என்றாவது எழுதக்கூடும்……

 

”தம்பி…. நாளைக்குள்ள கட்டுரை அனுப்பலேன்னா…. மொன்னக்கத்தி எடுத்து உன்னைக் குத்தீருவேன்….. நீ எப்ப கட்டுரை அனுப்பற?” என்றார் அக்கா தமிழ்ச்செல்வி அலைபேசியில்.

இதுதான் தமிழ்ச்செல்வி….

இதுதான் அவரது துணைவர் கருணா மனோகரன்….

மனதில் பட்டதை பட்டவாறே பேசும் பாங்கு.

அவர் ”கட்டுரை” கேட்டது எந்தவொரு வார அல்லது மாத இதழுக்கோ அல்ல. நம் அனைவரிடம் இருந்தும் பயணப்பட்டுவிட்ட அவரது துணைவர் தோழர் கருணா மனோகரனின் நினைவு மலருக்கு. இப்படி உரிமையோடு கேட்கும் பாசம் வேறு எவருக்கு வரும்?

துள்ளித் திரிய வேண்டிய இளமைப் பருவத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து வீட்டை விட்டு Karunaவீதிக்கு வந்தவர் தோழர் கருணா மனோகரன். சாதி மதங்களுக்கெதிராக குரல் கொடுத்ததோடு நிற்கவில்லை. நடைமுறையில் நடத்தியும் காட்டினார்….. தோழி தமிழ்ச்செல்வியைக் கரம் கோர்த்ததன் மூலம்.

நாட்கள் நகர்ந்தாலும் என்னால் எழுதமுடியவில்லை.

அதற்கொரு காரணம் இருந்தது….

அதை அக்காவிடம் சொல்லவில்லை.

ஆனால்…..  சொல்லியாக வேண்டிய வேளை வந்துவிட்டது. இல்லாவிட்டால் எனது மெளனம் மமதையாக மொழிபெயர்க்கப்பட்டு விடும்.

கடந்துவிட்ட இரு வருடங்களும் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை எம் நட்பு வட்டத்துக்கு. ஏழாம் மாதம் விடியல் சிவா சமூக நோய்களுக்கு எதிராக போராடியதோடு உடல் நோயோடும் போராடி பயணப்பட்டார். மாவோ…. சேகுவேரா…. ஈழம் என சமூக மாற்றத்திற்கான எண்ணற்ற நூல்களை வெளிக்கொணர்ந்ததில் விடியல் சிவாவின் பங்கு மகத்தானது. அரசு மருத்துவமனையின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கபட்ட அவரது உடலை வாகனம் சுமந்து செல்ல பார்த்தபடி நின்றிருந்தோம்.

“தோழர்…. நம்ம சிவாவுக்கு எப்ப இரங்கல் கூட்டம்? யார் ஏற்பாடு பண்றா….? முன்னாடியே சொல்லுங்க நான் வந்தர்றேன்” என்றார் சமூகத்தின் மீது மாளா காதல் கொண்டவரும் திரைப்படக் கலைஞருமான தோழர் மணிவண்ணன்.

”அவசியம் சொல்றேன் தோழர்” என்றேன்.

அவரைபற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

அதோடு நிற்குமா?

சிவாவைப் போலவே தோழர் கருணா மனோகரனும் நோயோடு போராடி இறுதியில் வாழ்க்கைத் துண்டை உதறிப்போட்டு விட்டு பயணப்பட்டார் 2012 டிசம்பரில்.

பார்க்கும் போதும்….. அலைபேசியில் பேசும்போதும் தமிழ்ச்செல்வி அக்கா….” உங்க அண்ணனுக்கு நினைவு மலர்  கொண்டு வர்றோம்…. நம்ம மணிவண்ணன் கிட்ட பேசி ஒரு கட்டுரை ஒண்ணு அனுப்பச் சொல்லு தம்பி” என்பார்.

“அவசியம் பேசறேன்க்கா” என்பேன்.

