தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்….

Gold2
தங்கநகை சேமிப்புத் திட்டத்தை
மத்திய அரசு அறிவித்தாலும் அறிவித்தது….
.
அதிலிருந்து கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
.
நம்மள மாதிரி உள்ளவங்க வீடுகளில்
பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும்
தங்கம் மட்டும் சுமார் 20 டன் இருக்குமாம்.
.
அதுனால டிரங்க்குப் பெட்டில….
வீட்டு மூலைல…ன்னு
நாம அசால்ட்டா போட்டு வெச்சுருக்கிற
தங்கத்தை கொண்டு போயி
பேங்குல கொட்டுனா வட்டியா கொட்டுமாம்…
.
இதுனால இறக்குமதி குறையும்….
இறக்குமதிக்காக அரசு செலவிடும்
அந்நிய செலாவணியும் கொறையும்ங்குது கெவர்மெண்ட்டு.
.
இதை மட்டும் வெளிய கொண்டாந்துட்டா
அப்புறம் இந்தியா ஏழை நாடாக இருக்காது.
ஓவ்வொரு இந்தியனும் அப்புறம்
தங்கத்துல புரள்ற புரூனே மன்னனையே
ஒத்தைக்கு ஒத்தை வர்றியான்னு கேக்கலாம்கிறாரு பிரதமரு.
.
அட…. நாட்டோட அந்நிய செலாவணியவே குறைக்கிறதுக்கு
நமக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான்
என்கிற உற்சாகத்தில் வீட்டுக்கு ஓடினேன்.
.
இருக்குறதெல்லாம் எடு
டெபாசிட் பண்ணீரலாம்ன்னு
அவ கிட்ட சொன்னா…
என்ன லூசு மாதிரி ஏற இறங்கப் பாக்குறா.
.
ச்சே கொஞ்சம் கூட
தேசபக்தி இல்லாத ஜனங்கப்பா.
.
நாட்டின் அந்நியச் செலாவணியக் குறைக்கறதுக்கான
உனது கடமைய நிறைவேற்றப் போறியா? இல்லியா?
என்று கறாராகக் கேட்டதுதான் தாமதம்.
.
.
“கல்யாணம் ஆன நாள்ல இருந்து
கால் பவுன் வாங்கிக் கொடுக்க துப்பில்லாட்டியும்….
இந்த வீறாப்புல மட்டும் கொறைச்சலில்லை…..
மொதல்ல உன்கூட குடும்பம் நடத்தி
பருப்புக் கடையறதுக்காக
அடமானம் வெச்ச நகைய
திருப்ப முடியுமான்னு பாரு…”ன்னு காறித் துப்பீட்டா.
.
ச்சே நம்ம நிலமைதான் இப்படி….
.
சரி….
பக்கத்தில் இருந்த நம்ம நண்பன்
சிறீபதியிடமாவது கேட்போம்ன்னு முடிவு பண்ணி……
.
“ஏன் சிறீ…
உங்குளுக்கு என்னாவது தங்கத்தை
டெபாசிட் பண்ற திட்டம் இருக்கா?”ன்னு
மெதுவா கேட்டேன்.
.
“அதுக்கு எங்க சித்தியத்தான்
டெபாசிட் பண்ணனும்….”கிறாரு அந்த மனுசன்
.
எதுவும் புரியாமல்…. ஏன்?ன்னேன்.
.
”ஏன்னா…..
எங்க சித்தி பேரு தங்கம்”கிறாரு பாவி மனுசன்.
.
.
(டுபாக்கூர் பக்கங்கள் – 1 – 2 – குமுதம் வார இதழ்
Gold1

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்….?

