எழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல….

chess

எண்பதுகளின் மத்தியப்பகுதி அது.

இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே நீங்க மாஸ்கோ பக்கமா? இல்லை பீஜிங் பக்கமா? என்று கேட்கிறார்கள்? (அதுவாகப்பட்ட்து…. நீங்கள் சீனாவின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா? அல்லது சோவியத் யூனியனின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா? என்று அர்த்தம். ஓகே வா?) முதல் சந்திப்பிலேயே முரண்பாட்டில் துவங்கும் ஒரு உறவு எப்படி நிலைத்து நிற்கும்? ”எனக்கு உங்களுடைய இந்திந்த விஷயங்களில் ஒப்புதல் உண்டு…. எனக்கு உங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்…” என்று உடன்பாடானவற்றில் துவங்கும் உறவு நீடித்து நிற்கும். எடுத்தவுடனேயே முரண்பாடானவற்றில் துவங்கும் உறவு எப்படி நிலைக்கும்?” அவரது அந்தக் கேள்விகளில் உள்ள நியாயம் புரிபடுவதற்கே எனக்கு பல ஆண்டுகள் பிடித்தது.

உண்மைதான்….. நாம் பல நேரங்களில் முரண்பாடுகளுடனேயே ஒரு உறவைத் துவக்குகிறோம்.

ஒரிரு மாதங்கள் முன்பு எமது தோழர் பாண்டியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார் எனக்கு. பாண்டியன் பேசினால் அவரது நாவில் தமிழ் விளையாடும். அதுவும் தெள்ளத் தெளிவான தூய தமிழ். கேட்பதற்கு உறுத்தலோ….. கேலி செய்வதற்கு மனமோ தோன்றாத நடை அவரது தமிழுக்கு. பாண்டியனது துணைவியாரும் தன் துணைக்குச் சளைத்தவரில்லை. விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரி பாண்டியன்.

அவரது கடிதம் சொன்ன சேதிகள் இதுதான் : ”ஏன் முன்பைப் போல நிறைய எழுதுவதில்லை…..?”

”உங்கள் அப்பாவைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் போல ஏன் அதன் பிறகு எழுதவில்லை?” இப்படிப் பல ஏன்?கள். அனைத்துமே மிக மிக அழகான நியாயமான கேள்விகள். ஆனால் அத்தகைய கடிதத்தை எழுதிய தோழர் பாண்டியன் கடிதம் முடித்த பிறகு ஒரு மாபெரும் தவறைச் செய்திருந்தார். அது கடித உறையில் “ரகசியம்” என்றும் “உரியவர் மட்டும் பிரிக்கவும்” எனப் பச்சை மையினால் அடிக்கோடிட்டு அனுப்பியிருந்தார். இதில் எதற்கு ரகசியம்? தான் நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும்? அவரது எதிர்கால எழுத்தும் வாழ்வும் எப்படி இருக்க வேண்டும்? என செப்பனிடக் கூடிய வரிகள் ரகசியமானவையா என்ன? கடித உறையில் ரகசியம் எனப் போட்டது மட்டுமே அவரது பிழை.

ஆனால் எனக்கொரு பதில் இருந்தது….. அது : எழுத்தாளன் என்பவன் Coffee Maker Machine கிடையாது. பாதித்தபோது வருவதே எழுத்து. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் கருத்து கந்தசாமியல்ல எழுத்தாளர். ஆனால் இங்கு பலபேர் பிரசவவலி பற்றிகூட எழுதுகிறார்கள். (அதுவுமாகப்பட்டது ஆண் எழுத்தாளர்கள்)

எனக்குத் தெரிந்து பல எழுத்தாளன்கள்…

“இது எனக்குத் தெரியாது”

”இது எனக்குப் புரிபடவில்லை”

“நான் அதைப் பற்றி இனித்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.”

“அட அப்படியா…. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பிறந்ததில் இருந்து உச்சரித்ததுகூட கிடையாது. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் ஒருபோதும் சர்வரோக நிவாரணி கிடையாது. அவர்கள் அறியாதது… புரியாதது…. தெரியாதது அநேகம் உண்டு. ஆனால் அது புரிந்தால் அரியாசணம் எங்கே பறிபோய் விடுமோ என்கிற அச்சம் அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை தோழர் பாண்டியனுக்கு சொல்ல நினைத்தது இதுதான். அதுவும் என் வரிகளல்ல…. நான் நேசிக்கும் கிழட்டுக் கவிஞன் விக்கிரமாதித்தனுடையது…..

கரையில் நின்று ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது இப்பொழுதெல்லாம்.

எழுதித் தீருமோ இந்த வாழ்வு.

இல்லை, எழுதுவதற்காகவா இந்த வாழ்வு?.”

ங்….

எப்பொழுதுமே நான் இப்படித்தான்…. எதைச் சொல்ல வந்தேனோ அதை விட்டுவிட்டு ஊர் மேயப் போய்விடும் புத்தி. முரண்பாடுகளில் தொடங்குவது அல்ல உறவு…. ஒப்புமைகளில் உருவாவதே உறவு….. என்பதில் தொடங்கியதுதானே இந்த உரையாடல்….. என்ன சரிதானே?

