(முந்தைய பதிவினை காண….)

எந்திரிச்சுப் பாத்தா…… பக்கத்து பெட்டுல நம்ம மார்த்தாண்டன் முக்கீட்டு மொணகீட்டு படுத்துகிட்டு இருக்கான்.
“தேவயானி ஸ்டைல்ல செவுரெட்டிக் குதிக்கிறேன்”ன்னு சொல்லி டிச்சுக்குள்ள குதிச்சுருக்கான் மகராசன். நாறிக் கெடந்தவனக் குளிப்பாட்டிக் கொண்டுவந்து இங்க போட்டுட்டுப் போயிருக்குது சனம்.
’என்ன மனித உரிமை…! நம்ம கதி இப்படி ஆகிப்போச்சு……?’ன்னேன்.
எதக் கேட்டாலும் எல்லாத்துக்கும் பதிலா நாக்கத் தொட்டுத் தொட்டுக் காட்டறான். ராத்திரில மட்டும் திடீர் திடீர்ன்னு……
”கலைஞர் வாழ்க…
புரட்சித் தலைவி வாழ்க…
தோப்பனார் வாழ்க…
போர்வாள் வாழ்க…
போர்க் கப்பல் வாழ்க…”ன்னெல்லாம் சத்தம் போடறான்..… ஊசி போட்டுத்தான் படுக்க வெக்க வேண்டியிருக்கு…..
ஊசி போட்டதும்….. ”மதவாதமா..…?” ”ஊழலா….?”ன்னு மொணகிகிட்டே தூங்கீர்றான்.
எங்களப் பாக்கறதுக்கு ஆசுப்பத்திரிக்கு வந்த ஒரே ஜீவன் நம்ம ஜ.நா.கா.ஜம்புதான். வந்ததும் வராததுமா…… ”எப்படியோ எலக்சனுக்குள்ள நீங்க செரியாயிட்டீங்கன்னா கூட்டிட்டுப் போயி ஓட்டப் போட்டுட்டு வந்தர்லாம்…..”ன்னான்.
‘இப்ப நாங்க இருக்குற நெலமைல நாக்குலதான் மை வெக்கோணும். இதுக்கு தேர்தல் கமிசன் அனுமதிக்குமான்னு
கேட்டுட்டு வந்துரு……ன்னேன்.
“எவ்வளவு ‘வாங்கினாலும்’ இந்த லொள்ளுக்கு மட்டும் கொறச்சலில்ல….”ன்னான் ஜ.நா.கா.
“சரி இவுங்கதான் இப்படி… மத்தவங்கள்ல யாரும் சரியில்லையா….?”ன்னான்.
“ஜ.நா.கா…! நீ இப்ப இந்தக் காட்சியத்தான பாக்குற…. தேர்தல் முடிவு வந்தப்பறம் பாரு… அந்தக் கண்கொள்ளாக் காட்சிகள.…
தி.மு.க கூட்டணி தோத்துதுன்னா… ‘தி.மு.க.வோட இந்து விரோதப் போக்குதான் எங்க தோல்விக்குக் காரணம்’ன்னு அறிக்கை உடும் பா.ஜ.க……
அ.திமு.க கூட்டணி தோத்துதுன்னா…… ‘கலைஞரையும் என்னையும் பிரிச்சது ஜெயலலிதா செஞ்ச சதி…… என்னையும் வாழப்பாடியையும் சேர்த்தது விதி செஞ்ச சதீ…’ன்னு அறிக்கை உடும் பா.ம.க.
தேர்தல்ல தோத்ததுக்கு என்ன அறிக்கை உடலாம்ன்னு த.மா.க முடிவு பண்றதுக்குள்ள அடுத்த தேர்தலே வந்துரும்……ன்னேன்.
“அதுசரி புண்ணாக்கு…..! இப்ப சாதிக் கட்சிக நெறையா வந்துருச்சுன்னும்……
அது சாதிக் கட்சிக அல்ல….. சாதிக்கின்ற கட்சிகதான்னும் பேச்சு அடிபடுதே..… இதுல எது சரி…?”ன்னான்.
’சாதி ரீதியா ஒடுக்கப்பட்டவங்க தங்கள தற்காத்துக்கறதுக்கு ஒரு அமைப்பு வேணும்கறதுல தப்பே இல்ல. ஆனா ஊழல் குற்றச்சாட்டுல இருந்து தங்கள தற்காத்துக்கறதுக்காக சாதியக் கேடயமாக்கறதுதான் தப்பு. இப்ப மொளச்சிருக்கிற பல சாதிக் கட்சிக உண்மையிலேயே சாதிய ஒடுக்குமுறைக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிரா குரல் கொடுக்கணும்கிற நோக்கம் இருந்திருந்தா குறைந்த பட்சம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்கிறத ஒரு கோரிக்கையாகவாவது வெச்சிருக்கணும்…. ஆனா அதையெல்லாம் உட்டுட்டு ‘பத்து சீட்டு குடு’, ‘பதினைஞ்சு சீட்டு குடு’ன்னு நிக்கறதப் பாக்கறப்ப இவங்க உண்மையிலேயே சமூக இழிவப் போக்க வந்திருக்காங்களா? இல்ல….. சமூக அழிவக் குடுக்க வந்திருக்காங்களான்னு சந்தேகமா இருக்கு….ன்னேன்.
