பாழாய்ப்போன அந்தப் பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே…..

அநேக அசடுகள் திராவிட இயக்கங்கள் என்பவை எவை? திராவிடக் கட்சிகள் என்பவை எவை? என எதுவும் புரியாமல் எப்படிப் புலம்பித் திரிகின்றன…..

திராவிடர் இயக்கத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையே பண்பாட்டுத் தளத்தில்…. செயல்பாட்டுத்தளத்தில்….. அணுகுமுறைகளில்…. உள்ள  எண்ணற்ற வேறுபாடுகள் எவையெவை? என்பது குறித்த போன இதழ் கட்டுரைக்கு எதிர்பாராத திசையில் இருந்தெல்லாம் வந்த  வரவேற்பைக் கண்டு கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன்.

ஒரு ”மென்மனதுக்குச் சொந்தக்காரர்” என்று போன இதழில் குறிப்பிட்டிருந்தது வேறு எவரையுமல்ல வண்ணநிலவன் எனும் திருநாமம் பூண்ட துர்வாசரைத்தான்.

இதோ….இனி அன்னாரது அருள்வாக்குகளைச் சற்று அவதானிப்போம்.

அருள்வாக்கு  1 :

”திராவிடம் ஆரியம் என்ற கருத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கருத்தாக்கமே. திராவிடம் என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது.”

திராவிடம் ஆரியம் என்பதையே அந்நியர்தான் உருவாக்கினார்கள் என்றால் சாதிக்கொரு நீதி வைத்து மக்களைக் கூறுபோட்ட மனு (அ)தர்மத்தை உருவாக்கியவன் எந்த ஆங்கிலேயன்?

ஆங்கிலேயர்கள் உருவாக்கியது என்றால் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னரே “பறைச்சியாவதேதடா…. பணத்தியாவதேதடா?” என்று பொட்டில் அடித்தது போல் பதினெண் சித்தர்கள் கேள்வி எழுப்பியது எவரை நோக்கி? எதன் பொருட்டு?

கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையிலும் கூட ஓட்டல்களில் “பிராமணாள் – இதராள்” என மக்களைக் கூறுபோட்டு பிரித்து உட்கார வைத்தது  யார் போர்ச்சுக்கீசியரா? பிரிட்டிஷ்காரர்களா? அந்த “இதராளுக்கு” என்ன பெயர்?

கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் ”நாங்க மட்டும் உள்ளே… மத்தவா வெளியே” என  உள்ளே-வெளியே விளையாட்டை விளையாடியது…. இன்னும் விளையாடிக் கொண்டிருப்பது ஆங்கிலேயரா? அய்ரோப்பியரா?

சூரியன் மறையாத தேசத்துக்காரர்கள் வருகைக்கு முன்பிருந்தே கல்வியில்…. வேலையில்…. கருவறையில்….. என சகலத்திலும் 97 சதவீத மக்களுக்கு எதையும் பகிர்ந்தளிக்காமல் உங்களூர் அல்வாவை தவணை முறையில் தந்தவர்கள்…. தந்து கொண்டிருப்பவர்கள் யார்? அயர்லாந்துக்காரர்களா? ஆப்பிரிக்கர்களா?

” ’ஆரியராவது, திராவிடராவது? அதெல்லாம் இன்றில்லை’ என்பீர்கள். இங்கே வாருங்கள்; பேசாமல் மேல் துண்டு போட்டுக் கொண்டு நாலு வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டுவிட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்!” என்ற பெரியாரின் கேள்விக்கான விடை இன்றும் எவரிடமிருக்கிறது?

அருள்வாக்கு  2:

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் என்று கால்டுவெல் சொன்னதையே கிளிப்பிள்ளை போல் வழிமொழிந்தார் மனோண்மணியம் சுந்தரம் பிள்ளை.” இதுவும் அன்னாரது அறிவார்ந்த கூற்று.படம்

ஆக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என ஆராய்ந்து எழுதிய கால்டுவெல்லுக்கும் ஆராய்ச்சி அறிவில்லை…. மனோண்மணியம் சுந்தரனாருக்கும் சொந்த புத்தி கிடையாது என்கிறார் இந்த மாமேதை. ஆக திராவிடத்தின் மீதே இந்தப் பாய்ச்சல் பாய்பவருக்கு அடுத்து வரும் வரிகளான ”ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!” என்பதை கேட்கும்போது எந்த இடத்தில் எரிச்சல் ஏற்படும்

அருள்வாக்கு  3:

“காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்த ஈவெரா தனியாகக் கட்சி ஆரம்பித்தபோது, நீதிக்கட்சியின் கொள்கைகளையே சுவீகரித்துக் கொண்டு திராவிடர் கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் வைத்தார்.”