இடையில் இரண்டாயிரம் தொடங்கி எம்மோடே சுற்றிச் சுழன்ற தோழன் சன் டிவி அவினாசிலிங்கத்திற்கு திடீரென ஒரு கோளாறு. உடலில் ரத்தம் உறையும் நேரத்தில் ஏதோ குறைபாடு. கோவையில் உள்ள மருத்துவனையில் அளித்த சிகிச்சை போதாதென்று சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தோழன் அவினாசிலிங்கத்தை சென்னை அனுப்பும் வேளையில்  மணிவண்ணனிடமிருந்து அலைபேசி அழைப்பு….  அவினாசிலிங்கம் நிலை குறித்து விசாரிக்கிறார் போனில். இருங்க அவினாசிகிட்டயே தர்றேன் என கொடுக்கிறேன் போனை. “தைரியமா சென்னை வந்து சேருங்க அவினாசி…. இனி நம்ம வீட்ல இருந்து சாப்பாடு வந்துரும்…. பணத்தப் பத்தி கவலப்படாதீங்க….” என்று ஆறுதல் அளிக்கிறார் அலைபேசியில்.

இது செவ்வாய் மாலை.

இடையில் நகர்ந்தது மூன்றே மூன்று நாட்கள்….

சனிக்கிழமை காலை அலைபேசியில் ஜோதியின் அழுகை…. “அப்பா போயிட்டாரு அங்கிள்…” என.

உடைந்து அழுதது எமது வட்டம். ஓடு சென்னைக்கு. ஓடினோம். மணிவண்ணனின் துணைவி செங்கமலம் அக்காவிற்கு அழக்கூட தெம்பில்லை. ”காலைல பல்லு வெளக்குறாரோ இல்லியோ உங்குளுக்குப் போன் Mani&Akkaபோடாம இருக்கமாட்டாரே  தம்பி….” எனத் தேம்புகிறார். நான்கைந்து நாட்களாகியும் சென்னையை விட்டு வரவே மனமில்லை. மருத்துவமனையில் உள்ள தோழன் அவினாசிலிங்கத்தை மீண்டும் பார்த்து கலாய்ப்பாகப்  பேசிவிட்டு ஊர் திரும்புகிறோம் நாங்கள்

நேரிலும் போனிலும் பேசியவர்கள் “நம்ம மணிவண்ணனுக்கு ஒரு இரங்கல் கூட்டம் போடலாம்…. அப்படியே மலர் ஒண்ணும்கொண்டு வரணும்.” என்றார்கள்.

“கட்டாயம் பண்ணீர்லாம் தோழர்” என்றேன்.

அவரைபற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

வாழ்க்கை அவ்வளவு கருணை உள்ளதா என்ன?

ஓடியது இடையில் ஏழெட்டு நாட்கள்தான்….. சென்னையில் இருந்து தகவல்…. அவினாசியைக் காப்பாற்ற முடியாது….. அநேகமாக இன்று நாளையோ கொண்டு வந்துவிடுவார்கள். சொன்னபடியே செய்தார்கள். நேர்மைத் திமிர் கொண்ட எம் நண்பனை கச்சிதமாக Pack செய்து கொண்டுவந்தார்கள் மறுநாள். அவனது பத்து வயது மகன் சொற்கோவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லை யாருக்கும். குழந்தைக்கு தமிழ்ப்பேர் வையுங்க…. தமிழ்ப்பேர் வையுங்க…. என்று கழுதையாய்க் கத்தியிருக்கிறேன் ஊர் முழுக்க. மத…. புராண பெயர்களையே தாண்டி வராதவர்களுக்கு தமிழ்ப்பெயர்….. தமிழுக்கு வந்துவிட்டவர்களுக்கு சர்வதேசப் போராளிகளது பெயர்…. இது என் வழமையான பார்முலா.

ஆனால் ஊரில் எவன் மதித்தான் என்னை?  என் மாமன் மகனுக்கு பகத்சிங் எனப் பெயரிட்டால்….. அவர் போய் பாலாஜி என வைத்துவிட்டு வருவார்.

