நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….

“கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா….?”

”உண்டு. பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்.”
-நடிகவேள் எம்.ஆர்.ராதா.


ஏறக்குறைய இருபது வருசத்துக்கும் மேல இருக்குமுங்க.
கலையுலகத்துக்கும் நமக்கும் உள்ள தொடர்பு.
உங்க படங்கள எல்லாம் பாக்கறதுக்காக….
கியூவுல நின்னு மூச்சு திணறியிருக்கேன்….
முட்டிக்குக் கீழே போலீசுகிட்ட அடிவாங்கியிருக்கேன்….
பஸ்சுக்குப் போக வெச்சிருந்த காசைக்கூட பறிகொடுத்திருக்கேன்.

ஆனா இத்தன வருசம் திரைல மட்டுமே பாத்துப் பாத்துப் பூரிச்ச
உங்க சமாச்சாரங்கள நடுத்தெருவுல பாக்கறதுக்கான வாய்ப்பு
இப்பத்தாங்க கெடச்சுது. இந்தக் “கலைய” வளக்கறதுக்காக
நீங்க ஆத்துற தொண்டிருக்கே தொண்டு….
அது நம்ம சுபாசு சந்திரபோசு செஞ்ச தொண்டுக்கும் மேல.
இப்படிப்பட்ட தேசபக்தருகளுக்கு ஒரு சிக்கல்ன்னா….
அது இந்த தேசத்துக்கே வந்த சிக்கல்தானுங்களே…..

ஆனா…. இந்தக் கலாரசனையத்த கந்தசாமி இருக்கானே…
அவனுக்கு வாய் ரொம்ப நீளங்க….
இந்த நாடே உருப்படாமப் போனதுக்குக் காரணமே நீங்கதானாம்.
நீங்க இல்லாட்டி இந்த ஊர் இளிச்சவாயனுக என்னமோ
அமெரிக்காக்காரனுக்கு முன்னாடியே
அணுகுண்டக் கண்டுபுடுச்சிருப்பானுகங்கிற கணக்கா பேசறான்.

”கந்தசாமி….! சினிமான்னா ஏதோ ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு
இருக்கத்தான் செய்யும்.
அதுக்காக நீ ஒட்டுமொத்த கலையுலகையே திட்டித் தீக்காதே…..”ன்னேன்.

அவன் கேட்டாத்தானே…?

“ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு இருந்தா நான் ஏன் பேசறேன்?
ஆனா…. உருப்படற கேசே அங்க ஒண்ணு ரெண்டுதான் இருக்கு….
இதுல வேற இவுங்குளுக்குள்ள நாயடி….பேயடி அடிச்சுக்கறதப் பாத்தா
மானக்கேடா இருக்குது…..”ங்குறான் கந்தசாமி.

“கலைச்சேவை” செய்ய வந்தவங்களுக்குள்ள
ஏதாவது பிரச்சனை வராமயா இருக்கும்?
அதப்போயி ஏன் பெருசா எடுக்கறே?”ன்னேன்.

”யோவ் லூசு! இது “கலைச்சேவை” செய்யறவங்களுக்குள்ளே வந்த பிரச்சனை இல்ல…..
கடங்காரனுகளுக்குள்ள வந்த பிரச்சனை.
சினிமாவ எப்படி ஆரோக்கியமா எடுக்கறதுங்கறதுல வந்த பிரச்சனையில்லய்யா….
வாங்குன கடன கட்டாம எப்படி டிமிக்கி குடுக்கறதுங்கறதுல
வந்த பிரச்சனை. அதப் புரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தன்.

“என்னது….. கடனா….? யாரு நம்ம நடிகருக வாங்குனாங்களா….?
அவுங்குளுக்கு என்னய்யா கொறைச்சல்…? காரு…. பங்களா…ன்னு
ராசாவாட்டம் இருக்குற அவுங்களப்போயி
கடன் வாங்குனாங்கன்னு புளுகறியே…..
இது உனக்கே நல்லாயிருக்கா கந்தசாமி…?”ன்னேன்.

