விபத்தல்ல… அப்பட்டமான அரசியல் படுகொலை.

bezwada-wilson
இந்த முறை…
ஓர் அற்புதமான மனிதருக்கு
மகசேசே விருது சென்று சேர்ந்திருப்பது பற்றியும்…..

அந்த மனிதர் பெசவாடா வில்சன்தான்
என்பது பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்ததுதான்.
.
பத்து வருடங்கள் முன்பே இம்மாமனிதரை
கோவைக்கு அழைத்து வந்திருந்தார்
ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்.
அவரது புண்ணியத்தில்தான் இந்த அற்புதமான மனிதரை
நான் சந்தித்து உரையாட முடிந்தது.
.
ஏறக்குறைய பத்துப்பதினைந்து நண்பர்கள்
மட்டுமே பங்கு கொண்ட கலந்துரையாடல் அது.
.
நாடு முழுவதும் கொடும் துயரத்துக்கு ஆளாகியுள்ள
இம்மக்கள் குறித்து அவர் உரையாற்றியது
இன்னமும் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
.
கர்நாடகாவின் கோலார் தங்கவயலில் பிறந்த வில்சனது
பால்யபருவம் துயரம்மிக்கது.
பெற்றோர்கள் மனிதக் கழிவுகளைச் சுமக்கும் தோட்டிகள்.
இது தெரியாது வளரும் பெசவாடா வில்சன்
பள்ளியில் கேலிக்குள்ளாகும் போதுதான்
தெரியவருகிறது தனது பெற்றோர் படும் துயர்.
தற்கொலைகூட செய்து கொள்ளலாமா என்கிற எண்ணமும்
அப்பிஞ்சு நெஞ்சில் எழுகிறது.
.
கொஞ்சகாலம் ஆந்திராவில் ஒடுக்கப்பட்டோருக்கான
ஹாஸ்டலில் தங்கி பள்ளிக்கல்வி பெற்றபிறகு
இண்டர்மீடியட் வகுப்புக்காக மீண்டும்
கர்நாடகா வருகிறார் வில்சன்.
பின்னர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம்.
.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது
”செல்ல விரும்பும் வேலை” என்கிற கேள்விக்கு
அவரைக் கேட்காமலே “தோட்டி” என படிவத்தை
அங்குள்ள அதிகாரி பூர்த்தி செய்ததையும்…..
அதற்கு வில்சன் அந்த விண்ணப்பத்தை
அப்படியே வாங்கி அனைவர் முன்னிலையிலும்
கிழித்து எறிந்து விட்டு வந்ததையும்….
விக்கி பீடியாவில் ”சுட்டு” ஏகப்பட்டபேர் எழுதியாகிவிட்டது.
.
ஆனால்…. அதற்குப் பிறகு பெசவாடா வில்சன் செய்தது
அனைத்தும் அசாத்தியமான வேலைகள்தான்.
.
ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராய்
இருக்கிற அப்பிரிவு மக்களுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்டதுதான் அவர் செய்த முதற்பணி.
.
மனிதக் கழிவுகளை மனிதரே சுமந்து கொண்டு
மெளனத்தில் ஆழ்ந்திருந்தபோது
அம்மெளனத்தை உடைத்ததுதான்
பெசவாடா வில்சன் செய்த பெரும்பணி.
.
இந்த அவலத்தைக் கண்டுகொள்ளாத
கோலார் தங்கவயலின் அதிகாரிகள்….
கர்நாடக ஆட்சியாளர்கள்….
மத்தியில் ஆள்வோர் என அனைவரது கதவுகளையும்
கடிதங்கள் வாயிலாக உரக்கத் தட்டுகிறது
பெசவாடாவின் கரங்கள்.