அதாவது முதல் சந்திப்பே முரண்பாடோடு துவங்கக்கூடாது என்பதே இதன் சாரம். அதற்காக ராஜபக்‌ஷேவைப் பார்த்தவுடன் எனக்கும் உங்களுக்கும் இதில் இதிலெல்லாம் ஒப்புமை உண்டு…. என்றா துவங்க முடியும்? ஆக முரண்களிலும் இரண்டுவகை. ஒன்று நட்பு முரண். மற்றொன்று பகை முரண். இங்கு நாம் கதைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நட்புமுரண் குறித்தே. நமது உறவுகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒன்றுபடக்கூடிய உறவு என்று எதுவுமேயில்லை என்பதுதான் எதார்த்தம்.

பல திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் பாடாய்ப்படுத்தி விடுகின்றனர் பலர். ”மணமக்கள் நிலவும் வானும் போல…. நகமும் சதையும் போல…. ஜாடியும் மூடியும் போல….. லேடியும் பாடியும் போல…. எந்த முரண்பாடும் இல்லாமல் நூறாண்டு வாழ்ந்து….. “ என்கிற ரீதியில் போகும் அவர்களது வழக்கமான வாழ்த்து. அதெப்படி ஏறக்குறைய இருபது முப்பது ஆண்டுகள் வெவ்வேறு திசைகளில் வளர்ந்த வாழ்ந்த இருவர் மாற்றுக் கருத்துக்களேயின்றி பூவோடு நாராய் இருத்தல்  சாத்தியம்?

துணைவி அகிரா குரோசுவாவை சிலாகிப்பவளாக இருந்து துணைவன் மணிரத்னத்தின் கடலைக் கொண்டாடுபவனாக இருந்தால் என்னவாகும் நிலைமை?

எனக்குத் தெரிந்த தோழி ஒருவர் இறை நம்பிக்கையே அற்றவர். வாய்த்த கணவரோ கோயில் குளங்களையே கட்டிக் கொண்டு குடும்பம் நடத்துபவர். கடைசியில் முரண்பாடு முற்றி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கே போய் விட்டார்.

என் தோழியல்ல…..

தோழியின் கணவர்.

நீயாவது கொஞ்சம் அனுசரித்துத் தொலையலாமல்லவா என்று தோழியைக் கேட்டால்…. ”அய்யோ…. கோயிலுக்குள் நுழைஞ்சாலே ஏதோ பொம்மைக் கடைக்குள்ள புகுந்தமாதிரி சிரிப்பு சிரிப்பா வருது” என்கிறாள் அவள். கடைசியில் “தெய்வ விசுவாசமற்ற பெண்குட்டியோடு யான் ஜீவிக்கில்லா….” என்று தாய் வீடு போன கணவனை அழைத்து வந்து…. உனக்குப் புடிச்சத நீ கும்பிடு… அவளை கும்பிடச் சொல்லி வற்புறுத்தாதே…. அதைப் போல நீ கும்பிடாட்டி பரவாயில்லை அவனைக் கிண்டல் பண்ணி கலாய்க்காதே…. என்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி கை குலுக்க வைத்தார்கள். இப்போது தோழி இரண்டாம் முறை கர்ப்பமாம்.

குடும்பம் என்றில்லை கலை இலக்கிய அரசியல் தளங்களிலும் இத்தகைய முரண்கள் ஓரிரண்டு இருக்கத்தான் செய்யும். எனக்கு தமிழ்த் தேசியத்தில் சில போதாமைகள் இருப்பது போலவே நான் நம்பும் திராவிடக் கருத்தியல்களில் ஓரிரு பற்றாக்குறைகள் தென்படத்தான் செய்யும். இருவருக்குமே நோக்கம் சமூக மாற்றம்தான் என்கிற அடிப்படை உண்மை புரிந்தால் வெறுப்பும் வன்மமும் அற்ற ஆரோக்கியமான அரசியல் அங்கு ஆரம்பமாகும். மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்களை எதிரியாகப் பார்க்காத மனம்தான் அதற்கான அடித்தளமே.

அதற்கு நம் மீதான விமர்சனங்கள் எட்டக் கூடிய இடத்தில் நாம் இருக்க வேண்டும். அத்தகைய ஜனநாயக வெளியில்தான் மாற்றங்கள் மலரும். என்றைக்கு நம் மீதான விமர்சனங்கள் நம்மை எட்டாமல் போகிற தொலைவுக்குப் போய் விட்டோமோ அன்றைக்கே நாம் ஆரோக்கியமான வளர்ச்சியை இழந்துவிட்டோம் என்று அர்த்தம்.

ஆக….

அம்மா-மகன் உறவுக்குள்ளேயே நூற்றுக்கு நூறு உடன்பாடு இல்லா உலகில் சந்திக்கும் ஒவ்வொருவரோடும் சகலத்திலும் ஒப்புமையை எதிர்நோக்குவது எதார்த்தத்திற்குப் புறம்பான ஒன்று.

இங்கு கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமே ஒற்றுமை குறித்தல்ல…….

முரணோடு வாழப்பழகுதல் குறித்தே.

அதுசரி…….

முரண்பாடு கூடாது என்பதில் ஆரம்பித்து….

முரண்பாடோடு வாழப்பழகுதலே முக்கியம் என முடிக்கிறேனே இதுவே பெரும் முரண்பாடாகப் படவில்லை உங்களுக்கு?

 

content-writer11

(நன்றி : “அந்திமழை” மாத இதழ்)