“சரி இதெல்லாம் கெடக்கட்டும் புண்ணாக்கு……
உண்மையச் சொல்லு…..
இந்த நாட்டுக்கு ரொம்ப ஆபத்து…
‘மதவாதமா…?’
இல்ல ’ஊழலா..?’ அதச் சொல்லு மொதல்ல…”ன்னான்.
அதுவரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்த மார்த்தாண்டன் திடீர்ன்னு எந்திரிச்சு… “ஜ.நா.க..! உன்ன செருப்பால அடிச்சா புடிக்குமா? இல்ல வெளக்குமாத்தால அடிச்சா புடிக்குமான்….?”னான்.
பயந்து நடுங்கீட்டான் ஜ.நா.கா.
“பயப்படாத அந்த மாதிரிதான் ரெண்டுமே. இவ்வளவு சோகத்துக்கு இடையிலேயும் நம்ம நாட்டுல தமாசுக்கு மட்டும் பஞ்சமேயில்ல….. அராஜகத்தப் பத்தி புரட்சி தலைவி பேசறாங்க…
ஊழலப் பத்தி கலைஞர் பேசறாரு…..
மத சார்பின்மையைப் பத்தி வாஜ்பாய் பேசறாரு……
சுயமரியாதையைப் பத்தி வீரமணி பேசறாரு…..
போபர்ஸ்ல அடிச்சவன்…… தெகல்காவத் திட்டறான்.
தெகல்காவுல அடிச்சவன்…. போபர்ஸத் திட்டறான்..… மொத்தத்துல நல்ல கூத்துதான் போ…”ங்கறான் மனித உரிமை மார்த்தாண்டன்.
ஆஸ்பத்திரிங்கறதையே மறந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டோம். நர்சு வந்து “சத்தம் போடாதீங்க”ன்னு திட்டீட்டுப் போனப்பறம்தான் கொஞ்சம் அமைதியானோம்.
“ஏம்ப்பா இதுதான் பிரச்சனைன்னா…… இவுங்களையெல்லாம் மாத்தீட்டு வேற நல்லவங்க அந்த எடத்துல உக்காந்தா செரியாயிடாதா பிரச்சனை…”ன்னான் ஜ.நா.கா. ஜம்பு.
“யப்பா… ஜம்பு! நம்மள அதிகம் பேச வைக்காதே…. இதெல்லாம் மேலோட்டமான பிரச்சனை…… இப்ப பேசிக்கறாங்களே… ‘ஜெயலலிதா முதல்வர் ஆக முடியுமா… முடியாதா…? கலைஞர் ஆவாரா மாட்டாரா…’ன்னு ஆனா யார் ஜெயிச்சாலும் உண்மையான முதல்வர் யாரு தெரியுமா?”ன்னான் மார்த்தாண்டன்.
”இதென்னய்யா புதுக் கரடி? யாரு ஜெயிக்கிறாங்களோ அவுங்கதானே முதல்வர்…?” ன்னான் ஜனநாயகக் காவலன் ஜம்பு.
“அதுதான் இல்ல… உண்மையான முதலமைச்சர் பெரிய பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளும்… உலக வங்கியும்தான். இதத் தெரிஞ்சுக்க மொதல்ல.
இருக்கற அரசோட நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துட்டு இருக்குதுக அரசாங்கங்க…”ங்கிறான் ”மனித உரிமை” மார்த்தாண்டன்.
“ஒழுங்கா வேலை செய்யலைன்னா…… தனியார்கிட்ட உடாம வேற என்ன செய்யச் சொல்ற மார்த்தாண்டா…?”ன்னான் ஜ.நா.கா.
“அப்படிப் போடு அருவாள. இந்த அரசாங்கத்தோட வங்கிகளை எல்லாம் நம்பாம வட்டிக்குப் பேராசைப்பட்டு பெனிபிட் கம்பெனிகள்ல போட்டு உட்டாங்களே 1500 கோடி…… அப்பவுமா தெரியல தனியார் நிறுவனங்களோட லட்சணம்…”ன்னான், ‘மனித உரிமை’.
அதைக் கேட்டதும்தான் எரிச்சலாயிட்டுது எனக்கு.
இங்க பாரு மார்த்தாண்டா….! யாரை வேண்ணாலும் குத்தம் சொல்லு கேட்டுக்கறேன்… ஆனா நம்ம பெனிபிட் கம்பெனிக்காரனுகளோட ‘நேர்மைய’ மட்டும் சந்தேகிக்காதே. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துரும்…….ன்னேன்.
“அடப்பாவி புண்ணாக்கு! நீ இந்த பெனிபிட் கம்பெனிக் காரனுங்களையா நேர்மைன்னு சொல்றே”ன்னு கேக்குறான் ‘மனித உரிமை’.