அடப்பாவி…. காங்கிரஸ் கட்சியில் எதற்காக அதிருப்தி அடைந்தார்? மனைவி நாகம்மையாருக்கு எம்.பி,. சீட் கொடுக்கவில்லை என்றா? அல்லது தங்கை கண்ணம்மாவுக்கு கட்சித்தலைவர் போஸ்ட் கொடுக்கவில்லை என்றா?

காங்கிரஸ் உறுப்பினர் ஆன காலம் தொட்டே கல்வியிலும் வேலையிலும் நியாயமான ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு நாயினும் கீழாய் வறுமையிலும் துயரிலும் துவண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர் மட்டுமன்றி பிற பிராமணரல்லாதோருக்கும் கிடைக்கவேண்டிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காக அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதானே இருந்தது.

1919 இல் திருச்சி… 1920 இல் நெல்லை…. 1921 இல் தஞ்சை….. 1922 இல் திருப்பூர்…. 1923 இல் மதுரை… 1924 இல் திருவண்ணாமலை…. என சகல ஊர்களிலும் கூடிய காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுத் தீர்மானம் கண்டுகொள்ளப்படக்கூட இல்லை. இறுதியாக 22.11.1925 இல் காஞ்சிபுரம்  காங்கிரஸ் மாநாட்டிலும் தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி உரிமைக்கான தீர்மானம்…. நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு…..?

”இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை” என்று அன்று காங்கிரசை விட்டு வெளியேறினார் பெரியார். 97 சதவீதம் கொண்ட இந்த மக்களுக்காக எவ்வளவு நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் பயனின்றிப் போக மனம் நொந்து வெளியேறிய பெரியாரை ஏதோ சொந்த நலன்களுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் கட்சி மாறியவரைப் போல சித்தரிப்பதை என்னென்பது?

சரி போனதுதான் போனார் எப்பொழுது போனார் 1925 இல் போனார். போனதும் தனியாகக் கட்சி ஆரம்பித்து விட்டாரா? அதுவும் நீதிக்கட்சியின் கொள்கைகளை சுவீகரித்துக் கொண்டு? காங்கிரசை விட்டு வெளியேறியது 1925 இல். திராவிடர் கழகம் ஆரம்பித்தது 27.8.1944 இல். ஏறக்குறைய 19 ஆண்டுகள் இடையில். சுயமரியாதை இயக்கம்…. உண்மை நாடுவோர் சங்கம்…. தாராளச் சிந்தனையாளர் கழகம்…. சமதர்மச் சங்கம்…. பகுத்தறிவாளர் கழகம் என பல வடிவங்களில் மக்களுக்கான தனது பணிகளைத் தொடர்ந்து முடிவாக திராவிடர் கழகம் என்று இயக்கம் கண்டது 1944 ஆம் ஆண்டு. ஏதோ திமுக வில் இருந்து அதிமுக வுக்கும்…. காங்கிரசில் இருந்து பாஜக வுக்கும் பயணப்படும் ஓட்டுக்கட்சிக்காரர்களைப் போல மலிவாகச் சித்தரிக்கிறாரே இவர்…. இது எந்தவிதத்தில் நியாயம்?

தந்தை பெரியார் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகக் கடுமையாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் பெண்களின் திருமண வயதை 10 லிருந்து 12 ஆக உயர்த்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். அச்சட்டம் 1929 இல் நிறைவேறியபோது…. அதை எதிர்த்து….

“இது நமது தேசியப் பண்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்” என குழந்தைத் திருமணங்களை நியாயப்படுத்தி பெண்ணினத்தையே புதைகுழியில் தள்ளும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார் ஒரு மகத்தான ”தேசபக்தர்”. அவர் வேறு எவருமல்ல. சாட்சாத் பாலகங்காதர திலகர்தான்.

மன்னர்களைத் துதிபாடித் திரிந்த புலவர்களையும், பண்டிதர்களையும் சகட்டுமேனிக்குச் சாடிய பெரியார்தான்….. பிள்ளைக்கறி சமைத்துப் போட்ட புராணப் புளுகுகளைத் தவிர தமிழில் என்ன இருக்கிறது என்று சீறிய அதே பெரியார்தான்…. நம் இன்றைய தமிழின் எழுத்துச் சீர்திருத்தத்தை நமக்கு அளித்தவர். இன்று அவரைத் திட்டி எழுதும் கட்டுரைக்குக்கூட UNICODE FONT ஆகத் துணை நிற்பது அவர் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தம்தான்.

ஆங்கிலத்தின் அவசியத்தை அறிவுறுத்திய அதே பெரியார்தான் “எதற்கடா இங்கு இன்னும் தெலுங்குக் கீர்த்தனைகள்?” என்று ஓங்கிக் குரல் கொடுத்து தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தியவர்.

