அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா….

Gound3
நம்ம கச்சேரியை தலைவர் கவுண்டமணில இருந்து
ஆரம்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.

ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆசை.
எப்படியாவது தலைவனைப் பார்த்துவிட வேண்டும் என்று.
கடைசியில் சத்யராஜ்தான் ”அட வாங்க பாத்தர்லாம்” என்று
என்னை கூட்டிக் கொண்டு போனார்.

அது ஒரு பொன் காலைப் பொழுது.
(அட என்னப்பா பொன் காலைப் பொழுது…
பொறாண்டுன காலைப் பொழுதூன்னுட்டு….
அட மேட்டருக்கு வாப்பா… -தலைவனின் அசரீரி)

வலப்பக்கம் தலைவன் இடப்பக்கம் நண்பர் சத்யராஜ்.
ரெண்டு உலக மகா குசும்புகளுக்கும் மத்தியில்
அப்பாவியாய் நான்.

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கலாய்க்க ரெண்டு மணி நேரம்
எப்படி பொழுது போனது என்றே தெரியவில்லை.
வெளியில் வரும்போது புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது.
(இந்த டக்கால்ட்டி வேலைதான வேண்டாம்கிறது…
என்னைக்காவது புயலடிச்சு ஓய்ஞ்சுபோய் நீ பாத்திருக்கியா? -தலைவனின் அசரீரி)

திடீரென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு திரும்பியது.
”அட என்னப்பா எங்க பாத்தாலும் ஜட்ஜுகளா உக்காந்துகிட்டு இருக்காங்க….”
என்று தலைவன் சொல்ல

“ஆமாங்க தலைவரே எந்த டீவிய தொறந்தாலும்
ஜட்ஜாத்தான் தெரியறாங்க” என்றார் சத்யராஜ்.

“ஏம்ப்பா…. இந்த ஐகோர்ட்டுலதான் என்னவோ
முப்பது… நாப்பது போஸ்ட் காலி இருக்குங்கறாங்களே….
இவுங்களையெல்லாம் அங்க ஏத்தி அனுப்பி வெச்சற வேண்டீதுதானே?
என்று தலைவன் போட்ட போடில் தெறித்தோம்.
goundamani
திடீரென்று
”அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் Counter.

பேச்சு சினிமா பக்கம் போக படு உற்சாகமாகிவிட்டார் பார்ட்டி.
“ஏம்ப்பா சத்தி! இவனுக ஏம்ப்பா எப்பப்பாரு லுங்கியத் தூக்கீட்டே ஆடறானுக….”
என்று கேட்க…

நான் ஒருத்தன் உயிரோடு இருப்பதை
நினைவுபடுத்த இடையில் புகுந்தேன்
”ஆமாங்க எல்லாப்படத்துலயும் அதேதான் என்றேன்.

”இதுல வேற மூஞ்சிய மறைச்சுக்கிட்டு ஆடுறானுகப்பா…
அவனுக மூஞ்சிய அவனுகளுக்கே பாக்க புடிக்கிலியோ என்னவோ….
அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் மீண்டும்.

ரஜனீஷ்…. பெரியார்…. ஈழம் என பலதிசைகளில் பயணித்தது பேச்சு.

திடீரென…. “ஏம்ப்பா சத்தி! இந்த இரும்பக் கண்டுபுடுச்சு
எத்தன வருசம் இருக்கும்?” என்றார் தல.

“அது இருக்குங்க தலைவரே ஆயிரக்கணக்கான வருசம்” என்று சொல்லிவிட்டு….

“ஏனுங் தலைவரே இப்ப அதைக் கேக்கறீங்க?” என்றார் சத்யராஜ் எதுவும் புரியாமல்….

“அட அதில்லப்பா…. எப்பப்பாத்தாலும்
‘வீரம் வெளஞ்ச மண்ணு’… ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ன்னு
வீச்சருவாளோட கிடா மீசைய முறுக்கி உட்டுக்கறானுகளே…..
அந்த வெள்ளக்காரன் இருந்தப்ப அந்த வீரத்தக் காட்டீருக்க வேண்டீதுதானே?
அட எங்கூர்ல எல்லாம் வயல்ல நெல்லுதாம்ப்பா வெளையுது…..
இவுங்கூர்ல மட்டும் வீரம் வெளையுதாக்கும்….

அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா……” என்றார் மறுபடியும்.

ஏதோ ஒரு கண்றாவி பட டயலாக் தலைவரைப் பாடாய்ப் படுத்திவிட்டது
என்பது மட்டும் புரிந்தது.
Gound4
கடைசியாகக் கிளம்பும்போது தலைவன் அடித்த கமெண்ட்தான் உச்சகட்டம்.

எனது சினிமா நண்பர் ஒருவர் சில எலும்புத் துண்டுகளை
மாலையாகப் போட்டிருந்தது பற்றி நான் பெருமையாகச் சொல்லித் தொலைக்க….

“எங்கிருந்து புடிச்சது அது?” என்றார்.

“காசியிலே இருந்து எடுத்துட்டு வந்தது” என்றேன்
கர்வம் கொஞ்சமும் குறையாமல்.

“அட அதுக்கு ஏம்ப்பா காசிக்குப் போகணும்….
இங்கிருக்கிற கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குப் போனாலே போதும்
ஏகப்பட்டத எடுத்துட்டு வரலாமே” என்று கவுண்டமணி போட்ட போட்டில்
தலை தெறிக்க வெளியில் ஓடிவந்தோம் நண்பர் சத்யராஜும் நானும்.

அங்கு பேசியதை எல்லாம் அப்படியே எழுதினால்
குறைந்தபட்சம் அஞ்சாயிரம் பேராவது கேஸ் போடுவார்கள்.

அம்புட்டு நக்கல்.

நமக்கெதுக்குப்பா ஊர் வம்பு?

அய்யோ நெல்லு சாய்ஞ்ச மாதிரி என் நெஞ்சுல சாய்ஞ்சிட்டியேம்மா….
.
.
.
Goundamani1 (1)
(டுபாக்கூர் பக்கங்கள் 1 – 1 – நன்றி: குமுதம்)