’பின்ன என்ன…? அவனுக வசூல் பன்றதுக்கு முன்னாடியே ’நேர்மையா’ எழுதி மாட்டீட்டுத்தானே வசூல் பண்ணுனானுங்க…… நீயே கொண்டு போயி குடுத்துட்டு அவனுகளக் குத்தம் சொல்றியே நியாயமா……?ன்னேன்.
“என்னது……. எழுதி மாட்டீருந்தானுகளா? என்னன்னு?” பதறிப்போயி கேக்கறானுக நம்ம மார்த்தாண்டனும் ஜ.நா.கா.வும்.
ஆமா… பெருசா எழுதி… லேமினேட்டும் வேற பண்ணி வெச்சிருந்தானுகளே……
‘எதைக் கொண்டு வந்தாய்…
நீ அதைக் கொண்டு செல்ல…?
நேற்று உன்னிடம் இருந்தது….
இன்று என்னிடம் இருக்கிறது’ன்னு. அதையும் படிச்சுட்டுப் போயி ஏமாந்தா அதுக்கு அவுங்களா பொறுப்பு…?ன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டானுக மறுபடியும்.
“சரி கடைசியா என்னதான் சொல்ல வர்றே? அதையாவது சொல்லு…..”ன்னான் ஜ.நா.கா.
இங்க பாரு… நாட்டோட பொருளாதார நெலமையே நாசமாயிட்டு இருக்குது… நாம நல்ல டீத்தூளை ஏத்தி அனுப்பீட்டு டஸ்ட் டீயைக் குடிச்சிகிட்டிருக்கோம்……
அரிசிய ஏற்றுமதி பண்ணீட்டு ஹாலந்துல இருந்து மாட்டுச் சாணிய எறக்குமதி பண்ணிகிட்டிருக்கோம்…..
எளனி குடிக்குறத உட்டுட்டு பெப்சிக்குத் தாவீட்டோம்…..
போடற அண்டர்வேருகூட வெளி நாட்டுதுதான் வேணும்ன்னு ஆயிடுச்சு…
ஊருல தொழில் செய்யறவனெல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டான். கொஞ்ச நேரம் முதுகக் காட்டீட்டு உக்காந்தாக்கூட…. ”இந்தப் பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு அதுக்குக் கீழ எழுதீட்டுப் போயிடறான்…
இந்த நெலமையே நீடிச்சுதுன்னா… வெறும் கொடியேத்தறதுக்குத்தான் மொதலமைச்சர்-பிரதமர்ங்கிறதும்கூட மாறி……
”இந்த ஆண்டு சுதந்திர தினத்தை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு கொக்கோக் கோலோக்காரனோ….. பெப்புசிக்காரனோ…… கொடியேத்தீட்டுப் போகப் போறானுக……
இது வெளங்காம… மேலோட்டமா கண்டத எல்லாம் பேசீட்டு சுத்துதுக பலது… புருஞ்சுதான்……?ன்னேன்.
“புண்ணாக்கு, இதுல இவ்வளவு இருக்கா…?”ன்னு வாயப் பொளந்துட்டான் நம்ம ஜ.நா.கா.
ஆனாலும் அவன் ‘அரிப்பு’ விடுமா…..?
“சரி….. எங்கிட்ட மட்டும் சொல்லு… இப்ப உள்ளவங்கள்ல நல்லவங்க யாருமே இல்லையா? அப்படீன்னா….. நீ ஓட்டே போடப்போறதில்லையா?”ன்னான் நைசா காதுக்குள்ள.
’ஒரே ஒரு நல்ல ஆளு இருக்குது. அந்த ஆளக் கூட்டீட்டு வந்தா வேண்ணா ஓட்டுப் போடறேன்…..’ன்னேன்.
“யாரு…… யாரது…… சீக்கிரம் சொல்லு”ன்னு பறக்கறான் ’ஜன நாயகக் காவலன்’.
’நீ முத்து காமிக்ஸ் படிச்சிருக்கியா…?’ன்னேன்.
“ஓ… சின்ன வயசுல பலதடவை படிச்சிருக்கேன்”ன்னான்.
அதுல வருவாரில்ல…… ‘இரும்புக் கை மாயாவீ’ன்னு ஒருத்தர், அவரு வந்தா வேண்ணா பாக்கலாம்…ன்னேன்.
“இந்த வெளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே…… யோவ்! சுத்தி வளைக்காம சுருக்கமாச் சொல்லு நேரமாகுது……”ன்னான் ஜ.நா.கா.ஜம்பு.
“கோவப்படாத ஜ.நா.கா…! பெரியார் ஒரு தடவ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.”
“என்ன?”ன்னான் எரிச்சலோட.
“முட்டாளுக ஓட்டுப் போட்டு அயோக்கியனுக ஆட்சிக்கு வர்றதுதான் தேர்தல்…”ன்னாரு.
“அப்போ…..?”
’நான் மறுபடியும் முட்டாளாக விரும்பல…:ன்னேன்.
”அப்படீன்னா…?”
யாரும் என்னால அயோக்கியனாகறதையும் நான் விரும்பல……. போதுமா…?

(நன்றி : குமுதம் 17.05.2001)