எனக்கு செல்போனில் கண்டம்….

Muruganandam
எல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்
எனக்கு செல்போனில் கண்டம்.
.
அதிலும் கட்டுரை அனுப்ப வேண்டிய நாள் என்றால்
செல்போனை அணைத்துவிட்டு
எங்காவது குகைகளைத் தேடி
ஓடி ஒளியவேண்டி இருக்கிறது.
.
இல்லாவிட்டால் எங்கிருந்தோ வரும் அழைப்பு.
“எங்க இருக்கீங்க?”ன்னு.
இருக்கும் இடத்தைச் சொன்னாலோ
தொலைந்தோம்.
.
”அங்கியே இருங்க உங்களப் பார்க்கத்தான்
வந்துகிட்டு இருக்கோம்”ன்னு பதில் வரும்.

அப்புறம் கட்டுரையாவது…..
வெங்காயமாவது…..
இதற்கிடையில் ரத்தக்கொதிப்போடு ஜனனம்
ஆசிரியர்வேறு நம்ம ஒலக மகா கட்டுரை
மெயிலில் வருகிறதா என்று
வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்.
.
நண்பர்கள் வந்துவிட்டார்கள் என்றால்
அப்புறம் மெயிலாவது….
மயிலாவது….
அப்படித்தான் இன்றும்.
.
ஆனால் இன்றைய விருந்தினர்களோ
தவிர்க்கமுடியாதவர்கள்.
.
.
தவிர்க்க முடியாத நண்பர் ஒன்று:
==================================
முதலில் வந்த நண்பர் ஓர் அற்புதமான ஆய்வாளர்.
முனைவர் திருநீலகண்டன்.
திருநெல்வேலியில் உள்ள “மதுரை திரவியம் தாயுமானவர்
இந்துக் கல்லூரி”யில் பேராசிரியர்.

அவர் பேசப் பேச ஒவ்வொன்றும்
புதிய புதிய தகவல்களாக வந்து விழும்.

அவரது பேச்சுக்கு ஒரு சின்ன விளம்பர இடைவேளை
விட்டு ஆசிரியரை அழைத்து
”இன்றைக்கு கட்டுரை கிடைக்க ரெண்டு மணியாயிரும்”ன்னு
கொதிப்பைக் குறைத்தேன்.
.
முனைவர் நீலகண்டன் கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில்
ஒரிசாவில் கிடைத்த ஹதிகும்பா கல்வெட்டு
குறித்து கதைக்க ஆரம்பித்தார்.

அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு
ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.
(ஆமா… இந்த ”றை” கரெக்ட்டா….
இல்ல இந்த “ரை” போடணுமா?ன்னு
நீங்களே முடிவு பண்ணிக்குங்க)
.
சுமார் 113 ஆண்டுகள் தங்களை அச்சுறுத்திய
தமிழ் மன்னர்களது கூட்டமைப்பைப்
பற்றிப் பேசுகிறதாம் அந்தக் கல்வெட்டு.
லிபி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும்
அந்தக் கோண்டு இன மக்களும்
திராவிடர்கள்தான் என்றார் ஆய்வாளர்.
.
அட அங்கெங்கீங்க இருக்காங்க
திராவிடர்கள்? என்றேன்.

“இன்னொன்னு தெரியுமா….
மத்தியப் பிரதேசத்துல இராவணனை வழிபடும் மக்கள்
இன்னமும் இருக்கிறார்கள்.
அவருக்குக் கோயில்கூட இருக்கிறது.” என்று
மேலும் ஆச்சர்யத்தினை ஊட்டினார்.
.
அப்படீன்னா….
திருஞானசம்பந்தரை “திராவிட சிசு”
என்றாரே சங்கரர்? என்றேன்.
.
அவர் தமிழில் எழுதியதாலேயே
அவரை ”திராவிட” என்றழைத்தார்கள் என்று
மேலும் போட்டுத்தாக்கினார்.

இரண்டாவது முறையாக தேநீர் வைத்துக் கொண்டு
வந்து கொடுத்தான் நண்பன் மயூர்.
.
” ’வேதம் பகுவிதம்….
அதில் திராவிட வேதமும் ஒன்று’……
.
மிகச் சிறந்த ஆய்வாளரான நம்ம
தொ.பரமசிவன் அடிக்கடி சொல்வாரே….
இந்துன்னு நம்பிகிட்டிருக்குற
நூத்துல தொண்ணூறு பேருக்கு
உண்மையில மதம் கிடையாது.

சாமி கும்புடுவான்….
வழிபாடு நடத்துவான்….
ஆனா சமயம்கிற சட்டகத்துக்குள்ள
அடங்கமாட்டான்.
.
த்ரமிளம் என்பதுதான்
பிற்பாடு தமிழ்…
தமிழம்….
த்ராவிடம் என்று திரிந்திருக்கிறது.

இந்த உண்மையை இன்றைக்கு
மலையாளியோ…
தெலுங்கனோ….
கன்னடனோ ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.

