திராவிட இயக்க தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்….

pamaran pakiarnga1
எனக்கு 12 வயதிருக்கும்போது அம்மாதான் கிளை நூலகத்தில் இருந்து
“ஈ.வே.ரா.சிந்தனைகள்” தொகுப்பை படிக்க எடுத்துக் கொடுத்தார்.

இத்தனைக்கும் அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்.
அப்பாவோ முரசொலி படிப்பவர்.

கும்பிடு என்று அம்மா கட்டாயப்படுத்தியதுமில்லை.
கும்பிடாதே என்று அப்பா குறுக்கிட்டதுமில்லை.

கலவையாய் வளர்ந்தேன் நான்.

போதாக்குறைக்கு எம்.ஜி.ஆர். ரசிகன் வேறு.

அம்மாவுடன் வாரியார் கச்சேரிகளுக்கும்,
அப்பாவுடன் திமுக கூட்டங்களுக்கும் என
ஊடாடித் திரிந்ததொரு காலம்.

அப்பாவுக்கு அறிஞர் அண்ணா மீது ஏகப்பற்று.
தாத்தா இறந்தபோதுகூட அழாதவர்
அண்ணா இறந்தபோது வீட்டிலிருந்த மர்பி ரேடியோ முன்பு
குமுறி அழுதது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ஆயினும் ஏனோ எனக்கு அண்ணா மீது
ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

கல்லூரிக் காலங்களில்கூட பக்திக்குப்
பஞ்சமில்லை எனக்குள்.
காதலிக்கு கவிதை எழுதுவதென்றால்கூட….

“புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே என்றாராம் அப்பர்.
என்னைப் பொறுத்தவரை
பூவிதழாள் உன்னை நினையா நாள்தான்
நான் பிறவா நாள்”
என்று பக்தி பிரவாகம் எடுக்கும்.

பள்ளி இறுதியாண்டுகள் நாட்டில் எமர்ஜென்சி
அறிவிக்கப்பட்டிருந்த இருண்ட காலம்.
கொஞ்சம் கொஞ்சமாய் திமுக ஆதரவாளனாக
மாறிக்கொண்டிருந்த பொழுது அது.
அக்கட்சியின் அவைத் தலைவராய் இருந்த
பி.எஸ்.ஜானகிராமன் என்பவரது மகன் ராஜசேகர்
என்னோடு படித்துக் கொண்டிருந்தார்.

அவசரநிலை பிரகடனத்தில் கைது செய்யப்பட்டு
அவரது அப்பாவும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பள்ளி செல்லும்போதும் திரும்பும்போதும்
ஏதோ எங்களுக்குத் தெரிந்த அரசியலை
பேசிக் கொண்டு வருவோம்.

சிறைக்கொடுமைகளுக்கு ஆளாகி
உயிர் இழந்த சிட்டிபாபு எம்.பி. யின்
”சிட்டிபாபுவின் சிறைக் குறிப்புகளை”
முரசொலியில் படித்துக் கண்கலங்குவோம் அப்பாவும் நானும்.

இந்திராவின் இருண்டகாலம் முடிந்து
ஜனதாவின் குடுமிபிடி காலம் தொடங்கிய பொழுதில்
புகுமுக வகுப்புக்காய் கல்லூரியில் கால்வைத்திருந்தேன் நான்.
லாலிரோட்டில் உள்ள திமுக ஆபீசில் இருந்து
உறுப்பினர் அட்டையெல்லாம் வாங்கி வந்து
மயிலிறகென பத்திரப்படுத்தியிருந்தேன்.
அவ்வளவு பெருமிதம்.

ஆனால் அதற்கும் வந்தது ஆப்பு.
எண்ணி இரண்டரை வருடத்திலேயே
எமர்ஜென்சி சித்ரவதைகளையெல்லாம் மறந்து
“நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!!” என
அடித்தது பல்டி என் ”ஆருயிர்க் கழகம்”.

தொட்டகுறை விட்டகுறையாய் தொடர்ந்த
பாசப்பிணைப்பை பிற்பாடு வந்த ஈழப்போராட்டம்
மொத்தமாய் முடித்து வைத்தது.
அதற்காக என்னைப் போன்ற
ஒரு பொடிப்பயல் எல்லாம்
ராஜினாமா கடிதமா அனுப்ப முடியும்?

திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானோ
யாரோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது :

”இங்க வந்த மாட்டை கட்டறவனுமில்ல… போன மாட்டை தேடறவனுமில்ல…”

அரசியல்ரீதியாகச் சொன்னால்
எண்பதுகளின் மத்தியப் பகுதி……
தமிழகத்திற்கு ஒரு பொற்காலம்.

எங்கு திரும்பினாலும் ஈழப் போராளிகள்.
ஒரு புறம் ஈழத் துயரை விளக்கும் கண்காட்சிகள்…
தாக்குதல்களை தத்ரூபமாகக் காட்டும் வீடியோ திரையிடல்கள்….
அகிலத்தையே அலசும் அரசியல் வகுப்புகள்….
உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கும்
விடுதலைப் போராட்டங்களைப் பற்றிய எண்ணற்ற புத்தகங்கள்….
என தமிழகமே தகதகத்துக் கொண்டிருந்தது.

சாவையே எதிர்கொண்டு வரவேற்ற போராளிகள்
மத்தியில் “ஆறிலும் சாவு…நூறிலும் சாவு” என
மேடையில் முழங்கிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து
சிரிப்பு வந்தது எமக்கு.

அந்த நேரம்தான் என்னுள் ஏகப்பட்ட மாற்றங்கள்
உருவான நேரம்.
அந்த வேளையில்தான் நான்
திராவிட கட்சிகளுக்கும் – திராவிட இயக்கங்களுக்குமான
அடிப்படையிலேயே உள்ள வேறுபாடுகளை
உணரத் தொடங்கினேன்.

அடுத்த தேர்தலுக்காக உழைத்தவர்களுக்கும் –
அடுத்த தலைமுறைக்காக போராடியவர்களுக்குமான
அப்பட்டமான இடைவெளி எனக்கு உறைத்தது.

ஏற்கெனவே ”அந்திமழை”யில் சொன்னதுதான் என்றாலும்
இன்னுமொருமுறை சொல்வது
ஒன்றும் “தெய்வ”குற்றம் ஆகிவிடாது….
எனவே :

”திராவிடர் இயக்கத்திற்கும்
திராவிட கட்சிகளுக்கும் இடையே
பண்பாட்டுத் தளத்தில்…
செயல்பாட்டுத்தளத்தில்..
அணுகுமுறைகளில்… என
எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.

சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொன்னால்…

தனது தங்கையோ துணைவியோ யாராயினும்
சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து
சிறைசெல்ல துணை நிற்பது திராவிட இயக்கக்கூறு.

கணவனோ புதல்வனோ
“வெற்றிவாகை” சூடிவர நெற்றித்திலகமிட்டு
வழியனுப்பி வைத்துவிட்டு
வாசலோடு நின்றுவிடுவது திராவிட கட்சிக்கூறு.

அடுத்த தலைமுறையின் நலனுக்காக
தன்னையே பலி கொடுப்பது திராவிட இயக்கப் பண்பு.

அடுத்த தேர்தலின் நலன்களுக்காய்
தலைமுறையையே பலி கொடுப்பது திராவிட கட்சிப் பண்பு.

மாதவி வீட்டிலேயே விருந்துண்டு கிடந்த
கணவனுக்காக காத்திருந்த கண்ணகியின்
காற்சிலம்பையும் கற்பையும் போற்றிப் புகழ்பாடுவது
திராவிட கட்சியின் “இலக்கியம்”.

”தன் கணவன் கொல்லப்பட்டதற்காக
\அக்கினி பகவானிடம் கண்ணகி மதுரையைச் சுட்டெறி
எனக் கட்டளையிட்டால் அது அவள் கற்பின் பெருமையா?
அவள் புத்தியின் பெருமையா?
அக்கினி பகவானுக்கு புத்தி வேண்டாமா?
ஒரு பெண்பிள்ளை முட்டாள்தனமாக
உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா?
(அதுவும் “தமிழ்நாட்டு யூதர்களை” மட்டும்
கொளுத்தாமல் விதிவிலக்கு அளித்து விட்டு…)
ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா
என்கிற அறிவு வேண்டாமா?”
என இலக்கியங்களையும் இதிகாசங்களையும்
கேள்விக்குள்ளாக்குவதுதான் திராவிட இயக்கத்தின் இலக்கணம்.