“சுதேசமித்திரன்களும்…. இந்து பத்திரிக்கையும் கே.பி.சுந்தராம்பாளை ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்? அவர் படம்பிராமணப் பெண்மணி அல்ல என்கிற காரணத்தாலா?” என்று பெரியார் தாக்குதல் தொடுத்த பிறகே தமிழகப் பத்திரிக்கைகள் அவர் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இத்தனைக்கும் கே.பி.சுந்தராம்பாள் கொள்கை ரீதியாக பெரியாரோடும் திராவிட இயக்கத்தோடும் மாறுபாடு கொண்டு எதிரணியில் இருந்தவர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை அவர் நம்பிய தேசியக் கட்சியே

இறுதிக்காலத்தில் தெருவில் தவிக்கவிட்டபோது தனது மகனது வேலைக்காக உரிமையோடு கடிதம் எழுதியது தந்தை பெரியாருக்குத்தான். இத்தனைக்கும் இருவரும் இருந்த முகாம்கள் வெவ்வேறு.படம்

”கம்பராமாயணத்தின் இலக்கிய சுவையை உணரக் கூடிய அளவுக்கு திராவிட இயக்கத்தினருக்கு இலக்கிய அறிவு இல்லை. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை. திராவிட இயக்கங்கள் தமிழ் இலக்கியத்துக்கு அளித்தது எதுவுமில்லை” என இந்த ஆசாமி மட்டுமில்லை இவருக்கு முன்னரே ஏகப்பட்ட புண்ணியவான்கள் ”வாழ்த்துப் பா” வாசித்துவிட்டுப் போனது வரலாறு முழுக்க விரவிக் கிடக்கிறது.

உண்மைதான்.திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது…. இலக்கிய அறிவு கிடையாது…. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை…. உண்மைதான்.

நீங்கள் கம்பனின் இலக்கியச் சுவையைப் பருகிக் கொண்டிருந்த பொழுதுகளில் கைம்பெண்களின் மறுவாழ்வுக்காகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பெரியாரும் திராவிட இயக்கத்தினரும்….

நீங்கள் சிலப்பதிகார மாதவியின் நாட்டிய அழகை சிலாகித்துக் கொண்டிருந்தபோது கோயில்களில் படம்தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட அபலைகளின் விடிவுக்காக தெருக்களில் இறங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் திராவிட இயக்கத்தினரும்….

நீங்கள் திருவாசகத்தின் ஒலிநயத்தில் பரவசத்தோடு கிறங்கிக் கிடந்தபோது ஒருவாசகம் கூட படிக்க இயலாமல் வக்கற்றுப் போன திராவிட குழந்தைகளுக்கு இரவுப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் திராவிட இயக்கத்தினர்.

நீங்கள் சிருங்கார ரசத்தோடு ”சீதா கல்யாணமே…” என  ராகம் மீட்டிக் கொண்டிருந்தபோது…..

”1921 வருடத்தைய இந்து கைம்பெண்களின் தொகையினை நோக்குகையில் அய்யகோ என் நெஞ்சு துடிக்கிறது….

1 வயதுள்ள விதவைகள்                                  597

1 முதல் 2 வயதுள்ள விதவைகள்               494

2 முதல் 3 வயதுள்ள விதவைகள்              1257

3 முதல் 4 வயதுள்ள விதவைகள்              2837

4 முதல் 5 வயதுள்ள விதவைகள்              6707

ஆக மொத்தம்                                                      11892

பால் மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளம் குழந்தைகள் மட்டிலும்11892 பேர் இருக்கிறார்கள் என்பதையும், தன் பிறவிப்பயனையே நாடுவதற்கில்லாது…. இன்பம் துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்கவே என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?” என குதறப்பட்ட அந்த மானுடக் கூட்டத்துக்காக கதறித் துடித்துக் கொண்டிருந்தார் பெரியார்.

உண்மைதான்.திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது…. இலக்கிய அறிவு கிடையாது…. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை…. உண்மைதான்.

நாணும் பெண்ணாய் சலசலத்து ஓடும் தாமிரபரணியைச் சிலாகித்து நிற்கையில் நதியில் கொல்லப்பட்ட பதினேழு உயிர்களைப் பற்றிப் ”பிதற்றுகிற” பேர்வழிகளுக்கு என்ன இலக்கிய அறிவு இருக்க முடியும்? உண்மைதான்.

மண்ணோடு மண்ணாக மக்கள் செத்துச் சிதைந்து கொண்டிருக்கும்போது இதிகாசத்திலும் இலக்கியத்திலும் படம்லயித்துக் கிடக்கும் மனது வாய்க்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்தான்.

ச்சே…. பாழாய்ப்போன அந்தப் பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே என்ன செய்ய?

அதுசரி….

ஒரே ஒரு கேள்வி :

நீரோ செத்துப் போனதாகச் சொன்னவன் எவன்?

நன்றி :  ”அந்திமழை” இதழ் (அக்டோபர் 2013)

http://andhimazhai.com/