”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான்?” என்கிற எம்.ஜி.ஆரின் படகோட்டி பாடல்
vijaykanthவரிகள் பண்பலையில் ஓடிக்கொண்டிருக்க இருக்க எனக்கு ஏனோ கருப்பு எம்.ஜி.ஆரின் ஞாபகம்
வந்துவிட்டது.
.
சமீபத்தில்தான் கோவையிலுள்ள ஒரு யோகா மையத்திற்கு வந்து போனார் கேப்டன்.
.
ஒரு வார யோகா அவரது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது என்று ஆணித்தரமாக அறிவித்து விட்டுத்தான் விமானம் ஏறினார் விஜயகாந்த்.
.
போய் இறங்கிய கையோடு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரண உதவியும் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு சிவக்கொழுந்து ரூபத்தில் வந்திருக்கிறது சிக்கல்.
.
முண்டியடித்த மக்களை ஒழுங்குபடுத்தவில்லை என எம்.எல்.ஏ சிவக்கொழுந்து வேனிலேயே ”ஒழுங்குநடவடிக்கை”க்கு உள்ளானதையும்….
.
இலவச இணைப்பாய் வேன் டிரைவருக்கும் ஓரிரண்டு கிடைத்ததையும்
.
கண்டு களித்தது தமிழ்ச் சமூகம்.
.
அப்புறம் ”வாங்கியவரே” ”அடிக்கலை…… ஆனா அப்புடி அடிச்சாலும் நல்வழிப்படுத்தத்தான் அடிப்பாரு….” என அறிக்கைவிட்டுத் தெறிக்கவிட….
புல்லரித்துவிட்டது.
.
.
ஆனால் நமக்குள்ள கேள்வியெல்லாம் வேறு.
அடித்தார்…. அடிக்கவில்லை….
உரிமை இருக்கு…. உரிமை இல்லை….
என்பதையெல்லாம் தாண்டி ஏன் யாரும் வேறொரு விஷயத்தை இதனோடு தொடர்புபடுத்தியே பார்க்க மாட்டேனென்கிறார்கள் என்பதுதான்.
.
அதுதான் : ஒரு வாரம் யோகா பயிற்சி எடுத்து மனதையும் உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கிற ஒருவர் எப்படி எண்ணி நாற்பத்தி எட்டே
மணிநேரத்தில் பக்கத்தில் இருப்பவருக்கு இப்படி கும்மாங்குத்து விட முடியும்? என்பதுதான் நம் கேள்வியே.
.
யோகா பயிற்சி கொடுத்த புண்ணியவான்கள் மனதையும் கட்டுப்படுத்த பயிற்சி கொடுத்திருப்பார்கள்தானே?
.
அப்பயிற்சி ஏன் இங்கே பலனளிக்காமல் புட்டுகிச்சு?
.
பிரச்சனை பயிற்சி கொடுத்தவரின் போதாமையா? அல்லது எடுத்தவரின் இயலாமையா?
.
அதுவுமல்லது அந்த யோகா பயிற்சிக்கான சக்தி….
Expiry Date and Time….
எல்லாம் வெறும் நாற்பத்தி எட்டு மணி நேரம் மட்டும்தானா?
.
இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள்.
.
ஆனால் எல்லாவற்றைவிடவும் பெருத்த சந்தேகம் ஒன்று உண்டு…..
.
பயிற்சி முடிந்து சிவக்கொழுந்துவுக்குக் கிடைத்த மாதிரி….
.
பயிற்சியின்போதே ஆசிரமக்காரர்களுக்கும் ”ஏதாவது” கிடைத்ததா என்பதே அது.
.
ஏன்னா….. அடிச்ச அடியப் பாத்து பொறிகலங்கிப்போய்….
”ஒருத்தருக்கா கொடுத்தான்….MGR1
இல்லை ”அவருக்குமா” கொடுத்தான்….?”ன்னு அந்தப் பாட்டே எனக்கு இப்ப….தாறுமாறாத்தான் கேக்குது……
.
.
(தெருவோரக் குறிப்புகள் – தின செய்தி நாளிதழ்)

அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா….

Gound3
நம்ம கச்சேரியை தலைவர் கவுண்டமணில இருந்து
ஆரம்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.

ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆசை.
எப்படியாவது தலைவனைப் பார்த்துவிட வேண்டும் என்று.
கடைசியில் சத்யராஜ்தான் ”அட வாங்க பாத்தர்லாம்” என்று
என்னை கூட்டிக் கொண்டு போனார்.