பெண்ணினம் விடுதலை அடைய வேண்டுமானால்
”ஆண்மை” என்ற பதமே அழிய வேண்டும் என்பது
திராவிட இயக்கக் கலாச்சாரம்.

பெரியார் வழி வந்ததாய் சொல்லிக் கொண்டு
”குங்குமம்” ”சுமங்கலி” என்கிற பெயரில்
பத்திரிகை நடத்துவது திராவிடக் கட்சியின் “பகுத்தறிவு”.

பச்சையாகச் சொன்னால்
1947 லேயே தந்தை பெரியாரோடு இந்திய சுதந்திரத்தை
ஏற்றுக் கொள்வதில் முரண்பட்டு..
சரியான தருணத்திற்காகக் காத்திருந்து….
1949இல் பிரிந்து… பிற்பாடு விரிந்து
கிளை பல பரப்பி நிற்பவை யாவும்
திராவிடக் கட்சிகள்….. கட்சிகள்…. கட்சிகள்…..

திராவிட இயக்கங்கள் அல்ல.

பெரியாரின் திராவிட இயக்கம்
முன் கூட்டியே கணித்ததை..
நினைத்ததை…
வலியுறுத்தியதை…
போராட்டங்களால் நெருக்கடி கொடுத்ததை
பல வேளைகளில் திராவிடக் கட்சிகள்
நிறைவேற்றித் தந்தன என்பதும் உண்மைதான்.
ஆனால் இயக்கத்திற்கும் கட்சிக்கும்
இடையே உள்ள குணாம்சங்கள் வேறு வேறு.”

என்னைப் பொறுத்தவரை
சமரச அரசியலின் தொடக்கம் என்பது …..

”இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் அரசர்
எப்போதும்போல இந்தியாவின்
மன்னராகவே இருந்து வருவார்….

அவரது அங்கீகாரம் இன்றி
யாரும் கவர்னர் ஜெனரல் ஆக முடியாது…

வெளிநாடுகளுக்கு தூதர்களை
அனுப்பும் உரிமை இந்தியர்களுக்கு இல்லை…

இராணுவத் தளபதியும் ஆங்கிலேயரேதான்…
கொடி மட்டும்தான் மாற்றம்…
வேறு ஒன்றுமில்லை… ”
என கனடா பிரதமர் தொடங்கி
பார்வேர்டு பிளாக் தலைவர் வரைக்கும்
சொன்ன ஆகஸ்ட் 15 நாளை
”இது ”துக்கநாள்”. இதில் திராவிடர் குதூகலிக்க
ஒன்றுமில்லை”என்று அறிவித்த பெரியாருக்கு எதிராகவே

“இது இன்பநாள்”தான்
With Perusuஎன பொங்கி எழுந்தாரே தளபதி அண்ணா….
அன்று தொடங்கியது சமரச அரசியல்.

1947 லேயே தலைவர் பெரியாருக்கு எதிராகவே
காரியதரசியாக இருந்த அண்ணா
”காங்கிரஸ் திராவிடர்களை மதிக்க வேண்டும்” என
பகிரங்க அறிக்கைப் போர் நடத்தினாரே…
அன்று தொடங்கியது அது.

காலம் கனிய இரண்டாண்டுகள் காத்திருந்து….
அப்புறம் தனியாக வந்த பின்பு போட்ட போடுதான்
பகுத்தறிவுக்கு பை பை சொன்ன
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” முழக்கம்….
அன்று தொடங்கியது அது.

முன்னர் திராவிடர் கழக மாநாட்டில்
தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தை
முன்மொழிந்தவரே பின்னர் தேர்தல் பாதைக்கு
சத்தமில்லாமல் திரும்பினாரே…
அன்று தொடங்கியது அது.

பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்
பிள்ளையாருக்கு தேங்காயும்
உடைக்க மாட்டோம் என்கிற
லாவக அரசியலின் பரிணாம வளர்ச்சிதான்….

காலையில் பெரியார் பிறந்தநாளுக்கு மலர்மாலையும்…
மாலையில் விநாயகர் பிறந்தநாளுக்கு கொழுக்கட்டையும்
தின்ன வைத்திருக்கிறது எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை.