”இங்க பாரு…. விசயம் முழுசா தெரிஞ்சா பேசு….
இல்லாட்டி ஆளவிடு….”ன்னு கெளம்புனுவனப் புடிச்சு
கெஞ்ச வேண்டீதாப் போச்சு…….

ஒருவழியா சமாதானப்படுத்தி அவனப் பேசவைக்கறதுக்குள்ள
மனுசனுக்குப் போதும் போதும்ன்னு ஆயிருச்சு.

“காத்தால எந்திரிச்சா கைல காசு இல்லாம….
MGRகுடிக்கக் கஞ்சியும்….. தொட்டுக்க ஊறுகாயுமா….
காலந்தள்ளுற உங்க நடிகருக……
சங்கத்துக்கு சொந்தமா ஒரு கட்டடம் கட்டணும்ன்னு முடிவு பண்ணி
ஸ்டேட் பாங்குல இருபத்தி ஐஞ்சு லட்சம் கடன் வாங்குனாங்க……
ஏறக்குறைய பதினெட்டு வருசம் முன்னாடி.

வாங்குனது என்னவோ 25 லட்சம்…..
ஆனா வாங்குன காச ஒழுங்கா கட்டாம…
வாங்குன கடனுக்கு வட்டி மேல வட்டி ஏறி….
இப்ப அது இரண்டரை கோடில வந்து நிக்குது.

அது எம்.ஜி.ஆர். உசுரோட இருந்தப்பவே உருவான கடன் தான்.
அத அவரும் தீக்க முயற்சி எடுக்கல…
அப்பத் தலைவரா இருந்த சிவாஜியும் தீக்கல…
Sivajiஅதுக்கப்புறம் வந்த தலைவர்களும் தீக்கல…
இப்போ இருக்குற தலைவரும் தீக்கல…
இனி வரப்போற தலைவரும் தீக்கப்போறதில்ல…
இது தான் இன்னத்த நெலமை… புரிஞ்சுதா…?”ன்னான்

இதென்னடாது… சினிமாவுலயும் நேர்லயும் சர்ர்ர்ரு புர்ர்ர்ருன்னு
கார்ல வந்தெறங்குற நம்மாளுகளா கடங்காரனுக…?
இவுங்க ஏதோ பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனச்சுகிட்டு
தியேட்டர்ல நாம விசிலடிச்சுகிட்டு இருந்தா…
இவுங்க நம்மள விட பிச்சைக்காரனுகளா இருக்கானுகளேன்னு
வருத்தமாப் போச்சு….

இருந்தாலும்…. சொந்தத்துல காரு… பங்களான்னு… வெச்சுருக்குற இவுங்க
எதுக்கு பேங்குல போயி கடன் வாங்குனாங்க…?
சரி இவுங்கதான் கேட்டாங்கன்னா…
‘இவ்வளவு வசதி இருக்குற உங்களுக்கு எதுக்குக் கடனு?’ன்னு
பேங்க்காரனுகளாவது கேட்டானுகளான்னு… பல சந்தேகம்…

வாயி சும்மாயிருக்காம அதக் கேக்கப்போயி…
கலாரசனையத்த கந்தசாமி குண்டக்கமண்டக்கன்னு கிழிக்க ஆரம்பிச்சுட்டான்.

“யோவ் அரைப்பைத்தியம்! இந்த நாட்டுல பேங்க்காரனுக என்ன…
உன்ன… மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு லோன் குடுக்கவா
பேங்க் வெச்சிருக்கான்… ?
வக்கில்லாதவனுகளுக்கு கடன் குடுக்க இல்லையா பேங்க்கு…
வசதி உள்ளவனுக்கு கடன் குடுக்கத்தான் பேங்க்…

உன்னமாதிரி மொளங்கால் வரைக்கும் வேட்டிகட்டுனவனுகளுக்கு
குடுத்தா அவுங்களுக்கு என்ன லாபம்…?
உனக்கு பதிலா… அஞ்சாறு நடிகனுகளுக்கோ,
nadigar1நடிகைகளுக்கோ கடன்குடுத்தா….
பேங்க்கு மேனேஜரு பக்கத்துல நின்னு
பல்லிளிச்சுகிட்டு போஸ் குடுக்கலாம்…

உன்னப் பக்கத்துல நிக்க வெச்சுப் போட்டோ எடுத்தா
எவன் சீந்துவான் அவுங்கள…? இது புரியாம ஒளறாதே…”ன்னான்.

