பேக்கரி.. பெட்டிக்கடை… தியேட்டர் என நகரத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனக்கு கிராமங்களைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது.
.
தமிழ் சினிமா புண்ணியத்தில் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டதோடு சரி. அதுவும் வயசுக்கு வந்ததுக்கு குடிசை கட்டறது… இந்த நவீன யுகத்திலும் அக்கா புள்ளையக் கட்டிக்கிறதுக்கு ரெட்டைக் கால்ல நிற்கிறது… ஒடுங்குன சொம்பு…. ஒத்த ஆலமரம்…. என இப்படித்தான் பரிச்சயம்.
.
.
ஆனால்….
அணில் கடித்த பனங்காய்கள்…
கிச்சிலி மரங்கள்….
குழந்தை பிறந்த மூன்றாவது நாள் ஊற்றும் கொடிக்கள்ளி…
முசு முசுக்கைத் தழைகள்…. என அப்பட்டமான கிராமத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார் முத்துவேல். சினிமாவில் அல்ல. இவர் எழுதியுள்ள ”முந்திரிக்காட்டு நட்சத்திரம்” என்கிற கவிதை நூலில்.
.
கிராமத்துக்கும் நகரத்துக்குமாய் இழுபட்டுக் கொண்டிருக்கும் அச்சு அசலான எளிய மனிதர்களைப் பற்றி…. எளிய வரிகளில்….. கவிதைகளாக்கித் தந்திருக்கிறார்.
.
மரக்காணம் பக்கத்திலுள்ள ஒரு குக் குக் குக் குக் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இளைஞனிடம் பாசாங்குகள் அற்ற எளிய வாழ்க்கை பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இதற்கு மேலே சொல்லிகிட்டே போனா சொதப்புவேன் நான். அதனால்…. நான் மிக நேசிக்கும் எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தக் கவிதை நூலைப் பற்றி வார்த்துள்ள வார்த்தைகளையே உங்களுக்குத் தந்து விடுகிறேன்.
.
“தான் வாழ்ந்த அடித்தட்டு வாழ்க்கையை, தன்னைச் சுற்றியிருக்கிற அடித்தட்டு மனிதர்களை ஒளிவு மறைவின்றியும், அதிகபட்ச நேர்மையுடனும் எழுதுகிறார் முத்துவேல்.
அப்பாவின் துரோகத்தையும், அம்மாவின் காதலையும், ஆண்களின் திருட்டுத்தனத்தையும், பெண்களின் ஏமாளித்தனத்தையும், வறுமையையும், துன்பத்தையும் சொல்ல மனத்துணிவு வேண்டும். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற தெளிவிலிருந்து எழுவது அத்துணிவு.”
.
இதைவிடவா நான் ”நச்” ன்னு சொல்லீரப் போறேன்?
”ஆண்டுகள் பல கடந்தாலும் காதலியின் நினைவைச் சுமந்து நிற்கும் பென்சில் மரம்…”
”ஊருக்கே உதவினாலும் தன் குடிசைக்குப் பட்டா வாங்கி வைக்காத தகப்பன்….”
என சிலாகிக்க ஏராளம் இருக்கிறது இக்கவிதை நூலில்.
அதில் இரண்டே இரண்டைச் சொல்லி உங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகப் போறேன்.
.
தனது கிராமத்துக்குப் போன பொழுதொன்றில் செருப்பு பிய்ந்துவிட அப்பா விட்டுச் சென்ற செருப்பை மாட்டி அனுப்புகிறார்கள் மகளும் மருமகனும்… அதற்கு ஊடாக எழும் தந்தையின் நினைவுகளை….
“நகரம் திரும்பி ஓய்ந்து
புதுச்செருப்பு வாங்கிய நாளில்
அப்பாவின் செருப்பிலிருந்த
முட்களையெல்லாம்
பிடுங்கியெடுத்துப்
போட மனமின்றி
பொட்டலாமாய் மடித்து வைத்தேன்.
அப்பாவின் கால்பட்ட செருப்பையும்
மண்ணில் முளைத்த முள்ளையும்
எப்படி வீசுவேன்
எங்கோ ஓர் இடத்தில்?”
இதைப்படித்த போது எனக்கு ஏனோ என் அப்பா விட்டுச் சென்ற பழைய ஷேவிங் செட்டும்…. கடைசியாய் போட்ட கட்டம் போட்ட சட்டையும் நினைவுக்கு வந்தது.
அம்மாவே நண்பனாயும் வாய்ப்பது வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பேறு. அதையே முத்துவேலின் வரிகளில் சொல்வதானால்…..
“தன் கல்யாணத்தன்று
அவளைக் காதலித்தவன்
புளியமரத்தில்
தூக்குப் போட்டுக்கொண்டதை
சொல்லியவள்
கண்களை
அந்தப் பக்கமாய்த் திருப்பி
துடைத்துக் கொண்டாள்.
நீயும் அவரைக் காதலித்தாயா என்று
கடைசிவரை
நான் கேட்கவே இல்லை.”
இதைப்படித்தபோது…..
நேற்றைய காதலிகள்தான் இன்றைய அம்மாக்கள் என்கிற எதார்த்தம் நம்மில் எத்தனை பேருக்குப் புரிந்திருக்கிறது இங்கு? என்றுதான் எண்ணத் தோன்றியது.
.
சொல்லிக் கொண்டே போக இப்படி ஏராளம் இருக்கிறது… எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நீங்கள் அப்புறம் புத்தகம் வாங்காமல் அல்வா குடுத்துருவீங்க…
.
அதுனால…..
புத்தகம் வாங்கறதுக்கு போனைப் போடுங்க புண்ணியவான்களா இந்த எண்ணுக்கு : 98411 46993.
(தெருவோரக் குறிப்புகள் 1-3)