அகில உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக…

Karnan
வாசன் மீது வருத்தம் இருக்க வேண்டியதுதான் வைகோவுக்கு. அதற்காக இப்படியா பலபேருக்கு மத்தியில் இப்படிப் போட்டுடைப்பது.
.
ம.ந.கூ கூட்டணிக்கு வந்து சேருவதற்கு முப்பது நிமிஷம் முன்னாடி வரைக்கும் போயஸ் தோட்டத்தில் இருந்து புறா வராதா என்று வானத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்திருக்கலாம் வாசன்.
ஆனால் ஒருவழியாக வந்து சேர்ந்து வீரமுழக்கமிட்ட பிறகும் அவர்மீது காண்டில் இருப்பது கரெக்ட் அல்லவே பிரபு!.

ஏற்கெனவே இருக்கும் அஞ்சு அபலைகளுக்கு மேல இனி யார் உள்ளே வரப்போகிறார்கள் என்கிற அசைக்கமுடியாத ”தன்னம்பிக்கை”யில் ”பஞ்சபாண்டவர் அணி” என அறிவித்து ஆளாளுக்கு டிபார்ட்மெண்ட்டையும் பிரித்துக் கொடுத்தாயிற்று.
.
அதற்கப்புறமும் ”ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமீ..”ன்னு வாசன் வந்து நிற்பார் என்று யார் கண்டது?
.
சரி அப்படித்தான் சார்ட் போட்டபிறகு வந்து நிற்கும் பயணி போல வந்தது வந்தார் வாசன்….
அவருக்குத் தகுந்த வேலை ஏதாவது ஒதுக்க வேண்டியதுதானே.?

இந்த குருச்சேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு அம்பெடுத்துக் குடுக்க வேண்டீது உங்களோட வேலை….
.
.
பீமனுக்கு பேக் சப்போர்ட் நீங்கதான்….
.
.
தேரோட சாரதி war zone ல டயர்ட் ஆகும்போது நீங்கதான் ஓட்டணும் ரதத்தை….
.
.
சகாதேவனும், மகாதேவனும் குருச்சேத்திரத்தை மறந்து ருஷ்யப் போர்க்களம் பற்றிய பழைய ஞாபகங்கங்களில் கண்ணயரும்போது கிள்ளிவைக்க வேண்டியது உங்க பொறுப்பு….
.
.
இப்படி ஏராளப் பணிகள் யுத்த களத்தில் இருக்கும் போது….
போட்டீங்களே ஒரு போடு. அதுதான் தாங்க முடியல.
Vaiko
“நாங்கள் இணைந்தபோது பஞ்ச பாண்டவர்கள் என்றோம். இப்போது வாசன் எங்கள் அணிக்கு வந்துள்ளார். இந்த குருச்சேத்திரத்தில் வாசன் என்னும் கர்ணனும் பஞ்ச பாண்டவர்களுடன் இணைந்துள்ளார். எனவே நாங்கள் வெல்வோம்.”
.
அப்படீங்குறீங்களே வைகோ….
.
இங்கதாங்க ஒதைக்குது.
.
எனக்குத் தெரிஞ்ச மகாபாரதத்துல கடைசியில கர்ணனோட கதைய முடிக்கிறவங்களே பஞ்சபாண்டவர்கள்தானே…
.
நம்ம சிவாஜியோட கர்ணன் படத்துல கூட குத்துப்பட்டுக் கெடக்குற கர்ணனோட கடைசி கவசத்தையும் லவட்டீட்டுப் போக ”வஞ்சகன் கண்ணனடா…”ன்னு என்.டி.ராமாராவ் பாட்டுப் பாடீட்டு வருவாரே….
..
ஆனா…. நீங்க சொல்றது புதுக்கதையா இல்ல இருக்குது.
.
ஆக………
.
.
”அகில உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக…” ”பாண்டவர்களும் கெளரவர்களும் இணைந்து வழங்கும்”ன்னு கூட்டணி வெச்ச முதல் அணி நிச்சயம் நம்ம அணிதான்.
.
ஆனாலும் புயலே! கர்ணனை நெனச்சாத்தான் கொஞ்சம் கவலையாக் கீது.
.
.
(”டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம்)
Vasan