1993 இல் இந்த அவலத்திற்கு எதிராக
சட்டம் வந்தாலும் சத்தமின்றி
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த அவலங்கள்.
.
1994 இல் டெக்கான் கிரானிக்கல் இதழில்
மனித மலத்தை மனிதர்களே சுமக்கும் துயரங்களை
புகைப்பட ஆதாரங்களோடு வில்சன் கட்டுரையாக எழுத
பரபரப்புக்குள்ளாகிறது பாராளுமன்றம்.
.
கர்நாடகாவில் மட்டுமில்லாது
நாடு முழுவதுமே ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்
யாரும் கேட்பாரற்ற இந்த எளிய மனிதர்கள்.

அப்படி உருவானதுதான் சஃபாய் கரம்சாரி இயக்கம்.
(Safai Karamchari Andolan) வில்சனுக்குத் துணையாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கரனும் பால் திவாகரனும்
கரம்கோர்க்கிறார்கள்.
.
சட்டங்களை வெறும் ஏட்டில் மட்டும் எழுதி என்ன பயன்?
நடைமுறைக்கு வரவேண்டாமா? எனப் பொங்கி எழுந்து
2003 இல் மீண்டும் பொதுநல வழக்குகள் மூலம்
உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை உலுக்க…

இந்த அவலம் இன்னும் எங்கெங்கெல்லாம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிற பட்டியலைக்
கேட்கிறது உச்சநீதி மன்றம்.
பல மாநில அரசுகள் பட்டியலைக்கூட தராமல் இழுத்தடிக்கிறது.

2003ஆம் ஆண்டிலேயே ”உலர் கழிப்பிடங்கள் கூடவே கூடாது”
என்கிற சட்டம் வந்தாலும் 2011 புள்ளிவிவரப்படி
அந்த அவலத்தைச் சுமந்து கொண்டிருப்போர்
ஏறக்குறைய 8,00,000 பேர் என்று அடித்துச் சொல்கிறது
பெசவாடா வில்சனது இயக்கம்.

2014 இல் மீண்டும் இதை முடிவுக்குக் கொண்டு
வந்தே ஆக வேண்டும் என கடுமையாக
எச்சரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
.
நான்கு மாதம் முன்பு அம்பேத்கரின் 125 பிறந்த தினத்தின் போது
நாட்டின் அனைத்து மாநிலங்களின் வழியாகவும்
”எம்மைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்கிற முழக்கத்தோடு
நடைபெற்ற “பீம் யாத்திரை”யின் முடிவில்
டெல்லியில் அறிவித்தார் பெசவாடா வில்சன்:
.
“கடந்த சில வருடங்களில் மட்டும்
செப்டிக் டேங்க்குகளிலும்….
பாதாள சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய மூழ்கும் போது
விஷவாயு தாக்கி அநியாயமாக
தம் உயிரை இழந்தவர்களது எண்ணிக்கை மட்டுமே 1300.

இவை விபத்தல்ல
அப்பட்டமான அரசியல் படுகொலை.
தலித்துகளிலும் ஒடுக்கப்பட்டோராய் உள்ள
இவர்களுக்காக குரல் கொடுக்க எவருமில்லை”.
.
ஆம் உண்மைதான்.
.
நாம் அந்த மக்களுக்கு மட்டுமே
100 சதவீதம் ஒதுக்கீடு அளித்திருக்கிறோம்.
.
அடடா… என்னே நமது “பெருந்தன்மை”?
.
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் அவலம் மிக்க
பணியில் மட்டும் பங்கு கேட்க இங்கு எவருமில்லை.

ஆனால் அவர்களுக்கான கல்வியிலும்,
பிற வேலை வாய்ப்புகளிலும் உள் ஒதுக்கீடு கொடுத்தால்
ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் அநேகர் உண்டு.
.
ஆக… சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாய்
அமுங்கிக் கிடக்கும் அந்த எளிய மக்களின் குரலை
எதிரொலிக்கும் பெசவாடா வில்சனுக்கு
மகசேசே விருதல்ல எந்த விருதும் தகும்.
.
பொதுவாக விருதுகளால் சிலருக்குப் பெருமை.
.
ஆனால் வில்சனைப் போன்றவர்களின் கரங்களில்
தவழும்போது விருதுக்கே அது பெருமை.
.
.
( ”ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ். )