இந்த லாவக அரசியலின் தொடர்ச்சிதான்
“திருப்பதி கணேசா திரும்பிப் பார்” என்று
சிவாஜிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய கட்சியில்
வந்த எம்ஜிஆரை மூகாம்பிகை நோக்கி நகர வைத்தது.

இந்த லாவக அரசியலின் தொடர்ச்சிதான்
தலைவி சிறைக்குப் போனாலும்
பால்குடம்… பன்னீர்குடம்… மொட்டை… மண்சோறு….
என பல்வேறு பரிமாணங்களை எட்ட வைத்திருக்கிறது.

1967 இல் ”குலக்கல்வி புகழ்” ராஜாஜியோடே
அண்ணா வைத்த கூட்டணிதான்…
1998 இல் பாஜக வோடு முதல் ஆளாய்

MILLENNIUM PHOTO: RAJAJI AND c n ANNADURAI.==========="THE MAIL" CENTENARY CELEBRATIONS-15-12-1968.

MILLENNIUM PHOTO: RAJAJI AND c n ANNADURAI.===========”THE MAIL” CENTENARY CELEBRATIONS-15-12-1968.


புரட்சிப் புயலையும்,
பின்னர் புரட்சித் தலைவியையும்
கூச்சமின்றி கரம் கோர்க்க வைத்தது…..

”RSS ஒரு ஆக்டோபஸ்” என்ற கலைஞரை
1999 இல் பாஜக வோடு சேர்ந்து
“ஆக்டோபஸ் கூட்டணி” அமைக்க வைத்தது….

எங்கும் சமரசம்….
எதிலும் சமரசம்
இது திராவிட கட்சிகளது வாழும் வரலாறு.
இவர்களே இப்படி என்றால்
தேசியக் கட்சிகளின் யோக்யதை
எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.

திராவிட கட்சிகளை அப்படிப் பார்க்கலாம்…..
ஆனால் திராவிட இயக்கங்களை
அப்படிப் பார்த்து விட முடியாது.
அவர்கள் கருப்புச் சட்டை போட்டிருக்காவிட்டால்
என் தகப்பன் வெள்ளைச் சட்டை அணிந்திருக்க முடியாது.

அவ்வளவு ஏன்…
எனது ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னணியிலும்
ஏதோ ஒரு சுமரியாதைக்காரனின் உழைப்பு
ஒளிந்துகொண்டுதானிருக்கிறது.

சில வேளைகளில் வரம்புமீறி விமர்சித்தாலும் கூட
நட்பு முரணுக்கும் பகை முரணுக்குமான
வேறுபாடு புரிந்து பெருந்தன்மையோடே
என்னைப் பேணி இருக்கிறார்கள்
திராவிட இயக்கத்தவர்கள்.

திராவிடர் விடுதலைக் கழகமாகட்டும்
பெரியார் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியாகட்டும்
திராவிடர் கழகமாகட்டும்
தந்தை பெரியார் திராவிடர் கழகமாகட்டும்
அவர்கள் எந்தப் பெயரில் இயங்கினாலும்சரி.
எவரது தலைமையில் பணியாற்றினாலும் சரி.

தேர்தலைப் பற்றிச் சிந்திக்காமல்
தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும்
அந்த நேச சக்திகளுக்கும்
சொல்வதற்கு ஒரிரண்டு உண்டு.

அதில் ஒன்றுதான்
தேர்தல் காலத்து மெளன விரதம்.

ஆம்….
இன்று திமுக வுடன் இருக்கிறதே பாஜக
என்று அதிமுக வையும்…

அதிமுக வுடன் இருக்கிறதே பாஜக
என்று திமுக வையும்… தேர்தலில் ஆதரிப்பது.

தொண்ணூறுகள் வரை இதே அளவுகோலை
”காங்கிரஸ் எதிர்ப்பை” வைத்து
காம்ரேடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலுக்குத் தேர்தல் இவர்கள் யாராவது ஒருவர்
மாற்றி மாற்றி அவர்களோடு கூட்டணி
வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
அது அவர்களது தேர்தல் நலன்.

அன்று காங்கிரஸ். இன்று பாஜக.
(அடிப்படையில் இரண்டும்
”ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்”
என்பது வேறு விஷயம்)

ஆனால் தேர்தலையே துச்சமென மதிக்கிற
திராவிட இயக்கங்களுக்கு…
நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன?