அதென்னமோ உங்க சினிமாவுல அடிக்கடி வருமே…
கிளாஸ்பேக்கோ…. பிளாஸ்பேக்கோ… அந்தமாதிரி
ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஏழெட்டு வருசம் முன்னாடி….
பக்கத்துல உள்ள பேங்குல மாடு வாங்க லோன் குடுக்குறாங்கன்னு
நம்ம கருப்பராயன் சொன்னான்னு நம்பி….
நாம்போயி அந்த பேங்க் மகராசருககிட்ட பட்டபாடு இருக்கே…

மொதல்ல வெளீல நின்ன பியூனுகிட்டக் கெஞ்சிக்கூத்தாடி
உள்ளாற போறதுக்குள்ளயே போதும் போதும்ன்னு ஆயிருச்சு…

உள்ளாற போன…
”சொந்தமா எடமிருக்கா…?”ன்னான்

இல்லே…ன்னேன்

“வேறு ஏதாவது சொத்து பத்து இருக்கா…?”ன்னான்

அது இருந்தா நா ஏன் இங்க வர்றே…ன்னேன்

“உம் பொண்டாட்டி பேர்லயாவது இருக்கா…?”ன்னான்

அதுவுமில்லே…ன்னேன்

“உனக்கு கடன்குடுத்தா நிச்சயமா நீ திருப்பிக் கட்டுவேங்குறதுக்கு
உத்தரவாதக் கையெழுத்துப் போட ரெண்டு பேர் இருக்காங்களா…?”ன்னான்…

ஓ…. இருக்காங்க…. நம்ம வறட்டி தட்டுற சின்னப்பனும்…
மாடு மேக்கிற அமாவாசையும் போதுமா…?ன்னேன்

“அவுங்கெல்லாம் ஆகாது…
நீ ஒழுங்காக் கட்டலன்னா அவுங்ககிட்ட ஜப்தி பண்றதுக்கு
கோவணத்தத் தவிர வேறென்ன இருக்குது…?
அதுனால ஊருக்குள்ள யாராவது ரெண்டு ‘பெரிய’
மனுசனுகள கையெழுத்துப் போட கூட்டிட்டு வா…

வர்றப்ப… ரெண்டு பேர சாட்சிக்கு வேற கூட்டிட்டுவா….

அப்படியே மறந்திடாம மாடு புண்ணாக்குதான் திங்கும்குறதுக்கு
சர்ட்டிபிகேட் ஒண்ணையும் உங்க ஊர் வக்கீலுகிட்ட வாங்கீட்டு வா…”ன்னான்

இவனுககிட்ட இத்தன லோல்பட்டு கடன் வாங்குறத விட…
காக்கஞ்சி குடிச்சுட்டு காலத்த ஓட்டறதுதான் செரீன்னு முடிவு பண்ணி….
மாடாவது மண்ணாங்கட்டியாவதுன்னு நடையக் கட்டீட்டேன்….

“ஏங் கந்தசாமி…. மாட்டு லோனுக்குப் போன நம்மளையே
அந்தப்பாடு படுத்துனாங்களே இந்த பேங்க் ஆபீசருக…..
25 லட்சம் கேட்டுப் படியேறுன நம்ம “கலைஞருகள”
என்னபாடு படுத்தீருப்பாங்க….?ன்னு கேட்டேன்.

கடுப்பாயிட்டான் கந்தன்.

