அப்பா இந்த உலகத்தை விட்டு ஜூட் விட்டபிறகு நாட்குறிப்பு எழுதும் பழக்கத்துக்கும் ஜூட் விட்டுவிட்டேன்.

ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. நாட்குறிப்பென்ன…. மணிக்குறிப்பே எழுதுகிறார்கள் நம் மக்கள். அதுவும் இணைய தளங்களில் நுழைந்தால் அவனவன் கக்கூஸ் போவதைக் கூட I am in Bathroom என்று கமெண்ட் போட்டுவிட்டுத்தான் கோவணத்தை….  சாரி… சாரி….. ஜாக்கியைக் கழட்டுகிறான். இன்னும் சிலர் “நேற்று பீட்ரூட் சாப்பிட்டேன் செகப்பாப் போச்சு…” ”கீரை சாப்பிட்டேன் பச்சையாப் போச்சு…” என்கிற ரீதியில்கூட புள்ளிவிவரங்களைப் போட்டுத் தாக்குகிறார்கள். சில மாதங்கள் முன்பு எனக்குத் தெரிந்த ஒரு தோழி ஒருத்தி பிரசவ வலியில் மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில்கூட “On the way to hospital. Within few hours you will see my baby”  என்று 24×7 சேனல்களையே தூக்கிச் சாப்பிடும் வகையில் செய்தியை முந்தித் தந்தாள். நல்லவேளை இவள் லேபர் வார்டுக்குள் லேப்டாப்பைக் கொண்டு போகாமல் விட்டாளே என்று நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டியதாயிற்று.

ஆக மக்களே…. என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு எல்லாம் இந்த மாதிரி சுறுசுறுப்பெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. நொடிக் குறிப்பு….. மணிக் குறிப்பு…. நாட்குறிப்பு…. வாரக் குறிப்பெல்லாம் சாத்தியப்படாது நமக்கு. ஆக அடியிற்காணும் குறிப்புகள் அனைத்தும் நாட் குறிப்புகளல்ல….. மாதக் குறிப்புகள். படியுங்க…. படியுங்க….. படிச்சுகிட்டே ஒழியுங்க.

சிறுவயதில் சினிமா பார்க்கப் போவது போன்ற சாகச நிகழ்ச்சி வேறு எதுவும் இல்லை. அதுவும் படம் வெளிவந்த முதல்நாளே சினிமா பார்ப்பது என்பது கின்னஸ் சாதனைகளில் சேர்த்த வேண்டிய சமாச்சாரம். ஒரு மைல் நீளத்துக்கு நிற்கும் கியூவில் இடம் பிடித்து மணிக்கணக்கில் நின்று இன்ச் இன்ச்சாக நடந்து போய் டிக்கெட் கவுண்ட்டரில்  காசை நீட்டும் நேரம் பார்த்து ”முடிஞ்சுது” என்று அந்த சிறு ஜன்னலைச் சாத்துவார்கள். அய்யோடா… என்றாகி விடும். போரில் தோற்று புறமுதுகிடுவதற்குச் சம்மல்லவா இது…? இத்தகைய அவமானத்தை எப்படித் தாங்கும் எம் ஆண்ட பரம்பரை? அப்புறம் என்ன…. அடுத்த காட்சிக்கு அப்படியே நிற்க வேண்டியதுதான்.

கவுண்ட்டருக்குள்ளே நிற்பது கொஞ்சம் பாதுகாப்பு. ரோட்டில் நீண்டு நிற்கும் வரிசையில் நின்றால் எப்ப அடி விழும் என்று எவருக்கும் தெரியாது. “டேய் குச்சான் வந்துட்டான்”ன்னு ஒரு சத்தம் கேட்கும் அவ்வளவுதான்…. குறுக்கால நுழைஞ்சவன்…. கண்ணியமா நின்னவன்… என எல்லோருக்கும் கிடைக்கும் அடி. அந்த அடியிலும் ஒரு நேர்மை இருக்கும். லத்தியில் முழங்காலுக்குக் கீழே சர சரவென்று அடித்துக் கொண்டே வருவார்கள் போலீஸ்காரர்கள். படம் பார்த்து முடித்து வெற்றிக்கொடியுடன் வீடு திரும்பும்போதுதான் புரியும் போலீஸ்காரர்களின் அருமை.

”யாரக் கேட்டுட்டு சினிமாவுக்குப் போனே? ” என்று வீட்டில் உள்ளவர்கள் அடிக்க ஆரம்பித்தால்…. அடி விழும் இடமே முழங்காலுக்கு மேலாகத்தான் இருக்கும். அப்படி அடிக்கிற அடியும் படக்கூடாத இடத்தில் பட்டு தங்கள் சந்ததி பெருகாமல் போய்விடுமே என்கிற கவலையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. ச்சே…. என்ன ஜென்மங்களோ….

