வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு….

 

 (பாகம் – 1)

நாலரை வருசமா ஊரை உட்டு ஓடிப் போயிருந்த நம்ம ஜ.நா.கா.ஜம்பு திரும்பி வந்திருக்கான்னு நம்ம ”மனித உரிமை” மார்த்தாண்டன் சொன்னதுமே கதி கலங்கிப் போச்சு…

இதென்னடாது வம்பாப் போச்சு.. ஏற்கனவே இந்த உள்ளூர்ப் பிச்சைக்காரனுக தொந்தரவு தாங்காம அல்லாடிக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல இனி இவன் தொந்தரவு தாங்க முடியாதேன்னு கிலி கெளம்பீடுச்சு.

தேர்தல் தேதி அறிவிக்கிறது நம்ம தேர்தல் கமிசனுக்கே தெரியுமோ தெரியாதோ… ஆனா… நம்ம ஜ.நா.கா. ஜம்புவுக்கு மட்டும் எப்புடியோ மூக்குல வேர்த்துரும். நாலரை வருசமா ஊர் மேய்ஞ்சுகிட்டு இருந்தவனுக்கு திடீர்னு சனநாயகக் கடமை உணர்வு தாறுமாறாக் கெளம்பீரும். அழுகி நாறிக் கெடக்கற சன நாயகத்தை நாமதான் சுத்தம் பண்ணோனும்னு பொலம்ப ஆரம்பிச்சுடுவான். அதோட நிக்காம ஊருக்குள்ள அனாமத்தா சுத்துறவனுகளயெல்லாம் அள்ளிக்கிட்டு போயி எந்தக் கருமத்துக்காவது ஓட்டுப் போட வெச்சுட்டுதான் அடங்குவான். இவனோட இந்த ஜனநாயக ஒப்பாரி தாங்க முடியாமத்தான்… ஜம்புலிங்கம்கிற அவனோட பேரே ”ஜனநாயக காவலன்” ஜம்புவா ஆகிப்போச்சு.  இவன இப்பப் பாத்தா சரிப்படாது… நாலஞ்சுநாள் கழிச்சு பார்ப்போம்னு சொல்லீட்டேன் நம்ம மார்த்தாண்டன் கிட்ட.

தெருவுல எங்கியும் நடமாட முடியலே. எப்ப எவன் கும்பிடுவான்….. எவன் கால்ல உளுவான்னு ஒரு எழவும்புரியல.

‘கடந்த ஐந்தாண்டுகளா இவன் என்ன கிழிச்சான்?ன்னு அவனும்…. அதுக்கு முன்னாடி இருந்த அஞ்சு வருசம் அவன் என்ன கிழிச்சா?ன்னு இவனும்….. மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டதுல ‘இதுக எதுவும் எதையும் கிழிக்கல சட்டமன்றத்துல வேட்டியக் கிழிச்சதத் தவிர…’ன்னு அவனவன் பொழப்பப் பாக்க கெளம்பீட்டான்.

”புண்ணாக்கு!… இவுனுக பேசறதக் கேட்டுகிட்டு இருந்தா நம்ம பொழப்பும் நாறிடும். நம்ம ஊடு கொஞ்சம் ஒழுகுது.. நாலு தென்னை மட்டைய வெச்சு மேஞ்சர்லாம் வா…’ன்னு கூப்புட்டான் ”மனித உரிமை”.

சரி வர்றேன்… ஆனா தென்ன மட்டைக்கு என்ன பண்றது?…ன்னேன்.

”நம்ம ‘ஒடன் பொறப்பு’ சைக்கிள் கடை நடராஜ் தர்றேன்னான்…… அவனப் பாத்து வாங்கீட்டு வந்தர்லாம்….”ன்னான்.

மார்த்தாண்டனும் நானும் சைக்கிள் கடைக்கு போனா… கடைப் பையன்தான் இருக்கான். கேட்டா……

”அண்ணன் ஆபீசுக்குப் போயிருக்கார்னே”ங்கிறான் பையன்.