மனதார யோசித்தால்….
ராஜாஜி என்று அறியப்பட்ட ராஜகோபாலாச்சாரியாரையே
முதல்வர் பதவியை விட்டு ஓடவைத்த பெரியாருக்கு
இருந்த வலுவா இன்று நம்மிடம் இருக்கிறது.?

குடியாத்தம் இடைத்தேர்தலில் முதல்வர் பதவிக்காக
With Kamarajar Newபோட்டியிட்ட காமராசரை வெற்றி பெற வைத்த
பெரியாருக்கு இருந்த வலுவா இன்று நம்மிடம் இருக்கிறது.?

இல்லை.

ஆனால் அந்த வலிமை தானாக வந்து சேரும்.

அதுதான்:
யார் ஆட்சிக்கு வந்தாலும்சரி.
தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பும்….
தேர்தல் முடிந்து ஆறு மாதம் வரைக்கும்…
நாம் காக்கும் மெளனம்.

அதன்பின்பு……
யாராயினும்….
ஆறு மாத ஆட்சியைக் கணித்த பிறகு….
துல்லியமாய் கண்காணித்த பிறகு….
திராவிட இயக்கங்கள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும் ஆட்சியாளருக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கும்.

சொந்த லாபங்கள் ஏதுமற்ற
இவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
என மக்களை மேலும் மேலும் நம்மை நோக்கி வரவழைக்கும்.

ஆட்சி சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை
மக்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில்
ஆட்சியாளர்களது தரத்தை
நிர்ணயித்துச் சொல்லக் கூடிய கருவியாக…
தர அளவுகோலாக….
திராவிட இயக்கம் உருமாற வேண்டும்.

பச்சையாகச் சொன்னால்…
பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் என
எந்தப் பெயரில் இயங்கினாலும்
அதற்கான சாவி எப்படி ஆர்.எஸ்.எஸிடம் இருக்கிறதோ….
அப்படி….

திமுக, அதிமுக, மதிமுக என சகல ”முக” க்களும்
நம்மைத் தேடி வரும்படி சாவி
திராவிட இயக்கத்தவர்கள் கையில் இருக்க வேண்டும்.

பிரதமரே ஆனாலும் ஓடோடிச் செல்கிறாரே
மோடி ஆர்.எஸ்.எஸ்.தலைவரை பார்க்க…

அப்படி திராவிட இயக்கத் தலைவர்களைத்
தேடி தமிழக முதல்வர்கள் ஓடி வர வேண்டும்.

வர வைக்க முடியும்.

வர வைத்த காலங்களும் இருந்திருக்கிறது.

அதற்கு….
நமது தேர்தல் கால மெளனம்தான்
சரியான மருந்து என்பது இச்சிறுவனின் கருத்து.

இதைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லாவிடினும்
திராவிட இயக்கத்தவர்களிடம் சொல்ல
உரிமை இருப்பதாகவே உணர்கிறேன்.

எத்தகைய மாற்றுக் கருத்துக்களையும்
உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த இயக்கம்தான்
திராவிடர் இயக்கம் என்கிற புரிதலே
என்னை இப்படி எழுத வைத்திருக்கிறது.

பரிதாபத்துக்குரிய பாலியல் தொழிலாளிகள்…

வீடும் விரட்டி நாடும் ஏற்காமல்
ஏளனத்துக்கு உள்ளாகும் திருநங்கையர்கள்….

உலகையே மாயமாக்கக் காத்திருக்கும்
உலக மயத்தின் பலியாடுகள்….

அணு உலைகளின் அபாயங்கள்….

என சகல திசைகளிலும்
இன்னமும் முழுவீச்சோடு
நம் பங்களிப்பு தொடர வேண்டும்.

அதுதான் நம் எதிரி நுழையும்
ஒவ்வொரு புறவாசலையும்
ஓசைப்படாமல் அடைத்துக் கொண்டே வரும்.

அதுதான் நம் மக்களுக்கான
உண்மையான விடுதலையைத் தரும்.

அதுவரை வணக்கம் சொல்லி விடைபெறுவது….
உங்கள் பாமரன்.

periyar1

நன்றி :”அந்திமழை” அக்டோபர் 2015

15 thoughts on “திராவிட இயக்க தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்….