மக்களின் இதயத்தைத் தொடும் திரைப்படங்களுக்காக எவ்வளவு பாடுபடுவார்களோ நம் இயக்குநர்கள் அதை நானறியேன். ஆனால் தமிழ்ப்படங்களை விடவும் மாற்று மொழிப்படங்களுக்கு தமிழில் பெயரிடுபவர்கள் படும்பாடுதான் பெரும்பாடு. ஒரு மலையாளப் படத்திற்கோ அல்லது ஒரு ஆங்கிலப் படத்திற்கோ தமிழில் பெயர் சூட்டுவதற்குக்கூட அவர்கள் சங்க இலக்கியங்கள் தொடங்கி சகலத்தையும் கரைத்துக் குடிப்பார்கள்.

எனது கல்லூரிக் காலங்களில் வெளி வந்த Rivals என்கிற ஆங்கிலப்படத்திற்கு அவர்கள் சுவரொட்டியில் போட்டிருந்த தூய தமிழ்ப் பெயர் “படுக்கலாமா? வேண்டாமா”. அதை விடவும் “ ”மழு” என்கிற மலையாளப் படத்திற்கு அவர்கள் சூட்டியிருந்த திருநாமம் “மாமனாரின் இன்ப வெறி”. உண்மையில் மழு என்றால் கோடாலி என்று மலையாளத்தில் அர்த்தம். ஆனால் அப்படியெல்லாம் ராவாகப் பெயரிட்டால் முன் தோன்றிய மூத்தகுடி முண்டியடித்து வராது என்பது அவர்களது துல்லியமான கணிப்பு. ஆனால் அந்தப் படத்திற்கு மூன்றாம் நாள்கூட எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பது வேறு விசயம்.

ஒன்று மட்டும் புரிந்தது அப்போது…. இவர்கள் காந்தியைப் பற்றிப் படமெடுத்தால்கூட “கஸ்தூரிபாவின் இரவுகள்” என்றுதான் பெயரிடுவார்கள் என்று.

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட எனக்கு கடந்த மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. அதுவும் தோழன் ராமிடம் இருந்து. “தோழர்! நம்ம தங்கமீன்கள் படத்தோட பிரிவ்யூ ஷோ (சிறப்புக் காட்சி) அடுத்த வாரம் வெச்சிருக்கோம் நீங்க அவசியம் வரணும் தோழர்” என்று. மிதி… உதை பட்டுப் படம் பார்த்த பரம்பரைக்கு இப்படியொரு அழைப்பா? “நிஜம்மாத்தான் சொல்றீங்களா?” என்றேன். கிளம்பி வாங்க தோழர் என்றார் ராம். அப்புறம் என்ன…. கொடை புடிச்சேன் நைட்டுல….. பறக்கப் போறன் ஹைட்டுல…. என்று அர்த்தராத்திரியில் கிளம்பிவிட்டேன்.

thangameengal-blog

”கற்றது தமிழ்” வந்து ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் “பறவையே எங்கு இருக்கிறாய்” என்கிற ரிங் டோனோடு சுற்றிக் கொண்டிருக்கிற அநேக இளைஞர்களை அறிவேன் நான். இதில் என்ன மிரட்டியிருக்கிறாரோ என்கிற திகிலோடே அரங்கினுள் நுழைந்தேன். ஏகப்பட்ட திரையுலகப் பிரபலங்கள்… பிராப்ளங்கள்…. எழுத்தாளர்கள் என அரங்கு நிறைந்திருந்தது. விளக்குகள் அணைந்ததும் அலைபேசியை அணைத்தேன்.

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. ஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்….. என்று கீழே உள்ளதே கழண்டு விழும்படி கத்தும் கதாநாயகர்கள்…..

நீ பாத்ததுலயே பிரசவிச்சேன் நானு…. என இடுப்பாட்டும் கதாநாயகிகள்….

முதல் இரவோட மூணாம் சாமத்துக்குள்ள ஒன் பொண்டாட்டி தாலிய அறுக்காம விடமாட்டண்டா…. என மிரட்டும் வீச்சரிவாள் வில்லன்கள்…..

எங்க சாதியப் பத்தி என்னடா நெனச்சே…. அங்கிட்டு மட்டுமே அஞ்சு வெச்சிருக்கோம்…. என அலப்பரை பண்ணும் அடிமடையர்கள்….

என எதுவும் இல்லாத படம்.