பால்யகால தோழியின் மகனுக்கு சொற்கோ எனப் பெயரிட்டால் அவரது கணவர் ஹர்ஷவர்த்தனன் என ஆக்குவார்.

மாமனாவது மச்சானாவது ஒரு மயிரானும் என் பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் கேட்ட ஒரே………

1010753_3309194185626_673158561_nசாரி இரு ஆத்மாக்கள் என் அவினாசியும் அவனை வழிநடத்திய துணைவி கிருபாவும்தான். என் பேச்சையும் கேட்டு சொற்கோ எனப் பெயரிட்டவர்கள் அவர்கள்தான்.

இதுவும் இன்னபிறவும் மனதில் சுழல  எரியூட்டிவிட்டு வந்தோம் தோழனை.

நான்கைந்து நாட்கள் கழித்து சன் டிவியில் இருந்து குருசாமி போன் பண்ணினார். “அண்ணே நம்ம அவினாசிக்கு ஒரு மலர் போடலாம்ன்னு ஒரு யோசனை…. நீங்களும் ஒரு கட்டுரை….”

அவசியம் எழுதீர்றேன் தோழர் என்றேன் குருவிடம்

அவனைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

அப்படியெல்லாம் இரண்டொரு மாதம் நிம்மதியாகக் கழித்துவிட முடியுமா எம்மால்….?

ஒரு காலைப் பொழுதில் வீணை மைந்தனிடமிருந்து அழைப்பு….. “அம்மா போயிட்டாங்க தலைவா….” அவன் அம்மா என்றது தோழர் மணிவண்ணனின் துணைவியார் செங்கமலத்தை. மணிவண்ணன் “போய்ச் சேர்ந்த” அறுபதாவது நாள் அக்கா செங்கமலமும் தன் மூச்சை நிறுத்திக் கொள்ள….. மீண்டும் ஓட்டம் சென்னைக்கு. போனபோதெல்லாம் பறிமாறிய கரங்கள் மடித்து வைக்கப்பட்டு ஐஸ்பெட்டிக்குள் அக்கா செங்கமலம். தோழன் மணிவண்ணனின் தங்கைகள் மேகலாவும்,பூங்கோதையும் கரம் பிடித்துக் கதற வார்த்தைகள் ஏதுமின்றி நின்றிருந்தேன். தலைவனை எரியூட்டிய அதே மயானத்தில் அக்காவையும் எரியூட்டிவிட்டு வீடு திரும்பினோம். மகன் ரகு பித்துப்பிடித்தவனைப்போல் செங்கமலம் அக்கா படத்தின் முன்பு அமர்ந்திருந்தான். வீட்டை விட்டு வெளியே வரும்போது மீண்டும் ஒரு முறை வீட்டைத் திரும்பிப் பார்த்தேன்…. அக்கா செங்கமலம் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்காத முதல் நாள் அது.

அவரைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

கோவை திரும்பி இருபத்தி நாலு மணிநேரம் கூட தாண்டியிருக்காது. நண்பன் ராஜனிடம் இருந்து அழைப்பு. “யோவ் பெருசு போயிடுச்சு. வந்து சேரு” என்று. என்னை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூட பரிச்சயமில்லாத பொழுதுகளில் சென்னை செல்லும்போதெல்லாம் ரயிலில் இருந்து இறங்கியது தொடங்கி சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கி ரயில் ஏற்றிவிடுவது வரை பார்த்துக் கொள்வார்கள் ராஜனும் இளங்கோவும். அப்படி பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்ட ராஜன் ”பெருசு” என்று சொன்னது பெரியார்தாசனைத்தான்.

அட…. இதுவும் போச்சா…..? அப்புறம் என்ன……? மீண்டும் ரயில் சென்னைக்கு. அம்மா, வளவன், சுரதா… நண்பர்கள் சூழ்ந்திருக்க மெளனமாய் பெட்டிக்குள் ”பெருசு”.

