10 9 8 7 6 5 4 3 2 1….
.
தொண்டாமுத்தூர் டவர் ஏரியா:
.
PSLV – 19 இல் இருந்து ஒரு அழைப்பு….
.
Calling from PSLV – 19….
Calling from PSLV – 19….
.
டிரிங்… டிரிங்… டிரிங்…
.
கோவணத்தில் சொருகியிருக்கும் செல்போனை
எடுத்துப் பேசுகிறார் ஏரோட்டிக் கொண்டிருக்கும் மாடசாமி:
யாருங்க அது?
“யோவ் நாங்க பிஎஸ்எல்வி 19 மூலமா பேசறோம்… ”
யாரு பெருமாள் பொண்டாட்டியா…?
“ச்சே.. யோவ் யோவ் நாங்க பிஎஸ்எல்வி 19 செயற்கைக்கோள்
வழிகாட்டுதலின்படி இஸ்ரோவுல இருந்து பேசறோம்… ”
என்னாது மைசூர்ல இருந்து பேசறீங்களா?
“கிழிஞ்சுதுபோ…. யாருங்குறது கெடக்கட்டும்….
என்னய்யா பண்ணிகிட்டு இருக்கே?”
ஏரோட்டிகிட்டு இருக்கறணுங்க…..
“இதென்ன மாசம்?”
ஏன் அத உங்ககிட்ட இருக்குற
அந்தக் கோலோ….கோளோ…
சொல்லுலீங்களா உங்குளுக்கு…?
”எந்த எகத்தாளம் எல்லாம் வேண்டாம்
கேட்டதுக்கு பதிலச் சொல்லு…”
அய்யோ எசமான்… ஆடீ…ங்க….
”ஆடீல எவனாவது வெதை வெதைப்பானாய்யா முண்டம்?”
ஆடீல வெதைக்காம அப்பறம் எப்பங்க வெதைக்கறது…
”அதெல்லாம் அந்தக் காலம்…
எங்க சாட்டிலைட் சொல்றது தப்பாவாயா இருக்கும்?”
அப்புடீன்னாங்க….?
“கோள்யா…கோள்….”
என்ன கர்மமோ…. சரி சொல்லுங்க…
”இனிமே நீங்க எல்லாம்…
தைல வெதை வெதைச்சு
ஆடிலதான் அறுவடை பண்ணனும்.. ”
அய்யய்யோ ஏஞ்சாமி இந்த சோதனை….
”விவசாயம்ன்னா என்னான்னு
தெரியுமாயா உங்குளுக்கு?
இப்புடியெல்லாம் குறுக்கால பேசுன…
அப்புறம் நீயும் ஒரு பாகிஸ்தான் ஏஜண்ட்ன்னு
பொளந்து கட்டீருவோம் புரியுதா….
மாடசாமி….!
இதெல்லாம் இஸ்ரோ மூலமா வர்ற தகவல்.
கேரண்டியா தப்பாகாது நோட் இட்…
அதுவும் பி எஸ் எல் வி மூலம்….
எடுத்த டேட்டாஸ்…”
எது புரிஞ்சாலும்…புரியாட்டியும்….
நீங்க மூலம்…. மூலம்…ன்னு
சொல்றது மட்டும் புரியுதுங்க…
உங்க பேச்சைக் கேட்டுட்டு
ஏரப் புடிச்சமுன்ணா
சத்தியமா நாங்க நிர்மூலம்தானுங்க…
(எரிச்சலுடன் சேற்றுக்குள் செல்போனைக்
கடாசுகிறார் மாடசாமி)
(”உங்கள் நாடு ஏழையாக இருக்கிறது.
நீங்கள் ஏன் செயற்கைக் கோள்களை
விண்ணில் செலுத்துகிறீர்கள்
என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.
இந்தக் கேள்வியே தவறு என்பதை
நாம் நிரூபித்து இருக்கிறோம்.
இந்த செயற்கைக் கோள்களால்தான்
எங்களது விவசாயிகள் துல்லியமான
பருவநிலையை அறிந்து கொள்கிறார்கள்.”
– டிஜிட்டல் மோடி.)
.
.
(டீ ஆத்துற ஆளையெல்லாம் விவசாயத்தைப்பத்தி
பேச உட்டா இதுதான் கதி.)