கண்களில் ஒத்திக் கொள்கிற மாதிரி காட்சிகள்…. வழக்கமாய்ச் சுற்றும் கதாபாத்திரங்களின்றி அழகான இயல்பான மனிதர்களாய் வந்து போகிறார்கள் ஒவ்வொருவரும்.

அப்பாவுக்கும் மகளுக்குமான உயிரை உருக்கும் உறவில் தொடங்கும் படம்…. என ஆரம்பித்து கதையைச் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் அடிக்க வருவீர்கள் நீங்கள். ”மூடு…. நாங்க படம் பாத்துக்கறோம்” என்று.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல…. குழந்தைகளின் கல்விக்காக  பீஸ் கட்டியே நொந்து நூல் நூலாய்ப் போன  ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கமீன்களைப் பிடிக்கும்.

மக்களின் ரசனைமிக்க வலையில் சிக்கியிருப்பது ராம் என்னும் இயக்குநர் மட்டுமல்ல.

ராம் என்னும் மகத்தான நடிகனும்தான்.

இந்த  மண்ணில்  இதுபோல்  யாருமிங்கே

எங்கும்  வாழவில்லை  என்று  தோன்றுதடி……”  எனும் முத்துக்குமாரின் வருடும்  வரிகளுக்கு  ஆனந்தமாய்த்  தன்  யாழெடுத்து  மீட்டியிருக்கிறார்  யுவன்.

படம் முடிந்து வெளியில் வரும்போது ராம் எதிரில் நின்றார்.

இந்தத் தங்க மீன்கள் மட்டும் போதாது…. இதைப்போல் இன்னும் இன்னும் வேண்டும் என்று சொல்லத் தோன்றியது எனக்கு.

வழக்கம்போல் சிக்கிச் சீரழிஞ்சு தியேட்டரில் பார்க்கலாம் இன்னொருமுறை என்று காத்திருந்தால் …

போதுமான தியேட்டர் கிடைக்கவில்லை….

திரையிடுவது தள்ளிப்போகிறது….

ஆகஸ்டுக்கு என்றார்கள்.

இந்த ஆகஸ்ட் என்றில்லை…. எந்த ஆகஸ்ட்டில் வந்தாலும் பார்ப்பதற்குக் காத்திருக்கிறார்கள் கண்ணியமான படங்களை எதிர்நோக்கும் நம் மக்கள்.

ஏனெனில் ராமின் கைகளில் இருப்பது கேமரா அல்ல.

துப்பாக்கி.

thangameen2

 

 

 

நன்றி: “அந்திமழை” மாத இதழ்.

Advertisements

3 thoughts on “கொடை புடிச்சு நைட்டுல….. பறக்கப் போறேன் ஹைட்டுல….

  1. மிகவும் எதிர்பார்க்கிறேன் தங்கமீன்களை.. கடைசியாய் திரையரங்கில் சென்று பார்த்த படம் மயக்கம் என்ன.. அந்த மயக்கத்தில் அதற்கு பிறகு திரையரங்கிற்கே செல்லவில்லை.

    நேர்த்தியான பதிவு. நன்றி.

  2. சே! என்ன கொடுமை!…இந்த மாதிரி.ப்ரிவ்யு ஒரு அனுபவமாக ரசித்து எழுதுவீங்கனா…உங்கள நான் நிலம்பூர், மலப்புரம், கேரளாவுக்கு, அழைத்து முதல் மரியாதை செய்திருப்பேனே, ஸார். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. ஒரு இரண்டு நாள், ஜூன் 2014 ல் உங்களுக்கு சொகர்யப்படுகிற மாதிரி இரண்டு நாள் வரமுடியும் என்றால், குழந்தைகள் திரைப்பட விழாவிற்காக எங்கள் ப்ள்ளியில் நாங்கள் வெளியிடும், வெளியிட்ட, 30 நிமிட திரைப்படங்களின் ப்ரிவ்யு பார்க்கலாம். என்ன நக்கலா ஒரு சிரிப்பு அங்க? தமிழகத்தில ஒவ்வொரு விழாவிலும் கூப்பிட்டு கோமாளித்தனம் பண்ணுகின்ற டார்ச்சர் தாங்கல. இதுல மலையாளத்து டார்ச்சர் வேற அப்படி சிந்திச்சுட்டீங்க இல்லையா? கேரள மாணவ மாணவியர்களுடன் செலவிட சில மணித்துளிகள். அவர்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு. உங்களுக்கு ந்ம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள சில நிகழ்ச்சிகள்….. பாருங்க………….மனமிருந்தால் மார்கமுண்டுதானே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s