மிகச் சரியாக 1985 ஜூலை 23 ஆம் தேதி எனக்கு அறிமுகமாகிறார் பெரியார்தாசன். ஈழப்போராளிகள்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள். கோவையில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஜூலைப் படுகொலைகள் நினைவு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தோம்.

ஈழநேசனாய்….. பெரியார்தாசனாய்…. சித்தார்த்தாவாய்…. நல்மன பெரியார்தாசனாய்…. அப்துல்லாவாய்…… எனப்பல்வேறு பரிமாணங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரோடு உடன்பட்ட பொழுதுகளும் உண்டு…. periyardasanமுரண்பட்ட பொழுதுகளும் உண்டு. “யோவ் பாமரா!…. என்னை மொதொ மொதோ பாத்தப்ப உங்கம்மா குடுத்த பருப்பு சோறு இருக்கே…. அது அப்படியே கோந்து மாதிரி போயி ஒட்டிகிட்டு நான் பட்டபாடு இருக்கே…..” என்று என்றும் கலாய்க்கும் பெருசு. பெருசின் உடலை பொது மருத்துவமனைக்கு அளித்துவிட்டு வளவன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தான். பிசிறற்ற பேச்சு.

எல்லாம் முடிந்த பிற்பாடு வழக்கம்போல் ஊர் திரும்ப…. வழக்கம்போல ஒரு தொலைபேசி அழைப்பு. அவரது துணைவியார் வாசுகி பேசினார் மறுமுனையில்….. “நம்ம பேராசிரியருக்கு ஒரு நினைவு மலர் கொண்டு வரணும் பாமரன்….” கட்டாயம் கொண்டு வந்தர்லாம் தோழர்……. என்றேன்.

அவரைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

ஒரு மனிதன் தொடர்ச்சியாக எத்தனை இழப்புகளைத் தாங்க இயலும்.? சென்னைக்கும் கோவைக்கும் மாறி மாறி ஓடி….

மன உளைச்சலும்….. உடல் உளச்சலும் ஒன்று சேர தாக்க எட்டு கிலோ குறைந்திருந்தேன் நான். உறக்கமும் நிம்மதியுமற்ற பொழுதுகளால்….. கண்களும் கன்னங்களும் எனது கல்லூரிக் காலங்களில் இருந்ததைப் போல் ஒட்டிப் போய்…. “என்னாச்சு”” என என்னை விசாரிக்க ஆரம்பித்தனர் எல்லோரும்.

என் உடம்பைப் பார்த்தால் வெகுவிரைவில் எனக்கு இரங்கல் மலர் வெளியிட வேண்டி இருக்குமோ என எண்ண வைத்தது நண்பர்களை.

எதையும் எழுத முடியவில்லை என்னால்…..

எப்படி முடியும்?

தமிழ்ச்செல்வி அக்காவைப் போலவே பேராசிரியர் வாசுகிக்கும் என் மீது தாள முடியாத கோபம் இருக்கக்கூடும்….. அந்தக் கோபமும் மாறாத அன்பின் வெளிப்பாடுதான் என்பதை அறிவேன் நான்.

நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே தொடர்ந்து துரத்தும் இழப்புகளுக்கு மத்தியில் எழுதுவது எப்படி? எண்பத்தி நாலில் ”பயணித்த” என் அப்பாவைப் பற்றி தொண்ணூற்றி ஆறில்தான் எழுத முடிந்தது. தகப்பன் போன பிறகு இன்னொரு தகப்பனாய் வந்து சேர்ந்து என்னை செப்பனிட்ட பூவுலகின் நண்பன் தோழன் நெடுஞ்செழியனைப் பற்றி இன்னும் ஓரெழுத்துகூட எழுதவில்லை நான்.

இவர்கள் அனைவரையும் பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

நன்றி : அந்திமழை – ஜனவரி – 2014

2 thoughts on “என்றாவது எழுதக்கூடும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s