இதென்னடாது நம்மாளு அஞ்சாங் கிளாஸ்லயே ஆறு வருசம் படிச்சவனாச்சே… இவனெங்க ஆபீசுக்குப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே…

”செரியாச் சொல்றா…. எந்த ஆபீசுக்கு…?”ன்னு கேட்க…

” கட்சி ஆபீசுக்குண்ணே…..”ங்கிறான் பையன்.

கட்சி ஆபீசுக்குள்ள நொழைஞ்சா…. ஏழெட்டு ‘ஒடன்பொறப்புக’ சூழ உக்கார்ந்திருந்தான்  நடராஜ்.

தலையப் பார்த்துமே ”ஓட்டர் லிஸ்ட்டுல பேர் இருக்கான்னு பாத்துட்டியா….?”ங்கிறான்.

”அதெல்லாம் இருக்கு… மொதல்ல உங்கிட்ட தென்னமட்டை இருக்கா.. அதச் சொல்லூ…”ன்னான்  ”மனித உரிமை”.

”எங்க பொற்கால ஆட்சில தென்னம்மட்டைக்கா பஞ்சம்? இது மட்டுமா?.. காலில்லாதவர்களுக்கு ஹை ஹீல்ஸ் ஷு… காதில்லாதவர்களுக்கு இலவச வாக்மேன்… கையே இல்லாதவர்களுக்கு நெயில் பாலிஷ்… இதையெல்லாம் வழங்கியது கழக அரசு……”ன்னு வழக்கம் போல ஆரம்பிச்சுட்டான் சைக்கிள் கடை நடராஜ்.

”யோவ்… அதெல்லாம் இருக்கட்டும்… ஊடு ஒழுகுது. இப்ப நீ தென்னம்மட்டை தருவியா இல்லையா.”

”பொறு… மார்த்தாண்டா பொறு… கோபப்படாதே….

சொன்னதைச் செய்வோம்…

செய்வதைச் சொல்வோம்… நீ மொதல்ல நம்முளுக்கு ஓட்டுப்போடுவியா…? அதச் சொல்லு”ங்கிறான் நடையன்.

”உனக்கும் இல்ல… எவனுக்கும் இல்ல. நீ ஆள உடு… மட்டை எப்பத் தருவ….?”ன்னான்.

அதுக்குள்ள எங்கியோ இருந்து பூந்த ஒரு ’ஒடன் பொறப்பு’…

“சார் கிட்ட இப்படியா பேசறது…..

சும்மா இருங்க நட்ராஜ்…

சார்…! யு சி அவர் சிம்பல் ஈஸ் ரைசிங் சன்… நீங்க படிச்சவங்க… இந்தக் கண்ட்ரீலயே  ஜனநாயகரீதியா ஒரு பார்ட்டி MK_Indira1_1474652_1474652gஇருக்குன்னா அது டி.எம்.கே.தான். கொள்கையைப் பொறுத்தவரை எப்பவுமே உறுதி. இதுக்கு மேல நீங்கதான் சார் டிசைட் பண்ணனும்…..”ன்னு பேசி முடிச்சுட்டு…

“இந்த மாதிரி ஆளுககிட்ட எல்லாம் அப்பப்ப இங்கிலீசுல பேசி கலக்குனாத்தான் ஓட்டுப் போடுவாங்க”ங்கிற மாதிரி பெருமிதத்தோட ஒரு பார்வை பார்த்தது அந்த ’ஒடன்பொறப்பு’.

இதக் கேட்டதும் கடுப்பாயிட்டான் மார்த்தாண்டன்.
“எதுய்யா கொள்கை…? எமர்ஜென்சில அப்பாவித் தொண்டனுகள உள்ள போட்டு நொக்கி நொங்கு தின்ன வெச்ச அதே இந்திரா காங்கிரசோட 1980-ல கூட்டு சேர்ந்து……

‘நேருவின் மகளே வருக…..! நிலையான ஆட்சி தருக…..!’ன்னு அந்தர் பல்டி அடிச்சீங்க. கட்சிக்குள்ள இருந்த வரைக்கும் வை.கோவப் ‘போர் வாள்’….ன்னீங்க. தனியா கூட்டஞ் சேத்துறாருனு புரிஞ்ச உடனே ‘ஒரே உறைக்குள்ள ரெண்டு பிச்சுவா இருக்க முடியாது…..’ன்னீங்க.

