ஆத்திகர்களுக்கும் அவர்தான்………

periyarand-adigalar
தமிழக அரசியல் இதழில் பதில் சொல்லும் ”சீனியர்”
உண்மையிலேயே சீனியர்தான் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.
அவர் வெறுமனே பதில் அளிப்பதில் மட்டுமல்ல,
வயதிலும் அனுபவத்திலும் சீனியர்தான் என்பதை
ஒரே ஒரு பதிலில் உணர்த்திவிட்டார்.

போன வாரம் “தமிழகத்தில் பெரியார் பிறந்திருக்காவிட்டால்….?”
என்கிற கேள்விக்கு
“ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.”
என்று பதிலளித்ததைக் கண்டு
மெய்சிலிர்த்துப் போனேன்.

கடந்த தலைமுறையில் நடந்த பல சமாச்சாரங்கள்
இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லையே
என்கிற ஆதங்கத்தை அவர் “நாசூக்காக”
வெளிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நேற்று சிறு கூட்டத்தவர்களிடம் மட்டும்
ஆலயங்கள் இருந்த நிலை மாறி,
இன்று பெரும் கூட்டம் அங்கு கூடுகிறதே ஏன்?
என்பதற்கான விடையை
அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்தவர்களால்
மட்டுமே சொல்ல இயலும்.
அந்த வகையில் என்ன சொன்னாலும்
“சீனியர்” சீனியர்தான்.

ஜூனியர் ஜூனியர்தான்.

உண்மைதான்.

தந்தை பெரியார் இங்கு பிறந்திருக்காவிட்டால்
ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காதுதான்.
கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில்
கால் பட்டால் கூட தீட்டாகி விடுமென்று
சொன்னதை நம்பி ஒரு பெரும் கூட்டம்
ஊரைச் சுற்றி வலம் வர…..

”கோபுர தரிசனமே கோடி புண்ணியம்” என்று
அளந்ததைக் கேட்டு இன்னொரு கூட்டம்
கோயிலுக்கு வெளியே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க…….

”ஆகமத்துக்கு ஆகாது. அப்படியே நில்” என்றதை ஏற்று
கருவறைக்கு வெளியே மற்றொரு கூட்டம்
காத்துக் கிடந்த வேளையில்தான் அந்தக் குரல் ஒலித்தது……..

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால்
இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?”
என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.

”நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலுபுட்பம்சாற்றியேசுற்றிவந்து
முணுமுணென்றுசொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்று சிவவாக்கியர்கள் கரடியாய் கத்தியும்
விழித்தெழாத இந்த சமுதாயம்…….
அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான்
விழித்துக் கொண்டது.

அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான்.
சமத்துவமற்ற சமயத் தலங்களை
சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
வைக்கம் நகரத்து வீதிகளில்
ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள்
கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
”ஆலயங்களில் அனைத்து சாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல்
உரக்க எழுந்திருக்க முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..
பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து
குறி சொல்லிக் கொண்டிருக்கும்
”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே
வழிபடுவது மட்டுமல்ல…..
பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற
நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள்
தோன்றியிருக்க முடியாது.

தெருநுழைவுப் போராட்டம்……
கோயில் நுழைவுப் போராட்டம்…..
கருவறை நுழைவுப் போராட்டம்……
சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………
என எண்ணற்ற போராட்டங்களை
இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்
“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று
துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப்
போயிருப்பார்கள் பலர்.

எனது முப்பாட்டன் கோயிலுக்குள்
நுழைய முடியாமல் இருந்த நிலை மா(ற்)றி
இன்று எனது தலைமுறை நுழைகிறதென்றால்
அதற்குக் காரணம் அந்தப் பெரியார்தான்.

ஆம்.

பெரியார் நாத்திகர்களுக்கு மட்டுமில்லை

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.

Perusu2

Advertisements

3 thoughts on “ஆத்திகர்களுக்கும் அவர்தான்………

  1. வெள்ளைக்காரர்கள் காலத்தில் எல்லா துறைகளிலும் கோலோச்சியிருந்த பிராமணர்களின் வருணாசிரம தர்மத்திற்கு கட்டுப்பட்டு சமூகத்தில் பலவிதங்களில் இழிநிலையிலிருந்த பல சமூகத்தவரும் முதலில் மத ரீதியிலான அங்கீகாரமும் சமூக கௌரவமும் வேண்டி மிஷனரிகளின் அரவணைப்பின் கீழ் கிருத்துவ மதத்திற்கு மாறத் தொடங்கினர். இதே சமயத்தில் அவர்களுக்கு நாராயண குரு போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் மதரீதியிலான சமூக கௌரவமும், அங்கீகாரமும் பெறுவதற்கு போராடினாலும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் பெற முடியாத சூழல் நிலவிவந்தது. இந்த நிலையில் தான் அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காரும், தமிழகத்தில் சுயமரியாதை வேண்டி காங்கிரசிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் பெருவாரியான மக்களின் சமூக முன்னேற்றம், அரசியல் விடுதலை மற்றும் சுயமரியாதைக்ககப் போராடினார்கள் . தந்தை பெரியாரிடம் அரசியல் இலக்கணம் பயின்ற அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாயிலாக அரசியல் வெற்றி கண்டு சமூக நீதியை நிலைநாட்டும் பல சட்டங்களை கொண்டு வந்து பல சமூகத்தினரும் தத்தமது மதங்களிலேயே மரியாதையும் சமூக அங்கீகாரமும் பெறமுடியும் வழிவகை செய்து கொடுத்தனர். இதன் காரணமாக சமூக அங்கீகாரம் வேண்டி மதம் மாறும் முடிவில் இருந்த பல சாதிப் பிரிவினர் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். ஆக பெருவாரி மக்களை உள்ளடக்கி ஆனால் ஒரு சிறு பிரிவினரால் கட்டுப் படுத்தப் பட்டு வந்த இந்துமதம் தமிழகத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அடிப்படையில் பெரும் பாதிப்பிற்குள்ளாகாமல் காக்கப்பட்டது.

  2. எனக்கெல்லாம் என்ன தெரியும். சிதம்பரம் பூங்காவில் தாத்தாவின் கொச்சை மொழியையையும் அதனுள்ளே பொதிந்த கிடந்த ஆழமான கருத்துக்களையும் ஆவென வாய் பொளந்து பார்த்தது தவிர!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s