 1. சில இடங்களில் மாற்று கருத்து இருந்தாலும்.. தற்சமயம் மிகவும் தேவை ஒரு மக்கள் இயக்கம்.. என்பதில் சந்தேகமில்லை பகுத்தறிவு பாதையில்

 2. அய்யா, உங்கள் கருத்தே என்னுடைதும், இந்தியாவில் அத்துனை இந்துத்துவ இயக்கங்களுக்கும் எப்படி ஆர்.எஸ்.எஸ் தலைமையாக இருக்கிறதோ, அதே போல் ஏன் திராவிட இயக்கங்கள் இருக்ககூடாது மக்களை அழிக்க நினைக்கும் அவர்களே இருக்கும் போது மக்களுக்காக போராடும் திராவிட இயக்கம் ஏன் இருக்க முடியாமல் இருக்க வேண்டும். உங்கள் க்ருத்தை தலைவர்கள் சிந்திக்கட்டும்

 3. காதுகள் மூடப்பட முடியாது என்பதால் உங்கள் உயிர்வலியின் ஓலம் கேட்கப்படக் கூடும். நம்பிக்கையுடன் இருங்கள்.

 4. கட்சி / இயக்கம்
  வேறுபாடுகளைப் பற்பல உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி இருப்பது அருமை.

  அச்சுப் பதிப்பில் படித்து இரண்டு மாதமாப் போகிறது.

  மீண்டும் படித்ததில் ஒப்பீடுகள் ஆழப் பதிந்தன.

 5. காலத்தின் அவசியம் உணர்ந்த உணர்த்தும் பதிவு அண்ணா

  அன்பு வணக்கங்கள்

 6. எழுத்தும்,பேச்சும் போதை தரும் என்பதை திராவிட கழகங்கள் பொய்யாக்கி மெய்யாலுமே போதைக்கு பலியாகி விட்ட கால கட்டத்தில் உங்கள் எழுத்து நடை ரசிக்க வைப்பதோடு உண்மையை உரக்க சொல்கிறது.

  ஆமா! குமுதம் பாமரனின் கடிதங்கள் சொந்தக்காரர் நீங்களா? அயல்தேசக் கேள்வி.

 7. திராவிடர் இயக்க கொள்கையாளர்களின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் ! உரியவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே என் அவா!

 8. நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகன்… ஏன் இப்போது குமுதம், ஆவி எழுதுவதில்லை?? தொடர்ந்து எழுதுங்கள்.

  ஒரு சின்ன வேண்டுகோள்.

  Your site looking nyc, if would change content area bigger; readers can easily read it instead of multiple scroll. for example… we will get bored when we read very long text in whatsapp. hope you understand. pls change the content area width

  • தங்கள் அன்புக்கு எமது நன்றி. உங்களது ஆலோசனையை இந்தப் புதிய வடிவம் ஓரளவுக்கு நிறைவு செய்யும் என நம்புகிறேன். இவ்வடிமைப்பை அழகுற அமைத்துத் தந்தவர் தோழர் சேகுவேரா. நன்றிகளுடன், பாமரன்.

 9. நல்ல எழுத்து நடை தோழா!. இயக்கம்,கட்சி என்பதற்கான உங்கள் விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும். திராவிட இயக்கங்களின் பின்னடைவுக்கான காரணங்களை நபர்களின் தவறுகளில் தேடுவது சரியா?.சமூக அரசியல் பொருளாதார காரணிகள் ஏதுமில்லையா என்று அறிய விரும்புகிறேன்.

 10. பாமரன் ஸார்

  தாங்கள் 1999 ல் ஆனந்த விகடனில் Biodiversity பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தீர்கள். வாய்ப்பு இருப்பின் அக்கட்டுரையை பதிவிட இயலுமா. மிகவும் ஆர்வத்துடன் பலமுறை வாசித்த கட்டுரை அது.
  மிக்க நன்றி.

 11. நூலகத்தில் ஒரு புத்தகம் படித்தேன்.அதை நான் படிக்கவில்லை என்னோடு பேசியது படித்ததும் கிழித்ததும் எழுதியவர் பாமரன் பற்றி அறியவில்லை . பிறகு உங்கள் எழுத்தென்றல் தேடி படிக்கும்படி செய்துவிட்டீர்கள் நன்றி தோழர்.

 12. This is the first time, I read your magazine. It have lots and lots of information. I am gaining more from this magazine. Thank you so much. Keep doing your services.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s