இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்…

கமலின் தசாவதாரத்தில் வரும்
Tho.Pa3“நான் கடவுள் இல்லேன்னு எங்கீங்க சொன்னேன்?
இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்….”
என்கிற வசனம் உலகபிரசித்தம்.
.
ஆனால் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர்
தொ.ப என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.
இந்தத் தொ.ப கமலுக்கும் நண்பர்.
அவர் சொன்னதைத்தான் கமல் உரிமையோடு
தன் திரைப்படத்தில் பதிவு செய்திருப்பார்.
.
தமிழ் மக்களது பழக்கவழக்கங்கள்
அவர்களது பண்பாட்டு கூறுகள் பற்றியெல்லாம்
பல்கலைக் கழக ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து
ஆராய்ச்சி செய்யாமல் மூலை முடுக்கில் இருக்கும்Tho.Pa. in Field
குக்கிராமங்களுக்கு எல்லாம் நடையாய் நடந்து
மக்களோடு மக்களாய் இருந்து
அநேக நூல்கள் வெளியிட்டவர்தான் இந்தத் தொ.ப.
.
ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள்வர்கள்தான்
புண்ணியத்தலங்களைத் தேடிப்போவது வழக்கம்.
ஆனால் எனக்கும் எனது தோழர்களுக்கும்
புண்ணியத்தலம் ஒன்று உண்டென்றால்
அது பாளையங்கோட்டைதான்.
எங்கள் பேட்டரிக்கு சார்ஜ் குறையும்போதெல்லாம்
சார்ஜ் ஏற்றிக்கொள்ள பயணப்படும்
ஒரே இடம் தொ.பரமசிவன் இருக்கும் பாளையங்கோட்டைதான்.
.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் போதும்.
ஒன்று நாங்கள் நண்பர்கள் படையோடு போய் அங்கு நிற்போம்.
அல்லது தொ.ப.வின் தோழர்களிடம் இருந்தோ
அல்லது அவரிடமிருந்தோ அலைபேசி அழைப்பு வரும்….
”என்ன…. இன்னும் வரலை?” என்று.
அப்புறம் என்ன பாளையங்கோட்டை நோக்கி பயணம்தான்.
.
பெரிய்ய்ய்ய்ய பிரபலத்தைப் பார்க்கப் போகிறோம்
என்கிற கற்பனையோடெல்லாம்
கிளம்பிப் போனால் தொலைந்தோம்.

அவரோ தெற்கு பஜாரில் உள்ள
ஏதோ ஒரு கடைத் திண்ணையில் உட்கார்ந்து
டீ குடித்துக் கொண்டிருப்பார்.
எப்போதும் அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம்
கலகலத்துக் கொண்டிருக்கும்.
.
அவரைச் சுற்றி ஞானிகளும் உண்டு.
என்னைப் போன்ற பேமானிகளும் உண்டு.
சகலருக்கும் ஒரே மாதிரி மரியாதைதான்.
.
போய் இறங்கிய கொஞ்ச நேரத்தில்
அவரோடு எங்கள் பயணம் தொடங்கும்.

அது தமிழர் நாகரீகம் வெளிவந்துவிடக்கூடாதே
என்கிற அச்சத்தில் கால்வாசி ஆராய்ச்சியோடு
கால்பரப்பிக் கிடக்கும் ஆதிச்சநல்லூருக்கோ
Tho.Pa Scootterஅல்லது சமணச் சிற்பங்கள் குவிந்திருக்கும்
கழுகுமலைக்கோ போய் இறங்கும் எங்கள் குழு.
ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் புதைந்து கிடக்கும்
உண்மைகளை வரலாற்று ஆதாரங்களோடு
விளக்கிக்கொண்டே வருவார் தொ.ப.
.
ஒருமுறை உக்கிரங்கோட்டையில் உள்ள
ஒரு புராதன கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர்
அங்குள்ள ஒரு சிற்பத்தைக் காட்டி

“அதப் பாருங்க…. அந்த முகத்தில் தெரியும்
புன்னகைக்கு முன்னால் மோனாலிசாகூட
பக்கத்தில் நிற்க முடியாது….” என்றார்.

அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான
வாமதேவி சிலை. உண்மைதான்.
அதன் புன்சிரிப்பில் அத்தனைபேரும் கிறங்கிப் போனோம்.
.
சிற்பங்கள் என்றில்லை.
நாம் உண்ணும் உணவில்…
கற்கும்கல்வியில்…
அர்த்தம் புரியாமல் வாழும் வாழ்வில்….
நமக்குத் தெரியாத எத்தனை பண்பாட்டுக்கூறுகள்
ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை
மழலைக்கும் புரியும் மொழியில் சொல்பவர்தான் தொ.பரமசிவன்.
.
பள்ளி என்கிற சொல்லே
சமணத் துறவிகளிடம் இருந்து வந்ததுதான் என்பார்.
.
கள்ளுண்ணாமை…
புலால் மறுத்தல்….
துறவு….
இம்மூன்றிலும் தமிழர்களிடம்
தோற்றுப் போனார் திருவள்ளுவர் என்று விளக்குவார்.
.
கீரையை ஏன் நாம் வீட்டிற்கு வந்த
விருந்தினர்களுக்கு கொடுப்பதில்லை என்கிற
கேள்வியை வீசி..