“வெவரம் புரியாமப் பேசாத….
ஏற்கெனவே ‘இந்தியன் பேங்க்’ வெவகாரத்துல
பல ’தன்மானக் காங்கிரஸ்’ தலைக உருண்டுகிட்டுக் கெடக்குது…..
குள்ள பத்மினிக்குக் குடுத்தது…..
குண்டு பத்மினிக்குக் குடுத்தது….
எல்லாம் ‘கோவிந்தா’ ஆயிப்போயி……
இப்ப பேங்க்கயே பெனாயில் போட்டுக் கழுவீட்டு இருக்கானுக.
இத்தன சட்டதிட்டங்களும் உன்ன மாதிரி
இளிச்சவாயனுகளுக்குத்தான்.

நடிக நடிகையருக்குன்னா…..
நாக்கத் தொங்கப்போட்டுகிட்டு குடுப்பாங்க நம்ம ஆபீசருக……
புரிஞ்சுதா……?”ங்கறான் நம்ம கலாரசனையத்த கந்தசாமி.

இடைல எந்தப் பொழுதுபோக்குமே இல்லாம நாளு நகர்ந்துகிட்டு இருக்க…..
திடுதிப்புன்னு ஒரு நாள்……
“நடிகர் சங்கத்தில் கலாட்டா….”
“காது கிழிந்தது…”
”நாற்காலி பறந்தது”
ன்னு பத்திரிக்கைகள்ல பக்கம் பக்கமா செய்தி.

ஊர் ரெண்டுபட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்….
ஆனா…..
Radharaviகூத்தாடிகளே ரெண்டுபட்டா
பத்திரிக்கைகளுக்கு சந்தோசம் இல்லாம இருக்குமா…..?

ஆனா…. எனக்குத்தான் வருத்தமாப் போச்சு…..
“கலை” ஒலகமே இப்புடி ரெண்டுபட்டா….
இந்த நாடு என்னாகறது?
இந்த சனங்க அடுத்தவேளை சோத்துக்கு
என்ன பண்ணுவாங்கன்னு ஒரே கவலையாப் போச்சு.

நடிகர் சங்க கலாட்டாவுல நீங்க எல்லாம்….
“கடன்கார ராதாரவி ஒழிக”ன்னு ஒரு புறமும்…..

“கடனடைக்க வர மறுக்கிற கடன்கார விஜயகுமார் ஒழிக”ன்னு மறுபுறமும்
Vijayakumar_alterமாறி மாறி நின்னு உங்க “கொள்கை முழக்கங்கள”
முழங்கியதப் பாத்து புல்லரிச்சுப் போச்சுங்க.

இதுல வேற நம்ம காந்தியார்கூட
உப்பு சத்தியாக்கிரகத்துல கலந்துகிட்டு
தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிச்சுகிட்ட
‘தியாகி’ மாயாவோட ஜாக்கெட்ட
யாரோ ஒருத்தரு கிழிக்க…..

இந்தத் ’தியாகி’ அவுங்களக் கடிக்க….

சரத்குமாரோ யாரோ புடுச்சுத் தள்ள…..

அவுரு இவரத்தள்ள….

விஜயகாந்த் குதிச்சு வந்து சமாதானம் பண்ண…..

உடனே ஒரு கோஷ்டி சட்டசபை கணக்கா ‘வெளிநடப்பு’ பண்ண….

ஒருத்தன் “டேய் மான்ங்கெட்டவங்களா”ங்க…….

இன்னொருத்தன் “நீங்கதண்டா அது”ங்க…..

போதாக்குறைக்கு நம்ம பத்திரிக்கைக
“மாயா கடிபட்ட இடம் இதுதான்”ன்னு
முதுகுல அம்புக்குறி வேற போட்டு போட்டோ போட……

”நல்லவேளை கடிச்ச மகராசரு
Mayaமுதுகுல கடிச்சாங்களே”ன்னு
சனங்கள நிம்மதிப் பெருமூச்சு விடவெச்சுட்டீங்க.

அதுக்கப்புறம் நீங்க மாத்தி மாத்தி குடுத்த அறிக்கைக இருக்கே…….

அட…… அட……..

(இடைவேளை)

Inter

(இதன் கண்றாவி கிளைமேக்ஸ் நாளை…….)

நன்றி : குமுதம் ஸ்பெஷல் – 1997

One thought on “நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி” தமிழ் நடிகர்களுக்கு…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s