அது ஒரு பொன் காலைப் பொழுது.
(அட என்னப்பா பொன் காலைப் பொழுது…
பொறாண்டுன காலைப் பொழுதூன்னுட்டு….
அட மேட்டருக்கு வாப்பா… -தலைவனின் அசரீரி)

வலப்பக்கம் தலைவன் இடப்பக்கம் நண்பர் சத்யராஜ்.
ரெண்டு உலக மகா குசும்புகளுக்கும் மத்தியில்
அப்பாவியாய் நான்.

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கலாய்க்க ரெண்டு மணி நேரம்
எப்படி பொழுது போனது என்றே தெரியவில்லை.
வெளியில் வரும்போது புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது.
(இந்த டக்கால்ட்டி வேலைதான வேண்டாம்கிறது…
என்னைக்காவது புயலடிச்சு ஓய்ஞ்சுபோய் நீ பாத்திருக்கியா? -தலைவனின் அசரீரி)

திடீரென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு திரும்பியது.
”அட என்னப்பா எங்க பாத்தாலும் ஜட்ஜுகளா உக்காந்துகிட்டு இருக்காங்க….”
என்று தலைவன் சொல்ல

“ஆமாங்க தலைவரே எந்த டீவிய தொறந்தாலும்
ஜட்ஜாத்தான் தெரியறாங்க” என்றார் சத்யராஜ்.

“ஏம்ப்பா…. இந்த ஐகோர்ட்டுலதான் என்னவோ
முப்பது… நாப்பது போஸ்ட் காலி இருக்குங்கறாங்களே….
இவுங்களையெல்லாம் அங்க ஏத்தி அனுப்பி வெச்சற வேண்டீதுதானே?
என்று தலைவன் போட்ட போடில் தெறித்தோம்.
goundamani
திடீரென்று
”அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் Counter.

பேச்சு சினிமா பக்கம் போக படு உற்சாகமாகிவிட்டார் பார்ட்டி.
“ஏம்ப்பா சத்தி! இவனுக ஏம்ப்பா எப்பப்பாரு லுங்கியத் தூக்கீட்டே ஆடறானுக….”
என்று கேட்க…

நான் ஒருத்தன் உயிரோடு இருப்பதை
நினைவுபடுத்த இடையில் புகுந்தேன்
”ஆமாங்க எல்லாப்படத்துலயும் அதேதான் என்றேன்.

”இதுல வேற மூஞ்சிய மறைச்சுக்கிட்டு ஆடுறானுகப்பா…
அவனுக மூஞ்சிய அவனுகளுக்கே பாக்க புடிக்கிலியோ என்னவோ….
அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் மீண்டும்.

ரஜனீஷ்…. பெரியார்…. ஈழம் என பலதிசைகளில் பயணித்தது பேச்சு.

திடீரென…. “ஏம்ப்பா சத்தி! இந்த இரும்பக் கண்டுபுடுச்சு
எத்தன வருசம் இருக்கும்?” என்றார் தல.

“அது இருக்குங்க தலைவரே ஆயிரக்கணக்கான வருசம்” என்று சொல்லிவிட்டு….

“ஏனுங் தலைவரே இப்ப அதைக் கேக்கறீங்க?” என்றார் சத்யராஜ் எதுவும் புரியாமல்….

“அட அதில்லப்பா…. எப்பப்பாத்தாலும்
‘வீரம் வெளஞ்ச மண்ணு’… ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ன்னு
வீச்சருவாளோட கிடா மீசைய முறுக்கி உட்டுக்கறானுகளே…..
அந்த வெள்ளக்காரன் இருந்தப்ப அந்த வீரத்தக் காட்டீருக்க வேண்டீதுதானே?
அட எங்கூர்ல எல்லாம் வயல்ல நெல்லுதாம்ப்பா வெளையுது…..
இவுங்கூர்ல மட்டும் வீரம் வெளையுதாக்கும்….

அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் மறுபடியும்.

ஏதோ ஒரு கண்றாவி பட டயலாக் தலைவரைப் பாடாய்ப் படுத்திவிட்டது
என்பது மட்டும் புரிந்தது.
Gound4
கடைசியாகக் கிளம்பும்போது தலைவன் அடித்த கமெண்ட்தான் உச்சகட்டம்.

எனது சினிமா நண்பர் ஒருவர் சில எலும்புத் துண்டுகளை
மாலையாகப் போட்டிருந்தது பற்றி நான் பெருமையாகச் சொல்லித் தொலைக்க….