ஆனால்…. என்றைக்கு அவர்களுக்கு
இந்தியாலும் இன்னபிற சமாச்சாரங்களாலும்
ஆபத்து உச்சத்தில் வந்து நிற்கிறதோ
அன்றைக்குத்தான் நம்மைத் திரும்பிப் பார்ப்பான்.
அப்போதுதான் நம்மருகே வந்து நிற்பான்.
.
அதுவரைக்கும் இந்த “திராவிடர்” என்கிற அகல் விளக்கை
அழியாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு
நம் தமிழர்களுக்கு இருக்கிறது.” என்று
தங்கு தடையில்லாமல் வந்து விழுந்த
சொல்லருவியில் திக்குமுக்காடிப் போனேன்.
.
அய்யோ இந்த ஜென்மம்….
ச்சே…. ஜனனம் எடிட்டர் வேறு
பரபரப்பில் இருப்பாரே என்று
செல்போனில் மணி பார்த்தேன்.
.
”இப்படிப் பேச நாள்கணக்கில் விஷயம் இருக்கிறது.
இன்னொரு முறை நிம்மதியாப் பேசுவோம்…” என்று
கிளம்பியவரை வழியனுப்பப் போனால்
வாசலில் அடுத்த ஆள்.
Thiruneelakandan
.
.
தவிர்க்க முடியாத நண்பர் இரண்டு:
=====================================
அது : நண்பன் வீணை மைந்தன்.

என் அன்புத் தோழர் மணிவண்ணனால்
அறிமுகமான தம்பி.
அவரது நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. படத்தின்
துணை இயக்குநர்.

தனது தங்கை லின்ஸியின் திருமண
அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்திருந்தான்.
அழைப்பிதழைப் பிரித்த எனக்கு
அங்கேயும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
.
சாதி மறுப்பு… மத மறுப்பு…. என்பதோடு
இனக்கலப்பு என்கிற மற்றுமொரு செய்தியையும்
அந்த அழைப்பிதழ் சுமந்து வந்திருந்தது.
“என் கல்யாணத்துக்கும் வரல…
பொண்ணு பொறந்ததுக்கும் வரல…
இதுக்காவது வருவியா தலைவா?” என்றான்
கடுப்புடன் வீணை.
.
”சாதி மறுப்பு… மத மறுப்பு…ன்னு சொல்லீட்டே
வராம இருப்பனா?” என்றேன்.
.
மீண்டும் ஒரு தேநீர் வந்து சேர
எனக்கு மீண்டும் கட்டுரை எழுத
வேண்டிய ஞாபகம் வந்தது.

பேச்சு அப்படியே சினிமா பக்கம் திரும்பியது.
“கபாலி பாத்தியா தலைவா?” என்றான்.

”நான் கடைசியாய் பார்த்த
ரஜினி படம் படையப்பா” என்றேன்.

மூணு வருஷம் முன்னாடி வந்த
”இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா”
படத்தையே போனமாசம்தான் பார்த்தேன்.
செம சூப்பரா இருந்துச்சு என்றேன்.

எனது அபாரமான சுறுசுறுப்பை மனதுக்குள் மெச்சியபடி…..
.
”சரி என் பொண்ணு காலேஜ்ஜுல
சேர்றதுக்குள்ள வந்து பாத்துருவீங்கல்ல…”
என்றான் தம்பி நக்கலாக.
.
”வீணை அந்தப்படத்துல வர்ற….

”ப்ரெண்டு….

லவ் ஃபெயிலியரு…

ஃபீல் ஆயிட்டாப்பல….

ஹாஃப் அடிச்சா போதும்…

கூல் ஆயிருவாப்பல….”ன்னு வர்ற சீனை
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது போலிருக்கே…” என்றேன்.

“அந்த சீன்ல நடிச்ச நண்பன்கூட
பேசறீங்களாண்ணே….?” என்றபடி
இங்கிருந்தே போனைப் போட்டான் வீணை.
.
அந்த முனையில் பேசியதோ…..

“வாங்க ஜி…..

வாங்க ஜி….

அப்டியே காதுக்குள்ள உங்க வாய வெச்சு
ஃபிரெஷ்ஷா இன்னொரு தடவ சொல்லுங்க ஜி”

என்று படத்தில் தூள் கிளப்பிய முருகானந்தம்.
.
2013ல வந்த படத்துக்கு 2016 ல பாராட்டுகிற
ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும் என்று சொல்லி
படத்தையும் அவரையும் மனம் திறந்து பாராட்டினேன்.

புதிய படம் ஒன்றை விரைவில்
இயக்குகிறாராம் முருகானந்தம்.
மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு
அலைபேசியை நண்பனிடம் கொடுத்து விட்டு
மணியைப் பார்த்தேன்.
.
மதியம் 3.30.
.
.
இந்நேரம் உலகில் உள்ள
சகல கெட்டவார்த்தைகளையும் சேர்த்து
என்னைத் திட்டிக்கொண்டிருக்கலாம்
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்.
.
என்ன செய்ய?
.
நான் ஏற்கெனவே சொன்னபடி
எல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்
எனக்கு செல்போனில் கண்டம்.
.
.
அப்ப…
நான் உத்தரவு வாங்கிகிட்டுங்களா…..?
.
.
( “ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ் )