”ஏன்னா கீரை என்பது ஏழ்மையின் சின்னம்… அதான்”
என்கிற பதிலையும் கொடுப்பார் தொ.ப.
.
அரசியலும் அத்துப்படி அவருக்கு.

பெரியாரின் இந்தி எதிர்ப்புத் தளபதிகளில்
ஒருவராய் இருந்த பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் குறித்து….
.
“பிள்ளைமார்” சமூகத்தில் இருந்து இஸ்லாத்துக்கு மாறி
“கிருஸ்தவ” மங்கையை மணந்து வீரப்போர் புரிந்த
மருதநாயகம் என்றழைக்கப்பட்ட கான்சாகிப் குறித்து….
.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்து
லண்டன் சென்று உயிர்நீத்த டி.எம்.நாயர் குறித்து….
.
அவருக்கும் ஹோம்ரூல் அன்னிபெசண்ட் அம்மையாருக்கும்
நிகழ்ந்த செம ஃபைட் குறித்து….
.
அன்னிபெசண்ட்டுக்கும் பெர்னாட்ஷாவுக்கும்
இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலின் முறிவு குறித்து……

இப்படி ஏகப்பட்ட குறித்து…. குறித்து போட்டுக்கொண்டே போகலாம்
தொ.ப.. குறித்து பேசினால்.

எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்லுவார்
அந்த மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தொ.பரமசிவன்.
.
போனமாதம் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது
கண்பார்வையற்றோருக்காக
தமிழில் பிரெய்லி கொண்டுவந்த Anne Askwith பற்றிச் சொல்லிவிட்டு…

”பார்வையற்ற நம் மக்களுக்காக
போன நூற்றாண்டுலயே ப்ரெய்லி கல்வியைக் கொடுத்த
அந்த அம்மையாரை நாம கண்ணம்மைன்னுதான் அழைக்கனும்” Tho.Pa Single
என்றார் மனம் நெகிழ.
.
தொ.ப.வின் எண்ணற்ற ஆதங்கங்களில் இன்னொன்று
நரசிம்மலு நாயுடு குறித்ததுதான்.
கோவையில் அவர் பெயரில் ஒரு பள்ளி இன்றும் உள்ளது.
.
1900 லேயே வேளாண்மை குறித்து அற்புதமான
நூலை எழுதியவர் நரசிம்மலு நாயுடு.

”அவர் எழுதிய “விவசாயம் அல்லது கிருஷி
சாஸ்திர சாரசங்கியம்” என்கிற நூல் தமிழில்
முதன்முதலில் வந்த வேளாண்மை குறித்த அருமையான நூல்.

ஆனால் அவரைப் பற்றி இன்னும் ஒரு பல்கலைக் கழகத்துலகூட
யாரும் ஆராய்ச்சிப்படிப்புக்காக இதுவரைக்கும் தொடக்கூட இல்லை……

அருமையான மனிதர்ங்க அவர்.
நீங்க இதப் பத்தி எங்கியாவது எழுதுங்க…” என்றார்
மிகுந்த ஆதங்கத்தோடு.
.
அதான் எழுதீட்டமில்ல….
ஊதற சங்க ஊதியாச்சு.
இது விழுகுற காதில விழுந்தா சரி.
.
ஆனா இதப் படிக்கிற நீங்க செய்யறதுக்கும் ஒன்னு இருக்கு.
.
.
.
அதுதான்….
.
.

நீங்க திருநெல்வேலிக்கு அல்வா வாங்கறதுக்கோ….

தொப்பைக்கு எண்ணை தடவி
குற்றாலத்துல குளிக்கறதுக்கோ போறப்போ…

அப்படியே பாளையங்கோட்டைக்கும்
ஒரு விசிட் அடிச்சு நம்ம தொ.ப.வை ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க.

உங்குளுக்கும் உற்சாகமா இருக்கும்.
தலைவன் தொ.ப.வுக்கும் அது படு உற்சாகமா இருக்கும் மக்கழே……!
.
.

ஏன்னா… அவரோட பேசறதுங்குறதே….
ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்குள்ள நுழைஞ்சு வர்ற மாதிரிதான்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம் வார இதழ்.)

Tho.Pa4