“எங்கிருந்து புடிச்சது அது?” என்றார்.

“காசியிலே இருந்து எடுத்துட்டு வந்தது” என்றேன்
கர்வம் கொஞ்சமும் குறையாமல்.

“அட அதுக்கு ஏம்ப்பா காசிக்குப் போகணும்….
இங்கிருக்கிற கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குப் போனாலே போதும்
ஏகப்பட்டத எடுத்துட்டு வரலாமே” என்று கவுண்டமணி போட்ட போட்டில்
தலை தெறிக்க வெளியில் ஓடிவந்தோம் நண்பர் சத்யராஜும் நானும்.

அங்கு பேசியதை எல்லாம் அப்படியே எழுதினால்
குறைந்தபட்சம் அஞ்சாயிரம் பேராவது கேஸ் போடுவார்கள்.

அம்புட்டு நக்கல்.

நமக்கெதுக்குப்பா ஊர் வம்பு?

அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா….
.
.
.
Goundamani1 (1)
(டுபாக்கூர் பக்கங்கள் 1 – 1 – நன்றி: குமுதம்)

நாம் மனது வைத்தால் ….

Scavenge3
என்னைப் பொறுத்தவரை கொடுமையிலும் கொடுமை இந்தக் குப்பை வழிப்பதுதான்.
.
நாம் அன்றாடம் வீட்டில் இருந்து வெளியில் கொண்டு வந்து வீசுகிற கவர்களில் எத்தனை வித அசுத்தங்கள் மறைந்திருக்கின்றன என்பது நம் மனதுக்குத்தான் தெரியும்.
.
நாம் தொடக்கூட கூசுகிற அந்தக் குப்பைகளை அள்ளிப் போக தள்ளுவண்டிகளில்….
லாரிகளில் என பவனி வரும் அந்தத் தாய்களை…. இளைஞர்களை….
பார்க்கும் போதெல்லாம் கூனிக்குறுகிப் போகிறேன்.
.
பொட்டலம் கட்டிய குழந்தையின் மலத்தில் இருந்து துப்பிய சளி வரைக்கும் அனைத்தும் அதில் சங்கமமாகி இருக்கும்.
காக்கி உடுப்புக்கு மேல் ஒரு கலர் உடுப்பைத் தவிர வேறேதும் உபகரணங்களில்லை அவர்களிடம்.
.
நமது அரசுகள் அதிரடியாகச் செய்ய வேண்டிய வேலை மேலை நாடுகளில் இதற்கென பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்வதுதான்.
.
வீதியில் கிடப்பதை வாரி எடுத்து லாரிக்குள் வீசிவிட்டு அந்த முடைநாற்றத்தோடே பயணிக்கிறார்கள் அந்த ஜீவன்கள். நாம் வாகனங்களில் பின் தொடரும்போதுகூட மூச்சை உள்ளிழுக்காமல் சமாளித்து வேகமாய்க் கடக்கிறோம் நாம்.
.
செவ்வாய்க்கு செயற்கைக் கோள் விடும் காலத்திலும் இதுதான் நம் நிலை.
.
இது அன்றாடச் சூழல்.
ஆனால் அதுவே இன்றைய தமிழகம் சந்தித்திருக்கிற சூழல்?
.
Scavenge2
செத்து மிதக்கும் கால்நடைகள்…..
செத்த மனிதர்களது மிச்சங்கள்…. எச்சங்கள்….
தப்பித்த மனிதர்கள் போக்கிடமற்று வழியின்றி வெளியேற்றிய கழிவுகள்… என அனைத்தையும் அள்ளப்போவது யார்?
.
.
சென்னை மாநகராட்சியில் உள்ள அந்த 25000 துப்புறவுப் பணியாளர்கள்தான்.
.
வெள்ளம் வடியத் துவங்கிய பொழுதில் இருந்தே ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களது பணியை. வயிற்றைப் புரட்டி எடுக்கும் குமட்டலோடு அவர்கள்தான் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்
அத்தனை அசுத்தங்களையும்.
.
இதில் மட்டும் இடஒதுக்கீடு கேட்டு குரல் கொடுக்க மாட்டார்கள் எவரும். நாம் “பெருந்தன்மையாய்” ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டிருக்கிற
அருந்ததிய மக்களுக்கென்றே விட்டுக் கொடுத்திருக்கிற 100 சதவீத ஒதுக்கீடு அது.
.
ஆயினும் அதற்காக அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசு எவ்வளவு தெரியுமா நண்பர்களே….?
.
இரண்டாயிரம் ரூபாய்.
.
”சிறப்பு” ”ஊக்க”த் தொகை.
2 கோடி கொடுத்தால் கூட எவரும் செய்யத் துணியமாட்டார்கள்.
.
இந்தப் பேரிடர்க் காலத்தில் எத்தனையோ பணி இருக்கலாம் தமிழக அரசுக்கு…
பல்லாயிரம் கோடி செலவிடப்படலாம்
நிவாரணப் பணிகளுக்கு. செய்யட்டும் நாமும் அதற்கு துணை நிற்போம்.
.
ஆனால் கேட்க நாதியற்ற அந்தத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை எந்தவிதத்தில் ஈடாகும் அவர்களது தியாகத்துக்கு?
.
இரண்டாயிரமல்ல….
இருபதாயிரமல்ல…
லட்ச ரூபாய் கொடுக்கலாம்….
.
எத்தனையோ கோடி கோடியாய் செலவாகப் போகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் அளிக்க முன் வர வேண்டும் தமிழக அரசு.
.
நாம் மனது வைத்தால் நிச்சயம் செய்ய முடியும்.
.
செயற்கைக் கோள்களுக்காக நாம் செலவிடும் தொகையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை இது.
.
ஏனெனில் சமூகம் சுத்தமாக இருப்பதற்காக தங்களை அசுத்தப்படுத்திக் கொள்கிறவர்கள் அவர்கள்.
.
.
செய்வீர்களா முதல்வரே?
Scavenge1