‘ஓராயிரம் அரவங்கள் ஒண்ணா தீண்டுன மாதிரி…..

ஈராயிரம் வண்டுகள் இடுப்பக் கடிச்ச மாதிரி..…ன்னு உங்கள மாதிரியே பேசிகிட்டிருந்த அந்த மனுசன ‘புலிக கூட சேர்ந்து கொல்லப் பாக்குறாரு’ன்னு அவுத்து உட்டீங்க….. உங்க ரெண்டு பேத்தோட நாடகமும் புரியாம உசுரை உட்டவங்களோட vaiko_karuசமாதீல நின்னு சாபம் உட்ட அதே வைகோ பின்னாடி… உங்க திமுக கூடவே கூட்டணி வெச்சு……”மகன் எப்படி குடித்தனம் நடத்தறான்கிறதப் பார்க்க வந்திருக்காரு……”ன்னு பெருமிதப் பட்டாரு.

அப்புறம் மறுபடியும் ‘ஒரே உறை ரெண்டு பிச்சுவா’ ஞாபகத்துக்கு வர…… அவரு மறுபடியும் ”ஸ்டாலின வாரிசாக்கறாங்க… மாவோவ மாப்பிள்ளையாக்குறாங்க…..”ன்னு பேச ஆரம்பிக்க…… நீங்களும் பழையபடி ”போர்வாள்
துருப்புடிச்சுருச்சு…… துரோகம் பண்ணுது…”ன்னு அள்ளி உட ஆரம்பிச்சுட்டீங்க.

போதாக்குறைக்கு……..

”பா.ஜ.க. என்பது ஒரு ஆக்டோபஸ். அதோட ஒரு முகம் ஆர்.எஸ்.எஸ். இன்னொரு முகம் பஜ்ரங்தள்’ன்னு விளாசித்தள்ளுனீங்க……

போன தேர்தலுக்கு முந்துன தேர்தல்ல… பி.ஜெ.பிக்கு தி.மு.க இந்து விரோதக் கட்சி- அ.தி.மு.க யோக்கிய கட்சி.

vaj_Karuஇந்த தேர்தல்ல தி.மு.க தோழமைக் கட்சி – அ.தி.மு.க. ஊழல் கட்சி.

நீங்க மட்டும் இந்தத் தடவ ‘பத்து சீட்டுதான் உங்களுக்கு’ன்னு சொல்லீருந்தா பழையபடி நீங்க இந்து விரோதக் கட்சியா ஆயிருப்பீங்க…

அப்புறம் என்னடான்னா…… ஊர் ஊருக்கு யாரு உங்க வேட்டியக் கிழிச்சாங்களோ அவுங்க கூடயே சேர்ந்து ‘தேசிய ஜனநாயக ஆக்டோபஸ் கூட்டணி’ அமைச்சிட்டீங்க… கொள்கையாம்… கொள்………” ன்னு சொல்லச் சொல்ல உளுந்துது ஒதை….

எவன் மிதிக்கிறான்…… எங்க மிதிக்கிறான்……. ஒரு எழவும் புரியல… கொஞ்ச தூரம் ஓடி வந்தப்பறந்தான் புரியுது நம்ம வேட்டிய ‘ஆக்டோபஸ் கூட்டணி’ ஆபீசுலயே உட்டுட்டு வந்தது.

எங்க திரும்புனாலும் பாக்கறவனெல்லாம் மொறைக்கற மாதிரியும்… ஒதைக்கற மாதிரியும்… ஒரே பீதி……

 

(இதன் அடுத்த அத்தியாயம் நாளை மறுநாள்…. )

 

நன்றி : குமுதம் வார இதழ் 17.5.2001.

 

(Boss….. இந்தக் கண்றாவி அரசியல் கட்டுரை எழுதி 13 வருசம் ஆச்சு. என்ன ஒரே வித்தியாசம் இங்கிட்டு இருந்தவங்க அங்கிட்டு இருக்காங்க…. அங்கிட்டு இருந்தவங்க இங்கிட்டு இருக்காங்க. சிலதுக மொதல்மொறையா அனாதையா நிக்குதுக…. அம்புட்டுதான். )

Advertisements

2 thoughts on “வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s