”தேசியப் பேரிடர்”…

theru12dec_01
தமிழகம் எதிர்பாராமல் எதிர்கொண்ட மழையும் வெள்ளமும் லட்சக்கணக்கானோரை நிர்க்கதியாய்த் தவிக்க வைத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான உயிரிழப்பும் சேதமும் சோகத்தின் உச்சம்.
.
இதனை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்து குரல் ஒலித்தது. பாராளுமன்றத்திலும் தமிழக துயரத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர் தமிழக எம்.பி.க்கள்.
.
தமிழக முதல்வரும் மோடிக்கு எழுதினார் தேசிய பேரிடராக அறிவிக்கச் சொல்லி. ஆனால் அது சாத்தியமில்லை என்று பதில் வந்திருக்கிறது இப்போது.
.
2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசியப் பேரிடர் சட்டத்தின்படி புயல், மழை, வெள்ளைத்தை எல்லாம் தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது. அப்படி அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் இதற்காக சிறப்பு நிதியுதவி எல்லாம் அளிக்க வாய்ப்பே இல்லை என்றும் கையை விரித்துவிட்டார்கள் மத்தியில் உள்ளவர்கள்.
.
அப்படியானால் எப்படி 2008 இல் பீகாரில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவித்தீர்கள் என்று கேட்டால்… “அறிவிச்சது நாங்க இல்ல….அது மன்னுமோகன் தலைமையிலான காங்கிரஸ் கெவர்மெண்டு …. ஆனா தேசியப் பேரிடர்…ன்னு அறிவிச்சாலும் சிறப்பு நிதி எல்லாம் குடுக்கல…”ங்குது மத்தி.
.
.
தமிழ்நாடுன்னாலே மீனவர் பிரச்சனை தொடங்கி பெரும் வெள்ளம் வரைக்கும்…..
இதுதான்யா சிக்கலே…
.
.
சரி….. ”தேசியப் பேரிடர்”ன்னுதான் அறிவிக்க முடியல……
.
.
அப்ப ”தேசியமே பேரிடர்தான்……”னாவது
அறிவியுங்கப்பா பொருத்தமா இருக்கும்.
.
.
.
(தெருவோரக் குறிப்புகள் 7-1 தின செய்தி நாளிதழ்)
theru12dec_02a